இதைப் பற்றி எல்லா மத்திய அரசின் எதிர் கட்சிகளும் பேசியாகிவிட்டது. தொழில் வர்த்தக சங்கங்களும், வணிகர் சங்கங்களும் அபாயக் குரல் கொடுத்தாகி விட்டது. பொது மக்கள் என்னவோ இதையெல்லம் அவர் அவர் நலனுக்காகவும், அரசியல் ஆதாயத்திற்காகவும் பேசுவதாக எண்ணியிருக்கக் கூடும். வழக்கம் போல் பெண்கள் இதைக் கண்டுகொள்ளாமல் இருக்கவும் கூடும்.
வெளிநாட்டுக் கம்பெனிகள் இந்தத் துறையில் நுழைந்தால் நாம் உளவியல் ரீதியாக மிகுந்த சிரமங்களுக்கு உள்ளாகுவோம் என்ற கருத்தைப் புரிந்து கொள்ள இதைப் பற்றிய என் எண்ணங்களையும் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
'தனி ஒருவனுக்கு உணவில்லையெனில் ஜகத்தினை அழித்திடுவோம்' என்ற பாரதியாரின் கூற்றை நினைத்துப் பல முறை வியந்திருக்கிறேன். மனிதனைத் தவிர வேறெந்த உயிருக்கும் உணவினைப் பெற இன்னுமொருவரை சார்ந்திருக்க வேண்டிய நிர்பந்தமும் துர்பாக்கியமும் இல்லை.
ஏற்கனவே இந்த துர்பாக்கியத்தில் உழன்றுகொண்டிருக்கும் நமக்கு, நம் நாட்டின் சிறு வியபாரிகளின் ஆதிக்கம் போதாது என்று அயல்நாட்டுப் பெருவியாபாரிகளின் பேராதிக்கம் வருவதற்கான அறிகுறிகள் தென்பட ஆரம்பித்து விட்டன. என்னதான் ஜனநாயக நாடாக இருந்தாலும் சட்டம் என்று ஒன்று இயற்றப்படுமேயானால் அதற்குக் கட்டுபட்டு நடக்க நாம் தயாராகிவிட வேண்டியதுதான்.
சில்லரை வர்த்தகத்தில் வெளிநாட்டுக் கம்பெனிகள் வருவதற்கு எதிர்ப்புகள் இருக்கும் போதிலும் காலப்போக்கில் நிலை மாறிவிடக்கூடும்.
ஏற்கனவே அரிசி, சமையல் எண்ணெய் போன்ற பொருட்களின் விலையில் 50 % விவசாயிகளுக்கும் 50 % வியாபாரிகளுக்கும் பகிர்வாகிறது. அந்நிய பெரு வணிகர்கள் வியாபித்திருக்கும் நாடுகளில் 8 % விவசாயிகளுக்கும் 92 % வணிகத்திற்கும் பகிர்வாகிறது. இந்த நிலை நமக்கு வந்து நாம் எல்லாம் சூப்பர் மார்கெட்டுகளில் எஸ்கலேட்டர்களில் அலைமோதி அதில் பெருமையடையத் தயாராகிவிடவேண்டியதுதான்.
பத்து ரூபாய் பிஸ்கட் பாக்கெட் வாங்க அருகிலிருக்கும் கடையில் நாம் செலவிடும் நேரம் 2 முதல் 3 நிமிடம் மட்டுமே. சூப்பர் மார்கெட்டில் குறைந்தது 15 நிமிடம் செலவாகும். பெரிய ஷாப்பிங் மாலில் வாங்குவதை நினைத்தால் தலை சுற்றும். ஒரு மாதம் முழுவதிற்கும் சேர்த்து வாங்கி தூக்க முடியாமல் தூக்கிவர வேண்டியிருக்கும். மாலில் நமக்குக் கிடைக்கும் மரியாதையைச் சொல்லிக் கொள்ள முடியது. நமக்கு வேண்டிய பொருட்களைத் தேடித்தேடி சென்று எடுத்துக் கொள்ள வேண்டியிருக்கும். பில் போடும் இடத்தில் பெரிய வரிசை. அங்கே சிலநேரங்களில் கம்ப்யூட்டர் வேலை செய்யவில்லையென்றால் பொருட்கள் கைக்கு எட்டி வாய்க்கு எட்டாத நிலை. எந்தப் பொருளைப்பற்றிய எந்தவிபரமும் தெரியாத கடைக்காரப் பையன்களும், பெண்களும். மேற்கொண்டு ஸொடெக்ஸோ பாஸ், கிரிடிட் கார்ட் போன்றவற்றிக்கும் சேர்த்து நாம் பணம் கொடுக்க வேண்டியிருக்கும் நிலை. ( பணம் எப்படிப் எடுக்கப்படுகிறது என்று பலருக்கும் தெரியவே தெரியாது.) இப்படிப்பட்ட பரிதாபமான அனுபவங்கள் கிடைக்கப் பெருவோம்.
நம் கலாச்சாரத்தில் விற்பனை விலையை எப்படி நிர்ணயம் செய்து வந்தோம் தெரியுமா?
விற்பனை விலை= மூலப்பொருளின் விலை+செய்கூலி+சேதாரம்+ லாபம்.
இன்றைய பெருவணிகர்கள் விலை நிர்ணயிக்கும் விதத்தை,வித்தையைப் பாருங்கள்.
விற்பனை விலை= பொருளை எவ்வளவு அதிகப்படியான விலை கொடுத்து மக்கள் வாங்க தயாராய் இருக்கிறார்கள் என்பது.
எடுத்துக்காட்டாக ஊட்டச் சத்து பானம் 1 கிலோ 300 ரூபாய் விற்கிறதென்றால் அதில் உள்ள மூலப் பொருட்களின் விற்பனை விலை 1 கிலோ 30 ரூபாயைத் தாண்டாது. சரியான விகிதத்தில் கலப்பதற்குக் கூலி 270 ரூபாய். இந்த நிலை மிகச்சுலபமாக ஏற்றுக் கொள்ளப்பட்டு விட்ட ஒன்று.
தங்கத்தைப் பொருத்தவரையில் இந்த ஃபார்முலா எற்றுக்கொள்ளப்பட்டது என்றால் அது ஆடம்பரத்திற்காக மக்கள் இறைக்கும் பணம் என்று நியாயப்படுத்திவிடலாம். இயற்கை அன்னை இலவசமாக வழங்கிடும் உணவுக்கு இப்படி விலை நிர்ணயம் செய்வது ஏற்புடைய செயலா இல்லையா என்று ஒருபக்கம் பட்டி மன்றங்கள் நடந்தாலும், பெருவணிகர்கள் அவர்கள் ஃபார்முலாவை நடைமுறைப்படுத்திக் காட்டுவார்கள்.
இதுபோல் அத்தியாவசியப் பொருட்கள் அனைத்தும் கன்னா பின்னாவென்று விலை வைத்து விற்கப்படும். பன்னாட்டு நிறுவனங்கள் என்பதால் இங்கே அவர்கள் எதிர்பார்க்கும் விலை ஒரு பொருளுக்கு கிடைக்கவில்லையென்றால் அப்பொருளை ஏற்றுமதிகூட செய்து விடுவர். இப்பொழுது கூட முதல் தர கடல் உணவுகள் சில நமக்குக் கிடைப்பதே இல்லை.
பொதுவாகவே பெருவணிகர்கள் கொள்முதல் விலையை மிகக்குறைவாக நிர்ணயிப்பார்கள். விற்பனை விலையோ மிக அதிகமாக இருக்கும். அப்பொழுது அவர்கள் மிக அதிக லாபம் அடைவார்கள். கிரிடிட் கார்ட், டெபிட் கார்ட், ஸொடெக்ஸோ பாஸ் முதலியன நம்மை பெருவணிகர்களிடம் மட்டுமே பொருட்கள் வாங்க ஊக்கப்படுத்தும். உற்பத்தியாளர்களோ காத்திருந்து சில்லைரை வியாபாரம் செய்ய விரும்ப மாட்டார்கள். எனவே அவர்கள் பெருவணிகர்களின் கட்டுப்பாட்டில் சென்றுவிடுவார்கள். காலப்போக்கில் பொருட்களின் தரம் குறைந்தாலும் நம்மால் அறிந்து கொள்ளவே முடியாது.
சமீபத்திய ஆய்வுப்படி தற்சமயம் இந்தியாவில் சுயதொழிலில் ஈடுபட்டிருப்போர் 51 % , மாதச் சம்பளம் பெருபவர்கள் 16 % , தினக்கூலித் தொழிலாளர்கள் 33 % .
இதில் சுயதொழில் செய்பவர்கள் பலர் ஈடுபட்டிருக்கும் துறை சில்லரை வர்த்தகம். தினக்கூலித் தொழிலாளர்களுக்கும் அதிக வேலைவாய்ப்பு சில்லரை வர்த்தகம் மூலம் தான்.
பெருவணிகம் ஆதிக்கம் செலுத்தும் காலத்தில் சுயதொழில் செய்பவர்கள் மற்றும் கூலித்தொழிலாளர்கள் பலருக்கு வருவாய் ஈட்டும் வாய்ப்பு இல்லாமல் போய்விடும். இதனால் பலர் உளவியல் ரீதியாக பாதிக்கப்படுவர்.
மேலும் பெருவணிகர்கள் பலர் வெளிநட்டைச் சார்ந்த MNC கம்பெனிகளாக இருப்பதால் அதில் வேலை செய்பவர்களுக்கும் அவர்களுடைய கலாச்சாரம் தொற்றிக் கொள்ளும். இதனால் கலாச்சார மாறுதல்கள் நிகழக்கூடும்.
இந்த நிலையில் நம் நாட்டின் பொருளாதாரம் நம் கட்டுப்பாட்டில் இருக்காது. ஆனால் GDP என்ற பொருளாதாரக் குறியீடு வளர்ந்து விட்டதாக ஆட்சியாளர்கள் தம்பட்டம் அடித்துப் பெருமை கொள்வார்கள்.
இந்த மாறுதல்களுக்கு நாம் நம்மை ஆயத்தப் படுத்திக் கொள்ள வேண்டும். இன்றைய தலைமுறையினருக்கு மட்டும் தான் இதில் சிரமங்கள் இருக்கும். வளர்ந்த நாடுகளில் உள்ளது போல் அடுத்த தலைமுறையினருக்கு இதுவே நடைமுறையாக மாறியிருக்கும். நம் ஆட்சியாளர்களும் நம்முடைய நாட்டின் பாதுகாப்பை இந்த மாற்றத்திற்குப் பிறகு உறுதிசெய்யும் அளவிற்கு திறைமையானவர்களாக மாறிவிடுவார்கள்.
இதெல்லாம் இதுவரை அயல்நாடுகளில் நடந்த நிகழ்வுகளிலிருந்து யூகிக்க முடிகிறது. ஊகிக்க முடியாத ஒன்று, இந்த மாறுதல்களுக்காக நாம் கொடுக்கவிருக்கும் விலை என்னவென்பது.
சட்டம் இயற்றுவதில் ஆகட்டும், மருத்துவத் துறையாகட்டும், பொறியியல் துறையாகட்டும் நமக்கு வளர்ந்த நாடுகளின் பாதையில் போயே பழக்கமாகி விட்டது. வியாபாரத் துறையிலாவது நம்முடைய பாதை தனித்துவம் வாய்ந்ததாக இருக்க வேண்டும் என்ற அவா இருந்துகொண்டேதான் இருக்கிறது. இந்த அவா பலபேருக்கு இருந்தால் உறுதியாக அப்படியொரு புதிய பாதை அமையும்.
2 comments:
இன்றைக்கு நம்மை மிகவும் பாதிக்கிற
பாதிக்க இருக்கிற விஷயத்தை இவ்வளவு தெளிவாக விரிவாக அழகாக
யாரும் பதிவாகக் கொடுக்கவில்லை
இதற்குப் பின்னே தங்கள் உழைப்பும் நேர்மையான சிந்தனையும்
சமூகத்தின் பால் உங்களுக்கு உள்ள அக்கரையும் விளங்குகிறது
ஆயினும் ஏமாற்றுபவர்கள் யார் என்கிற போட்டி நடந்தாலும்
ஏமாறுபவர்கள் எப்போதும் நம்மைப் போன்றவர்களாகத்தான் இருக்கிறோம்
ஏமாற்றுவது வால்மார்ட்டாக இருந்தால் என்ன
உள்ளூர் பலசரக்குக் கடை மாடசாமியாக இருந்தால் என்ன ?
மனம் கவர்ந்த பதிவு
பகிர்வுக்கு நன்றி
தொடர வாழ்த்துக்கள்
த.ம 2
"மாறுதல்களை அணைத்துக் கொள்ள வேண்டுமாம்.மாறுதல்களை மூலம் வரை புரிந்து கொள்ள வேண்டுமாம். எல்லாமே மாற வேண்டுமென்பதில்லையாம். மாறுதல் அடைபவைகளும் ஏற்கனவே நிகழ்ந்த மாறுதல்கள் போல் அளவிலும், வழிவகைகளிலும் இருக்க வேண்டிய அவசியம் இல்லையாம்."
இப்படியொரு தத்துவத்தை முன் வைத்து புத்தாண்டு நல்வாழ்த்தைக் கூறுகிறார் ஒர் அமெரிக்க நண்பர். இவர் அந்த நாட்டுக்காரர்.
மாறுதலை எதிர்த்துப் போராடும் மனநிலை அற்று நிற்கின்றாரோ என்று எண்ணத் தோன்றுகிறது.
இந்தக் கூற்று ஏமாறுதலுக்கும் பொருந்துமோ?
என்னுடைய பதிவின் கருத்தை மேலோட்டமாக வைக்கவில்லை. அதை நீங்கள் மிகச் சரியாக புரிந்து பின்னோட்டமிட்டது உண்மையிலே மெய் சிலிர்க்க வைக்கிறது.
தங்களுக்கு என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கின்றேன்.
Post a Comment