Monday, January 14, 2013

பொங்கலென்ற பொன்னாள்


உணவின் மகத்துவம் உணர்த்த வரும் நன்னாள்
உணவு விளைச்சலைப் பார்த்திருந்து காத்திருந்து
உலகோர்க்குக் கிடைப்பதைச் சுலபமாக்கிய
உழவருக்கு நன்றி பாராட்டும் திருநாள்.

உணவு உண்டு என்பதிங்கே உறுதியாகிவிடவே
கலையும் உண்டு என்று உணர்த்த, வண்ணக் கோலமிட்டு
மங்கையர் தம் கைவண்ணம் காட்டிக் கொண்டாடும் பெருநாள்.

நுனிக்கரும்பு அடிக்கரும்பு சுவையின் வித்தியாசத்தையும்
கரும்புச் சாற்றை வெல்லமாக்கி பசு நெய்யுடன் சேர்த்து
நெய்யடிசில் பொங்கவைத்து உழவும் தொழிலும் இணைந்த
மேன்மையையும் ஒருங்கே உணரவைக்கும் சுபநாள்

உழவும் தொழிலும் உண்டெனில் வளமும் உண்டு,
வளமாய் வாழ உறவுகள் மேம்பட வாழ்த்துக்களும்,
தானமும் தர்மமும் ஒருங்கே வேண்டுமென்று
உணர்த்திப்போக பொங்கலோ பொங்கலென்று
கொண்டாடி மகிழும் கலாச்சாரத் திருநாள்.

எல்லாம் வல்ல இறைவனைக் கதிரவனின் ஒளிவழி
தரிசனம் செய்து மன அமைதியையும் புத்திக் கூர்மையையும்
ஒருங்கே பெற சின்னச்சடங்குகள் செய்ய அமைந்த பொன்னாள்.