அஷ்டாங்க யோகம் என்பது ஆன்மீக முன்னேற்றத்திற்கான பயிற்சி முறைகள் என்ற நம்பிக்கை வேரூன்றிவிட்டது. மனித நல் வாழ்வுக்கு இன்றியமையாத் தேவைகளாக இன்றைய நாட்களில் கருதப்படுபவை பணமும் பணத்தால் வாங்க முடிகிற அத்துனை பொருட்களும். சிறந்த வாழ்க்கை என்பது, நல்ல வசதி, சிறந்த வீடு, எல்லாவிதமான வீட்டு உபயோகப்பொருட்க்கள், சிறந்த ஆடைகள் அணிகலன்கள், வெளியே போய்வர சொந்த வாகனங்கள், அவ்வப்பொழுது இன்பச் சுற்றுலா, ஆடம்பரமான விஷேசங்கள் போன்றவைகள் தான் என்று மக்களும் ஏற்றுக்கொண்டு விட்டார்கள்.
உடல் நலக்குறைவு ஏற்பட்டால் மிகச் சிறந்த மருத்துவமனை, அறுவை சிகிச்சை, விலை உயர்ந்த மருந்துகள் என்று மக்கள் தேடிச்செல்லும் நிலையும் வாழ்க்கைமுறையாகி விட்டது.
ஒருவரின் வாழ்க்கைமுறையை அஷ்டாங்க யோக அணுகு முறையில் வகுத்துக்கொள்ள முடிந்தால் எப்படியிருக்கும் என்று எண்ணிப்பார்க்கையில் இன்றைய நிலையிலும் சிறந்த வாழ்க்கையை அமைத்துக்கொள்ள சிறப்பான வழிமுறையாகவே இருக்கும் என்பதில் ஐயமில்லை என்று புலப்படுகிறது.
மனிதன் எட்டு பகுதிகளின் சேர்க்கை என்ற ஞானம் வேதகாலத்திலிருந்தே உணரப்பட்டது. இதனைப்பற்றிய விளக்கம் பகவத்கீதையில் தெளிவாக சொல்லப்பட்டிருக்கிறது. நீர், நிலம், காற்று, வெளி,நெருப்பு மற்றும் மனம், அறிவு, புத்தி என்ற எட்டு தான் ஆன்மா உறையும் இடம்.
ஆன்மாவானது சிறந்து வாழ எட்டு பகுதிகளையும் முறையாக பயன்படுத்தவும் பராமரிக்கவும் வேண்டும். இதற்கான பயிற்சிமுறைகள் அஷ்டாங்க யோகத்தின் பகுதிகள்.
அஷ்டாங்க யோகத்தின் பகுதிகள்
- இயமம்
- நியமம்,
- ஆசனம்,
- பிரணயாமம்,
- பிரத்தியாகாரம்,
- தாரணை,
- தியானம்,
- சமாதி
இயமம் என்பது நம்முடைய உடலைப்பராமரிக்கும் முறைகள். தூங்கும் நேரம், கால அளவு, உடல் தூய்மை, அணியும் ஆடைகள், உண்ணும் உணவு,இருப்பிடம் என்பவைகளை முறைப்படுத்துதல். இதில் முறைகேடுகள் இருந்தால் சரி செய்ய அதிக சக்திவிரயமாகும். மனமும் வசப்படாது.
நியமம் என்பது நேர்மையான வாழ்க்கைமுறை. அநியாயங்கள், களவு, அடக்குமுறை, ஏமாற்றுதல், பித்தலாட்டம் வெறித்தனமான பற்று, எதற்கெடுத்தாலும் கோபப்படுதல், அதிகமாக அச்சப்படுதல், காமத்தைச் சரியாக புரிந்துகொள்ளாமல் செயல்படுதல் போன்றவற்றைத் தவிர்த்து வாழக்கற்றுக்கொள்வது. இந்த வாழ்க்கைமுறை ஒன்றும் சிரமமானதல்ல. இருப்பினும் சிரமமானதாகச் சித்தரிக்கப்பட்டு வருவது.
ஆசனம் என்பது உடற்பயிற்சிகள் அடங்கியவை. இப்பொழுதெல்லாம் உடற்பயிற்சி என்றால் 15 நிமிட நடைபயிற்சி போதும் என்றும், அதற்காக டிரட் மில் போன்ற சாதனங்கள் வாங்கிவைத்துக் கொண்டு பெருமைப்படுவது என்றாகி விட்டது. டிரட் மில் பழுதடைந்தால் பயிற்சி செய்ய முடியாது என்ற நிலை. காலுக்கு மட்டும் உடல் பயிற்சி, ஒரு சில கலோரிகள் உடம்பில் நீங்கிவிட்டால் உடல் சீராகிவிடும் என்ற நம்பிக்கை வளர்ந்து விட்டது. மேலும் பலப் பல உபகரணங்கள் சந்தைப்படுத்தப் பட்டு வருகின்றன. இந்த முறைகளையெல்லாம் காட்டிலும் உபகரணங்கள் ஏதுவுமின்றி முழு உடலுக்கும் முழுமையான பயிற்சி அளிப்பவை யோக ஆசனங்கள். முழுக்க முழுக்க விஞ்ஞான அடிப்படையில் நம் முனிவர்கள் உருவாக்கிய அற்புதப் பயிற்சிகள். உடலைப்பற்றிய மிகச்சிறந்த ஞானம் பெற்ற நம் முன்னோர்கள் நெறிப்படுத்திய ஈடு இணையற்ற பயிற்சி முறைகள். இந்த பயிற்சிகளை வித்தை என்ற ரீதியில் சித்தரித்து ஒரு கூட்டம் பெயர் சம்பாதித்துக் கொண்டிருக்கிறது.
உண்மையிலே யோகாசனப் பயிற்சிகள் அப்படியொன்றும் சிரமமானவைகள் அல்ல. பல வருடங்கள் யோகாசனம் செய்துவரும் என் போன்றோர்கள் இதை நன்கு அறிவர். சிராமமில்லாமல் அவரவர் உடலின் தன்மைக்கு ஏற்ப பயிற்சிகளைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். சர்வாங்க ஆசனமும் சிரசாசனமும் செய்வதைப் பார்த்துவிட்டு நம்மால் முடியாது என்று முடிவெடுப்பது அறியாமையிலும் அறியாமை. முதலில் சூரிய நமஸ்காரம் செய்யப்பழகிக் கொள்ளலாம். அதுவே அதிக நன்மை பயக்கும்.
அடுத்தப் பகுதி பிராணயாமம். இதில் பல விதமான மூச்சுப்பயிற்சிகள் அடக்கம். நம்முடைய மனத்தை உள்நோக்கி திருப்ப உதவும் சிறப்பான எளிய வழியும் நம்முடைய சுய ஆத்ம தரிசனம் செய்ய நம் முன்னோர்கள் உணர்ந்தருளிய மிக எளிய பயிற்சி முறைகள் பிரணயாமத்தில் அடங்கும்.
பிரணயாமம் குறித்து மேலைநாடுகளில் மேற்க்கொள்ளப்பட்ட ஆராய்ச்சிகளின் முடிவுகள் நம்மை வியப்பில் ஆழ்த்துபவை. மனத்தெளிவற்று, பய உணர்வுடன் நிம்மதி இல்லாமல் அலைபவர்களுக்கு இது ஒரு வரப்பிரசாதம்.
பிராணயாமத்திற்கு அடுத்தயோகம் பிரத்தியாகாரம். இதைப்பற்றி பல மாதிரியான விளக்கங்கள் காணப்படுகின்றன. எல்லாமே கொஞ்சம் குழப்பமாக இருக்கின்றன. பிரதி+ஆகாரம் என்று பிரித்துப்பார்த்தால் மிக சிறந்த யோக நிலை புலப்படுகிறது. பிரதி என்றால் நகல், ஆகாரம் என்றால் உருவம். தம்மை ஒரு நகல் உருவமாக உருவகம் செய்து கொண்டு தம்முடைய செயல்களை ஆராய்வது பிரதியாகாரம் என்று பொருள் கொள்வோம்.
நம்முடைய செயல் பாடுகள் பல நேரங்களில், நம் பழக்க வழக்கங்கள், நம்பிக்கைகள், உணர்ச்சிகள் மற்றும் சூழ்நிலை அல்லது பிறரின் நிர்பந்தம் போன்றவைகளை அடிப்படையாகக் கொண்டவை. இவை அனைத்தையும் அறிவுபூர்வமாக ஆராய்ந்தாலொழிய நம்முடைய செயல்களை நெறிப்படுத்துவது முடியாத காரியம்.இவற்றை ஆராய நம்மிலிருந்து ஒரு பிரதி உருவமாக நாமே மாறி ஆராய்வது பிரத்தியாகரம் என்ற கருத்து மிகச்சரியாகப் படுகிறது.
அடுத்த நிலை தாரணை. தாரணையென்றால் ஏற்றுக்கொள்ளுதல் என்று பொருள்படும். நாம் பிரத்தியாகார நிலையில் நின்று நம்மையே ஆராய்ந்து கொள்ளும் பொழுது சில நிறை குறைகளை ஏற்றுக்கொள்ள வேண்டியிருக்கும். நம்முடைய வாழ்வில் நாம் கொண்டுள்ள நோக்கத்தையும்,கடமைகளையும் ஏற்றுக்கொள்ள வேண்டும். பிரத்தியாகாரம் மற்றும் தாரணை மூலமாகத்தான் நம்முடைய அன்றாட செயல்பாடுகளை சீர்படுத்திக்கொள்ள வேண்டும்.
தியானம் என்ற அடுத்த யோகம் கவனித்தல் என்ற பொருளுடயது. சிறந்த அறிவாற்றல் நம் மனம் அமைதியான நிலையில் இருக்கும்பொழுது வெளிப்படும். மனத்தின் கவனிக்கும் திறமையை வளர்த்துக் கொள்வதற்கான பயிற்சியே தியானம். ஒவ்வொரு கணத்திலும் கவனிக்கும் திறமையை வளர்த்துக்கொண்டால் மனம் தானாக அமைதியடையும். அமைதியில் பல நுணுக்கங்கள் புரியும். இதைத்தவிர ஞானம் என்ற இலக்கு எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. இருப்பினும் பல ஞானிகள் ஒரு குறிப்பிட்ட கணத்தில் ஞானம் அடைந்ததாகச் சொல்லிக் கொள்கின்றனர். புத்தருக்கு போதிமரத்தடியில் ஞானம் பிறந்தது என்று பாட நூல்களில் படித்திருக்கிறேன். ஒருக்கால் தம்முடைய வாழ்வின் இலட்சியத்தை அவர் போதிமரத்தடியில் அமர்ந்து பிரத்தியாகாரம் மற்றும் தாரணைகளை தியானித்து ஒரு முடிவெடுத்ததைத்தான் ஞானம் என்று சொல்கிறார்கள் போலும். அவரே, தான் ஞானம் அடைந்துவிட்டதாகக் கூறியிருப்பதை இன்றுவரை நான் படித்ததில்லை.
பிரணயாமப் பயிற்சியே ஒரு தியானம் தான். புத்தர் கூறும் எழிய தியானம் நம்முடைய மூச்சை நாமே கவனிப்பது. ஓம்காரம் ஜபித்து அதன் ஒலி நம் உடலில் இருந்து கிளம்புவதைக் கவனிப்பதும் ஒருவகைத் தியானம். இதில் ஜபித்தலைக் காட்டிலும் கவனிப்பதுதான் முக்கியம்.
இவ்வாறான அகநிலை தியானத்தில் இடையே மனம் அலைபாயாது நிலைகொண்டு எண்ணமில்லாத நிலையிலிருக்கும் நிலை சமாதி.
சம+ஆதி என்று பொருள் கொள்ளலாம். சமாதி நிலை அடைந்த பிறகு அகநிலைத் தியானத்தை நிறுத்திவிட வேண்டும். இல்லையேல் மனம் அதிலே சுகம் காணப்பழகிவிடும். உலக வாழ்க்கைப் பிடிக்காமல் போகலாம்.
இந்தப் பயிற்சிக்குப் பிறகு சக்தி உபாசனையான கயத்திரி மந்திரம் புறநிலை தியானமாக செய்து பயிற்சிகளை நிறைவு செய்தால் நல்ல பலன் உண்டு.
இதுவரை விளக்கப்பட்ட வழிமுறைகளைச் சுருக்கமாய் தொகுத்துத்துப் பார்ப்போம்.
பழக்க வழக்கங்களை தேர்வு செய்து கொள்ளுதல் இயமம்.
வாழ்க்கையில் தொழிலையும், கடமையையும் நியாமான வழிகளில் தொடர்வது நியமம்.
உடல் பராமரிப்பு ஆசனமும், பிராணயாயமும்.
இயம, நியமத்தை சீராக்குவது பிரத்தியாகாரம்.
தன்னைத்தானே உணர்ந்து ஏற்றுக்கொள்வது தாரணை.
ஞானத்திற்கான பயிற்சிகள் பிராணயாயமும் தியானமும். ஓம் ஜெபித்து அதன் ஒலியை நம்முள் அகத்தில் கவனித்து பயிற்சி மேற்கொள்ளுதலும், நம்முடைய மூச்சை நாமே கவனிக்கும் பயிற்சியும் அக நிலை தியானம், காயத்ரி மந்திர ஜபம் புற நிலைத் தியானம்.
சமாதி நிலை அகத்தைத் தொட்டுவருவது.
இயமம்,நியமம், பிரத்தியாகாரம், தாரணை, தியானம் நாள் முழுவதும் நம்முடைய வாழ்வின் இலட்சியப்பயணத்தில் நாம் மேற்கொள்ள வேண்டிய செயல் முறைகள். இம்முறையில் நாம் செயல் படுவது தான் கர்ம யோகம்.
பசி, தாகம், உடல் அசுத்தத்தால் அசௌகரியம் இவைகள் இயமத்தால் வசப்பட, நியமத்தால் மனம் சலனமில்லாமல் இருக்க, பிரத்தியாகாரம் சிறந்த செயல் பாட்டு முறைகளை வரையருக்க உதவ, தாரணை, செய்யும் செயல்கள் அத்தனையையும் மனம் விரும்புவதாக ஆக்கிக்கொண்டு செயல்பட உதவும். செயல் பாட்டில் முழுக்கவனம் தியான நிலை. இந்த நிலையில் மேற்கொள்ளும் செயல் பாட்டின் தன்மைக்கும் பலனுக்கும் ஈடேதும் இல்லை.
ஆசனம், பிரணயாமம், அகநிலை, புறநிலை தியானப் பயிற்சி மற்றும் சமாதி இவை அனைத்தும் ஒரு குறிப்பிட்ட நேரம் ஒதுக்கி செய்ய வேண்டிய பயிற்சிகள்.
இவ்வாறாக அஷ்டாங்க யோக அடிப்படையில் தினசரி வாழ்வை அமைத்துக் கொள்வோமானால் நிறைவான வாழ்வு வாழ முடியும்.
இந்த முயற்சியில் நான் ஈடுபட்டு பல காலமாகிவிட்டது. நீங்களும் முயற்சி செய்து பாருங்கள். முடிந்தால் உங்கள் அனுபவங்களைப் பதிவு செய்து உங்கள் அடுத்த தலைமுறைக்குப் பரிசாக விட்டுச் செல்லுங்கள்.
8 comments:
அருமையான விளக்கம்
அருமையான துவக்கம்
எளிமையான விளக்கம்
அனைவருக்கும் பயன்படும் அருமையான பதிவு
இது முன்னுரையாக இருக்கும் என நினைக்கிறேன்
எட்டு பதிவுகள் இதுகுறித்து தர இருப்பது
தங்கள் பதிவின் துவக்கத்தை வைத்தே
புரிந்து கொள்ள முடிகிறது
அவசியம் தொடரவும்
தொடர வாழ்த்துக்கள்
அனைவருக்கும் பயன்படும் பதிவு...தொடர்க!
சந்துரு, ரெவெரி இருவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள். உங்களின் ஊக்கம் இந்த மாதிரி பொது நலம் விரும்பி செய்யும் பதிவுகளுக்கு ஒரு மேன்மையைக் கொடுக்கிறது.
ரமணி அவர்களின் பின்னூட்டமும், ஊக்கமும் பெருமதிப்பிற்குறியவை. அவருடைய பதிவுகள் சிந்தனையைத் தூண்டும் அற்புத சக்தி படைத்தவை. வாழ்வியல் கருத்துக்களை உள்ளடக்கிய வலைப்பூக்களில் இவருடைய வலைப்பூ முதலிடத்தில் இருந்து வருவது எனக்கும் பிடித்த ஒன்று.
நான் இனி வரும் பதிவுகளைப் பற்றி திட்டமிட்டுருப்பதை எப்படி யூகிக்கிறாரரென்று எனக்கே ஆச்சரியமாக இருக்கிறது. ரமணி அவர்களின் வரவிற்கும் ஊக்கத்திற்கும் மனமார்ந்த நன்றி.
பயனுள்ள பதிவு. செயல்படுத்த விழைகிறேன் . நன்றி
நாம் பிரத்தியாகார நிலையில் நின்று நம்மையே ஆராய்ந்து கொள்ளும் பொழுது சில நிறை குறைகளை ஏற்றுக்கொள்ள வேண்டியிருக்கும். நம்முடைய வாழ்வில் நாம் கொண்டுள்ள நோக்கத்தையும்,கடமைகளையும் ஏற்றுக்கொள்ள வேண்டும்.
பஜ கோவிந்தம் -ஆதிசங்கரரின் பாடலும் ,
பாகவத புராணமும் ,
பகவத்கீதையும் அளிக்கும் விளக்கங்களை எளிமையாக பகிர்ந்தமைக்குப் பாராட்டுக்கள்..
ஒரே நாளில் என்னுடைய பதிவுகளில் எட்டுப் பதிவுகளை படித்துப்பார்த்துப் பின்னூட்டம் இட்டு என்னை பிரமிப்பிலும், மகிழ்ச்சியிலும் ஆழ்த்தியமைக்கு மிக்க நன்றி.
என்னைச் சுற்றி நடக்கும் நிகழ்வுகளைப் பற்றி முடிந்தவரை யார் மனதும் புண்படாவண்ணம் பதிவுசெய்ய விரும்புகிறேன்.
ஒவ்வொருவருடைய மனத்தைப் பொருத்து அவர்களுடைய ஆசைகள், அன்றாட நடவடிக்கைகள் அமைகின்றன. இதில் சரியென்றும், தவறு என்றும் சொல்ல முடிவதில்லை.
இந்தப் பதிவுகள் வழிமுறைகள் எதுவும் சொல்லப்படாமல் இருப்பதால், அப்படியொன்றும் பெரும் வரவேற்பைப் பெருவதில்லை. பொருட்களை சந்தைப் படுத்துதலே என்னுடைய தொழில்.
இந்த பதிவுகளை நான் சந்தைப்படுத்துவதற்கு எழுதவில்லை. இதை எனக்காக நான் எழுதிக்கொள்கிறேன். எனவே வேலை அதிகமாக இருந்தால் எழுத உட்காருவதும் கிடையாது.
ஒவ்வொரு விஷயத்தை நான் எப்படி நோக்க வேண்டும் என்று என்னுடன் நான் பேசிக்கொள்வதுதான் இதில் இடம்பெருகின்றன.
Post a Comment