Thursday, October 22, 2015

வாழ்க்கைத் திறன் பற்றி தெரிந்து கொள்ள யாருமே விரும்பவில்லையோ !!!


அவ்வப்பொழுது கல்லூரிகளில் மென்திறன் பயிற்சி நடத்த நண்பர் ஒய்ட் அவர்களுடன் போவதுண்டு. இந்த அளவில்எங்களுடைய பங்களிப்பு மிகவும் குறைவாக இருப்பதாக ஓர் எண்ணம். கல்லூரிகளில் வாய்ப்பு கிடைப்பது எளிதாக இருப்பதில்லை. இத்தகையை பயிற்சிகளுக்குப் பணமும் மிகக்குறைவாக ஒதுக்கப்படுகிறது. நேரம் ஒதுக்குவதில் சிக்கல்இருக்கின்றது. இந்த வகுப்புக்களினால் கல்லூரிக்கு எந்த நல்ல பெயரும் கிடைக்கப் போவதில்லை. ஏனென்றால் மென் திறன் வகுப்புக்களில் என்ன சொல்லித்தருவார்கள் என்ற விபரம் பெற்றோர்களுக்குத் தெரிய வாய்ப்பு இல்லை. இதையெல்லாம் தெரிந்திருந்தால் எவ்வளவு சம்பளம் கிடைக்கும் என்ற கேள்விக்குப் பதிலும் இல்லை.

இருந்தாலும் இந்தத்துறையில் பலகாலமாக ஆர்வம் இருக்கும் எங்களுக்குப் புது முயற்சி ஒன்றை எடுத்தால் என்ன என்றுதோன்றியது. இன்றைய சமுதாயப் போக்கு பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தாமல் போனால் மக்கள் பலவித இன்னல்களை சந்திப்பார்கள். அதற்காக் கல்லூரிகளில் வாய்ப்பைத்தேடி அலைந்தால் கிடைக்குமா என்பது கேள்விக்குறி. மேலாண்மையியல் என்ற ஒரு துறை சமீபத்தில் உருவானதே. அது பணம்சார்ந்த துறை என்பதாலும், கல்லூரிகளில் அதிகலாபம் ஈட்டும் வாய்ப்பை அள்ளித் தருவதாலும் இந்தத்துறை மிக வேகமாக வளர்ந்து விட்டது.

மக்கள் நலமாக வாழ்வதைப் பற்றிய அக்கரை இன்றைய பல கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு கிடையாது. குறுகிய காலத்தில்அதிக வளர்ச்சி அடைந்து உலக அரங்கில் பேசப்பட வேண்டும் என்பது மட்டுமே குறிக்கோள். கார்பரேட் சோசியல்ரெஸ்பான்சிபிலிடி என்ற அடிப்படையில், மருத்துவமனைகள் அமைப்பது , ஏதாவது அரசுப் பள்ளிக்கு ஒரு மதில் சுவரோ அல்லது கழிப்பறை வசதியோ செய்து கொடுப்பது என்பன போன்ற சிறுசிறுச் செயல்பாடுகளில் பணத்தைக் கொஞ்சம் செலவுசெய்கின்றனர். அவ்வளவே!

உணவு, உடல் நலம் மற்றும் மன நலம் பாதுகாப்பது என்பவை நம் கலாச்சாரத்தில் பூடகமாக இருந்த ஏற்பாடுகள். ஆனால்கார்பரேட் கலாச்சாரம், கோவில்கள் மேல் மக்களுக்கு ஏற்பட்டிருக்கும் திடீர் ஈர்ப்பு , சோதிடத்தில் மக்களுக்கு ஏற்பட்டிருக்கும் அபரிமிதமான நம்பிக்கை எல்லாமே ஒன்றாக இணைந்து நம்முடைய கலாச்சாரம் தொலைந்து வருகிறது.உணவில் அளவு மறந்தாகி விட்டது, ருசிக்காகவே உணவு என்றாகி விட்டது. நடைப் பயிற்சி மட்டுமே உடற்பயிற்சி என்று நம்பும் காலமிது. 50 மீட்டர் தூரம் போக இருசக்கர வாகனம். காலையில் எழுந்து கொள்ளும் பழக்கம் அனேகமாக இப்பொழுது நாற்பதைத்தாண்டி இருப்பவர்களுக்குப் பின்னால் மிகவும் அபூர்வமாகிவிடும் போல் உள்ளது. யோகா சிலருக்கு பெருமைப் பேச உதவும் ஒரு நடவடிக்கையாக மாறி இருக்கிறது. நோயாளிகளுக்கு மட்டுமே பரிந்துரைக்கப்பட்ட ஆரோக்கிய பானங்கள் இன்றைய அன்றாட வாழ்வின் அத்தியாவசிம் என்றே ஊடகங்களின் வாயிலாகப் புதிய நம்பிக்கைகள் உருவாக்கப்படுகின்றன.

இத்தகைய நிலையைப் பற்றி ஓரு விழிப்புணர்வை ஏற்படுத்தினால், இவற்றையெல்லாம் புரிந்து கொண்டால், கொஞ்சம் பேராவது வாழ்க்கையைச் சற்று வித்தியாசமாகவும், ஆரோக்கியமாகவும், செல்வச் செழிப்புடனும் வாழ வழி பிறக்கும் என்ற எண்ணம் எங்களுக்கு உண்டு.

இதன் எதிரொலியாக வாரம் ஒரு முறை இலவசமாகப் பயிற்சி வகுப்புக்கள் நடத்துவது என்று முடிவு செய்தோம். ஆதற்காக எங்கள் ஊரில் உள்ள சமுதாயக் கூடம் எங்களுக்குக் கிடைத்தது. அதை Friends Yoga Centre என்ற பெயரில் நண்பர் எசக்கிமுத்து அவர்கள் நல்லவிதமாகப் பராமரித்து வருகிறார். கொன்சிலர் அம்மாவும் அவர்தம் துணைவராகிய நண்பர் பலராமன் அவர்களும் எங்கள் நல்ல முயற்சிக்கு ஆதரவாக இந்த சமுதாயக் கூடத்தில் பயிற்சி வகுப்புக்கள் நடத்த இசைவுதெரிவித்தார்கள்.

காலத்தை இன்னும் தாழ்த்தாமல் சென்ற ஞாயிற்றுக் கிழமையே ஆரம்பித்து விடுவது என்று நான் கூற நண்பர் ஒய்ட்அவர்கள் அரை மனதுடன் இசைந்தார்கள். இந்த நிகழ்ச்சிகளை ஊரில் உள்ள ஒரு பிரபலமானவரைக் கூப்பிட்டு ஆரம்பிக்கவேண்டும் என்பது அவரது விருப்பம். ஆனால் அதற்குச் செலவு செய்ய வேண்டியிருக்கும். மக்களிடம் இதற்கான வரவேற்பு என்ன என்பதை முதலில் தெரிந்து கொண்ட பின்னரே பிரபலங்களை அழைக்கமுடியும். இதைப் பற்றிய செய்தியை Facebook, Whatsapp, மற்றும் SMS மூலமாகக் கிட்டத்தட்ட 600 பேர்களுக்குப் பகிர்ந்து கொண்டேன். கவிஞர் செல்லா அவர்கள் திரு ஒய்ட் அவர்களின் நண்பர் என்பதால் அவர் வருகையை ஒய்ட் உறுதி செய்து கொண்டார். என்னுடைய நண்பர்களான திரு. கிருஷ்ணமூர்த்தி மற்றும் திரு. ராதாகிருஷ்ணன் அவர்களையும், திரு. ஒய்ட் அவர்களின் நண்பர்களான திரு தங்கராஜ், மற்றும் திரு . துரைராஜ் அவர்களையும் தொலைப்பேசிமூலம் தொடர்பு கொண்டு நிகழ்ச்சிக்குவரும்படி கேட்டுக்கொண்டோம்.

18-10-2015 ஞாயிறு மாலை நல்ல மழை. சமுதாயக்கூடம் முன் கணுக்கால் மூழ்கும் அளவிற்குத் தண்ணீர். இருந்தாலும் சிரமத்துடன் நாங்கள் தொலைப்பேசிமூலம் தொடர்புகொண்ட நண்பர்களும், திரு இசக்கிமுத்து அவர்களும் வந்தார்கள்.பாடம் கற்றுக் கொள்ள யாரும் வரவில்லை.

கோவிலுக்குக் கூட பிரசாதம் வாங்குவதற்குத்தான் கூட்டம் வருகிறது. சொற்பொழிவுக் கேட்பதற்கு கூட்டம் வருவதில்லை.சிறந்த ஆன்மீகப் பேச்சாளர் வருவதாய் இருந்தால் அவருக்கான செலவைப் பகிர்ந்தளிக்கும் நண்பர்கள், அவர்தம் குடும்பத்தினர் போன்றவர்கள் வருகின்றனர். இங்கு அருகில் உள்ள கல்லூரியில் பலகாலமாக சைவச் சொற்பொழிவுகள் நடை பெறும். அதற்காகத் திருநகர் வரை ஒரு கல்லூரி பேருந்து இயக்கப்படும் என்பது எனக்குத்தெரியும். பேருந்து இலவசம் ஆயினும் மூத்த குடிமக்கள் ஒரு சிலர் மட்டும் அதில் ஏறிப் போவதை பார்த்திருக்கிறேன். நான் ஒரு முறை கூட கலந்துகொண்டதில்லை. மதம் சார்ந்த கருத்துக்களைப் புத்தகங்கள் வாயிலாகத் தெரிந்துகொள்ள ஆசைப்படுவேன். ஓரிருகூட்டங்களுக்குச் சென்று வந்த நண்பர் அங்கேயும் வடை காப்பி கொடுக்கப்படும் என்பதைச் சொன்னார். இலவசக் கூட்டமாகஇருந்தாலும் குறைந்த பட்சம் வடை காப்பியாவது கொடுக்க வேண்டும். அப்பொழுது தான் மக்கள் வருவார்கள் என்றகருத்தை முன் வைத்தார். அரசியல் கூட்டங்களுக்கு பிரியாணி மற்றும் குவார்டருக்கு உத்திரவாதம் உண்டாம்.

அன்று எந்த வகுப்பும் நடக்கவில்லை. நானும் நண்பர் ஒய்ட் அவர்களும் ஆளுக்கு ½ மணி நேரம் செயல் திறன் வளர்த்துக்கொள்ளும் முறைகள், மற்றும் மன அழுத்தம் குறைக்கும் வழிமுறைகளைப் பற்றி பேசக் கொஞ்சம் தயார் படுத்திக்கொண்டு வந்திருந்தோம்.

கூட்டமோ இரண்டு மணி நேர கலந்தாலோசனைக் கூட்டமாக நடந்தது. அன்று நாங்கள் கற்றவை இதோ.

1.கூட்டம் சேர வேண்டுமானால் ஓர் அமைப்பு வேண்டும். சங்கம், கழகம் அல்லது மன்றம் என்றிருக்க வேண்டும்.

2. ஒவ்வொரு கூட்டத்திலும் சாப்பிட ஏதாவது கொடுக்கப் பட வேண்டும்.

3.கூட்டத்திற்கு வருபவர்கள் அமர்வதற்குச் சாய்வு நாற்காலிகள் ஏற்பாடு செய்ய வேண்டும்

4. இந்தச் செலவுகளை ஈடுகட்ட அங்கத்தினர்களும் சந்தாவும் வேண்டும்.


இத்தனைக்கும் ஏற்பாடு செய்ய வேண்டுமா? ஏற்பாடு செய்தால் அதில் சேரவிருக்கும் அங்கத்தினர்களின் நோக்கம் மென்திறன் வளர்த்துக் கொள்வதாக இருக்குமா? மறுபடியும் மனமகிழ் மன்றம், நற்பணி மன்றம் என்ற பாணியில் தான் செயல்பாடு இருக்கும். இதனால் இந்த மாதிரி சங்கம் அமைப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. ஏற்கனவே இருக்கும் சங்கங்களில்சேர்ந்துக் கூட்டத்திலே கோவிந்தாப் போட்டால் போதும். இதையெல்லாம் மீறி ஒரு வழியும் தென்படுகிறது. அதற்குச்செயல்வடிவம் கொடுத்துப் பார்க்க வேண்டும். அப்பொழுதும் முடியவில்லை என்றால் வலைப்பதிவுகள் மட்டும் தான் ஒரே வழி.தெரிந்ததை எழுதி வைத்துவிடுவோம். சமுதாயம் படித்தால் படிக்கட்டும். தெரிந்ததைப் பதிவு செய்து விட்டோம் என்ற திருப்தியாவது மிஞ்சும். குறைந்தபட்சம் எம்முடைய மென் திறன் சிந்தனைகள் வளரும்.

Sunday, October 11, 2015

மருத்துவத்தால் நோயற்ற வாழ்வா ?


முன்னாளில் மருத்துவமனை என்று சொல்லப்பட்ட இடங்கள் எல்லாம் இப்பொழுது ஆரோக்கிய காப்பகங்கள் என்று புதுப் பெயர் தரித்து மிகப்பெரிய வளாகங்களாக உருவெடுத்து வருகின்றன. நோய் இல்லாதவர்களைக் கூட இந்த இடங்களுக்கு வரவழைக்க புதுப்புது யுக்திகள் கையாளப்பட்டு வருகின்றன. இந்தக் காப்பகங்களின் சேவையை சந்தைப் படுத்த இந்த அமைப்புகளில் மார்கெடிங் பிரிவுகள் அயராது பாடுபடுகின்றன. செய்தித்தாள்களிலும், பத்திரிகைகளிலும் மற்றும் தொலைக்காட்சியிலும் வண்ண வண்ண விளம்பரங்கள் மூலம் இந்தச் சந்தை படுத்தும் பணி வெகு சிறப்பாக நடந்து வருகிறது.

நம்முடைய வாழ்க்கை முறையும் முன்பு போல இல்லவே இல்லை. உணவு பற்றிய நுண்ணறிவை நாம் இழந்து கொண்டு வருகிறோம். ஒரு வாரத்தில் என்ன எல்லாம் சாப்பிட்டால் நம்முடைய ஜீரண உறுப்புக்களால் சமாளிக்க முடியும் என்று நாம் அறிய முற்படுவதில்லை.

நாற்பது வருடங்களுக்கு முன்னால் கிழமைவாரியாக என்னென்ன காய்கறிகள், குழம்பு வகைகள் மற்றும்  உணவுவகைகள் செய்ய வேண்டும். எந்தக் காய்க்கு எந்தக் காய்  ஒவ்வாது என்ற முறைகளை அக்கால பாட்டிகள் சொல்லக் கேட்டிருக்கிறேன். வெள்ளைச் சக்கரை மிக அளவாகப் பயன் படுத்தப்பட்ட காலம். ஆலையில் தீட்டப்பட்ட அரிசி நடைமுறைக்கு வந்து கொண்டிருந்தது. சாமை, குதிரைவாலி, வரகரிசி, தினை போன்ற சிறுதானியங்கள் புழக்கத்திலிருந்து மறைந்திருந்தன. கோதுமையும், கேழ்வரகும் பயன்பாட்டிலிருந்தன. பச்சைக் கேழ்வரகை கைகளால் உதிர்த்து வாயில்போட்டு மென்று பாலாய் சுவைத்த ஞாபகம் எனக்கிருக்கிறது. ஆரோக்கியபானங்கள் பற்றிக் கேள்விப்பட்டதுகூட இல்லை. இருந்தாலும் மக்கள்  உயரமாகவும் நல்ல திடகாத்திரமாகவும் இருந்தார்கள்.

இப்பொழுதெல்லாம் ஒவ்வொரு முறையும் நான் ஓட்டல்களுக்குச் செல்லும் போதும் ,அங்கு மக்கள் எப்படியெல்லாம் சாப்பிடுகிறார்கள் என்று பார்க்கிறேன். சில பேர் சாப்பிடும் வித விதமான  உணவு வகைகளைப் பார்த்தால், எப்படி இவர்களால் இவ்வளவு உணவையும் சாப்பிட முடிகிறது என்று ஆச்சரியமாக இருக்கிறது. நாடு செழிப்பாக உள்ளது. மக்களுக்கு வயிறு முட்டச் சாப்பிட உணவு கிடைக்கின்றது. வசதியும் இருக்கிறது ஆனால் உடம்பு ஏற்றுக் கொள்ளும் படியாக இருக்கிறதா?

உடற்பயிற்சி பற்றிய விழிப்புணர்வு இருப்பது போலத் தெரிந்தாலும், வெகு சிலர் மட்டும் உடற்பயிற்சி செய்கிறார்கள். சிலர் நடைப்பயிற்சி செய்கிறார்கள். மற்றவர்கள் எதையும் கண்டு கொள்ளாமல் நன்றாகச் சாப்பிட, வேலைக்குப் போக என்ற படிக்கு அன்றாட வாழ்க்கையைக் கடத்துகிறார்கள்.

ரொம்பவும் நெருக்கமானவர்கள் ஊருக்குப் போக விடைபெறும் பொழுது, உடம்பை நன்றாகப் பார்த்துக் கொள்ளுமாறும் சொல்லி அனுப்புவோம். ஆனால் உடம்பை மட்டும் நம்மால் நன்றாக பார்த்துக் கொள்ள முடிவதேயில்லை.

நம்முடைய கல்விக்கூடங்கள் உடம்பைப் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்துவதை ஒரு பொருட்டாகக் கொள்வதில்லை. படிப்பு, இஞ்சினியரிங், மெடிக்கல் சீட் அதற்கப்புரம் பெரிய நிறுவனத்தில் வேலை என்று இளைஞர்களின் ஆழ்மனத்தில் பதிய வைத்து அந்தத் திசையிலே அவர்களை கிறுக்குப் பிடித்தது போல் செயல்பட வைக்கிறார்கள். இதற்கு ஒவ்வொரு பெற்றோரும் பெறும் பங்கு வகிக்கிறார்கள். இங்கொன்றும் அங்கொன்றுமாக யாராவது குழந்தைகளின் முழுமையான நலம் பற்றி எழுப்பும் சிறிய ஓசை ஈனமான முனகலாகக் கேட்டு அடங்கிவிடுகிறது. நமது கல்வி வியாபாரிகளின் வியாபாரம் இத்தகு மாயையால் செழிப்பாக வளர்கிறது. நமது சந்ததியினர் பணக்கார நோயாளிகளாய் உருவாக்கப் படுகிறார்கள்.

பிறகென்ன ஆஸ்பத்திரிகள் தங்கள் பெயர்களை ஆரோக்கியக் காப்பகங்கள் என்று மாற்றிக் கொண்டு ஆடு நனையப் பார்த்து ஓநாய் அழுத கதையாய் மிகுந்த அக்கரை உடையவர்களாய்க் காட்டிக் கொண்டு வியாபாரத்தைச் சிறப்பாகச் செய்கிறார்கள். இந்த நிலை இந்தியாவிற்கு மட்டும் பொருந்தும் என்று தப்புக் கணக்குப் போட்டுவிட வேண்டாம். இந்தத் திட்டமே வளர்ந்த நாடுகளில் வகுக்கப்பட்டு வளரும் நாடுகளிலும் சிறப்பாக அரசுகளின் ஆதரவுடன் அரங்கேறி வரும் திட்டம்.

பல நூற்றாண்டுகளாய் நம் முன்னோர்கள் ஆராய்ந்து அறிந்த பலவகையான மூலிகை மற்றும் ஆயுர்வேத சித்த மருத்துவத்தை தொன்னூறு வருட பிரிட்டிஷ் ஆட்சி அழிக்க முற்பட்டிருக்க வேண்டும். மருத்துவம் என்று கல்லூரிகளில் சொல்லிக் கொடுத்தது எல்லாம் ஆங்கில மருத்துவம். வைத்தியரைக் காட்டிலும் டாக்டர் உயர்ந்தவர் என்ற மாயை உருவாக்கப்பட்டது. அறுவை சிகிச்சையின்பால் மக்களுக்கு உள்ள பயத்தைப் போக்க அவ்வப்பொழுது சுஸ்ருதாவை மட்டும் நினைவுகூர்ந்தார்கள் போலும்.

எப்படி நம் வாழ்க்கையில் ஆங்கில மருத்துவம் முக்கியமடைந்தது என்பது ஒருபுறமிருக்க இன்றைய நிலையில் ஆங்கில மருத்துவர்கள் ஆரோக்கிய காப்பாளர்கள் என்ற அந்தஸ்தைப் பெற்று விட்டார்கள்.

இந்தநிலையில் இவர்களின் செயல்பாடுகளும் எப்படி  இருக்கின்றன என்று பார்ப்போமானால், சுத்தியல் எடுத்தவன் கை ஆணியைதேடி அலையுமாம் என்ற புதுமொழிக்கு ஏற்ப காய்ச்சல் சளி என்று போனால்கூட பலவித ரத்தப் பரிசோதனை, ஸ்கேன்,எக்ஸ்ரே என்று பரிந்துரை செய்கிறார்கள். அதற்காக நமது மனமும் பக்குவமடைந்துவிட்டது. இதெல்லாம் செய்யவில்லை என்றால் நம்மைச் சுற்றி இருப்பவர்கள் நாம் சரியான மருத்துவரைப் பார்க்கவில்லை என்று அங்கலாய்க்க நம்முடைய ஆரோக்கியம் குறித்த தன்நம்பிக்கை தூள் தூளாகி இவர்களின் ஆராய்ச்சிக் கூடங்களுக்கு சுண்டெலிகள் ஆவதற்கு நாம் ஒத்துக் கொண்டு விடுகிறோம்.

பரிசோதனக்கூடங்களும், மருந்துக் கடைகளும் மருந்துக் கம்பெனிகளும் தத்தம் தொழில் சிறக்க என்னென்ன யுக்திகளைக் கையாள முடியுமோ அதையெல்லாம் செய்கிறார்கள். கிட்டத்தட்ட 25 வருடம் சந்தைப் படுத்தும் தொழிலில் அனுபவம் இருக்கும் எனக்கு, சந்தையில் போட்டிப் போடுவதென்றால் கார்பரேட் நிறுவனங்களும், ஏன், சில சிறுதொழில் நிறுவனங்களும் என்னவெல்லாம் சித்து வேலைசெய்வார்கள், அவற்றை நியாயப் படுத்துவார்கள் என்று யூகிக்க முடியும்.

கிளினிக்கல் லேப்களில் கொடுக்கப்படும் ரிப்போர்ட்டுகளை நீங்கள் அறிந்த அளவில்  படித்தால் உங்களுக்குப் பயம் ஏற்படும். ஒவ்வொரு ரிஸல்ட்டும் எந்த அளவு இருக்கலாம் என்று ரிப்போர்டின் பின் புறமோ அல்லது அதற்குப் பக்கத்திலோ அளவுகள் கொடுக்கப்பட்டிருக்கும். உங்களுடைய ரிஸல்ட்டும் , நார்மல் என்று போடப்பட்டிருக்கும் அளவையும் ஒப்பிட்டால் பல நேரம் வயிற்றில் புளியைக்கரைக்கும். பிறகு வேறு வழியே இல்லை. அல்லோபதி மருத்துவத்தைத்தான் உங்களைச் சுற்றியுள்ள அத்தினை பேரும் பரிந்துரைப்பார்கள்.

இன்றைய வாழ்கைமுறையும் நம்மைச் சூழ்ந்திருக்கும் தகவல்களும், நம்மை இயல்பாகவே ஆரோக்கியக் காப்பகங்களின் பிடியில் சிக்கவைத்து விடுகின்றன. சிக்கிவிட்டால் நம் சேமிப்பில் கணிசமான அளவை நாம் யதார்த்தமாக இழந்து அதுகுறித்து பதார்த்தமாக பெருமை பேசி செய்த தவறைச் சரியென நிருபிக்க முற்படுவோம். இந்தக் கலாச்சாரம் ஆஸ்பத்திரிகளின் வியாபார விருத்திக்கு பெரிதும் பயன்படுகிறது. கடந்த சில ஆண்டுகளில் மருத்துவம் சார்ந்த தொழிலில் ஈடுபட்டிருப்பவர்கள் அபாரவளர்ச்சி அடைந்திருப்பதே இதற்குச் சான்று.

இது குறித்த விளிப்புணர்வை கொஞ்சமாவது நாம் ஏற்படுத்திக் கொள்ள வேண்டாமா? சில விஷயங்களை மற்றி யோசிக்கக் கற்றுக்கொள்வோம்..

1.   ஆரோக்கிய காப்பகங்கள் உங்களுக்கு இருக்கும் நோய் பற்றி சொல்லி மிரட்டுவதில் முழுவதும் உண்மையில்லை. அங்கே உங்களிடம் கலந்தாலோசிப்பவர் (கௌன்சிலர்) டாக்டர் அல்லாதவராகக் கூட  இருக்கலாம். அவர்களுக்குச் சொல்லிக் கொடுத்தவிதத்தில் அவர்கள் பேசி உங்களை அவர்களுடைய வாடிக்கையாளர்களாய் தக்கவைக்க முயலுவார்கள்

2.   அவர்கள் உருவாக்கும் அவசர சிகிச்சை நிலையை நம்மால் சரியா தவறா என்று தீர்மானிக்க முடியாது. முடிந்தவரை சில நோய்களைப் பற்றியாவது வலைத்தளத்தின் வாயிலாக தெரிந்துவைத்திருக்க வேண்டும்.

3.   உணவில் பெரிய நிறுவனங்களின் தயாரிப்புகளை சேர்ப்பதைக் குறைக்க, முடிந்தால் தவிர்க்கவும் வேண்டும். இதில் ஜீனி, மாவுவகைகள், மதுபானங்கள், குளிர்பானங்கள், ஆரோக்கிய பானங்கள், பிஸ்கட்வகைகள் எல்லாம் அடங்கும். பல பேர்களின் ஒருநாளின் முதல் உணவே பிஸ்கட் என்பது ஒரு வருத்தமான நிலை. இதையெல்லாம் தவிர்த்து என்ன சாதிக்கப் போகிறோம் என்ற கேள்வி எழும். இவையெல்லாம் தவிர்க்கும் மனநிலை வந்துவிட்டால் நாம் செய்து மகிழ எத்தனையோ விஷயங்கள் இருப்பது நமக்குப் புலப்படும்.

4.   கொஞ்சமே கொஞ்சம் யோகாவைப் பற்றித் தெரிந்துகொள்ளுங்கள். கண்ட கண்ட சாமியார்களின் மிரட்டல்களுக்குச் செவிசாய்க்க வேண்டாம். பெரிய யோகா மையங்களையும் தேடி அலைய வேண்டாம். நம் உடம்பிற்கு அன்றாடத் தேவைக்கு வேண்டிய ஆசனங்கள் மற்றும் மூச்சுப்பயிற்சிகள் சுலபமாகக் கற்றுக் கொள்ள எண்ணற்ற இடங்கள் இந்தியா முழுவதும் பரவிக்கிடப்பது நாம் செய்த பாக்கியம்.

5.   நடைப்பயிற்சி ஒன்றே போதும் என்று நினைக்க வேண்டாம். அதிகமான எடையை குறைக்க, சக்கரை அளவைக் கட்டுப் படுத்த நடைப்பயிற்சியால் முடியும் என்றாலும் மூட்டுவலிவருவதற்கு எல்லாச் சாத்தியமும் உண்டு. எல்லாத் தசைகளும் பயிற்சி அடையாது. உள்ளுறுப்புக்களுக்கு குறைந்த நன்மையே ஏற்படும்.

6.   டிரெட் மில் மற்றும் தொலைகட்சியில் விளம்பரப் படுத்தும் வயிறு குறைக்கும் மிஷின் போன்றவற்றை வாங்கிச் சிரமப்பட வேண்டாம்.

7.   இருசக்கர வாகனங்களை அளவாகப் பயன் படுத்துங்கள். நெடுந்தூரப் பயணங்களில் பஸ்ஸில், கார்களில் முடிந்த மட்டும் கண்ணாடிகளை மூடிவைத்துக்கொள்ளவும்.

8.   நேரத்திற்குச் சாப்பிடக் கற்றுக்கொள்ளவும். வயிறுமுட்ட சாப்பிடுவதை பழக்கமாகக் கொள்ள வேண்டாம். சாப்பிடும் போது தண்ணீர் அருந்தக் கூடாது. சப்பிட்டுமுடிந்து அரைமணிநேரம் கழித்துத் தண்ணீர் குடிக்கலாம்.உணவை நன்றாக மென்று சாப்பிட வேண்டும்.

9.   நல்ல வெயிலிலும், சாப்பிட்ட உடனேயும் ஐஸ்கிரீம், குளிர்பானம் சாப்பிடக்கூடாது. ஐஸ்கிரீம் சாப்பிட ஏற்ற நேரம் சில்லென்ற மாலைப் பொழுது. குளிர் பிரதேசங்களில் ஐஸ்கிரீம் சுவைத்து மகிழுங்கள். குளிர்பானங்களால் சாப்பிடும் பொழுது சுகமும் அதன் பிறகு அவஸ்தையும் உணரலாம்.

10. பாலை மோராக்கிச் சாப்பிடுவது 40 வயதைக் கடந்தவர்களுக்குச் சிறந்தது. ஓரிரு டம்ளர் பால் இளம்வயதினர்களுக்கு அதிகம் பாதிப்பை ஏற்படுத்தாது. பால் இன்றியமையாத உணவா என்று இன்னும் முடிவாகவில்லை.

11. உணவில் காய்கறிகளை அதிகமாகவும், தானியங்கள் குறைவாகவும் இருத்தல் நலம். அசைவம் சிறு அளவே போதும். ஒருவர் ஒரு முழுக்கோழியைச் சாப்பிடுவது போன்ற அபத்த ஆசைகளுக்கு ஆளாக வேண்டாம். எல்லாப் பழங்களையும், குறிப்பாக ஆப்பிள் பழங்களைத் தோல் நீக்கிச் சாப்பிடுவோம். ஆப்பிள் மீதுகுற்றமில்லை. காலம் செய்த கோலம். மனிதன் செய்த குற்றம்.

12. கொடூரமில்லாமல் அன்பான அற்பணிப்புடன் கூடிய வாழ்க்கையைப் பழகுங்கள். இதற்குத் தொலைக்காட்சித் தொடர்களையும் அநேகமான படங்களையும் தவிர்க்க வேண்டியிருக்கும். மனதளவில் மாசு இல்லாமல் ஆவதற்கு வேறுவழியில்லை. மன இறுக்கம் நோய்க்கு வழிவகுக்கும்.  

13. இத்தனையும் செய்தாலும் துரதிஷ்டவசமாக நாம் நோய்வாய்ப்பட வாய்ப்புகள் உண்டு. அப்பொழுது கிருமிகளால் ஏற்படும் நோய்களுக்கும், விபத்துகளால் ஏற்படும் காயங்களுக்கும் அல்லோபதிமருத்துவம் தான் சாலச் சிறந்தது. மற்ற நோய்களுக்கு மாற்று மருத்துவம் செய்துபார்க்கலாம். குணம் ஆகும் அறிகுறிகள் இல்லையென்றால் அல்லோபதி மருத்துவத்திற்கு சரணடைவதைத்தவிர வேறுவழியில்லை. அவ்வாறாக அல்லோபதி மருத்துவம் செய்துகொள்ளும் போது நோய்பற்றியும் எந்த மருந்தினால் எப்படி மருத்துவம் செய்யப்படுகிறது என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும். என்னுடைய சின்ன அனுபவத்திலேயே சிறந்த டாக்டர்கள் கூட ஓரிருமுறை தவறான மருந்துகளைப் பரிந்துரைத்ததைப் பார்த்திருக்கிறேன்.

14. எல்லா மருந்துகளுக்கும், ஆயுர்வேதம், ஹோமியோபதி உட்பட  எதிர்விளைவு (ADVERSE EFFECT) இருக்கும் என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும்.

15. உடற்பயிற்சிகளின் எதிர்விளைவுகள்தான் நோயிலிருந்து நம்மைக் காப்பாற்றுகின்றன என்பதையும் உணர வேண்டும்.



வாழ்க நலமுடன்

Sunday, September 13, 2015

இயற்கை நல வாழ்வு முகாம்.—பகுதி 7- இறுதிப்பகுதி.

இயற்கை மருத்துவத்தின் படி அநேக நோய்களுக்கான அடிப்படைக் காரணம் உடலில் சேரும் கசடுகளும், நோய்கிருமியைஎதிர்க்கும் சக்தி குறைதலும் தான். தினம் தினம் உடலையும் மனதையும் நன்றாகப் பராமரித்து உடலுக்கு ஏற்றஉணவுகளைச் சரியான நேரத்தில் சரியான அளவில் சரியான முறையில் உட்கொண்டோமானால் நோய்வாய்ப்படுவதுகுறைந்து போகும்.

காலையில் வெறும் வயிற்றில் 750 மிலி முதல்1 லிட்டர் வரை குளிர்ந்த நீர் அருந்தும் பழக்கம் ஜீரண உறுப்புக்களையும், சிறுநீரகத்தையும் சுத்திகரிக் பெரிதும் உதவும். மலச்சிக்கல் வராமல் தடுக்கும். இந்த எளியப் பழக்கம் அநேகமானநோய்களிலிருந்து நம்மைக் காக்கும்.

குறைந்தது 6 சுற்றுச் சூரிய நமஸ்காரமும், ஒரு சில யோகாசனப் பயிற்சியும் பல உடல் உபாதைகளிலிருந்து நம்மைக்காக்கும். இதற்கெல்லாம் நேரம் ஒதுக்க, தொலைக்காட்சி, வாட்ஸ்அப் மற்றும் முகநூல் பிரவேஷம் முதலியவற்றைத் தியாகம் செய்ய வேண்டியதிருக்கும்.

சாப்பிடும் பொழுது தண்ணீர் அருந்தக் கூடாது. சப்பிட்டு முடித்து அரை மணி நேரம்கழித்து தண்ணீர் குடிக்கலாம். சாப்பிட்டஉடன் குளிர்பானம், ஐஸ்கிரீம் போன்ற மிகவும் குளிரூட்டப்பட்டவற்றை சாப்பிட்டால் அஜீரணக் கோளாறுகள்தோன்றலாம். கேஸ் நிரப்பப்பட்ட குளிர்பானங்கள் ஜீரணக் கோளாறுகள் ஏற்படுத்தும். இதெல்லாம் கடைப்பிடித்தும் நோய் வந்தால் பின்வரும் முறைகளைக் கையாண்டு குணமடையலாம்.

அல்சர்: வெண்பூசனி பச்சையாகவோ தயிருடன் சேர்த்தோ சாப்பிட குணமாகும்.

இரத்த மூலம்: குப்பைமேனி இலையை அரைத்துப் பாலில் கலந்து சாப்பிட குணமாகும்

மூட்டுவலி: விளக்கெண்ணெய், வேப்ப எண்ணெய், நல்லெண்ணெய், கடுகெண்ணெய்,புங்க எண்ணெய் ஐந்தையும்சரிவிகிதத்தில் கலந்து இரவில் படுக்கும் முன் வலி இருக்கும் இடத்தில் தடவிக்கொண்டு படுத்தால் குணமாகும்.

சாதாரணக் காய்ச்சல்: எந்த மருந்தும் தேவையில்லை. எனிமா எடுத்துக் கொண்டு, உண்ணா நோன்பு இருந்து படுத்துக்கொண்டு ஓய்வில் இருக்கக் காய்ச்சல் குணமாகுமாம்.

இரவில் வரும் வறட்டு இருமல்: மிளகுடன் தேன் கலந்து சாப்பிடக் கட்டுப்படும்.

இவ்வாறாக வீட்டிலேயே இருக்கும் எளிய மருந்துகள் பற்றி ஒரு சிற்றுரை நிகழ்த்தப் பட்டது. இதையெல்லாம் கேட்டுவிட்டுஎனக்குள் ஒரு கேள்வி எழுந்த வண்ணம் இருந்தது. இதையெல்லாம் வீட்டில் வைத்துச் செய்ய முடியுமா என்பதுதான்அந்தக் கேள்வி. பன்முனைத் தாக்குதலுக்கு ஆளாகி ஃபேமிலி டாக்டர் என்று சொல்லப்படுகின்ற ஒருவரிடம் உடனேபோக வேண்டியிருக்கும்.

ஆனாலும் மூலிகை மருத்துவம் முடிந்த மட்டும் செய்து கொள்ளலாம். இதை இங்கே குறிப்பிடும் போது அரளி விதை,புகையிலை போன்ற இன்னும் பல விஷமூலிகைச் செடிகள் இருப்பதை நினைவில் கொள்ள வேண்டும். மூலிகைமருந்துகளுக்கு சைட் எஃபெக்ட்ஸ் இல்லை என்ற கூற்றை நான் ஒப்புக் கொள்ளவில்லை. எல்லா உணவுகளுக்கும், எல்லாமருந்துகளுக்கு நேர்வினை, எதிர்வினை இரண்டுமே இருக்கும் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.

உண்ணா நோன்பு முடிந்த இரண்டாம் நாள் இரவு உணவாக இரண்டு நாட்டு வாழைப் பழங்கள் கொடுக்கப்பட்டன. அடுத்தநாள் காலையில் 5 மணிக்கு எழுந்து காலைக்கடன்கள் முடித்த பின் தியானம். அதற்குப்பின் உடற்பயிற்சி, மற்றும் பிராணயாமம் சொல்லிக் கொடுத்தார்கள். 9.00 மணிக்கு ஊறவைத்த கடலை, இரண்டு வாழைப்பழம் மற்றும் ½ டம்ப்ளர் நெல்லிக்காய் சாறு கொடுக்கப் பட்டது. வாழையிலைக் கிடைக்காததால் வாழையிலைக் குளியல் மேற்கொள்ளும் வாய்ப்புஅமையவில்லை. எனவே குளியலறையில் குளித்துவிட்டு நாங்கள் ஒப்படைத்த சாமான்களைப் பெற்றுக் கொண்டு மதியஉணவாக வாழைப்பழம், அவல் மற்றும் பேரீச்சம்பழம் கலந்த களி, பப்பாளி ¼ பழம், சப்போட்டா இரண்டு, சீவிய கேரட் ஒரு கரண்டி எல்லாம் கொடுக்கப்பட்டது. வயிற்றுக்குப் போதுமானதாக இருக்க உணவு உண்டபின் ஊருக்கு கிளம்பத்தயாரானோம். முகாம் இலவசம் தான் என்றாலும் நன்கொடை கொடுக்கலாம் என்று கூறினார்கள். இத்தகைய சிறப்பானமுகாம் ஒவ்வொரு மாதமும் தொடர்ந்து நடைபெற வாழ்த்துக்கள் கூறி என்னுடைய திருப்திக்காக நன்கொடையும்அளித்துவிட்டுக் கிளம்பினேன்.

நண்பர் குமார் அவர்கள் தம்முடைய காரிலே என்னை ரயில் நிலையத்தில் இறக்கிவிட்டார். நல்ல வெயில். செங்கோட்டைமதுரை பேசஞ்சர் ரயில் அரைமணி நேரம் கால தாமதமாக வந்தது. ரயிலில் ஏறியவுடன் கண்ட காட்சிகள் மனத்தைஉறுத்தியது. சிறுவனொருவன் பிளாஸ்டிக் டிபன் பாஃக்ஸைத் திறந்து நூடுல்ஸ் சாப்பிட்டுக் கொண்டிருந்தான். அவனுடையதாயாரோ பச்சைப் பிளாஸ்டிக் பாட்டிலில் அடைக்கப்பட்ட கேஸ் பொங்கும் குளிர்பானம் அருந்திக் கொண்டிருந்தார்.பயணிகள் வழி நெடுக்க சமோஸா வெள்ளரிப் பிஞ்சு, கடலைமிட்டாய் என்று எதையாவது தின்று கொண்டே பயணம்செய்கிறார்கள். உணவுப்பழக்கம் மிக மோசமான நிலையை அடைந்துவிட்டது என்று பட்டது.

மருத்துவர்கள் செல்வச் செழிப்போடு வாழ்வாங்கு வாழ இந்தச் சமுதாயம் தயாராகிவிட்டதை உணரமுடிந்தது. கோடிகொடுத்தும் மருத்துவப் பட்டம் வாங்க ஒரு கூட்டம் ஏன் அலைமோதிக் கொண்டிருக்கிறது என்ற கேள்விக்குப் பதில்கிடைத்தது.

முற்றும்

Sunday, September 6, 2015

இயற்கை நல வாழ்வு முகாம்.—பகுதி 6

உண்ணா நோன்பு தான் உடலை உட்புறம் சுத்தகரித்துக் கொள்ளும் முறை. உண்ணா நோன்பு முறையாக மேற்கொள்ள வேண்டிய ஒரு செய்முறை. இன்றைக்கே நினைத்து, இப்பொழுதே ஆரம்பித்துவிடக் கூடிய ஒன்றல்ல. உண்ணா நோன்பு மேற்கொள்ள முடிவு செய்திருக்கும் முன் தினம் இரவு உணவு மிகவும் இலகுவான பழ உணவாக, இயற்கை உணவாக இருத்தல் அவசியம். புரோட்டா பிரியாணி, புளியோதரை, போலியல் என்று விருந்தில் சாப்பிடுவது போல் செம கட்டு கட்டிவிட்டு அடுத்தநாள் உண்ணாவிருதம் இருப்பது முறையல்ல.

உண்ணா நோன்பு நன்குமுறையில் மேற்கொள்ளலாம்
    1.   பழங்கள் மட்டும் சாப்பிட்டு நோன்பு இருப்பது
    2.பழச்சாறு மட்டும் குடித்து நோன்பு மேற்கொள்ளுவது
    3.  நீர் மட்டும் அருந்தி நோன்பு இருப்பது
    4. நீர் கூட அருந்தாமலும் எதுவுமே உட்கொள்ளாமலும் நோன்பு இருப்பது.

இந்த நான்கு முறைகளில் நான்காவது முறை யோகிகளால் மேற்கொள்ளப்படுவது. இந்த முகாமில் நாங்கள் மேற்கொள்ள இருப்பது மூன்றாவது முறை.

இரவு தூங்கச் செல்லும் முன் பல் துலக்கிவிட வேண்டும். பிறகு மனத்தில் அடுத்த நாள் நோன்பு இருக்கப் போவதை நினைவு படுத்திக் கொண்டுத் தூங்கச் செல்ல வேண்டும்.

இந்த வகையில் எங்களுக்கு இலகுவான உணவு வாழைப்பழமும், ஊறவைத்த நிலக்கடை கொஞ்சமும் கொடுக்கப் பட்டுவிட்டதை நினைத்துப் பார்த்துக் கொண்டேன்.

அடுத்த நாள் காலையில் எழுந்தவுடன், தலைக்குக் குளித்தோம். மல ஜலம் கழித்த பிறகு ஒருமுறை இனிமா எடுத்துக் கொண்டோம். அன்றைக்கு முழுமையான மௌன விரதம். யாரிடமும் பேசவோ, தாமாகப் பாட்டை முனுமுனுக்கவோகூட கூடாது.எந்தப் புத்தகத்தையும் படிக்கக் கூடாது. தியானம் செய்யலாம் மற்றபடி படுத்து இருக்கலாம். தூக்கம் வந்தால் தூங்கிக் கொள்ளலாம். இடை இடையே தாகம் எடுக்கும் பொழுது தண்ணீர் குடித்துக் கொள்ளலாம். எந்தக் காரணம் கொண்டும் காலையில் பல் துலக்கக் கூடாது. பல் துலக்கினால், பல் பொடியின் சுவையே ஜீரண உருப்புகளின் செயல்பாட்டைத் துவக்கிவைத்துவிடும். 

மதியம் ஒருமுறை இனிமா எடுத்துக் கொண்டோம், இப்படியாக மிக மெதுவாக பொழுது கழிந்தது. கிட்டத்தட்ட நாற்பது பேர், யாரும் யாருடனும் பேசிக் கொள்ளாமல், ஏன் ஒருவரை ஒருவர் சரியாகக் கூட ஏறெடுத்தும் பார்க்காமல் மேற்கொண்ட விராதம் ஒரு புது அனுபவம். ஆச்சரியம் என்ன வென்றால் பசி அவ்வளவாக உணரப்படவில்லை. மிகுந்த களைப்பாக இருக்குமோ என்றால், அதுவும் இல்லை. எல்லோரும் தெம்பாகத்தான் காணப்பட்டார்கள்.

மாலை 5.00 மணிக்கு நோன்பு முடிக்க வேண்டும். அதற்கு முன் ஒரு முறை இனிமா எடுத்துக் கொண்டு மீண்டும் ஒரு முறைத் தலைக்குக் குளிக்க வேண்டும். எனவே 4.00 மணிக்கே இந்த ஏற்பாடுகளில் இறங்கிவிட்டேன். 4.30 மணிக்கு இந்த வேலைகள் முடிந்துவிடவே தங்குமிடத்துடன் கூடிய மொட்டைமாடிப் பகுதிக்குச் சென்று இயற்கையை ரசித்துக் கொண்டிருந்தேன். மற்ற நண்பர்களும் வந்து விட்டதால் தங்கள் ஒவ்வொருவருடைய அனுபவம் பற்றியும் பேசிக் கொண்டோம். யாருக்கும் உண்ணா நோன்பு சிரமமாக இல்லை என்பதைப் புரிந்து கொண்டோம். பசி வந்தால் பத்தும் பறந்து போகும் என்று சொல்வார்கள். பசியே ஒருநாள் வராமல் இருக்க என்னென்ன செய்ய வேண்டும் என்பதைப் புரிந்து கொண்டோம்.

மாலை மணி 5.00. உண்ணா நோன்பு முடிந்ததற்கான அறிவிப்பாக மணியோசைக் கேட்டது. கீழே எலுமிச்சம் பழச்சாறும் தேனும் கலந்த பானம் வழங்கப்பட்டது. எல்லோரும் மிகமிக நிதானமாக அந்தப் பானத்தை வாங்கி தரையில் அமர்ந்த வண்ணம் கொஞ்சம் கொஞ்சமாக அருந்தினோம். உடல் மிக மிக சுத்தமாக இருப்பதாக ஒரு உணர்வு. இன்றைய பொழுதில் ஒரு முக்கிமான வைத்திய முறையான உண்ணா நோன்பை அனுபவித்து இது ஒன்றும் கடினமான ஒன்றல்ல என்று தெளிந்தோம். 

உண்ணா நோன்பு ஒரு மாதத்தில் இரண்டு முறை மேற்கொள்ளலாம்.ஏகாதசி, அமாவாசை அல்லது பௌர்ணமி நாட்கள் உண்ணா நோன்பிருக்க உகந்த நாட்கள். உண்ணா நோன்பு அனுபவங்கள் பற்றி திரு. பாலசுப்பிரமணியம் அவர்களுடன் ( ஆசிரியர் )பகிர்ந்து கொண்டோம். கிட்டத்தட்ட 120 கிலோ எடையுடைய மனிதர் ஒருவரும் இந்த முகாமில் கலந்து கொண்டிருந்தார். அவருக்குக் கூட, இந்த அனுபவம் எந்தச் சிரமமும் இல்லாத சிறந்த ஒரு அனுபவம் என்று அவர் கூறக் கேட்டோம். 

பிறகு இரவு உணவாக இரண்டு வாழைப்பழங்கள் மட்டும் 7.00 மணியளவில் எங்களுக்கு வழங்கப்பட்டது. இரவு உணவிற்குப் பிறகு இயற்கை மருந்துகள் பற்றிய விளக்க உரை. இந்த உரையின் வாயிலாக நமது அன்றாட உணவில் பயன்படுத்தும் பல பொருட்களின் மருத்துவக் குணங்களைத் தெரிந்து கொண்டோம். நானும் மற்றும் சில நண்பர்களும் இந்த உரையைக் குறிப்பெடுத்துக் கொண்டோம். அடுத்தப் பதிவில் இதைப் பற்றி  நீங்கள் எதிர்பார்க்கலாம். 

Saturday, August 29, 2015

இயற்கை நல வாழ்வு முகாம்.—பகுதி 5

நம் முன்னோர்கள் 2500 வருடங்களுக்கு முன்னரே நெறிப்படுத்திய உடற்பயிற்சியைத் தான் அன்றைய மாலை வகுப்பில் யோகா குரு கணேஷ் அவர்கள் சொல்லிக் கொடுத்தார்கள். இந்தப் பயிற்சிகள் நான் இந்த முகாமிற்கு வருவதற்கு முன்னாலிருந்தே தினமும் செய்து வருபவை. அன்றைய முகாமில் முதல் முதலாக செய்ய முயற்சிப்பவர்கள் படும் பாட்டைக் காண முடிந்தது. ஒரு முறை முயற்சித்துவிட்டு அப்பா ! அம்மா ! என்று பெருமூச்சுவிடுபவர்கள். இன்னும் சிலரோ நம்மால் முடியாது என்று வேடிக்கைப் பார்ப்பவர்கள்.

எனக்கு இந்த உடற்பயிற்சிகளின் பல்வேறு நிலைகளைப் பற்றி சிந்திக்க ஒரு அரிய சந்தர்ப்பம் என்னவோ அப்பொழுதுதான் வாய்த்தது போல் ஒரு நினைப்பு. இந்தப் பயிற்சிகளை நெறிப்படுத்திவர்கள் ஒருவராக இருக்க வாய்ப்பே இல்லை. நம் அன்றாட செயல்களைத் திறம்படசெய்து வாழ்கையை அனுபவிக்க நமது  உடல் எப்படியெல்லாம் வளைய வேண்டிவருமோ அந்த நிலைகளை ஆராய்ந்து, ஒவ்வொரு நிலையும் அமைக்கப் பட்டிருக்கிறது. இந்த அரிய உடற்பயிற்சி நீங்களெல்லாம் கேள்விப்பட்டிருக்கும் சூரிய நமஸ்காரம் என்பதே ஆகும். இதன் பன்னிரண்டு நிலைகளையும் நீங்கள் எளிதாகக் கற்றுக் கொள்ளலாம். கொஞ்சம் கொஞ்சம் வித்தியாசம் தென்பட்டாலும் அனேகமான நிலைகள் ஒரே மாதிரியாகத்தான் வெவ்வேறு பயிற்சி சாலைகளிலும் கற்றுக்கொடுக்கப்படுகின்றன..

நம்மில் பலருக்கு இருகைக் கூப்பி வணக்கம் செய்யக் கூட சரியாக வருவதில்லை. நான் சொல்வதை நீங்கள் நம்பவில்லை என்றால் கோவிலுக்குச் சென்று ஒவ்வொருவரும் எப்படி சாமி கும்பிடுகிறார்கள் என்று பாருங்கள். நின்ற நிலையில் உள்ளங்கைகளைச் சேர்த்து வலது கையின் ஒவ்வொரு விரலும் மிகச் சரியாக இடதுகையின் அதன் ஜோடி விரலுடன் ஒட்டி, விரல்கள் அனைத்தும் வானத்தை நோக்கி இருக்கும்படி எத்தனைப் பேரால் சாமி கும்பிட முடிகிறது. கட்டைவிரல்கள் மார்பைத்தொடுகின்றனவா? இந்த நிலையில் சரியாக நின்று கண்களை மூடி அமைதியாக நிற்கும் போது நெஞ்சுக் கூடு விரிந்தநிலையில் இருப்பதால் நல்ல சுவாசமும் அமைதியும் கிடைக்கும்.இதனால் மனதில் ஒரு தெளிவுபிறக்கும். இதை செய்ய முடிந்தால் சூரிய நமஸ்காரத்தில் ஆரம்ப நிலையை நீங்கள் கற்றுக் கொண்டுவிட்டீர்கள். உங்களுக்கு நீங்களே நூற்றுக்கு எட்டு மதிப்பெண்கள் போட்டுக் கொள்ளுங்கள்.
 
அடுத்தடுத்த நிலைகள், உங்கள் முதுகுத்தண்டு முன்னும் பின்னும் முழுவதுமாக வளைய பயிற்சி அளிக்கிறது. பலர் தங்கள் காலடியில் கீழே கிடக்கும் பொருட்களை கூட குனிந்து எடுப்பதற்கே சிரமப்படுவதைப் பார்த்திருக்கிறேன். இந்த மனப்பான்மை சட்டென மாற இரண்டாம் மூன்றாம் நிலைகள் உதவும். அடுத்த 4வது நிலை நீங்கள் படி மற்றும் உயரமான இடைத்தில் ஏற உங்களுக்கு நம்பிக்கையையும் வலிமையையும் கொடுக்கும்.


அதற்குப் பின் செய்யப்படும் 5,6,7 மற்றும் 8வது நிலைகள் தாம்பத்தியத்திற்குப் பெரிதும் உதுவும் நிலைகள். இன்றைய வாழ்க்கை முறையில் பலபேருடைய வேலை உட்கார்ந்திருந்து செய்யக் கூடியதாக இருக்கிறது. இதனால் இடுப்புப்பகுதி வளையும் தன்மையை வெகுவாக இழந்தும் விடுகிறது. அப்புறம் தாம்பத்தியம் எங்கே சுகப் படப் போகிறது!!


9வது நிலை அமர்ந்த நிலையிலிருந்து விருட்டென எழுந்துகொள்ள உதவும். தம்பி மாமாவுக்கு அப்படியே ஒரு கைகொடுத்துத் தூக்கிவிடு என்று யாரையும் கெஞ்ச வேண்டியதில்லை. 10 வது நிலை 4 வது நிலை போல ஆனால் 4 வது நிலையில் இடதுகால் முன்னால் என்றால் 10 வது நிலையில் வலதுகால் முன்னாலிருக்க வேண்டும். 11,12 வது நிலைகள் முறையே 3 மற்றும் 2 வது நிலைகளே.  

இந்த 12 நிலைகள் அடங்கியது ஒரு சுற்று. இப்படி பன்னிரண்டு சுற்று செய்ய முடிந்தால் உங்களுடைய தோற்றம் நிச்சயமாகப் பொலிவாக இருப்பதுடன், நீங்கள் உங்களை அதிக சக்திவாய்ந்தவராக உணர்வீர்கள். மேலோட்டமாக என்ன நடக்கிறது என்று சொல்லிவிட்டேன். உடலின் உள்ளேயும் வியத்தகு மாற்றங்கள் ஏற்பட்டு ஒவ்வொறு புலன்களின் அனுபவமும் சிறப்பாக இருக்க வாழ்வை முழுமையாகச் சுவைப்பீர்கள்.

திருமணமானவர்களுக்கு வாழ்வில் சௌபாக்கியம் என்பதற்கான அர்த்தம் அப்பொழுதுதான் விளங்கும். சூரிய நமஸ்காரம் செய்வதற்கு எந்த ஒரு உபகர்ணமும் தேவையில்லை, எந்த விளையாட்டுத்திடலும் தேவையில்லை. தேவை ஒரே ஒரு விரிப்பு மட்டுமே. நடைபயிற்சி, ஜிம்மில் பயிற்சி எல்லாம் ஜுஜுபி. உங்களுக்கு நம்பிக்கை இல்லையென்றால் ஐம்பது வயதைக் கடந்த ஒரே வயதுடைய யோகாகுருக்களையும் ஜிம் மாஸ்டர்களையும் ஒப்பிட்டுப் பார்த்துக் கொள்ளுங்கள்..

இந்தப் பயிற்சி முடிந்த பிறகு கைகால் முகம் கழுவிவிட்டு இரவு உணவு சாப்பிடச் சென்றோம். சுமார் 75 கிராம் எடை அளவில் நீரில் ஊரவைத்த நிலக்கடலையில் இங்கொன்றும் அங்கொன்றுமாக கொஞ்சம் பாசிப்பயறு, இரண்டு நன்றாகப் பழுத்த நாட்டு வாழைப் பழங்கள் இவை மட்டுமே இரவு உணவு.

பிறகு அடுத்த நாள் மேற்கொள்ளவிருக்கும் இயற்கை மருத்துவத்தின் மிக முக்கியமான உடலை உட்புறம் சுத்தகரித்துக் கொள்ளும் முறைகளப் பற்றியும் மற்றும் நாங்கள் மேற்கொள்ளவிருக்கும் முறையைப் பற்றி 
திரு. பாலு அவர்கள் விரிவான விளக்கஉரை நிகழ்த்தினார். நாளைப் பொழுது மிகக்கடுமையாகக் கழியுமோ என்ற ஐயப்பாடு மனதை வதைத்தது.

தொடரும்..

Sunday, August 23, 2015

இயற்கை நல வாழ்வு முகாம்.—பகுதி 4

நல்லவேளை !! ஏதோ திடஉணவு தட்டுகளில் பரிமாறப்பட்டுக் கொண்டிருந்தது. மதியம் நீராகாரம் இல்லை போலும் என்றெண்ணி சற்று மகிழ்ச்சியாக வரிசையில் நின்று கொண்டேன்.

இனிப்பு அவல் 50 கிராம் அளவு,
ஊறவைத்த நிலக்கடலை 75 கிராம்,
மூன்றில் ஒரு பங்கு பப்பாளிப் பழம்150கிராம், முட்டைகோஸ்,கேரட்,கொத்தமல்லிக் கீரை அரிந்து வைத்தது ஒரு கரண்டி 50 கிராம் அளவில்,
பேரிச்சம் பழம் 3 என்ணிக்கை,
சிறிய சப்போட்டாப் பழம் 2 எண்ணிக்கை.

மதிய உணவு போதுமானதாக இருந்தது. உணவருந்தி முடித்துவிட்டு 3 மணிவரை ஓய்வெடுத்துக் கொண்டோம். பிறகு உணவைப்பற்றிய இரண்டு மணி நேர வகுப்பு. பல அரிய தகவல்களை நாங்கள் அறிந்துகொண்டோம். அவற்றில் ஒரு சில:
1.   புரோட்டா, பாட்டிலில் அடைக்கப்பட்டு விற்பனை ஆகிக் கொண்டிருக்கும் குளிர்பானங்கள் முதலியன தவிர்க்கப் பட வேண்டிய நச்சு உணவுகள்.
2.    பன்னாட்டு உணவுக் கடைகளில் கிடைக்கும், பொரித்த கோழி மற்றும் மைதா ரொட்டிகள் குப்பை உணவுகள் என்று அவர்கள் நாட்டிலேயே பெயரிடப்பட்டவைகள். நாம் நாகரீகம் கருதி இவைகளைச் சாப்பிட்டு வினையை ஏன் விலைகொடுத்து, அதிலும் அதிக விலை கொடுத்து வாங்க வேண்டும் ?
3.   சீனி சாப்பிடுவதற்கு சுவையாக இருந்தாலும் உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் பொருள். அல்வா, ஜாங்கிரி, மைசூர்பா, பால் கோவா…. என்று அள்ளி அள்ளி நாம் தின்று கொண்டு விழாக்களைக் கொண்டாடுகிறோம் !!
4.   முதல் மதிப்பெண் வாங்க, உயரமாக வளர, சரியாக சாப்பிட நேரமில்லை என்றாலும் உங்களுக்கு சக்தி கொடுக்க என்று பன்னாட்டு நிறுவனங்களும், இந்திய கார்பரேட் நிறுவனங்களும் போட்டி போட்டு நடுத்தர மற்றும் மேல்தட்டு மக்களுக்கு விற்கும் பல ஆரோக்கிய பானங்கள் வெகுவாக நமது ஆரோக்கியத்தைக் கெடுக்கக் கூடியவை. முறையான உணவு பழக்கத்திற்கு மாற்று எதுவும் இருக்க முடியாது.
5.   சில பற்பசைகளில் நிக்கோட்டின் கலக்கப் பட்டிருக்கிறது. இது வாடிக்கையாளர்களை அடிமைப் படுத்தச் செய்யப்படும் சூது.

இப்படி பல கருத்துகள் வகுப்பில் சொல்லப்பட்டன.

ஊடகங்களில் சிந்தையைக் கொள்ளை கொள்ளும் விளம்பரங்கள் மற்றும் முற்பட்ட சமுதாயத்தினர்களின் பெருமை பேசி பீற்றிக்கொள்ளும் மனப்பான்மை இவைகளின் வாயிலாக இன்றைய உணவுப் பழக்கங்கள் உடலுக்கும் மனதிற்கும் ஊறு விளைவிப்பவைகளாக மாற்றம் கண்டு கொண்டு இருக்கிறது. இதையெல்லாம் கேட்ட எனக்கு கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் அவர்களின் பாடல் வரிகள் நினைவுக்கு வந்தன.

குறுக்கு வழியில் வாழ்வு தேடிடும்

குருட்டு உலகமடா _ இது

கொள்ளையடிப்பதில் வல்லமை காட்டும்

திருட்டு உலகமடா _ தம்பி

தெரிந்து நடந்து கொள்ளடா _ இதயம்

திருந்த மருந்து சொல்லடா


விளையும் பயிரை வளரும் கொடியை

வேருடன் அறுத்துவிளையாடும் _ மனம்

வெந்திடும் தோட்டக்காரனிடம்

மிரட்டல் வார்த்தைகளாடும் _ பல

வரட்டுக் கீதமும் பாடும் _ விதவிதமான

பொய்களை வைத்துப் புரட்டும் உலகமடா _ தம்பி

தெரிந்து நடந்து கொள்ளடா _ இதயம்

திருந்த மருந்து சொல்லடா

இந்த வகுப்பு முடிந்ததும் மாலை 5.30 மணிக்கு உடற்பயிற்சி வகுப்பு. அன்றைய வகுப்பில் நாங்கள் கற்றது உடற்பயிற்சிகளில், உலகத்திலேயே மிக மிக சிறந்த, அருமையான பயிற்சி. இது ஒன்றுமட்டுமே நம் ஆரோக்கிய வாழ்வுதனை காக்கும் சிறப்பு பெற்றது.
அது என்னவென்று தெறிந்துகொள்ள ஆவலாக இருக்கிறீர்களா??
தொடரும்…


Thursday, August 13, 2015

இயற்கை நல வாழ்வு முகாம்.—பகுதி 3

ஒரே ஒரு டம்ளர் சுமார் 200 ml அளவேதான் இருக்கும் அதில் கீர் எனப்படும் நீராகாரம்தான் காலை உணவு என்றார்கள். முன்தினம் மதியத்திலிருந்து சரியாகச் சாப்பிடக் கிடைக்கவில்லை என்ற ஷாக். இயற்கை நல வாழ்வு என்றால் ஒன்றும் சப்பிடக்கூடாதோ என்று குமார் அவர்களிடம் அங்கலாய்த்துக் கொண்டேன். கொஞ்சங்கூட அலட்டிக் கொள்ளாமல் புன்முறுவலுடன் அந்த டம்ளர் கீரை சம்மனமிட்டு உட்கார்ந்து சிறிது சிறிதாக ருசித்து, ரசித்துக் குடித்துக் கொண்டிருந்தார்.

சாப்பிடுவது எதுவானாலும் தரையில் உட்கார்ந்து ருசித்து மெதுவாக சாப்பிட வேண்டும். இடையில் தண்ணீர் அருந்தக்கூடாது என்பது நல வாழ்விற்கு முக்கியமான பழக்கம் என்று திரு. பாலு அவர்கள் ஏற்கனவே கூறியது நினைவுக்கு வர அப்படியே நானும் ஒரு டம்ளரில் கீர் வாங்கிக்கொண்டு ஓரிடத்தில் அமர்ந்து கொண்டேன்.அகோரப்பசியெல்லாம் இல்லை. கீரை கொஞ்சம் கொஞ்சமாக சுவைத்து அருந்தலானேன்.

என்ன ஒரு சுவை !!. விட்டால் 3 முதல் 4 டம்ளர் குடித்துவிடலாம். வந்தவர்கள் எல்லாம் ரொம்ப….நல்லவங்க. இரண்டாவது டம்ளர் கேட்டுப் போகவேயில்லை. உருவத்தில் மிக பிரமாண்டமாக இருந்த நகைக்கடை அதிபராவது அதிகம் கேட்பாரோ என்றால் அவர் மிகவும் நிதானமாக டம்ளரைக் கழுவச் சென்று கொண்டிருந்தார். கீர் செய்முறையை திரு. பாலு அவர்கள் விளக்கத் தெரிந்து கொண்டேன்.   

ஒரு நபருக்குத் தேவையான அளவில் செய்ய, ¼ முடித் தேங்காய், கையளவு கருவேப்பிலை 3 ஏலக்காய், சுவைக்கு மண்டைவெல்லம். தேங்காய்ப் பால் எடுத்து கருவேப்பிலையை அரைத்து அதனுடன் சேர்க்க வேண்டும். ஏலக்காயைப் பொடிசெய்து இத்துடன் சேர்த்து வெல்லத்தைப் அதில் போட்டு சுவை கூட்ட கீர் ரெடி. இந்தக் கீரை ஒருமுறை உங்களுடைய குழந்தைகளுக்குக் கொடுத்துப்பாருங்கள். அவர்கள் மீண்டும் மீண்டும் இதை விரும்பிக்கேட்க, வெட்டியாக நீங்கள் ஆரோக்கியபானம் என்று சில டப்பாக்களுக்கு செலவு செய்யும் பணம் மிச்சம்.கொஞ்சமே கொஞ்சம் கலோரி கணக்குப்போட உங்களுக்குத் தெரிந்தால், 200 mlன் கலோரிக் கணக்கு 200 Kcal யை மிஞ்சி நிற்கும்.கருவேப்பிலையில் அடங்கியிருக்கும் வைட்டமின்கள், நார்சத்துக்கள் எல்லாம் அபரிமிதம். ஏலக்காயின் மருத்துவச் சிறப்புபற்றி எழுத ஒருதனிப்பதிவே வேண்டும். இறைவனுக்குப் பூஜைப் பொருளாகும் தேங்காயின் சிறப்புப் பற்றி சொல்லித்தான் தெரியவேண்டுமா ?

காலை உணவுக்குப் பின் 1 மணி நேரம், உணவிலிருந்து சக்தி என்ற தலைப்பில் வகுப்பு. அரிய பல கருத்துக்களை திரு. பாலு அவர்கள் எளிதாய் விளக்கினார். அதன் பின் மண் குளியல் எடுக்க எல்லோரையும் போகச் சொன்னார்கள்.

புற்று மண்ணை தண்ணீரில் கலக்கி உடல் முழுவதும், தலை உட்பட எல்லா இடங்களிலும் முலாம் பூசியது போல் பூசிக் கொண்டு வெயிலில் மண் உலரும் வரை நிற்க வேண்டும். நண்பர்கள் எல்லோரையும் பார்க்கும் பொழுது  மண் சிலைகளைப் பார்ப்பது போன்று இருந்தது. மண் உலர்ந்த பிறகு குளிர்ந்த நீரில் ஒரு சுகமான குளியல். சுகத்தைப் புரியவைப்பதற்கு வார்த்தைகளே இல்லை. குளித்துமுடித்து சருமத்தைப் பார்த்தால், அப்படியொரு மினுமினுப்பு

“ யானையின் தந்தம் கடைந்தெடுத்தார்போல்
அங்கமெல்லாம் ஓர் மினுமினுப்பு……..”


என்ற பாட்டை முணுமுணுத்துக் கொண்டேன். எண்ணெய் தேய்துக் குளித்த உற்சாகம் ஆனால் உடம்பில் அந்தப் பிசுபிசுப்பு இல்லை.பிறகு உடை மாற்றி உணவு உண்ணச் செல்ல வேண்டும். குளித்த உற்சாகத்துடன் நல்ல பசியும் சேர்ந்து கொண்டது. அடுத்து என்ன சோதனையோ என்று மனம் பக் பக் என்று அடித்துக் கொண்டது.                               
தொடரும்……

Sunday, August 9, 2015

இயற்கை நல வாழ்வு முகாம்.—பகுதி 2

மேலே வந்தவுடன் ராஜபாளையம்வாசிகளான திரு. குமார், திரு. கணேசன் என்பவர்களின் அறிமுகம் கிடைத்திட சிறிது நேரம் பேசிக்கொண்டு இருந்தோம். பிறகு முகாமில் பதிவு செய்தபொழுது வாங்கிய கண் குவளை, மூக்குக் குவளை மற்றும் எனிமா குவளை மூன்றையும் எடுத்து சரிபார்த்துக் கொண்டேன். நாளைமுதல் ஒவ்வொரு நாளும் முகாம் முடியும் வரை இவற்றைப் பயன் படுத்த வேண்டும். எல்லாம் சரியாக இருக்க 10 மணிக்கு உறங்கி விட்டேன்.

காலை 5 மணிக்கு மணியோசை கேட்டுத் தூக்கம் கலைய திரு. பாலு அவர்கள் சொல்லிய வண்ணம் முதலாவதாக தண்ணீர் ஒரு லிட்டர் அருந்திவிட்டுக் காலைக்கடன்கள் முடிக்கச் சென்றேன். இனிமா குவளை உபயோகிக்கச் சொல்லியிருந்தார். ஏற்கனவே அனுபவம் இருந்ததால் இதிலெல்லாம் எந்தச் சிரமமும் இல்லை. பிறகு மூலிகைப் பல் பொடி கொண்டு பல் துலக்கிவிட்டுச் சரியாக 6.00 மணிக்குப் பயிற்சி அரங்கிற்கு சென்றேன்.

முதல் இருபது நிமிடம் தியானப்பயிற்சி. நாம் மூச்சு விடுவதை கவனித்துக் கொண்டு இருக்க வேண்டும். அவ்வளவுதான்.அதன் பிறகு கண் குவளை மற்றும் மூக்குக் குவளை உபயோகித்துச் சுத்தகரித்துக் கொள்ளும் பயிற்சி. பிறகு நல்லெண்ணெயை வாயில் ஊற்றி அதிக நேரம் கொப்பளித்துத் துப்பி வாயைச் சுத்தம் செய்துகொள்ளும் பயிற்சி. இவை எல்லாம் முடிய 7.30 மணியாகிவிட்டது.

7.30 மணிமுதல் 8.30 மணிவரை நின்ற நிலை யோகா வேகப் பயிற்சிகள். கால்முதல் கழுத்து வரையிலான எல்லா ஜாயிண்டுகளுக்கும் பயிற்சி சொல்லிக் கொடுத்தார்கள். முடிவில் சாந்தி ஆசனமும் சொல்லிக் கொடுக்கப்பட்டது. 

இரவு உணவு சுருக்கப் பட்டதாலும், காலையில் உடல் துவாரங்கள் அனைத்தும் ஓவர்ஹாலிங் என்று ஆங்கிலத்தில் குறிப்பிடுவது போல சிறப்பாகச் சுத்தம் செய்துகொண்டதாலும், உடற்பயிற்சியோ உடலில் ஆங்காங்கே தேங்கியிருந்த அழுக்குகளை வெளியேற்றி உயிர் சக்தியை உடலெங்கும் சமனாகப் பரப்பிவிட்டதாலும், மனம் தியானம் செய்தும் மற்றெந்த சிந்தனையையும் வர வழியில்லாததாலும், நான் மொத்தமாகக் காற்றில் மிதந்து செல்வதைப்போல் காலால் நடந்து சென்றேன். முகம், கைகால் கழுவி விட்டு காலை உணவருந்தச் செல்ல வேண்டும். வித்தியாசமான குளியல் முறை சொல்லித்தரப் போவதாய் திரு. பாலு அவர்கள் கூறி இருந்ததால் குளியலறை சென்று குளிக்கவில்லை.

இந்த ஒரு நாள் கற்றுக் கொண்ட சில செய்முறைகளே பல உபாதைகளிலிருந்து நம்மைக் காத்துக் கொள்ள உதவும். எனிமா எடுத்துக் கொள்ளுதல் மலச் சிக்கலுக்கு ஒரு எளிய தீர்வு.எந்த ஒரு மருந்தும் தேவையில்லை. ஆனாலும் தினமும் எடுத்துக் கொள்வது முறையல்ல. அப்படி செய்தால் நம் உடம்பு மலம் கழிக்கும் விதத்தை வேறுமாதிரி மாற்றிக் கொள்ளும்.

நம்முடைய வாழ்கை முறையில் உடல் உழைப்பு வெகுவாகக் குறைந்துவிட்டதால் தினமும் உடற்பயிற்சி அவசியமாகிப் போய்விட்டது. ஒருவரின் பணி ஒரே இடத்தில் உட்காராமல் உடல் உழைப்பு சார்ந்ததாகவே இருந்தாலும் சில உறுப்புகள் அதிகமாகவும், சில உறுப்புகள் குறைவாகவும் செயல் படும் வண்ணம் தான் பணிகள் அமையும். எனவே உடற்பயிற்சி தவிர்க்க முடியாத ஒன்று.

தியான முறைகளில் பல நிலைகள் உணர முடியும். மனத்தை உணரும் வரை பயிற்சி இருந்தால் போதும் என்பது என் கருத்து. மனத்திற்குள் உள் நோக்கி பயணித்தால் மனம் பல மாய இடங்களுக்குச் சென்று பல மாய அனுபவங்களைப் பெற்றுக்களிக்கும். இவற்றைத் தவிர்க்க எதாவது ஒரு பொருளையோ பெயரையோ தியானிக்க முயன்றால், நிஜ வாழ்வில் சந்திக்கக் கூடிய பிரச்சனைகளிலிருந்து தப்பிப்பதை விரும்ப ஆரம்பிக்கும். பிரச்சனைகளின் உண்மைப் பின்னணியை புரிந்துகொள்வதுதான் வாழ்வதற்கான வழி என்ற கருத்து எனக்கு உண்டு. வாழ்வை துறக்க முடிவு செய்பவர்கள் மனதில் உள் நோக்கிப் பயணிக்கலாம். உடலைகடந்த பேரின்பத்தை மனம் கொடுக்கும். ஆனலும் அதுவும் ஒரு மாயையே.!!

இத்தகைய எண்ணங்களுடன் காலை உணவருந்தச் சென்றேன். அங்கே 

மீண்டும் ஒரு ஷாக் காத்திருந்தது!!!!



தொடரும்....

Sunday, August 2, 2015

இயற்கை நல வாழ்வு முகாம்.—பகுதி 1


இந்தப் பதிவை நான் வலைதளத்தில் பிரசுரிக்கும் இன்று, இந்த முகாமில் நான் கலந்து கொண்டு ஓராண்டு முடித்துவிட்டது. நல்ல விஷயங்களை உடனே பகிர்ந்து கொள்ள ஆசைப்படுவேன். அந்தவகையில் இந்த முகாம் பற்றியப் பதிவை என்னுடைய ஆங்கில வலைதளத்தில் இட்டேன். அதை அனேகம் பேர் படித்தார்களா என்பது தெரியவில்லை. அதிகமான பின்னூட்டங்கள் வரவில்லை என்பதால் தமிழ்ப் பதிவை உருவாக்குவதில் அத்தனை ஆர்வம் காட்டவில்லை. ஒருவருடம் கழித்து சென்றமாதம் இந்த முகாமில் பின்னர் கலந்து கொண்ட அன்பர் விஜய் கார்திக் என்பவர் ஆங்கிலப் பதிவைப் படித்துவிட்டு, இந்தப் பதிவு தமிழில் வெளிவர ஊக்கமளித்தார்.

அரவிந்த் இயற்க்கை நலவாழ்வு மையம், ராஜபாளையம் நடத்திவரும் மூன்று நாள் முகாம் ஆகஸ்ட் 6, 2014 முதல் துவங்க இருந்தது. தொலைபேசிமூலம் முன் தினம் முற்பதிவை உறுதி செய்து கொண்டிருந்தேன். மதியம் 1.00 மணியளவில் பஸ் பிடித்து கிளம்புவதாக உத்தேசம். மூன்று நாட்களுக்கு ஆபீசைத் தொடர்பு கொள்ள முடியாது என்பதால் அதற்கான எல்லா ஏற்பாடுகளையும் செய்து முடித்து ஆபீசைவிட்டு கிளம்பும் போது மதியம் மணி 2.00. வீட்டிற்குச் சென்று அவசர அவசரமாக அவரைக்காய் கூட்டு மற்றும் புளிக்குழம்பு சாதம் அரைகுறையாக சாப்பிட்டுவிட்டு அரக்கப் பரக்க ஓடி ராஜபாளையம் அரவிந்த் ஆஷ்ரமத்திற்குப் போய் சேரும் பொழுது மணி மாலை 5.05.

முகாமிற்கு பதிவு நடை பெற்ற இடத்தில் ஒரு விண்ணப்பப் படிவம் பூர்த்திசெய்து கொடுத்தேன். உயரம் 170 செ.மீ, எடை 83 கிலோ என்பது இந்தப் பதிவிற்கு அவசியமான என்னைப் பற்றிய விபரங்கள்.

செல்போன், ரொக்கப்பணம், பிரஸ், பேஸ்ட், சோப்,ரேசர் முதலிய பொருட்களைக் கொண்ட ட்ராவல்கிட் அத்தனையும் என்னிடமிருந்து வாங்கிக்கொள்ளப்பட்டது. ரொக்கம் கணக்குப் பார்த்து ஒரு காகிதத்தில் எழுதி என் கையொப்பத்துடன் வாங்கிக் கொள்ளப்பட்டது. செல்போன் ஸ்விட்ச் ஆஃப் செய்து கொடுக்கச் சொன்னார்கள். எல்லாவற்றையும் ஒரு பையில் போட்டு பத்திரமாக எடுத்து வைத்துக்கொண்டார்கள். போகும் பொழுது சரிபார்த்து வாங்கிக் கொள்ளும் படி சொன்னார்கள்.

அந்தக் கணம் எனக்குத்தெரிந்த அத்தனை உறவினர்கள், நண்பர்கள் மற்றும்  என்னைக் கொஞ்சமே கொஞ்சம் அறிந்தவர்களுடன் இருந்த அத்தனை தொடர்புகளும் துண்டிக்கப்பட்டுவிட்டன. கையில் வேறு சல்லிக் காசு கூட இல்லை. பசியோ கிரங்கடித்துக் கொண்டிருந்தது.

முகாமில் கலந்து கொள்ளும்  ஆண்களுக்கு மாடியில் ஒரு பெரிய ஹாலில் தங்குமிடம் ஒதுக்கப்பட்டிருந்தது. சன்னலை ஒட்டிய  பாய் ஒன்றில் என்னுடைய பையை வைத்துக் கொண்டேன். தண்ணீரைத் தவிர வேறெந்த உணவுப் பொருளும் இல்லை. தங்குமிடம் சுத்தமாக இருந்தது. ஒரு பக்கத்தில் வரிசையாக சுத்தமான குளியல் அறை வசதிகள் இருந்தன.

கைகால் முகம் கழுவிவிட்டு அந்த இடத்தைச் சுற்றிப் பார்த்தேன். அந்த இடம் ஐய்யனார் அருவி சமீபத்தில் ஒரு மலைத்தொடரின் அருகிலே அமைந்திருக்கின்றது. சிறந்த இயற்கைச் சூழல். வெப்பம் அதிகமாக இல்லை. பறவைகள் ஒலி தவிர எந்தச் சத்தமும் இல்லை. உடன் கலந்து கொள்கின்றவர்களின் பேச்சுச் சத்தம் மட்டும் கேட்டுக் கொண்டிருந்தது. நண்பர்களுடன் வந்தவர்கள் பேசிக் கொண்டிருந்தார்கள். எனக்கு இனிதான் நண்பர்கள் கிடைப்பார்கள்.

அனேகமாக எல்லோருக்கும் பாய்களில் படுக்க தங்கள் இடங்களை தேர்ந்தெடுதுக்கொண்டார்கள். முடியாதவர்களுக்குச் சில கட்டில்களும் இருந்தன. இரவு 7.45 மணிவரை ஆட்கள் வந்த வண்ணம் இருந்தார்கள்.
இரவு 8.00 மணிக்கு ஒரு மணி ஓசை கேட்டது. கீழேவரச்சொல்லி அழைப்பு. இரவு உணவிற்காக இரண்டே இரண்டு வாழைப்பழங்கள். மனதில் பக்கென்றிருந்தது. யானைப் பசிக்கு சோளப்பொரியா ???
ஒவ்வொருவரின் முகத்தைப் பார்க்கத் தமாஷாய் இருந்தது. என் முகம் எப்படி இருந்தது என்று பார்க்க கண்ணாடி இல்லை.

அடுத்த நாள் குறித்த விளக்க உரைக்காக எல்லோரையும் கீழேயுள்ள ஹாலில் சென்றமரும்படி சொன்னார்கள். ஆண்கள் 34 பேர், பெண்களும் அதே எண்ணிக்கையில் அந்த முகாமிற்கு வந்திருந்தார்கள்.
திரு. பாலசுப்பிரமணியன் என்பவர் இந்த முகாமைப் பற்றியும் அதன் அவசியத்தைப் பற்றியும் ஒரு சிற்றுரை நிகழ்த்தினார். எல்லோரையும் 10.00 மணிக்குப் படுத்துத் தூங்கி காலை 5.00 மணிக்கு எழுந்து விட வேண்டும் என்று கூறினார்.

இரண்டு வாழைப்பழம் இரவு உணவு, 10.00 மணிக்குத் தூங்கிவிட வேண்டுமாம், காலை 5.00 மணிக்கு எழுந்து விட வேண்டுமாம். என்னடா மதுரைக்காரனுக்கு வந்த சோதனை! என்று எண்ணிக்கொண்டு மேலே சென்றுவிட்டேன்.   

தொடரும்…