ஒரு நாள் பேராசிரியர் இன்பராசனிடமிருந்து ஈமெயில் வந்திருப்பதைக் கண்டேன். தமிழகத்தின் தென் பகுதியில் கிராமச்சூழ்நிலையில் அமைந்திருக்கும் கல்லூரியில் இவர் பேராசிரியர். ஒரு முறை இவர்கள் கல்லூரியில் ஒரு நாள் மென் திறன் பயிற்சிப் பட்டறைக்கு என்னுடைய நண்பர் ஒருவரின் அழைப்பின் பேரில் அவருடன் இணைந்து பயிற்சி வகுப்புகள் நடத்தச் சென்றுள்ளேன். பொதுவாக இந்த வகுப்புகள் தொடர்ந்து நடத்தப் பட வேண்டிய ஒன்று. மென்திறன் பயிற்சிகளுக்குப் பாடபுத்தகம், தேர்வு என்ற செயல்முறை ஒத்துவராது என்ற கருத்துடையவன் நான். அடிக்கடி நடக்கும் கலந்தாலோசனைதான் மென் திறன் வளர்க்கும் வழியும் கூட.
இன்னொறு பயிற்சிக்கான அழைப்பாய் இருக்குமோ என்று ஆவலுடன் ஈமெயிலைத் திறந்தேன். மனித உரிமைக் கல்வி பற்றிய ஒரு கருத்தரங்கு நடத்தவிருப்பதாகவும் அதில் 'சுயமுன்னேற்றமும் மனித உரிமையும்' என்ற தலைப்பில் ஒரு கட்டுரை வெளியிட ஒரு அழைப்பாகவும் இருந்தது.
முனைவர் இன்பராசனைத் தொடர்பு கொண்டு கேட்டதில் கட்டுரை வெளியிட ஒவ்வொருவருக்கும் பத்து நிமிட நேரம் ஒதுக்கப்படும் என்று கூறினார். ஒவ்வொரு கட்டுரை வெளியிட ரூ200/- கட்டணம் செலுத்த வேண்டும் என்றிருந்தது. பொதுவாக பயிற்சி வகுப்புகள் நடத்த நாங்கள் தான் பணம் வாங்குவோம் அல்லது நண்பர்களின் அழைப்பின் பேரில் லயன்ஸ், ரோட்டரி மற்றும் ஒய்ஸ் மென் சங்கங்களில் அரை மணி நேரம் பணம் வாங்காமல் பேசிவிட்டு வருவதும் உண்டு. கட்டுரை வெளியிடும் அனுபவம் தான் என்ன என்று தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆவல் அதிகமாக இருந்ததால் அவர்கள் கேட்டபடி ஐந்தரைப் பக்கத்தில் ஆங்கிலத்தில் ஒரு கட்டுரையை தயார் செய்து அனுப்பிவிட்டு நிகழ்ச்சி நடைபெறும் நாளன்று மிகவும் சிரத்தையாக, கல்லூரி நாட்களை நினைவுபடுத்திக் கொண்டு ஒரு மாணவனாக என் எண்ணங்களை மாற்றிக்கொண்டு தேர்வு எழுதச் செல்வது போல் சென்றேன். தேசிய அளவிலான கருத்தரங்கு என்பதால் ஆங்கிலத்தில் எழுத வேண்டிய கட்டாயம். பலமுறை நண்பர்கள் ஆங்கிலத்தில் எழுதும் போது கொஞ்சம் சுலப நடையில் எழுதச் சொல்லி என்னிடம் சொல்வார்கள். அதையும் நினைவில் வைத்துக் கொண்டு எழுதியிருந்தேன்.
முதல்வரிசை காலியாக இருந்ததால் சென்று அமர்ந்து கொண்டேன். துவக்க விழாவிற்குக் கல்லூரியின் முதல்வர் பேசினார். மனித உரிமைக் கல்விக்கு கல்லூரிகள் நேரம் ஒதுக்குவதில்லை. எந்த ஆசிரியரும் அதை வரவேற்பதுமில்லை என்று அங்கலாய்த்துக் கொண்டார். பல்கலைக்கழகத்திலிருந்து வந்திருந்த சிறப்பு விருந்தினர், மனித உரிமைக் கல்விக்காக மானியம் 1994 ல் இருந்து ஒதுக்கப்பட்டு வருவதாகவும் அதை இன்று வரை யாரும் சரிவரப் பயன் படுத்தவில்லை என்றும் கருத்துத் தெரிவித்தார்.
அதற்குப் பின் பேசிய அன்பர், மனித உரிமைக் கல்வி நிலையம் ஒன்றை நடத்தி வருபவர். ஒரு சிறந்த வழக்கறிஞர். மனித உரிமை மீறல் வழக்குகள் பலவற்றை நடத்திய அனுபவம் வாய்ந்தவர். மனித உரிமைகளைப் பற்றி எளிதாகப் புரிந்து கொள்ள எல்லா உரிமைகளையும் இவர் நான்கு தலைப்புகளின் கீழ் வரிசைப்படித்தியது என்னை மிகவும் கவர்ந்தது.
வாழ்வுரிமை, சமத்துவ உரிமை, சுதந்திர உரிமை மற்றும் சுயமரியாதை உரிமை என்று நான்கு தலைப்புகளில் எல்லாவற்றையும் அடக்கிவிடலாம்.
அதிகார வர்கமும், அரசியல்வாதிகளும் மற்றும் சில ஆசிரியர்கள் கூட மனித உரிமைகளைப் பொருட்படுத்தாமல் உரிமை மீறுவது குறித்து பல எடுத்துக் காட்டுகள் கொடுத்து விளக்கமளித்தார். நமது கல்வித்திட்டதில் மனித உரிமைகள் பற்றிய கல்வி அறவே இல்லை என்பதை வெட்ட வெளிச்சமாக்கினார். ஒரு சிறந்த உரையைக் கேட்ட திருப்தி. ஒரு வாரம் முன்னமே நான் எழுதியனுப்பியிருந்த கட்டுரையில் இந்தக் கருத்தை நானும் வலியுறுத்தி எழுதியிருந்தேன் என்பது எனக்குப் பெருமையாகவும் இருந்தது.
மதிய இடைவேளைக்குப் பிறகு கருத்தரங்குக் கட்டுரைகளை வெளியிட வேண்டும். எனக்கு முதலாவதாக வாய்ப்புக் கிடைத்தது. எனக்கென்னமோ நான் பேசும் ஆங்கிலம் அங்கு கூடியிருந்த மாணவர்களுக்குப் புரியப்போவது இல்லை என்ற எண்ணம் மேலோங்கியே இருந்தது. எனவே மிகவும் மெதுவாக பேசி முடித்து இறங்கிவந்தேன். பெரிய விஷயங்கள் அடங்கிய கட்டுரையைப் பற்றி பேச 10 நிமிடம் போதவில்லை என்ற அதிருப்தி.
அடுத்து பேசிய மாணவர்களும் சரி, ஆசிரியர்களும் சரி தெளிவில்லாமல் பேசியது, ஆங்கிலத்தில் பேச படாத பாடு பட்டது பரிதாபமாக இருந்தது. நல்ல வேளை என்னுடைய உரையை நான் முன்னமே முடித்திருந்தேன். இல்லையென்றால் ஒன்றுமே பேசாமல் பவர்பாயின்ட் திரையில் போட்டுவைத்த தலைப்புகளை மட்டும் வாசித்துவிட்டு வந்திருப்பேன்.
ஆங்கில வழிக்கல்வி பயிலும் மாணவர்கள் என்றால் ஓரளவாவது ஆங்கிலம் பேச, படிக்க முடிய வேண்டாமா? ஒரு வாக்கியத்தைக்கூட சரியாக வாசிக்கக் முடியாத மாணவர்களைக் காண முடிந்தது. இந்த லட்சணத்தில் இந்த மாணவர்கள் எழுதும் விடைத்தாள்களை மதிப்பிடும் பணி எவ்வளவு கொடுமையாக இருக்கும்? மாணவர்கள் கல்வியை ஒழுங்காகப் படிக்காமல் இருப்பது கூட அவர்கள் சுதந்திர உரிமையோ? ஈடு பாடில்லாமல் படித்து வாங்கும் பட்டத்தைக் கூட சமூகம் அங்கீகரிப்பதால் இந்த நிலையோ? வேலைக்குப் போக ஏற்ற வயது வரை கூட்டத்தில் கோவிந்தா போடுவது போல செய்யப்படும் ஒரு சடங்குதான் இன்றைய கல்வியோ? கருத்துப் பரிமாற்றம் செய்யும் திறன் கூட அரைகுறையாக இருக்கிறதே! நடந்து கொள்ளும் முறை பற்றியோ, சுய முன்னேற்றம் பற்றியோ, மனித உரிமைகள் பற்றியோ கல்லூரிகளில் பாடங்கள் நான் படித்த காலம்தொட்டு இன்றுவரை இல்லையே! இப்படிப் பல கனத்த சிந்தனைகளுடன் வீடு திரும்பினேன்.
உலகத்தோடு ஒட்ட ஒழுகல் பலகற்றும்
கல்லார் அறிவிலா தார். ----என்பார் திருவள்ளுவர்.
(உலகத்தோடு ஒட்டி வாழ்தலைக் கல்லாதவர், பலவற்றை
கற்றவராயினும் அறிவில்லாதவரே)
அவர் கூற்றுப்படி கல்லூரிகள் முதலில் பயிற்றுமொழியில் திறனையும் மனித உரிமைகளையும், சுய முன்னேற்றக் கல்வியையும் கற்பதற்கான சூழலைத் தான் உருவாக்கியிருக்க வேண்டும்.
'எனை சுடர்மிகும் அறிவுடன் படைத்து விட்டாய்' என்று பாரதியார் கூறுவது சுடர் மிகும் அறிவு என்பது பிறப்பிலே அமையப் பெருவதோ? என்ற ஐயப்பாட்டையும் எழுப்புகிறது.
இந்தியக் கலாச்சாரத்தைப் பற்றி நாம் மிகவும் பெருமை பட்டுக் கொள்கின்றோம். 'குடும்ப அமைப்பு' என்பதில், சமூதாய கண்ணோட்டத்தில் மட்டும் நம் கலாச்சாரம் சிறப்புடையதே. ஆனால் மனித உரிமைகளைப் பொருத்தமட்டில் நாம் இன்னும் நிறைய முன்னேற்றம் காண வேண்டியுள்ளது. பல குடும்பங்களில் ஆணாதிக்கமும் இன்றைய காலகட்டத்தில் பெண்ணாதிக்கமும் கூட தலை விரித்தாடுகிறது. பெண்களின் ஆதிக்கப் போக்கால் பல பெரியவர்கள் பராமரிப்பின்றி அவதிப் படுகிறார்கள்.
பதவிகள், அதிகாரங்கள், சந்தர்ப்பங்கள் மற்றும் மக்களின் அறியாமை முதலியவற்றைப் பயன் படுத்திப் பொருள் ஈட்டுவது சர்வசாதாரணமாகிவிட்டது. நல்ல சாலைகள் அமைக்காதாது, அடிப்படை வசதிகளை செய்து தராதது, குப்பைக் கூழங்களை சரியான முறையில் அப்புறப்படுத்தாமல் விட்டுவிடுவது எல்லாமே அதிகார வர்கத்தின் மனித உரிமை மீறல்களே. இந்த மாதிரியான மனித உரிமை மீறல்களின் ஒட்டுமொத்தத் தொகுப்பே நம்முடைய இன்றையக் கலாச்சாரம். இந்தக் கலாச்சாரம் மாற வேண்டும்.
மனித உறவுகளும், உரிமைகளும் மதிக்கப்பட வேண்டும். மரியாதை,சுத்தம், தரம், நேர்மை, ஒழுங்கு, நியாயம், அர்ப்பணிப்பு, துரித செயல் பாடு என்பவைகள்,செயல்களை இயக்கும் அடிப்படை காரணிகளாக வேண்டும்.
இல்லையென்றால் பாரதிமுதல் இன்றுவரை சுடர்மிகும் அறிவுடன் படைக்கப் பட்டதாக நம்பும் அத்துனை பேரும் கடவுளிடம் இந்த மாநிலம் பயனுர வாழ்வதற்கு வல்லமை வேண்டிக்கொண்டிருக்க வேண்டியதுதான். பலர் வெறுத்துப் போய் இந்தியாவைவிட்டு ஓடிப்போவதைத் தடுக்க முடியாமல் வெட்கமில்லாமல் பெருமைப் பட்டுக் கொள்ள வேண்டியதுதான்.
5 comments:
அருமையான பதிவு.
எனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன்.
வாழ்த்துக்கள்.
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும்
இனிய தீபாவளித் திரு நாள் நல்வாழ்த்துக்கள்
மனித உரிமை மீறல்களின் ஒட்டுமொத்தத் தொகுப்பே நம்முடைய இன்றையக் கலாச்சாரம். இந்தக் கலாச்சாரம் மாற வேண்டும்.
Post a Comment