இந்த வலைப்பதிவிற்கு
ஆங்கிலத்தில் பெயரிடுவதுதான் மிகவும் பொருத்தமாகப் பட்டது. ஆங்கில மொழி என்னவோ தமிழுடன்
இரண்டறக் கலந்து விட்டதால் இது போன்ற சில பெயர்களை ஆங்கிலத்திலேயே வைத்துக்கொள்வது
தான் தமிழுக்கு சிறப்பு. பிறந்தநாள் வாழ்த்துக்கள் என்று சொன்னால் அது ஹேப்பி என்பதைக் குறிக்கவில்லையே. உங்களுடைய
இந்தப் பிறந்தநாள் மகிழ்சியானதாக அமையட்டும் என்று சொல்லப் போனால், தமிழ் டப்பிங்க்
ஆங்கில பட வசனம் போல இருக்கும். இந்த வாழ்த்தை அறிமுகப்படுத்தியதே ஆங்கிலேயர்கள் தான்
போலும்.
நமது கலாச்சாரம்
பெற்றுக் கொள்வதையோ எதிர் பார்ப்பதையோ முன்னிறுத்தி அமையவில்லை.
“அறமெனப் பட்டதே
இல்வாழ்க்கை”. என்றும்,
பயன் தூக்கார்
செய்த உதவி நயன் தூக்கின்
நன்மை கடலிற் பெரிது.”
( இவருக்கு இன்னது
செய்தால் நமக்கு இன்னது கிடைக்குமென்று பாராமல்
ஒருவர் செய்த உதவியின் தரத்தை சீர்தூக்கிப் பார்த்தால் அதனின் நன்மை கடலைவிடப்பெரியது. )
என்று நம் கலாச்சாரத்தின் அடிப்படைகள் தெய்வப்புலவரால் கோடிட்டுக் காட்டப்படுகின்றன.
கொடுத்து மகிழ்வது
தான் நமது கலாச்சாரத்தின் அடிப்படை, பெற்றுக்கொண்டு மகிழ்வதல்ல.ஆனால் ஆங்கிலேயரின்
இந்தப்பிறந்தநாள் கொண்டாட்டமோ, வாழ்த்துக்களைப் பெற்றுக் கொண்டு மகிழத்தான் அமைக்கப்பட்டிருக்கின்றது.
பிறந்தநாள் அன்று
மற்றவர்கள் நம்மை வாழ்த்த வேண்டும் பரிசுகளை வழங்க வேண்டும் என்பது போன்ற எதிர்பார்ப்புக்கள்
நமக்கு இருக்கின்றன. நாங்கள் சிறுவர்களாய் இருந்த போது பிறந்தநாட்கள் ஒரு பொருட்டாகவே
இருந்ததில்லை. காந்தி ஜெயந்தி, கிருஷ்ண ஜெயந்தி என்பவைகள் விடுமுறை நாளாகவோ திருவிழாவாகவோ
தான் உணரப்பட்டு வந்திருக்கின்றன. என் பாட்டியின் பிறந்த நாள் எனக்குத் தெரிந்திருக்கவில்லை.
ஏன், என் அம்மா அப்பாவின் பிறந்தநாட்கள் கூட இன்றைய காலத்தில் தான் முக்கியத்துவம்
பெற்றிருக்கின்றன.
எனக்கு நினவிலிருப்பதெல்லாம்
என் பிறந்தநாள் அன்று வீட்டில் பாயாசம் செய்வார்கள், மாலையில், முடிந்தால் கோவிலுக்குப்
போய் என் பெயரில் ஓர் அர்ச்சனை செய்வார்கள். யாரும் எனக்கு வாழ்த்துக் கூறியதும் இல்லை,
நானும் அதை எதிர் பார்த்ததுமில்லை.
சில பணக்காரப்
பள்ளித் தோழர்கள் சாக்கலேட் மிட்டாய்க் கொடுத்து ‘ஹேப்பி பெர்த்டே’ பாட்டுப் பாட பிறந்த
நாள் கொண்டாடி மகிழ்வார்கள். மிட்டாய் வாங்க அதிகம் செலவாகும் என்பதால் எங்களுடைய பிறந்த
நாட்கள் பரம ரகசியமாகப் பாதுகாக்கப்படும். வாழ்க எங்கள் பணக்காரத் தோழர்கள் ! அவர்கள்
புண்ணியத்தில் ஹேப்பி பெர்த்டே பாடலை நாங்கள்
பாடக் கற்றுக் கொண்டோம்.
இன்றைய நிலை வேறு.
ஒருவருக்குப் பிறந்த நாள் வருகின்றது என்றால், புத்தாடை, ( கலர் டிரஸ்), பார் சாக்கலேட்,
மாலையில் கேக் வெட்டும் விழா, அதில் கலந்து கொள்பவர்களுக்கு விருந்து மற்றும் அவர்களுக்கு
எதிர் பரிசு என்று அமர்க்களப்படுகிறது. பெரிய பையன்களும், பெண்களும் கேக் வெட்டி அதனை
முகத்தில் பூசி அழகு காட்டி அமோகமாகக் கொண்டாடுகிறார்கள். பேஸ் புக் வாழ்த்துக்கள்-
நூற்றுக் கணக்கில் “லைக்” என்று கொண்டாட்டம் கண்டம் தாண்டி விரிகிறது. இவை அத்தனையும்
அதிக, இன்னும் அதிக வியாபாரத்திற்கு வழிவகுக்கின்றன. இந்த விழா, வியாபாரிகளின் வசம்
மாட்டிக் கொண்டதால் புதுப்புது யுக்திகள் கையாளப்பட்டு பிறந்தநாட்களின் மகிமைக் கூட்டப்
படுகின்றது.
அரசியல் தலைவர்கள்,
மற்றும் பல சங்கங்களின் தலைவர்களின் பிறந்த நாட்கள் பெருவிழாக்களாகக் கொண்டாடப் பட்டுவருகின்றன.
அனேகமான தொண்டர்களுக்கு வாழ்த்துக்கும், ஆசிக்கும் வித்தியாசம் தெரிவதில்லை. மேடையில்
ஏறி, ‘தலைவரை வாழ்த்த வயதில்லை எனவே வணங்கி அமைகின்றேன்’ என்று பணிவு காட்டி அளவில்லா
மரியாதையை வெளிப்படுத்தித் தமிழ்ப் புலமையைக் காட்டி நிற்கின்றனர். இந்த விழாக்களின்
முடிவில் கணிசமாக டாஸ்மாக் வகைகளும் பரிமாறப்பட்டுத் தொண்டர்களின் தாகத்தைத் தீர்ப்பதில்
தலைவர்களும் தயங்குவதில்லை. அனேகமான கோழிகளுக்கு தலைவர் பிறந்தநாள் இறக்கும்நாள் ஆகி
விடுகிறது. ஏனென்றால் கோழிக்கறியில்லாமல் இந்த மாதிரியான விழாக்கள் நிறைவு பெறுவதில்லை.
இத்தகைய இன்றைய
சூழல் நம் எல்லோர் மனத்திலும் பிறந்த நாட்களின் அருமையை வெகுவாக உயர்த்திவிட்டது. இது
குறித்து அதிகமான எதிர்பார்ப்புக்களையும் மனத்தில் வளர்த்து விடுகின்றது. எதிர்பார்ப்பும்
ஏமாற்றமும் இரட்டைப் பிறவிகள். எனவே நெருங்கிய உறவுகளுடன் பிணக்கு ஏற்பட பல வாய்ப்புக்கள்
ஏற்படுகின்றன.
“ ஒரே ஒரு முறை
மனைவியின் பிறந்தநாளை மறந்துபார் பின் ஆயுசுக்கும் மறக்காது “ என்ற உண்மையை பல ஆண்கள்
அனுபவித்து உணர்ந்திருப்பார்கள்.
பிறந்த நாட்களை சிறப்பாகக் கொண்டாட சில வழிகள்,
பிறந்த நாளில்
யார் யாருடைய வாழ்த்தையும் ஆசியையும் நாம் பெரிதாக நினைக்கிறோமோ அவர்களிடம் முன் கூட்டியே நினைவு படுத்திவிடவேண்டும். அப்படி செய்தும்
அவர்கள் மறந்துவிடக்கூடும் என்பதால், அவர்களிடத்தில் சொல்லியே வாழ்த்துக்களை அள்ளிக்
கொள்ளலாம்.
பேஸ் புக் போஸ்டில்
உங்கள் பிறந்தநாள் அறிவிப்பு ஒன்றும் பதிவு செய்யலாம்.
பிறந்த நாள் அன்று,
ஆதரவற்றோர் இல்லம், முதியோர் இல்லம் போன்ற
இடங்களில் சிற்றுண்டி, விருந்து, இனிப்பு வழங்குதல் போன்ற சில செயல்களைச் செய்தால்
மனத்திற்கு ஏற்படும் திருப்தியும், மனதார சொல்லப்படும் வாழ்த்துக்களும் ஒரு வருடம்
வரை உங்களுக்கு ஊக்கமளிக்கும்.
தம்மில் மூத்தோரிடம்,
தாமே சொல்லி பிறந்தநாள் ஆசியை நாடி அது கிடக்கப்பெற அவர்களுக்கு சிறு பரிசு இனிப்பு
என்று தந்து மகிழலாம்.
பரிசுகளை எதிர்நோக்காமல்
நாம் உவந்தளிக்கும் நன்மைகளையும், இனிப்புகளையும் பற்றி திட்டமிட்டு செயல் பட்டு ஆங்கிலேயரின்
பண்டிகையை நம் கலாச்சாரத்திற்கு ஏற்றவாறு மாற்றி அமைத்துக் கொள்ளலாம்.
இந்தக் கருத்துக்களுக்கு
இனங்க நீங்கள் எதிர்காலத்தில் செயல்பட நினைக்கிறீர்கள் என்றால் வரவிருக்கும் உங்களுடைய
எல்லாப் பிறந்தநாட்களுக்கும் என்னுடைய நல்வாழ்த்துக்களை முன்கூட்டியே உரித்தாக்குகிறேன்.
Advance best wishes to
you for your many many Happy Birthdays ahead