முன்பெல்லாம் டாக்டர்களை மக்கள் தெய்வமாக கருதினர். இப்பொழுதெல்லாம் அப்படி இல்லை என்று டாக்டர்களே உணரத் தொடங்கியிருப்பது நல்லதோர் மாற்றம். மக்கள் விழிப்புணர்வு அடைந்து வருகிறார்கள். டாக்டர்கள் தம் இஷ்டம் போல் செயல்படுவதைக் கைவிட்டுவிட்டு நோயின் தன்மை என்ன. அதற்கு எந்த வகை சிகிச்சை சிறந்தது, சிகிச்சை அளிக்கும் பொழுது ஏற்படக் கூடிய சிக்கல்கள், பின்விளைவுகள் போன்றவைகளைத் தெளிவாக விளக்கிச் செயல்படும் நிலைக்கு வந்திருக்கிறார்கள்.
இந்த அணுகுமுறை எதுவுமே இல்லாமல், சில டாக்டர்கள், அறுவை சிகிச்சையை அவசரகதியில், பணம் கிடைத்தால் போதும் என்ற மனத்துடன் செய்துவிட்டு சிக்கலில் மாட்டிக் கொண்டு விடுகிறார்கள்.
சமீபத்தில் தூத்துக்குடியில் மகப்பேரு மருத்துவ நிபுணர் கொலை செய்யப்பட்டிருப்பது ஏற்புடையதாக இல்லை தான். இது குறித்து மருத்துவ உலகமே மிரண்டுபோய் இருக்கிறது. பழியைக் காவல்துறை மீதும், அரசு நிர்வாகம் மீதும் போட்டுவிட்டு நாடு தழுவிய போராட்டம் நடத்துகிறார்கள்.
இந்த மாதிரி நிலை ஒவ்வொரு மருத்துவருக்கும் நேர்ந்துவிடக்கூடும் என்ற பயத்தை ஏற்படுத்தி வேலை நிறுத்தத்தில் பங்கு கொள்ளத் தயாராக இல்லாத மருத்துவர்களையும் பணி செய்யவிடாமல் முடக்கியிருப்பது அப்பாவி மக்கள் பலரை மிகவும் பாதிப்பதாக உள்ளது. இந்த வேலை நிறுத்தத்தால் இவர்கள் சாதிக்க நினைப்பது என்னவென்றே புரியவில்லை.
மாறிவரும் உலகில் மருத்துவர்கள் தம்மை உளவியல் ரீதியில் தயார் படுத்திக்கொள்ள முன்வர வேண்டும். பெரும் பொருள் ஈட்டுவதற்கு மருத்துவம் சரியான துறையல்ல. அதிக விலைகொண்ட கார்கள், பட்டுப்புடைவைகள் இவையெல்லாம் கௌரவத்தின், தற்பெருமையின் அடையாளங்கள். பெருமையை பிரதிபளிக்கும் பொருட்களுக்கு எந்த விலை வேண்டுமானாலும் வைத்து விற்கலாம். சமூதாயம் பாதிக்கப்படாது. ஆனால் மருத்துவத்திற்கு இப்படி விலை நிர்ணயம் செய்யக்கூடாது. மருத்துவம் படித்த பின்பும் பணம் தான் பிரதானம் என்ற எண்ணத்தை விடமுடியவில்லை என்றால் மேற்கூறியது போன்ற கௌரவப்பொருட்கள் வியாபாரத்திலும், நெட்வொர்க் மார்க்கெட்டிங்க் மற்றும் ரியல் எஸ்டேட் துறைகளிலும் தங்கள் தொழிலை மாற்றிக்கொள்ள வேண்டியது தான்.
மருத்துவரை அணுகுபவர்கள் மிகுந்த உடல் உபாதைகளுடன், மன வருத்தத்துடன், எதிர்காலம் குறித்த கேள்வியுடன் அணுகுகிறார்கள். அவர்களுக்கு ஆறுதல் அளிப்பது டாக்டர்களின் தலையாய கடமை. அதை விடுத்து அந்தச் சூழ்நிலையைப் பயன் படுத்தி எவ்வளவு பணம் கறக்கமுடியுமோ அவ்வளவு கறப்பது என்ற மனநிலையுடன் சில மருத்துவர்கள் செயல் படுவதால், ஒட்டு மொத்த மருத்துவ உலகமே இந்தப்பழியை தாங்கி நிற்கிறது. இந்த நிலை மாற வேண்டும் என்று மனிபால் MAHE நிகர்நிலைப் பல்கலைக் கழக முன்னாள் துணை வேந்தர் மற்றும் மருத்துவக் கல்லூரியின் முன்னாள் டீன் Prof.Dr. B.M. ஹெக்டே அவர்கள் வேண்டுகோள் விடுத்திருக்கிறார். மருத்துவத்தைப் பற்றி பொதுமக்களும் புரிந்து கொள்ளும் படிக்கு பல புத்தகங்கள் மற்றும் கட்டுரைகளை மிகவும் தைரியமாக வெளியிட்டிருக்கிறார். மெடிக்கல் ஷாப் வைத்துக் கொள்வது, லேபரட்டரிக்களுடன் டீல் வைத்துக் கொள்வது போன்ற பழக்கங்களை டாக்டர்கள் கைவிட வேண்டும்.
பொதுவாகவே பலமருத்துவர்கள் மனிதர்களை நோயளிகளாகத் தான் பார்க்கிறார்கள். ஒருவரைப் பற்றி நினவுகூறும் பொழுதுகூட அவர் என் பேஷன்ட் என்று டாக்டர் நண்பர்கள் கூறக்கேட்டிருக்கிறேன். நாசுக்காக இந்த போக்கு சரியல்ல என்று உணர்த்த முயற்சி செய்துமிருக்கிறேன்.
டாக்டர்கள் தாங்கள் கொடுக்கும் மருந்தினால் மட்டுமே நோயாளிகள் குணமடைகின்றனர் என்றும் நினத்துக் கொள்கின்றனர். மருந்துகளும் சிகிக்சைமுறைகளும் நோயாளிகளை ஆபத்திலிருந்து காப்பற்றுகின்றன என்பதில் சந்தேகம் ஏதும் இருக்கமுடியாது. ஆனால் நோயாளிகள் குணம் அடைவது இயற்கையின் ஆற்றலால் நடக்கும் ஒன்று என்று நாம் எல்லோரும் புரிந்து கொள்ள வேண்டும்..
நம்முடைய அரசு இயந்திரம், அரசுப்பணியில் இருக்கும் டாக்டர்கள், படுக்கை வசதியுடன் கூடிய மருத்துவ மனைகளை நடத்த அனுமதிக்கக் கூடாது. பணி நேரத்தில் பணியிடங்களில் இல்லாவிட்டால் நடவடிக்கை எடுப்பதோடு மட்டுமல்லாமல் தொடர்ந்து பயிற்சி வகுப்புக்களுக்கு அனுப்பி இவர்களுடைய பொறுப்புணர்வை மேம்படுத்த வேண்டும்.
மருத்துவக் கல்லூரிகளிலும் மனவியல் கலை பாடமாக வைக்கப்பட வேண்டும். கருத்துப்பரிமாற்றம், அலோசனை வளங்குதல், மனித உறவுகள்,தன்னிலை உணர்வு முதலியவற்றில் மருத்துவர்களுக்கு முறையான பயிற்சி வேண்டும்.
பொதுமக்களும் மணிக்கணக்கில் மருத்துவ மனைகளில் டாக்டருக்காக காத்திருப்பதை ஆட்சேபிக்க முற்பட வேண்டும். டாக்டர்களிடம் மிகவும் பயந்து பவ்வியமாக பேசி அவர்களை அளவுக்கு அதிகமாக மதிப்பதைப் போல் நடிப்பதைத் தவிர்க்க வேண்டும். டாக்டர்கள் சொல்லுவதை நிதானமாகப் புரிந்து கொள்ள வேண்டும். காப்பற்றவே முடியாத சில நோயாளிகளைக் காப்பற்ற முடியாமல் போனால் ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவம் பெறவேண்டும்.
மருத்துவத்துறையை அரசு, டாக்டர்கள் மற்றும் மக்கள் சரியாகப் புரிந்து கொண்டு செயல்பட்டால் இந்தத் துறை சார்ந்தவர்கள் அவ்வப்பொழுது தாக்கப்படுதல், அவமதிக்கப்படுதல் போன்றவைகளைச் சந்திக்கும் நிலை வராது.
************
மேற்கொண்டு படிக்க வேண்டிய நூல்கள்
What doctors don't get to study in the medical school : Dr.B.M.Hegde
Paras Medical Publisher, Hyderabad.
You can be healthy : Dr. B.M.Hegde ,
Macmillan India Ltd , Chennai.
4 comments:
விழிப்புணர்வு பகிர்வுக்குப் பாராட்டுக்கள்..
இன்றைய தலையாய பிரச்சனையின் அடிவேர் வரைசென்று மிக அழகாக
பாரபட்சமின்றி அலசி பதிவாக்கிக் கொடுத்துள்ளீர்கள்
மருத்துவர்கள் ஆண்டவனுக்கு சமமான நிலையிலிருந்த நிலை மாறி
மேலை நாட்டு மருத்துவர்கள் போல் வியாபாரிகள் ஆகிப் போனதால் வந்த
எதிவிலைவிது.மருத்துவர்கள் தற்போது அவர்களிடம் பெருகிவரும்
அலட்சிய மனப் பான்மையினையும் பணத்தின் போக்கிலேயே
எதையும் சிந்திப்பதையும் கொஞ்சம் குறைக்கப் பழ்கவேண்டும் என்பதே
என்னுடைய அபிப்பிராயம்
ஒரு அருமையான பதிவினைத் தந்தமைக்கு வாழ்த்துக்கள்
இராஜராஜேஸ்வரி,
தங்களின் முதல் வரவுக்கும் பாராட்டிற்கும் நன்றி.
ரமணீ,
மருத்துவர்கள், ஓர் எதிர் விளைவைச் சந்தித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதைக் கூட உணர முடியாமல் இன்றைய டாக்டர்கள் இருப்பதை உங்களின் பின்னூட்டம் வாயிலாகத் தான் நானே கூட கவனித்தேன். தங்களின் வரவிற்கும், கருத்துப் பகிர்விற்கும் நன்றிகளை பதிவு செய்து கொள்கிறேன்.
Post a Comment