Saturday, August 13, 2011

பெரியவர்களின் ஆடுகளம்

இருபத்து இரண்டு வருடங்களுக்கு முன்னால் எங்கள் வீட்டிற்கு ஒரு தொலைபேசி இணைப்பு கிடைத்தது. அப்பொழுது தான் STD என்ற தொலைதூர அழைப்புக்கள் சாத்தியப்பட்டிருந்த காலம். அதற்கு முன் தொலைபேசி எக்ஸ்சேஞ்சை அழைத்து வேறு ஊரில் இருப்பவரின் தொலைபேசி எண்ணையும் ஊர்ப் பெயரையும் சொல்லிக் காத்திருந்து, இணைப்புக் கிடத்ததும் அக்கம் பக்கமுள்ள அனைத்து வீட்டாருக்கும் கேட்கும்படி கத்தி கத்தி இரகசியத் தகவல்கள் கூட சொல்ல வேண்டியதிருக்கும்.
கோடிவீட்டு கோவிந்தனுக்கு ஒரு அவசர அழைப்பு, மாடிவீட்டு மாதவனுக்கும் ஒரு அழைப்பு என்று வரும் பொழுது சலைக்காமல் ஓடி ஓடி அவர்களை அழைத்துவந்து பேசவைத்த காலம் அது. ஒரு பெரிய தவளையைப் போல் இருக்கும் அந்த ஃபோன். அது கூட தொலைபேசி இலாகாவிற்கு சொந்தம். மாதாமாதம் 200 ரூபாய்க்கு பில் வரும். அதுவே ஆடம்பரச் செலவு தான். ஆனால் தொழிலுக்குத் தேவைப்பட்டதால் அதிகச் சுமையாகப் படவில்லை. வேறு எந்தச் செலவும் கிடையாது.

இன்றைக்கு ஒரு வீட்டில் எத்தனைப் பேர் இருக்கிறார்களோ அத்தனை செல் ஃபோன்கள். பாட்டிகள் கூட மணிக்கணக்கில் அரட்டை அடிக்கிறார்கள். படுக்கையில் படுக்கும் போதுகூட கூடவே வைத்துக்கொள்ள வேண்டிய செல்ல அந்தஸ்த்து. SMS என்ற ஓர் ரகசிய தகவல் பரிமாற்றம். அதில் ஃபார்வேர்ட் என்று சொல்லப்படும் ரூம் போட்டு யோசித்த தத்துவ தகவல் பரிமாற்றம். அப்பப்பா! வியத்தகு வளர்ச்சி. என்ன, அப்பப்ப, லம்பா ஒரு தொகை ஃ போன் வாங்க செலவு ஆவதும், கேமரா, மியூசிக் பிளேயர் போன்ற பந்தா விஷயங்களால் மற்றவர்களை உசுப்பேத்துவது கொஞ்சம் அதிகமாகவே நடந்தேறி வருகின்றன. வாயில் நுழையாத நீலப்பல் அமைப்புகளுக்கும் மதிமயங்கி மக்கள் கொடுக்கும் பணம் பல்லாயிரம்.

குழந்தைகளை செல் ஃபோன் கதிர்கள் மிகவும் பாதிப்பதாக காக்காயாய் கத்தி ஓய்ந்த இமெயில் ஃபார்வேர்டுகள். பிஞ்சுக் குழைந்தைகள் இதில் பேசும் பொழுது தடுக்கவோ பார்க்கவோ என்று ஊஞ்சலாடும் மனம்.
ஒரு லட்ச ரூபாய் செலவில் ஒரு குளிர் சாதனப் பெட்டி பார்த்தேன். இதை வைத்துக்கொண்டு என்ன தான் செய்வார்கள் .மிஞ்சிப் போனால் 4 பால் பாக்கட், ஒரு சட்டி இட்லி மாவு, அரை தர்பூசணி, சத்தே இல்லாத கலர் பான பாட்டில்கள், அதற்கு மேல் யோசித்தால் முந்தைய நாள் வத்தக்குழம்பு, நேற்று வைத்த தக்காளிச் சட்னி, வாடிவதங்கிப் போன காய்கறிகள் இதெல்லாம் பற்றிதான் ஞாபகம் வருகிறது.

இந்தியச் சமையலுக்குக் கொஞ்சம் கூட வசதிப்படாத ஒன்று மைக்ரோ வேவ் வோவன் என்ற கதிரியக்கப் பெட்டி. உணவுப் பொருள்களை சாதாரண அடுப்பு, வெளிப்பரப்பிலிருந்து உள்ளுக்குள் வெப்பத்தைச் செலுத்தினால், இது உள்ளிருந்து வெளிப்பரப்புக்கு வெப்பத்தைச் செலுத்துமாம். இதில் சமைத்த உணவைச் சாப்பிட்டால் என்னவாகும் என்ற சந்தேகம் பலருக்கும் உண்டு. குளிர்சாதப் பெட்டியிலிருந்து எடுத்து 5 நிமிடத்தில் பதமாக சூடு பண்ண முடிகின்றபடியால் அம்மணிக்களின் ஒட்டு மொத்த ஓட்டு மைக்ரோ வேவ் வோவன்களுக்கே.

என்னைக் கேட்டால் வாஷிங் மெஷின் தான் தலைசிறந்த சாதனம் என்பேன். ஏதாவது சந்தர்ப்பத்தில் துணி துவைக்க வேண்டும் என்றால் இதுதான் கைகொடுக்கும். மற்ற எல்லா சாதனங்களையும் கொஞ்சம் நக்கல் பார்வை பார்த்தாலும் இதை மரியாதையாக பார்த்தே பழகிவிட்டது. கண்மாய்க்கரையில் வீடு அமைந்து விட்டதால் தண்ணீர் கஷ்டம் இல்லை.

அம்மிக்களையும் உரல்களையும் உலகத்தைவிட்டே விரட்டிவிட்ட பெருமை மிக்சிக்களையே சாரும். இதில் பெரிய வகை, ஃபுட் ப்ராசசர் என்ற பெயரில் சமயலறையை அலங்கரிக்கும். நேரத்தை மிச்சம் பண்ணும். சுவையையும் குறைத்து விடும். இந்த அவசர யுகத்தில் உங்களுக்குச் சட்னி கிடைப்பதே பெருசு என்று நீங்கள் சொல்வது கேட்கத்தான் செய்கிறது. ஆனாலும் அம்மியையும் உரலையும் நாக்கு மறப்பேனா என்கிறது.
விளக்கு வைக்கும் நேரம் பார்த்து நடு வீட்டில் உட்கார்ந்து கொண்டு அல்லது ஹால் சுவரில் தொங்கிக்கொண்டு ஒப்பாரி வைக்கும் துணிவுள்ள சாதனம் தொலைக்காட்சி. கொடூரமான சண்டைக் காட்சிகள், மசாலா நடனங்கள் என்று கலாச்சாரத் தாக்கத்தை ஏற்படுத்திக்கொண்டிருக்கும் மக்களின் மனம் கவர் சாதனம். மூத்தக் குடிமக்களின் ஒரே சொர்கம் என்ற அந்தஸ்தை நோக்கி முன்னேறிக் கொண்டிருக்கும் இணையில்லா சாதனம். கணிசமான தொகையை விழுங்கிக்கொண்டிருக்கும் இடியட் பாக்ஸ். பிரபல தொலைக்காட்சிக் கம்பெனியின் வருடாந்திர கணக்கு கையில் கிடைத்தது. அப்பா! இத்தனைக் கோடி வருமானமா! உண்மையிலே கூரையைப் பிய்த்து கொண்டுதான் கொட்டுகிறது.
இப்படியே நாம் செலவழித்து அனுபவிக்க பல்வேறு சாதனங்கள் பெருகிவிட்டன. சிறுவர்களுக்கு விளையாட பொம்மைகள் போல் இந்தச் சாதனங்கள் பெரியவர்கள் விளையாட்டைத் தொடர வழிவகுக்கின்றன. பாசப் பரிமாற்றங்களுக்கும், நேசப்பரிமாற்றங்களுக்கும், காதல் சடுகுடுக்களுக்கும் ஏற்ற பரிசுகளாயும் இடம் பிடித்து விட்டன. பயன்பாடுகளை உள்ளடக்கியதாக இருந்தாலும் விளையாட்டுப் பொருட்களின் குணாதிசயங்கள் பலவற்றை உள்ளடக்கியுள்ள படியால் விளையாட்டில் மனம் கொள்ளை போகின்றது.

குழைந்தைகளுக்கு பொம்மை வாங்கும் பொழுது எந்த அளவுகோல் கொண்டு செலவை நிர்ணயிப்போமோ அதேபோல் இந்தப் பொருட்களுக்கும் செலவு செய்வோமானால் மனக் கலக்கமில்லை. ஒரேயடியாக பெஸ்ட் கண்ணா பெஸ்ட் என்று ஆசையை வளர்த்துக்கொண்டு அதிகம் செலவு செய்து சேமிப்பை இழக்காமல் இருப்பது நல்லது. பொருட்களின் பயன்பாட்டை முன் நிறுத்தி ஆராய்ந்து செலவு செய்வது சிறப்பு.

10 comments:

மாலதி said...

உங்களின் விழிப்புணர்வு பதிவு சிறப்பானது உளம் கனிந்த பாராட்டுகள் இன்றைய விரைவு உலகம் போலித்தனத்தையே உள்வாங்கி நுகர்வு பண்பாட்டின் பயனாக இருப்பதை இழந்து தோல்வியில் துன்பம் அனுபவிக்கிறது தொடர்க .

Yaathoramani.blogspot.com said...

அறம் பொருள் இன்பம் என்ற மூன்றையும் சொல்லி
வீடு குறித்து சொல்லாமல் அதற்காகத் தான் இந்த மூன்றும்
என சொல்லாது சொல்வார் வள்ளுவர்
அதை போல முன்பெல்லாம் அத்தியவசியத் தேவை
என்றால் உண்வு உடை இருப்பிடம் எனச் சொல்வார்கள்
மற்ற வசதிகள் எல்லாம் ஆடம்பரத்தில் தான்சேரும்
ஆனால் இப்போது தேவைகள் குறித்து பட்டியல் இட்டால்
வசதிகள் உணவு உடை இருப்பிடம் என மாற்றித்தான்
சொல்வார்கள் என நினைக்கிறேன்
அந்த அளவு சுகவாழ்க்கைக் கலாச்சாரம் எங்கும் பரவி
வாழ்வை சிக்கலாக்கிக் கொண்டுள்ளது
அது குறித்து படிப்பவர்கள் சிந்திக்கட்டும் என
லேசாக விஷயங்களைத் தொட்டுச் செல்லும்
இந்தப் பதிவு அருமையிலும் அருமை
தொடர வாழ்த்துக்கள்

S.Venkatachalapathy said...

மாலதி மேடம், ரமணி சார் இருவரின் வருகைக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

'நுகர்வு பண்பாட்டின் பயனாக இருப்பதை இழந்து தோல்வியில் துன்பம் அனுபவிக்கிறது'

இப்படியொரு வரியை திரும்பத் திரும்பப் படிக்கலாம். அமெரிக்காவின் இன்றைய நிலை கூட அப்படித்தான்.


எந்த முடிவையும் சொல்லி சிக்கலில் மாட்டிக்கொள்ளக்கூடாது என்று நான் விழிப்புணர்வுடன் எழுதுவதை எப்படியோ ரமணிசார் கண்டுபிடித்து விடுகிறார். தொலைக்கட்சியைப் பொருத்து எழுதும் போது மட்டும் கொஞ்சம் ஃபிரீ ஸ்டைலில் விட்டு விட்டேன்-விழிப்புணர்வுடன்.

மாய உலகம் said...

பொருட்களின் தேவையை முன் நிறுத்தி அதற்கேற்றவாறு செலவு செய்யுங்கள் என்று அழகான நடையில் அசத்தியுள்ளீர்கள்..நன்றி ஐயா

வை.கோபாலகிருஷ்ணன் said...

தொலைபேசியின் பரிணாம வளர்ச்சிகள் பற்றிய அலசல்கள் அருமை. ஆடிக்காற்றில் அம்மிகளும், உரல்களும், ஆட்டுக்கல்களும் நிஜமாகவே பறந்து விட்டனவே!
குளிர்சாதனப்பெட்டிகள் பற்றி நல்ல நகைச்சுவையாக ஆனால் உண்மைகளை எழுதியுள்ளீர்கள்.
//பொருட்களின் பயன்பாட்டை முன் நிறுத்தி ஆராய்ந்து செலவு செய்வது சிறப்பு.//
நல்ல அறிவுரை.

S.Venkatachalapathy said...

மாய உலகம் ராஜேஷ்ன் வருகைக்கு நன்றி. இந்தப் பதிவுகளே இன்றைய இளைஞர்களுக்காக, அவர்களின் சிந்தைனையைக் கொஞ்சம் மாற்றி யோசிக்கவைக்க என்னாலான முயற்சி.

S.Venkatachalapathy said...

வை.கோபாலகிருஷ்ணன் ஐயா அவர்களின் வருகை எனக்கு என்றும் மென்மேலும் ஊக்கமளிக்கும் ஒன்று.சிறந்த எழுத்தாளர்கள் இங்கே தூவியிருக்கும் சிந்தனைச் சிதறல்களில் சிலவற்றை அவர்கள் பாணியில் மெருகேற்றி இளைஞர்களுக்குக் கொண்டு சேர்க்கவேண்டும் என்னும் உள்நோக்கம் எனக்கு உண்டு.

"தொலைபேசியின் பரிணாம வளர்ச்சிகள்" என்னைவிட உங்களுக்கு நிறையவே தெரியும் ஐயா.

வருகைக்கும் பாராட்டுகளுக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றிகள்.

Rathnavel Natarajan said...

ஒரேயடியாக பெஸ்ட் கண்ணா பெஸ்ட் என்று ஆசையை வளர்த்துக்கொண்டு அதிகம் செலவு செய்து சேமிப்பை இழக்காமல் இருப்பது நல்லது. பொருட்களின் பயன்பாட்டை முன் நிறுத்தி ஆராய்ந்து செலவு செய்வது சிறப்பு.


அருமையான பதிவு.
தொடர்ந்து எழுதுங்கள்.
எனது மனக்குமுறல்கள் அத்தனையையும் கொட்டி விட்டீர்கள்.
மனப்பூர்வ வாழ்த்துக்கள்.
.
http://rathnavel-natarajan.blogspot.com/2011/08/blog-post_23.html

ரவி சாரங்கன் said...

அழகாக குட்டியிருக்கிறீர்கள் இது இன்றைக்கு அவசியமான சிந்திக்க வேண்டிய விஷயத்தை பற்றின கட்டுரை பாராட்டுக்கள்.
http://www.facebook.com/sarangachariravi

இராஜராஜேஸ்வரி said...

அத்தியாவசிய்மும் ஆடம்பரமும்
இக்காலத்தில் இடம் மாறியிருக்கின்றனவோ!

Post a Comment