Sunday, September 6, 2015

இயற்கை நல வாழ்வு முகாம்.—பகுதி 6

உண்ணா நோன்பு தான் உடலை உட்புறம் சுத்தகரித்துக் கொள்ளும் முறை. உண்ணா நோன்பு முறையாக மேற்கொள்ள வேண்டிய ஒரு செய்முறை. இன்றைக்கே நினைத்து, இப்பொழுதே ஆரம்பித்துவிடக் கூடிய ஒன்றல்ல. உண்ணா நோன்பு மேற்கொள்ள முடிவு செய்திருக்கும் முன் தினம் இரவு உணவு மிகவும் இலகுவான பழ உணவாக, இயற்கை உணவாக இருத்தல் அவசியம். புரோட்டா பிரியாணி, புளியோதரை, போலியல் என்று விருந்தில் சாப்பிடுவது போல் செம கட்டு கட்டிவிட்டு அடுத்தநாள் உண்ணாவிருதம் இருப்பது முறையல்ல.

உண்ணா நோன்பு நன்குமுறையில் மேற்கொள்ளலாம்
    1.   பழங்கள் மட்டும் சாப்பிட்டு நோன்பு இருப்பது
    2.பழச்சாறு மட்டும் குடித்து நோன்பு மேற்கொள்ளுவது
    3.  நீர் மட்டும் அருந்தி நோன்பு இருப்பது
    4. நீர் கூட அருந்தாமலும் எதுவுமே உட்கொள்ளாமலும் நோன்பு இருப்பது.

இந்த நான்கு முறைகளில் நான்காவது முறை யோகிகளால் மேற்கொள்ளப்படுவது. இந்த முகாமில் நாங்கள் மேற்கொள்ள இருப்பது மூன்றாவது முறை.

இரவு தூங்கச் செல்லும் முன் பல் துலக்கிவிட வேண்டும். பிறகு மனத்தில் அடுத்த நாள் நோன்பு இருக்கப் போவதை நினைவு படுத்திக் கொண்டுத் தூங்கச் செல்ல வேண்டும்.

இந்த வகையில் எங்களுக்கு இலகுவான உணவு வாழைப்பழமும், ஊறவைத்த நிலக்கடை கொஞ்சமும் கொடுக்கப் பட்டுவிட்டதை நினைத்துப் பார்த்துக் கொண்டேன்.

அடுத்த நாள் காலையில் எழுந்தவுடன், தலைக்குக் குளித்தோம். மல ஜலம் கழித்த பிறகு ஒருமுறை இனிமா எடுத்துக் கொண்டோம். அன்றைக்கு முழுமையான மௌன விரதம். யாரிடமும் பேசவோ, தாமாகப் பாட்டை முனுமுனுக்கவோகூட கூடாது.எந்தப் புத்தகத்தையும் படிக்கக் கூடாது. தியானம் செய்யலாம் மற்றபடி படுத்து இருக்கலாம். தூக்கம் வந்தால் தூங்கிக் கொள்ளலாம். இடை இடையே தாகம் எடுக்கும் பொழுது தண்ணீர் குடித்துக் கொள்ளலாம். எந்தக் காரணம் கொண்டும் காலையில் பல் துலக்கக் கூடாது. பல் துலக்கினால், பல் பொடியின் சுவையே ஜீரண உருப்புகளின் செயல்பாட்டைத் துவக்கிவைத்துவிடும். 

மதியம் ஒருமுறை இனிமா எடுத்துக் கொண்டோம், இப்படியாக மிக மெதுவாக பொழுது கழிந்தது. கிட்டத்தட்ட நாற்பது பேர், யாரும் யாருடனும் பேசிக் கொள்ளாமல், ஏன் ஒருவரை ஒருவர் சரியாகக் கூட ஏறெடுத்தும் பார்க்காமல் மேற்கொண்ட விராதம் ஒரு புது அனுபவம். ஆச்சரியம் என்ன வென்றால் பசி அவ்வளவாக உணரப்படவில்லை. மிகுந்த களைப்பாக இருக்குமோ என்றால், அதுவும் இல்லை. எல்லோரும் தெம்பாகத்தான் காணப்பட்டார்கள்.

மாலை 5.00 மணிக்கு நோன்பு முடிக்க வேண்டும். அதற்கு முன் ஒரு முறை இனிமா எடுத்துக் கொண்டு மீண்டும் ஒரு முறைத் தலைக்குக் குளிக்க வேண்டும். எனவே 4.00 மணிக்கே இந்த ஏற்பாடுகளில் இறங்கிவிட்டேன். 4.30 மணிக்கு இந்த வேலைகள் முடிந்துவிடவே தங்குமிடத்துடன் கூடிய மொட்டைமாடிப் பகுதிக்குச் சென்று இயற்கையை ரசித்துக் கொண்டிருந்தேன். மற்ற நண்பர்களும் வந்து விட்டதால் தங்கள் ஒவ்வொருவருடைய அனுபவம் பற்றியும் பேசிக் கொண்டோம். யாருக்கும் உண்ணா நோன்பு சிரமமாக இல்லை என்பதைப் புரிந்து கொண்டோம். பசி வந்தால் பத்தும் பறந்து போகும் என்று சொல்வார்கள். பசியே ஒருநாள் வராமல் இருக்க என்னென்ன செய்ய வேண்டும் என்பதைப் புரிந்து கொண்டோம்.

மாலை மணி 5.00. உண்ணா நோன்பு முடிந்ததற்கான அறிவிப்பாக மணியோசைக் கேட்டது. கீழே எலுமிச்சம் பழச்சாறும் தேனும் கலந்த பானம் வழங்கப்பட்டது. எல்லோரும் மிகமிக நிதானமாக அந்தப் பானத்தை வாங்கி தரையில் அமர்ந்த வண்ணம் கொஞ்சம் கொஞ்சமாக அருந்தினோம். உடல் மிக மிக சுத்தமாக இருப்பதாக ஒரு உணர்வு. இன்றைய பொழுதில் ஒரு முக்கிமான வைத்திய முறையான உண்ணா நோன்பை அனுபவித்து இது ஒன்றும் கடினமான ஒன்றல்ல என்று தெளிந்தோம். 

உண்ணா நோன்பு ஒரு மாதத்தில் இரண்டு முறை மேற்கொள்ளலாம்.ஏகாதசி, அமாவாசை அல்லது பௌர்ணமி நாட்கள் உண்ணா நோன்பிருக்க உகந்த நாட்கள். உண்ணா நோன்பு அனுபவங்கள் பற்றி திரு. பாலசுப்பிரமணியம் அவர்களுடன் ( ஆசிரியர் )பகிர்ந்து கொண்டோம். கிட்டத்தட்ட 120 கிலோ எடையுடைய மனிதர் ஒருவரும் இந்த முகாமில் கலந்து கொண்டிருந்தார். அவருக்குக் கூட, இந்த அனுபவம் எந்தச் சிரமமும் இல்லாத சிறந்த ஒரு அனுபவம் என்று அவர் கூறக் கேட்டோம். 

பிறகு இரவு உணவாக இரண்டு வாழைப்பழங்கள் மட்டும் 7.00 மணியளவில் எங்களுக்கு வழங்கப்பட்டது. இரவு உணவிற்குப் பிறகு இயற்கை மருந்துகள் பற்றிய விளக்க உரை. இந்த உரையின் வாயிலாக நமது அன்றாட உணவில் பயன்படுத்தும் பல பொருட்களின் மருத்துவக் குணங்களைத் தெரிந்து கொண்டோம். நானும் மற்றும் சில நண்பர்களும் இந்த உரையைக் குறிப்பெடுத்துக் கொண்டோம். அடுத்தப் பதிவில் இதைப் பற்றி  நீங்கள் எதிர்பார்க்கலாம். 

4 comments:

S.Venkatachalapathy said...

உண்ணா நோன்பு சிறந்த மருத்துவ முறை. நம்முடைய பண்டைய கலாச்சாரத்தில் இது ஓர் அங்கம். நோய் வராமல் தடுப்பதற்கும், நோய் குணமாவதற்கும் நாம் எல்லோரும் மேற்கொள்ளலாம். விரதம் மேற்கொள்ளும் பழக்கம் உள்ளவர்கள், இந்தப் பதிவை படித்தால் முறைப்படி விரதம் மேற்கொண்டு பயன் பெறலாம்.

Nagendra Bharathi said...

உண்மை

Unknown said...

இனிமா என்றால் என்ன தெளிவாக கூறவும்.முடிவுறைஐ நோக்கி

S.Venkatachalapathy said...

எனிமா எடுத்தல் என்றால் மலக்குடலைச் சுத்தம் செய்யும் ஒரு எளிய முறை. அடியிற்கண்ட வலைப்பதிவில் அதற்குப் பயன்படும் உபகரணத்தின் படத்துடன் கூடிய விளக்கம் இருக்கிறது.

http://uravukaaran.blogspot.in/2010/08/blog-post_26.html

இணைப்பை சொடிக்கி அறிந்து கொள்ளவும்.

Post a Comment