Monday, August 29, 2011

ஆங்கிலம் பேச நான் ரெடி, நீங்க ரெடியா ?



மம்மி, மம்மி என்று பக்கத்து வீட்டுக் குழந்தை அதன் அம்மாவை அழைக்கும் குரல் கேட்டது. இது ஒன்றும் புதிதல்ல. பல வருட காலமாய் இந்தக் குழந்தை தன் அம்மாவை மம்மி என்று அழைப்பதும் அப்பாவை டாடி என்று அழைப்பதும் சகஜமாய் நடந்து வரும் ஒன்றுதான். நான் கூட என் நண்பர் ஒருவர் இதைக் குறையாகக் கூறியவுடன், மம்மி டாடி என்ற சொல்லைத் தமிழ்மொழி ஏற்றுக்கொண்டு விட்டது. இப்பொழுதெல்லாம் 'அம்மையப்பர் கடை' என்ற பெயரைக் கூட 'மம்மி டாடி ஸ்டோர்ஸ்' என்று தமிழில் எழுதும் முறை பெருமையாக ஏற்றுக்கொள்ளப்பட்டு விட்டது
என்று சற்று நகைச்சுவையாகச் சொல்லி தூயத் தமிழுணர்வை மழுங்கடித்ததும் உண்டு.

லட்சக்கணக்கில் செலவு செய்து ஆங்கில வழிக்கல்வி கற்றால் தான் மேற்படிப்பிற்கு ஏதுவாய் இருக்கும் என்ற நிலை உருவாகிவிட்டது. படித்தவர்கள் என்றால் ஆங்கிலம் பேசியே ஆக வேண்டும் என்ற ஓர் எதிர்பார்ப்பு இருப்பதால், ஸ்போக்கன் இங்க்லீஷ் என்ற ஒரு படிப்பும் பிரபல்யமாகி விட்டது.

ஒரு முறை தமிழ் வளர்த்த மதுரையில் ஒருவர் அரைகுறை ஆங்கிலத்தில் மீனாட்சி அம்மன் கோவிலுக்கு எப்படிப் போவது என்று கேட்டார். ஒரு வேளை என் தோற்றம் அவருக்கு தமிழ் தெரியாதவரைப் போல் தோன்றியிருக்க வேண்டும், எனவே தான் சிரமப்பட்டு ஆங்கிலத்தில் கேட்கிறார் என்று நினைத்துக்கொண்டு, தெளிவான தமிழிலேயே பதில் சொல்லிவிட்டேன். தாங்க் யூ, என்று என்னிடம் சொல்லிவிட்டு, டீசன்டா இருக்கிறவங்களுக்குக் கூட இங்கிலீஷ் பேச வரவில்லை. இதுவே சென்னையாக இருந்தால் இங்கிலீஷ்லே பதில் சொல்லியிருப்பாங்க என்று தன் சக நண்பரிடம் சொல்லிக்கொண்டு போனார்.

நான் ஒருக்கால் இவருக்கு ஆங்கிலத்தில் பதில் சொல்லியிருந்தால் எப்படி இருக்கும் என்று யோசித்துப்பார்த்தேன். எனக்கு ஒரு திரைப்படக் காட்சிதான் நினைவுக்கு வந்தது. பெரியவர் ஒருவரின் வீட்டிற்கு மருமகளின் தம்பி வருகிறான். பெரியவரின் மனைவி பெரியவரிடம் அவனிடம் இங்கிலீஷ் பேசச் சொல்கிறார். உடனே தனக்குத் தெரிந்த அளவில் ' வாட் இஸ் யுவர் நேம்?' என்று வினவ, பையன் ' ஐ அம் சக்கரவர்த்தி, மை ஃபிரண்ட்ஸ் கால் மீ சக்கு' என்று பதில் சொல்ல பெரியவர் பேந்த பேந்த விளிப்பதாக காட்சி அமைந்திருக்கும். அரைகுறை ஆங்கிலம் தெரிந்த பெரியவருக்கு " மை நேம் இஸ் சக்கரவர்த்தி' என்று சொன்னால் மட்டுமே புரிந்திருக்கும்.

இனி நம் அன்றாட வாழ்க்கையில் ஆங்கிலம் படுத்தும் பாடு என்ன என்று பார்ப்போம். குழந்தைகளின் ஸ்கூல் டைரி ஆங்கிலத்தில் தான் இருக்கிறது. அவர்களுடைய மிஸ் என்று அழைக்கபடும் டீச்சர்கள் நம்மிடத்தில் கூட ஆங்கிலத்தில் பேசி பந்தா காட்டுகிறார்கள்.

வங்கியில் மேலும் கீழும், குறுக்கும், நெடுக்கும் நிறையக் கையெழுத்துப் போட வேண்டிய பல பத்திரங்கள் ஆங்கிலத்தில் இருக்கின்றன. வங்கியின் டிராஃப்ட், செக் மற்றும் இன்டெர்நெட் பரிவர்த்தனைகள் எல்லாமே ஆங்கிலத்தில் தான். காப்பீடு நிறுவனங்களின் பொடிப் பொடி எழுத்துக்களில் கொடுக்கப்படும் ஆவணங்கள் அத்தனையும் நம் ஆங்கிலப் புலமைக்குச் சவாலாகவே இருந்து வருகின்றன.

தமிழகத்தில் ஹிந்தியைப் புறக்கணித்ததால், வேறு மாநிலத்தவருடன் பேச வேண்டியவைகளை ஆங்கிலத்தில் பேச வேண்டியிருக்கிறது.இன்றைய கால கட்டத்தில் ஜன் லோக் பால் பில் பற்றி புரிந்து கொள்ள தமிழனுக்கு ஆங்கிலம் ஒன்றுதான் ஒரே வழி. ஹிந்தித் திணிப்பிலிருந்து நாம் தப்பித்துவிட்டாலும் ஆங்கிலத் திணிப்பிலிலிருந்து தப்பிக்க வழியில்லை. சன்ரைஸ், ப்ரூ காப்பி கூட ஆங்கில மணம் கலந்து தான் கிடைக்கிறது.

ஒரு மொழியை நாம் எப்படி கற்றுக் கொள்கிறோம் என்று சிந்தித்துப் பார்க்க வேண்டும். தமிழை எப்படிக் கற்றுக் கொண்டோம். அம்மாவின் முகம் பார்த்துச் சிரித்தவுடன், அம்மா என்ன தொல்காப்பியமா கற்றுக் கொடுத்தார்? அம்மா,அப்பா, அண்ணா, அக்கா என்று சிறு சிறு வார்த்தைகள் சொல்லிக்கொடுத்து, நாம் பேசிய மழலையைக் குழலைக் காட்டிலும், யாழைக் காட்டிலுமல்லவா ரசித்தார்கள். கொஞ்சம் கொஞ்சமாக கொஞ்சு தமிழ் பேசிய நாம் இலக்கணப் பிழையில்லாமல் தானே பேசினோம்.

சித்திரமும் கைப் பழக்கம், செந்தமிழும் நாப்பழக்கம் என்று பேசும் தமிழைப்
பழகிவிட்டோமே. பரவை முனியம்மா, மற்றும் கொல்லங்குடி கருப்பாயிகூட முனைவர் சாலமன் பாப்பையாவுக்கே இணையாகத் தமிழ் பேசவில்லையா.

ஆங்கிலம் பேசத்தெரியாமல் எப்படி ஆங்கில வழிக் கல்வித் திட்டத்தில் படித்துப் பட்டம் பெற்று விடுகின்றோம்? ஒரு மொழியை எப்படிப் பேசுவது என்று நாம் சிந்தப்பதே இல்லை. முப்பது நாட்களில் ஆங்கிலம் பேச கற்றுக் கொள்வோமானால் ' வாட் இஸ் யுவர் நேம்?' என்ற வரையில் தான் ஆங்கிலம் பேச வரும்.

தாய்மொழி அல்லாது வேறெந்த மொழியிலும் திறமையை வளர்த்துக் கொள்ள நான்கு கட்ட நடவடிக்கைத் தேவைபடுகிறது.

முதலாவதாகக் கேட்டல், இரண்டாவதாகப் பேசுதல், அடுத்ததாகப் படித்தல் முடிவாக எழுதுதல். ஒவ்வொரு மொழியையும் பிறர் பேசக்கேட்டு அதன் அர்த்தம் புரிந்து கொள்ளப் பாருங்கள். பிறகு அவரிடமே பேசிப்பழகுங்கள். பிறகு எழுத்துக்களைத் தெரிந்து கொள்ளுங்கள். அதன் பிறகு தான் படிக்கவும் எழுதவும் கற்றுக் கொள்ளுங்கள்.

அதன் பின் எவ்வளவுக் கதைப் புத்தகங்களைப் படிக்க முடியுமோ அவ்வளவுக்கவ்வளவு படியுங்கள். அந்த மொழியில் பேசப்படும் பேச்சுக்களைக் கேட்டுப் புரிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள். நண்பருடனோ தெரிந்தவர்களுடனோ கொஞ்சம் கொஞ்சமாகப் பேசிப் பழகுங்கள். சங்கோஜப் பட வேண்டாம். அப்புறம் தான் இலக்கணத்தைக் கற்க முடியும். இலக்கணம் கற்பது என்பது ஒரு மொழியின் கட்டமைப்புகளைப் புரிந்துகொள்ளவேயன்றி மொழியைப் பேச அல்ல.

இப்படித்தான் நான் ஆங்கிலம் கற்றுக் கொண்டிருக்கிறேன். கற்றுக் கொண்ட மொழியில் தொடர்ந்து பேசவும், படிக்கவும் எழுதவும் வேண்டும். இல்லையென்றால் எதை மட்டும் செய்கிறோமோ, உதாரணத்திற்கு பேசுவதை மட்டும் செய்தால் அதை மட்டும் தான் தொடர்ந்து செய்ய முடிகிறது.

ஆங்கிலத்தில் திறமையை நிலைநிறுத்திக் கொள்ளவும், மேம்படுத்திக் கொள்ளவும் இன்றும் எனக்கு ஆங்கிலக் கதைகளைப் படிக்க வேண்டியிருக்கிறது. வலைப்பூவில் எழுத வேண்டியிருக்கிறது. சில வலைப் பூக்களில் சென்று பின்னூட்டம் இட வேண்டியிருக்கிறது. அவ்வப்பொழுது NDTV மற்றும் CNN பார்க்க வேண்டியுள்ளது. ஆங்கிலம் நன்றாகத் தெரிந்த நண்பர்களிடம் ஆங்கிலத்தில் உரையாடிக்கொண்டிருக்க வேண்டியுள்ளது.

என்ன, ஆங்கிலம் பேச நான் ரெடி. நீங்க ரெடியா?

Wednesday, August 24, 2011

கோகுலாஷ்டமி

கோவிலுக்குச் செல்வது, திருவிழாவிற்குப் போவது போன்ற செயல்களில் எனக்கு அவ்வளவாக ஈடுபாடு இல்லை. கொஞ்சம் அமைதியை விரும்பும் ரகமாக இருப்பதால் ஆரவாரம் உள்ள இடமாகத் திருவிழாக்களை எடுத்துக்கொள்வேன். இறைவனை உருவமில்லா எங்கும் நிறைந்திருப்பவராய் மனதில் நினைத்துக் கொள்ள ஏனோ எனக்குப் பிடிக்கும். எனவே புராணங்களை அவ்வளவாகப் படித்ததில்லை.

ஆன்மீகவாதிகள் பலரும் இறைவனை எங்கும் நிறைந்தவராகவும், நமக்குள்ளே இருப்பவராகவும் உணரச் சொல்வதை எனக்குச் சாதகமாகச் சொல்வதாக எடுத்துக் கொள்வேன். மதத்தின் பெயரால் ஏற்பட்டக் கலவரங்கள், உயிர்பலிகள் அனைத்திற்கும் இறைவனைப்பற்றிய பல்வேறு நம்பிக்கைகளே காரணம் என்று முடிவு கட்டியும் விட்டேன்.

இருந்தாலும் உருவ வழிபாட்டில் சில சௌகரியங்கள் இருப்பதைப் புரிந்து கொள்ள முடிந்தது. மக்களின் உணர்வுகளை மதிக்கும் தன்மை இருப்பதால் கோவில்களுக்கு சென்று உருவ வழிபாட்டு முறையையும் அதில் மக்களுக்கு ஏற்படும் ஆத்ம திருப்தியையும் கூர்ந்து கவனிப்பதும் உண்டு. சில சந்தர்ப்பங்களில் சர்ச், மசூதி, புத்த மடங்கள் மற்றும் குருத்துவார்களுக்கும் போய் வந்த அனுபவங்களும் உண்டு.

சிறு வயதிலே முதல் முதலாக பைபிளைப் படிக்கும் வாய்ப்புதான் கிடைத்தது. இராமாயணம் மற்றும் மஹாபாரதக் கதைகள் பள்ளிப்பாடங்களிலேயே வந்து விட்டபடியாலும், திரைப்படங்களில் வந்த படியாலும் ஒரளவு தெரிந்து கொள்ள முடிந்தது. ஆனாலும் பகவத் கீதை என்ன என்பது தெரிந்துகொள்ள சந்தர்ப்பம் வாய்க்க வில்லை. அர்ஜுனனுக்கு, இறைவன் ஸ்ரீகிருஷ்ணராகப் பிறவி எடுத்துச் செய்யும் போதனை என்று மட்டும் அரசல் புரசலாகத் தெரிந்திருந்தது.

இஸ்கான் என்ற கிருஷ்ணபக்தி இயக்கம் ஒன்று இருப்பது செய்திகள் வாயிலாகத் தெரிய வந்தது. ஒரு முறை பெங்களூர் சென்ற பொழுது இஸ்கான் இயக்கத்தால் கட்டப்பட்ட ஒரு பெரிய கிருஷ்ணர்கோவில் இருப்பதும் அறியலாகிற்று. எனினும் போய் வர சந்தர்ப்பம் கிடைக்கவில்லை.

ஒரு விடுமுறை நாள் காலைப் பத்து மணியளவில், வித்தியாசமான உடையுடனும், நெற்றியில் சந்தன நாமத்துடனும் ஒரு இளைஞன் இஸ்கானிலிருந்து வருவதாகக் கூறி, பகவத் கீதைப் புத்தகம் ஒன்றை விலைக்கு வாங்கிக் கொள்ளும்படி வற்புறுத்தினான். ஹிந்துவாகப் பிறந்த என்னிடம் ஹிந்துக்களின் வேதமாகிய பகவத் கீதை இல்லையென்பது ஞாபகம் வந்தது. உடனே வாங்கி வைத்தேன். முதல் அத்தியாயத்தை படித்துப் பார்த்தேன். குருச்சேத்திரப் போர்களம் பற்றிய விளக்கம் இருந்தது. இதுதான் எனக்குத் தெரியுமே என்று மூடி வைத்துவிட்டேன். பின் அத்தியாயங்களில் ஒரு சில பக்கங்களைப் படிக்க முயற்சி செய்தேன். ஸ்ரீகிருஷ்ணரே எல்லாம் வல்லவர். அவரைச் சரணடைய வேண்டும் என்ற ரீதியில் நீண்ட விளக்கங்கள். இஸ்கானில் இணையச் செய்ய, மேற்கொள்ளப் பட்ட முயற்சிபோல் தென் பட்டது. ஒரு பதம் மூன்று வரிகள் இருந்தால் விளக்கம் பக்கம் பக்கமாக எழுதப்பட்டிருந்தது. என் மனதிற்கு அந்த விளக்கங்கள் சரியாகப் படவில்லை. எனவே புத்தகத்தை அலமாரியில் வைத்து விட்டேன். இது ஒரு மத நூல் என்றும் முடிவுகட்டிவிட்டேன். இறைவனை ஸ்ரீகிருஷ்ணர் வடிவில் வழிபட நம்பிக்கை ஏற்படுத்துவதற்காக எழுதப் பட்ட நூல் என்று நினத்துக் கொண்டேன். அப்புறம் அதைப் பற்றி மறந்தே போய்விட்டேன்.

மென்திறன் பயிற்சி வகுப்புக்கள் நடத்துவது எனக்கு விருப்பமான ஒன்று. ஒரு முறை பயிற்சி வகுப்புக்களுக்கு என்னை ஆயத்தப்படுத்திகொண்டிருந்த வேளை. மனித குணங்களைப் பற்றி குறிப்பெடுத்துக் கொண்டிருந்தேன். தூங்கப் போகலாம் என்று புத்தகங்களை மூடிவைத்தேன். தற்செயலாக கீழே பார்த்தேன். பொட்டலம் மடித்த செய்தித்தாள் துண்டு என் கால்களுக்கு அடியில் கிடந்தது. அதில்' GEETHA SPEAKS ON PERSONALITY' ( மனித குணத்தைபற்றி கீதையில் விளக்கம்) என்ற எழுத்துக்கள் என் கவனத்தை ஈர்த்தன. அதில் கீதையின் பதினான்காவது அத்தியாயம் பற்றி சிறு குறிப்பு இருந்தது. இது உண்மையா என்று பார்க்க ஓடிச் சென்று பகவத் கீதைப் புத்தகத்தை எடுத்துப் பார்த்தேன். பதங்களின் மொழி பெயர்ப்பாகக் கொடுக்கப்பட்டிருந்த உரை மனித குணத்தைப் பற்றிய விளக்கமாக இருப்பதைக் கண்டு மெய்சிலிர்த்துப் போனேன். ஹிந்தி மொழியை முறைப்படிக் கற்றிருந்த படியால் சமஸ்கிருத பதங்களை வாசிக்க என்னால் முடியும். ஹிந்தியின் மூல மொழி சமஸ்கிருதம் என்பதால் மொழிபெயர்ப்பை மிகச் சரியாக புரிந்து கொள்ள முடிந்தது.

அதன் பிறகு ஒவ்வொரு அத்தியாயமாக படிக்கலானேன். உரை ஆசிரியர் எழுதியதைப் படிப்பதில்லை. மொழிபெயர்ப்பைப் படிப்பது, இதைப்பற்றி சிந்திப்பது என்ற முறையில் ஓரளவு புரிந்து கொண்டேன்.

இது இப்படியிருக்க, என் மூதாதையர்கள் கட்டி வைத்திருக்கும் ஸ்ரீகிருஷ்ண பஜனை மடத்திற்கு நிர்வாக உருப்பினராக வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது. இந்த பஜனை மடத்தில் கோகுலாஷ்டமி ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தி விழா மிகக் கோலகலமாக தொன்று தொட்டு நடத்தப்பட்டு வருகின்றது. ஒரு விழாவில் கீதைப் பற்றிய ஓர் அறிமுகம் என்ற தலைப்பில் நானே பேச முடிவெடுத்து விழாக் குழுவினரிடம் ஏற்பாடு செய்யச் சொன்னேன்.

பகவத் கீதையின் 18 அத்தியாயங்களில் புதைந்து கிடக்கும் ஞானத்தைப் பற்றி ஒரு மணிநேரம் விளக்கமளித்து மகிழ்ந்தேன். உரை முடிந்ததும் என்னிடம் கேள்விகள் கேட்கச் சொன்னேன். நான் மிகவும் ரசித்த கேள்வியும் அதற்கான என் பதிலும் இதோ உங்களுடனும் பகிர்ந்து கொள்கிறேன்.

கேள்வி : இத்தனை தகவல்களையும் ஸ்ரீகிருஷ்ணர் அர்ஜுனனுக்குப் போர்முனையில் சொல்ல வேண்டிய அவசியம் என்ன? எத்தனையோ நாட்கள் இவ்விருவரும் நல்ல நண்பர்களாக சேர்ந்து இருந்தவர்கள் தானே?

பதில்: மற்ற எல்லா நேரங்களிலும் அர்ஜுனன் மனம் கலங்காத வீரனாகவும், தருமருக்குக் கட்டுப்பட்டு மன நிறைவோடும் கலக்கமில்லாமலும் இருக்கிறார். ஆனால் போர்களத்தில் தான் மனம் கலங்கி நிற்கிறார். ஏற்கனவே அறிந்த, உள்வாங்கிக் கொண்ட பல கருத்துக்களும், மதிப்புக்களையும் மாற்றிக் கொள்ள வேண்டிய நேரத்தில் மாயையை விடுத்து உண்மையைப் புரிந்துக் கொள்ள அர்ஜுனனின் மனம் அந்த சமயம் தான் பண்படுகிறது. இதற்கு அர்ஜுனனின் கூரிய அறிவு தான் காரணம். உண்மையை உணர்ந்தே தீர வேண்டிய நிர்பந்தமும் போர்களத்தில் தான் ஏற்படுகிறது. அர்ஜுனனைத் தவிர வேறு யாருக்கும் கீதையைப் புரிந்துகொள்ளும் மனப்பக்குவம் இல்லை.

பகவத் கீதை தான் ஸ்ரீகிருஷ்ணர் என்று எனக்கு எப்பொழுதும் படும். அதன் பதங்களைப் படிக்கும் பொழுதெல்லாம் ஸ்ரீகிருஷ்ணர் மேல் உள்ள மதிப்பு மிகவும் உயர்ந்து நிற்கும்

அறத்திற்கு எங்கெல்லாம் எவ்வப்பொழுதெல்லாம் கேடுவிளைந்து அதர்மம் ஆதிக்கம் செலுத்துகின்றதோ, பரதகுலத்தோனே, அப்பொழுதெல்லாம் நான் சுயமாகத்தோன்றுகின்றேன்"

பகவத் கீதை- அத்தியாயம் 4,பதம் 7

அதர்மம் ஓங்கும் போது கீதையுருவில் இருக்கும் விதையானது, அதர்மத்தை அழிக்கும் சர்வ வல்லமைப் படைத்த விருட்சமாக உருமாறும் என்பது தான் இந்த பதத்தின் பொருள் என்று எனக்குப் படுகிறது.

தொன்று தொட்டு நிகழ்ந்து வரும் கிருஷ்ண ஜெயந்தி விழா மிகவும் ஆடம்பரமான ஒன்றாக இருந்து வருகிறது. ஸ்ரீகிருஷ்ணர் பாலகிருஷ்ணனாக இருந்த பொழுது நடத்திய லீலைகள் என்றும் நினைவு கூர்வதற்கு சுவையானதாக இருக்கிறது. குறும்பு செய்யும் பிள்ளைகளை எல்லோருக்கும் பிடிக்கும். எனவே தானோ தத்தம் குழந்தைகளை பாலகிருஷ்ணனாக பார்க்க நிறைய பேர் விரும்புகின்றனர் போலும்.

ஸ்ரீகிருஷ்ணர் கோவில்களில் அலங்காரமும் உள்ளத்தைக் கொள்ளை கொள்வதாக இருக்கும். அவர் வாழ்வில் பல பாடல்கள் எழுத நிறைய நிகழ்வுகள் இருப்பதால் இசைக்கும் குறைவில்லை. காதல் பாடல்கள் கூட இதில் அடங்கும். அவர் ஒரு சிறந்த போர் வீரனாக, சிறந்த காதலனாக, சிறந்த அரசனாக,சிறந்த நண்பனாக, சிறந்த அலோசகராக வாழ்ந்தவர். எனவே எல்லா வயதினரையும் கவரும் நிகழ்சிகள் எளிதாக அமைந்துவிடும். இறைவனை ஸ்ரீகிருஷ்ணர் உருவில் வணங்குவது மிகவும் பிடித்துப் போய்விடுகிறது.

இருந்தாலும் அவருடைய கீதையை மூடிவைத்துப் பூஜை செய்வது ஏற்றுக்கொள்ள முடியவில்லை. மதங்களுக்கு அப்பாற்பட்ட அதன் உண்மைகள் எல்லோருக்கும் போய் சேரவேண்டும். இல்லாவிட்டால்
"எது நடந்ததோ நன்றாக நடந்தது" என்று தொடங்கும் அபத்தங்கள் கீதை என்ற பெயரால் வலம் வந்து கீதையின் பேரொளியை மறைக்கும் கருமேகமாகி நிற்கும்.

எதிர்பார்ப்பில் கவனத்தைச் செலுத்தாமல் ஒருவன் தன் கடமைகளில் ஈடுபட்டு செயலாற்றும் பொழுது மிக உயர்ந்த நிலையை அடைகிறான்" என்று பொருள் படுவது தான் கீதையின் மூன்றாம் அத்தியாயம் கர்ம யோகத்தின் 19 வது பதம்.

இந்த ஒன்றை செயல் படுத்திப் பாருங்கள். உங்கள் உன்னதம், உங்களின் மன அமைதி உங்கள் செயல்களின் பலன்கள் உங்களையே ஆச்சரியப்படவைக்கும் அளவிற்கு சிறப்புடையதாக இருக்கும்.


Saturday, August 13, 2011

பெரியவர்களின் ஆடுகளம்

இருபத்து இரண்டு வருடங்களுக்கு முன்னால் எங்கள் வீட்டிற்கு ஒரு தொலைபேசி இணைப்பு கிடைத்தது. அப்பொழுது தான் STD என்ற தொலைதூர அழைப்புக்கள் சாத்தியப்பட்டிருந்த காலம். அதற்கு முன் தொலைபேசி எக்ஸ்சேஞ்சை அழைத்து வேறு ஊரில் இருப்பவரின் தொலைபேசி எண்ணையும் ஊர்ப் பெயரையும் சொல்லிக் காத்திருந்து, இணைப்புக் கிடத்ததும் அக்கம் பக்கமுள்ள அனைத்து வீட்டாருக்கும் கேட்கும்படி கத்தி கத்தி இரகசியத் தகவல்கள் கூட சொல்ல வேண்டியதிருக்கும்.
கோடிவீட்டு கோவிந்தனுக்கு ஒரு அவசர அழைப்பு, மாடிவீட்டு மாதவனுக்கும் ஒரு அழைப்பு என்று வரும் பொழுது சலைக்காமல் ஓடி ஓடி அவர்களை அழைத்துவந்து பேசவைத்த காலம் அது. ஒரு பெரிய தவளையைப் போல் இருக்கும் அந்த ஃபோன். அது கூட தொலைபேசி இலாகாவிற்கு சொந்தம். மாதாமாதம் 200 ரூபாய்க்கு பில் வரும். அதுவே ஆடம்பரச் செலவு தான். ஆனால் தொழிலுக்குத் தேவைப்பட்டதால் அதிகச் சுமையாகப் படவில்லை. வேறு எந்தச் செலவும் கிடையாது.

இன்றைக்கு ஒரு வீட்டில் எத்தனைப் பேர் இருக்கிறார்களோ அத்தனை செல் ஃபோன்கள். பாட்டிகள் கூட மணிக்கணக்கில் அரட்டை அடிக்கிறார்கள். படுக்கையில் படுக்கும் போதுகூட கூடவே வைத்துக்கொள்ள வேண்டிய செல்ல அந்தஸ்த்து. SMS என்ற ஓர் ரகசிய தகவல் பரிமாற்றம். அதில் ஃபார்வேர்ட் என்று சொல்லப்படும் ரூம் போட்டு யோசித்த தத்துவ தகவல் பரிமாற்றம். அப்பப்பா! வியத்தகு வளர்ச்சி. என்ன, அப்பப்ப, லம்பா ஒரு தொகை ஃ போன் வாங்க செலவு ஆவதும், கேமரா, மியூசிக் பிளேயர் போன்ற பந்தா விஷயங்களால் மற்றவர்களை உசுப்பேத்துவது கொஞ்சம் அதிகமாகவே நடந்தேறி வருகின்றன. வாயில் நுழையாத நீலப்பல் அமைப்புகளுக்கும் மதிமயங்கி மக்கள் கொடுக்கும் பணம் பல்லாயிரம்.

குழந்தைகளை செல் ஃபோன் கதிர்கள் மிகவும் பாதிப்பதாக காக்காயாய் கத்தி ஓய்ந்த இமெயில் ஃபார்வேர்டுகள். பிஞ்சுக் குழைந்தைகள் இதில் பேசும் பொழுது தடுக்கவோ பார்க்கவோ என்று ஊஞ்சலாடும் மனம்.
ஒரு லட்ச ரூபாய் செலவில் ஒரு குளிர் சாதனப் பெட்டி பார்த்தேன். இதை வைத்துக்கொண்டு என்ன தான் செய்வார்கள் .மிஞ்சிப் போனால் 4 பால் பாக்கட், ஒரு சட்டி இட்லி மாவு, அரை தர்பூசணி, சத்தே இல்லாத கலர் பான பாட்டில்கள், அதற்கு மேல் யோசித்தால் முந்தைய நாள் வத்தக்குழம்பு, நேற்று வைத்த தக்காளிச் சட்னி, வாடிவதங்கிப் போன காய்கறிகள் இதெல்லாம் பற்றிதான் ஞாபகம் வருகிறது.

இந்தியச் சமையலுக்குக் கொஞ்சம் கூட வசதிப்படாத ஒன்று மைக்ரோ வேவ் வோவன் என்ற கதிரியக்கப் பெட்டி. உணவுப் பொருள்களை சாதாரண அடுப்பு, வெளிப்பரப்பிலிருந்து உள்ளுக்குள் வெப்பத்தைச் செலுத்தினால், இது உள்ளிருந்து வெளிப்பரப்புக்கு வெப்பத்தைச் செலுத்துமாம். இதில் சமைத்த உணவைச் சாப்பிட்டால் என்னவாகும் என்ற சந்தேகம் பலருக்கும் உண்டு. குளிர்சாதப் பெட்டியிலிருந்து எடுத்து 5 நிமிடத்தில் பதமாக சூடு பண்ண முடிகின்றபடியால் அம்மணிக்களின் ஒட்டு மொத்த ஓட்டு மைக்ரோ வேவ் வோவன்களுக்கே.

என்னைக் கேட்டால் வாஷிங் மெஷின் தான் தலைசிறந்த சாதனம் என்பேன். ஏதாவது சந்தர்ப்பத்தில் துணி துவைக்க வேண்டும் என்றால் இதுதான் கைகொடுக்கும். மற்ற எல்லா சாதனங்களையும் கொஞ்சம் நக்கல் பார்வை பார்த்தாலும் இதை மரியாதையாக பார்த்தே பழகிவிட்டது. கண்மாய்க்கரையில் வீடு அமைந்து விட்டதால் தண்ணீர் கஷ்டம் இல்லை.

அம்மிக்களையும் உரல்களையும் உலகத்தைவிட்டே விரட்டிவிட்ட பெருமை மிக்சிக்களையே சாரும். இதில் பெரிய வகை, ஃபுட் ப்ராசசர் என்ற பெயரில் சமயலறையை அலங்கரிக்கும். நேரத்தை மிச்சம் பண்ணும். சுவையையும் குறைத்து விடும். இந்த அவசர யுகத்தில் உங்களுக்குச் சட்னி கிடைப்பதே பெருசு என்று நீங்கள் சொல்வது கேட்கத்தான் செய்கிறது. ஆனாலும் அம்மியையும் உரலையும் நாக்கு மறப்பேனா என்கிறது.
விளக்கு வைக்கும் நேரம் பார்த்து நடு வீட்டில் உட்கார்ந்து கொண்டு அல்லது ஹால் சுவரில் தொங்கிக்கொண்டு ஒப்பாரி வைக்கும் துணிவுள்ள சாதனம் தொலைக்காட்சி. கொடூரமான சண்டைக் காட்சிகள், மசாலா நடனங்கள் என்று கலாச்சாரத் தாக்கத்தை ஏற்படுத்திக்கொண்டிருக்கும் மக்களின் மனம் கவர் சாதனம். மூத்தக் குடிமக்களின் ஒரே சொர்கம் என்ற அந்தஸ்தை நோக்கி முன்னேறிக் கொண்டிருக்கும் இணையில்லா சாதனம். கணிசமான தொகையை விழுங்கிக்கொண்டிருக்கும் இடியட் பாக்ஸ். பிரபல தொலைக்காட்சிக் கம்பெனியின் வருடாந்திர கணக்கு கையில் கிடைத்தது. அப்பா! இத்தனைக் கோடி வருமானமா! உண்மையிலே கூரையைப் பிய்த்து கொண்டுதான் கொட்டுகிறது.
இப்படியே நாம் செலவழித்து அனுபவிக்க பல்வேறு சாதனங்கள் பெருகிவிட்டன. சிறுவர்களுக்கு விளையாட பொம்மைகள் போல் இந்தச் சாதனங்கள் பெரியவர்கள் விளையாட்டைத் தொடர வழிவகுக்கின்றன. பாசப் பரிமாற்றங்களுக்கும், நேசப்பரிமாற்றங்களுக்கும், காதல் சடுகுடுக்களுக்கும் ஏற்ற பரிசுகளாயும் இடம் பிடித்து விட்டன. பயன்பாடுகளை உள்ளடக்கியதாக இருந்தாலும் விளையாட்டுப் பொருட்களின் குணாதிசயங்கள் பலவற்றை உள்ளடக்கியுள்ள படியால் விளையாட்டில் மனம் கொள்ளை போகின்றது.

குழைந்தைகளுக்கு பொம்மை வாங்கும் பொழுது எந்த அளவுகோல் கொண்டு செலவை நிர்ணயிப்போமோ அதேபோல் இந்தப் பொருட்களுக்கும் செலவு செய்வோமானால் மனக் கலக்கமில்லை. ஒரேயடியாக பெஸ்ட் கண்ணா பெஸ்ட் என்று ஆசையை வளர்த்துக்கொண்டு அதிகம் செலவு செய்து சேமிப்பை இழக்காமல் இருப்பது நல்லது. பொருட்களின் பயன்பாட்டை முன் நிறுத்தி ஆராய்ந்து செலவு செய்வது சிறப்பு.

Saturday, August 6, 2011

பட்டுப் புடவைப் பற்றிய சந்தேகம்.

இத்தனை வருடம் ஆகியும் பட்டுப்புடவை பற்றி சந்தேகம் தீர்ந்த பாடில்லை. ஏம் மாமி இவ்வளவு பணம் போட்டு பட்டுப்புடவை எடுத்துக்கறேள் என்று பக்கத்தாத்து மாமியைக் கேட்டால், போடா நோக்கு சொன்னா புரியாதுன்னு அவா பாணியிலே அழுத்தம் திருத்தமா சொல்லிடரா. காயத்ரி அக்காட்ட கேட்டா, கண்டதப் பத்தியும் அராய்ச்சி பண்ணி நேரத்த வீணடிக்காதேடா... அப்படின்னு ஒரு பதில். மாமாட்டே கேட்டா ஒரு முறைப்பு.

எங்கம்மாகிட்ட கேட்க சந்தர்ப்பம் வாய்க்கவில்லை. ஒன்றொ ரெண்டோ பட்டுப்புடவை வைத்திருப்பார்கள். ஏதாவது கல்யாணத்திற்கு போக வேண்டும் என்றால் கட்டிக் கொள்வார்கள். அம்மாவுக்குப் பட்டுப்புடவை வாங்கினால் எங்க எல்லாருக்கும் கிடைக்க வேண்டிய ஃபுல் பேண்ட் அரைக்கால் டவுசர் ஆகிவிடும். அவ்வளவுதான் வசதி.

ஏதேதோ காரணங்களால் பொறியியல் கல்லூரியில் Textile Technology படிக்க ஆரம்பித்தேன். நான்காமாண்டு படிக்கும் போது, பட்டைப் பற்றி விளாவாரியாக படிக்க வேண்டியிருந்தது. பல லட்சம் புழுக்களைக் கொன்றுதான் பட்டுநூலை சேகரிக்க வேண்டும் என்ற விபரம் தெரிந்தவுடன் அந்த பாடங்களை படிக்கும் அளவு கல் மனது இல்லைதான். அப்படியே படித்தாலும் இந்தத்துறையில் வேலைக்குப் போகக்கூடாது என்று முடிவும் செய்துவிட்டேன். ஒரு வேளை பருத்தியைக் காட்டிலும் சிறந்த நூல் பட்டா என்று பார்த்தால், பளபளப்பைத் தவிர சொல்லிக்கொள்ளும் படியாக ஒன்றும் இல்லை. சாயம் போட்டால் பளிச்சென்று இருக்கும். முழுக்க முழுக்க புரதத்தால் உருவாவது என்பதால் பாதுகாப்பது கூட கஷ்டம்தான். அணிந்து கொள்ள மிகவும் அசௌகரியமான உடையாக இருக்கும். தண்ணீரில் போட்டால் விரைவில் சாயம் போகும்.

மீண்டும் அதே கேள்வி, ஏன் இவ்வளவு பணம் போட்டுப் பட்டுப்புடைவை வாங்குகிறார்கள் ? நல்ல வேளை, இந்தக் கேள்வியை செமஸ்டர் தேர்வில் கேட்கவில்லை.

அப்புறம் உங்களுக்குத் தெரியாதது ஒன்றுமில்லை, அப்பப்ப வீட்டில் திருமணம் என்று ஆரம்பித்தால் பட்டுப் புடவை எடுக்கக் கிளம்பிவிடுகிறார்கள். நானும்தான் சேர்ந்து போகிறேன். கலர், டிசைன் எல்லாம் செலக்ட் செய்ய உதவுகின்றேன். அகல வாக்கில் ஒரு நூல், நீல வாக்கில் ஒரு நூலின் ஒரு சிறு துண்டு, இரண்டையும் எடுத்துத் தீக்குச்சியின் நெறுப்பில் வைத்து எரித்து தலைமுடி கருகும் போது வருகின்ற துர்நாற்றம் வருகிறதா என்று பார்த்து, கையில் இருக்கும் பாதி எரிந்த நூலில் கங்கு கட்டாமல் இருந்தால், OK பட்டுதான் என்று சர்டிபிகேட் கொடுத்தும் விடுகிறேன். என்ன, ஒவ்வொரு புடவைக்காகவும் கொதிக்கும் தண்ணீரில் மூழ்கடிக்கப்பட்டு சாகடிக்கப்பட்ட நூற்றுக்கணக்கான பட்டுப் புழுக்களின் ஞாபகம் மட்டும் அவ்வப்பொழுது வந்து மனதில் நெளிகிறது.


திரு வை.கோபாலகிருஷ்ணன் ஐயா அவர்கள், ஜூன்17,2011 அன்று வெளியிட்ட 'மடிசார் புடவை பகுதி 2 ல்


" வர வர இந்தப் பட்டுப் புடவைகளைக் கண்டாலே பத்திக்கொண்டு வருகிறது........” என்று ஆரம்பித்து கதையின் முடிவில் தன்னுடைய ஆதரவை சில்க் காட்டன் புடவைகளுக்குத் தெரியப்படுத்தியிருப்பது சற்று ஆறுதலாக இருக்கிறது. எத்தனை அம்மணிகள் அதைக் கவனித்திருப்பார்கள் என்று தெரியவில்லை.

சுத்த சைவைம் என்று கூறிக்கொள்பவர்களாவது இந்த பட்டுப் புடவைகளை அணியாமல் இருக்கலாம். கொடுமை என்னவென்றால் இப்படித் தாயாரிக்கப் படும் பட்டாடைக்குத் தீட்டு இல்லையாம். வேதம் படித்த பண்டிதர்களும், திருவாசகம் படித்த பண்டிதர்களும் இப்படிச் சொல்லி பட்டு மோகத்தை அதிக்கப் படுத்தியிருப்பது நெருடலான விஷயம் தான்.

இதற்கான காரணத்தை 85 வயது பெரியவர் மணி மாமாவிடமும், 78 வயதுப் பெரியவர் சிவசுப்ரமணியன் பிள்ளை அவர்களிடமும் கேட்டேன். மணி மாமா, தொன்றுதொட்டு வரும் நம்பிக்கையைக் கேள்வி கேட்கப்படாது என்றார். பிள்ளை அவர்கள் வெறுமையாக ஒரு பார்வைமட்டும் பார்த்தார்.

பட்டு அரசர்கள் காலத்தில் அரச பரம்பரைக்கு உரிய உடையாக ஏற்றுக்கொள்ளப் பட்டு வந்ததாலும், அரசவைப் பரிசுகள் பட்டினால் ஆன துணியில் கொடுக்கப் பட்டு வந்ததாலும் இதைப் பற்றி பகுத்தறிவு விளக்கம் கொடுத்துத் தன் தலையை இழக்க எந்த அறிஞனும் துணிந்திருக்க மாட்டான். அதானால் தான் தொடர்ந்து இந்தப் பட்டுப் பாரம்பரியம் வளர்திருக்க வேண்டும்.

எது எப்படியோ, அதிக ஜரிகையுடனும், வேலைப்பாடுடனும் கூடிய பட்டுப் புடைவைகள் ஒரு லட்ச ரூபாய்க்கும் அதிகமாக விற்கப்படுகின்றன. ஆனால் திரும்ப விற்றுப் பணமாக்க முடியாது என்பது இருந்தாலும், பட்டுப்புடைவகளின் வேலைபாடும் பள பளப்பும் அதன் ராயல் லூக்கும், வாங்குபவர் கண்களை கவர்த்துவிடுகிறது. அதற்கு மேல் நமது இந்தியக் கல்லச்சாரம் புகுந்து கொண்டு என்ன விலை கொடுக்கவும் மனங்களைத் தயார் படுத்திவிடுகிறது.

ஆடம்பரச் செலவுகள் எல்லாம் ஒரு புறம் தேவையற்றதாகத் தோன்றினாலும், பணப்புழக்கத்தை அதிகரிக்கக் கூடியவை. பலபேருக்கு வேலை வாய்ப்பும் கிடக்கும். எனவே ஆடம்பரச் செலவுகளை தானத்தைவிடச் சிறந்த ஒன்றாகக் கருதலாம். எந்தப் பொருளையும், சேவையையும் பெற்றுக்கொள்ளாது கொடுப்பது தானம் என்றால், தானம், கொடுப்பவர்களுக்கு மட்டுமே சிறப்பு சேர்க்கும். வங்குபவர்களுக்குத் தன்மானம் குறைவதாக அமையும். அனால் வியாபாரம் என்று வந்துவிட்டால் இருப்பக்கமும் தன்மானக் குறைவில்லை.
பட்டு உடைகள் வாங்கிய மறு நிமிடமே, திரும்ப விற்கும் மதிப்பை இழந்து விடுகின்றன. எனவே புடவையின் விலை முழுவதும் தானம் கொடுத்தது போல் ஆகிவிடுகிறது.

தனக்கு மிஞ்சிதான் தானம் என்பதை மட்டும் நினைவில் கொள்ள முடிந்தால், அளவோடு செலவு செய்யாலாம். ஆனால் ஊடகங்களின் கைங்கர்யத்தால் இந்த நினைப்பை வரவிடாமல் வியாபாரிகள் பார்த்துக் கொள்வார்கள். அக்ஷய திருதியை போன்ற ஒரு நாளைக் கண்டுபிடிக்க தீவிரமாக யோசனை செய்து கொண்டிருப்பார்கள். நாமத்தைப் போட்டுக்கொண்டோ அல்லது பட்டையைப் போட்டுக்கொண்டோ சாஸ்திரி ஒருவரைப் பேசவைத்து விரைவில் வெற்றியும் கொள்வார்கள்.

பட்டு என்பது ஆண்களுக்கு சவாலாகவும், அடிச்சதுக்கொன்னு புடிச்சதுக்கொன்னு என்று பெண்களின் புடவை எண்ணிக்கையை உயர்த்துவதாகவும் இருந்துவரும் என்ற தெளிவு பிறந்து என் நெடு நாளைய சந்தேகமும் தீர்ந்தது.


Monday, August 1, 2011

ஆடிப் பெருகும் தங்கம்

திண்ணையில் காற்றோட்டமாக பக்கத்து வீட்டு அண்ணன்களுடன் படுத்து உறங்குவது எனக்கு மிகவும் பிடிக்கும். அந்தக் காலத்தில் வீட்டிற்கு நாலாய் ஐந்தாய் பிள்ளைகள் இருந்ததால் ஆண்பிள்ளைகளுக்குப் பெற்றோரின் அனுமதியும் இதற்கு உண்டு. தூங்கப் போவதற்கு முன்பு என் விரலில் இருக்கும் அரை பவுன் மோதிரத்தைக் கழட்டி என் அம்மாவிடம் கொடுத்துவிடுவேன். அன்றும் அப்படித்தான் கொடுத்துவிட்டேன்.

அடுத்த நாள் NCC parade. அதிகாலையிலே எழுந்து செல்ல வேண்டும். NCC யில் மோதிரம், செயின் போன்ற ஆபரணங்கள் எதுவும் அணியக்கூடாது. எனவே காலையில் அம்மாவிடம் மோதிரத்தைப் பற்றி கேட்கவில்லை.

NCC முடிந்து வீட்டிற்கு வந்ததும் தூரத்து உறவினர் ராஜன் அண்ணா வீட்டிற்கு வந்திருந்தார். சிறிது நேரம் பேசிவிட்டு கிளம்பிச் சென்றுவிட்டார். ஏதோவிஷயமாக வந்ததாகவும், வேலையை முடித்துக் கொண்டு அன்று இரவே ஊர் திரும்பி விடுவதாகவும் கூறிவிட்டுச் சென்றார்.

அடுத்த நாள் குற்றாலத்திலிருந்து வந்த என் மாமா, ராஜன் அண்ணாவைக் குற்றாலத்தில் பார்த்ததாகச் சொன்னார். என்ன காரணத்தாலோ அப்பொழுதுதான் என் மோதிரம் ஞாபகம் எனக்கு வந்தது. அம்மாவிடம் கொடுத்த மோதிரம் தொலைந்திருந்ததை அப்பொழுதுதான் உணர்ந்தோம். தங்க மோதிரம் ராஜன் அண்ணாவின் குளு குளு குற்றாலப் பயணத்திற்கு உதவியிருக்க வேண்டும் என்பது உறுதியாக யூகிக்க முடிந்தது. அன்று முதல் இன்றுவரை தங்கம் அணிவது பிடிப்பதேயில்லை. ஆணாக இருப்பதால் இது பாதிக்கக் கூடியதாகவுமில்லை.

சிறிய அளவில், மதிப்பு அதிகம் உடைய பொருள் தங்கம் என்பதால் சுலபமாக களவாட முடிகிறது, சுலபமாகவும் பணமாக மாற்றவும் முடிகிறது.

எப்பொழுதாவது நகைகடைக்குச் சென்றால், 916 வருவதற்கு முன்னால் வரை, கூலி-சேதாரம் என்று கிட்டத்தட்ட இருபது சதவிகித மதிப்பு நகையாக வாங்கும் போது அதிகமாகக் கொடுக்க வேண்டியிருக்கும். பழைய நகையைத் திரும்ப கொடுக்கும் பொழுது சேதாரம்-மாற்று என்று கூறி மீண்டும் இருபது சதவிகிதம் மதிப்புக் குறையும். ஆக மொத்தம் வாங்கி விற்றாலே நாற்பது சதவிகிதம் காலி.

தங்கத்தின் விலையேற்றம் இரண்டு மூன்று வருடங்களில் நாற்பது சதவிகிதத்திற்கு மேல் இருக்கும் என்பதால் இந்த விஷயத்தை யாரும் கருத்தில் கொள்ளவில்லை.

916 வந்த பிறகு தங்கத்தை வாங்கி உடனே விற்றால் ஐந்து சதவிகிதத்திலிருந்து 20 சதவிகிதம் வரை இழக்க நேரிடும் என்பதும் கவனிக்கப் படாத ஒன்று. தங்கத்தின் மேல் இருக்கும் ஆசை கண்ணைக் கட்டிவிடும்.

கடந்த முப்பது ஆண்டுகளில் சுமார் பத்துமடங்கு தங்கம் விலை உயர்ந்திருக்கிறது. அரிசி முதல் எல்லாப் பொருட்களின் விலையும் இந்த அளவிற்கு ஏறி இருக்கிறது. அனால் முப்பது வருடங்கள் பத்திரப் படுத்தும் வசதி தங்கத்தில் மட்டும் இருக்கிறது. அடிக்கடி நகைகளைப் புதுப்பித்தவர்கள் தங்கத்தில் செய்த முதலீட்டால் நஷ்டமே அடைந்திருப்பார்கள். அவர்கள் இதை உணர வாய்ப்பில்லை. காதல் போன்ற சென்டிமென்ட்களும் அக்ஷயதிருதியை போன்ற நம்பிக்கைகளும் மக்கள் கண்ணைகட்டுவதற்கு வியாபாரிகளின் கண்டுபிடிப்பு.

தங்கத்திற்கு ஏன் இந்த மதிப்பு? தங்க நகைகளை அணிந்தால் தான் பிறர் தங்களை மதிக்கிறார்கள் என்று பெண்கள் நினைத்துக் கொள்கிறார்கள். மனைவிக்கு இத்தனை பவுன் இருக்கிறது, மகளுக்கு இத்தனைப் பவுன் போட்டு திருமணம் முடித்திருக்கிறோம் என்ற பெருமையும் தான் இதன் மதிப்பை உயர்த்திக்காட்டுகிறது. திருமணத்தில் தங்கம் ஓர் அணிகலனாக இல்லாது ஒரு கரன்சிபோல் செயல்படுகிறது.

அதிகமாக தங்க நகைகளை அணிபவர்கள் அங்கீகாரத்திற்கும் பிறரின் மதிப்பிற்கும் ஏங்குபவர்களாக இருக்கிறார்கள். இது தங்களைப்பற்றிய ஒரு தாழ்வுமனப்பான்மையின் வெளிப்பாடு. அனேகமாக உயர் பதிவியில் இருக்கும் பெண்கள் யாரும் அதிக நகைகளை அணிவதை நான் பார்த்ததில்லை.

ஆண்களும், அதிகமான நகை அணியும் பெண்களை ஒன்றும் பெரிதாக நினைப்பதில்லை. சிலநேரம் பரிதாபமாக அல்லது பரிகாசமாகக் கூடப் பார்க்கிறார்கள். இதை தங்கத்தின் மீது கடும் பற்று கொண்ட பெண்மணிகள் ஆண்களின் குறையாக எடுத்துக்கொண்டு அத்தகையவர் கணவனாக இருந்தாலும் பொருட்படுதுவதே இல்லை.

தங்கத்தின் மதிப்பு கூடுவதற்கு வியாபாரத் தந்திரமும் ஒரு காரணம். பத்துவருடத்திற்கு முன்னால் அக்ஷய திருதியை என்றால் என்னவென்றே தெரியாது. அது என்னவென்று உண்மையை இன்று யார் சொன்னாலும் சொல்பவர் கேலிக்கு உள்ளாவார். இந்த தினத்தில் சிறிதளவு தங்கமாவது வாங்கியே ஆகவேண்டும் என்ற நம்பிக்கையை விதைத்து வேருன்றி வளர்த்தும் விட்டார்கள். இப்பொழுது அடுத்த ப்ராஜெக்ட் ஆடிப்பெருக்கு அன்று தங்கம் வாங்க வைப்பது. ஊடகங்களின் துணைகொண்டு உறுதியாக வெற்றியும் பெற்றுவிடுவார்கள்.

இவையெல்லாம் புரியும் பட்சத்தில் இந்த தங்க மோகத்தை எப்படி நமக்கு சாதகமாக்கி கொள்வது. 30 ஆண்டுகளில் விலை 1 க்கு பத்தாய் ஆகியிருக்கும் தங்கத்தில் முதலீடு கட்டாயம் செய்ய வேண்டும். நகையாக அணிந்து கொள்வது அவரவர் மனத்தைப் பொருத்த விஷயம்.

  • 916 BIS மார்க் அல்லது HAL மார்க் நகைகளை மட்டும் வாங்குவது.
  • கல் பொருத்தப்பட்ட தங்க நகைகளை வாங்குவதைத் தவிர்ப்பது. கல் எடையில் எவ்வளவு நஷ்டம் ஆகும் என்று அறிய முடியாது கடைக்காரர் சொல்வதை நம்ப வேண்டும். நாம் திரும்ப விற்கும் பொழுது சேதாரம் என்றெல்லாம் எவ்வளவு கழிப்பார்கள் என்று யூகிக்கக் கூட முடியாது.
  • முடிந்த மட்டும் அக்ஷய திருதியை, ஆடித் தள்ளுபடி, ஆடிப்பெருக்கு போன்ற நாட்களில் நகை வாங்குவதைத் தவிர்ப்பது. கூட்ட நெரிசலில் தவறு நிகழ நிறைய வாய்ப்பு உள்ளது.
  • கூடுமான வரை குறைந்த மதிப்புக் கூட்டு உடைய நகைகளை வாங்குவது. குறிப்பாக சில கட்டி டிசைன்களுக்கு 6 முதல் 8 சதவிகிதம் தான் எடையின் மதிப்பில் கூட்டப்படும். கூலி சேதாரம் என்று சொல்லும் கணக்குகளை காதில் போட்டுக்கொள்ளவே கூடாது.
  • வாங்கிய நகைகளை லாபம் வரும்வரை விற்பதைத் தவிர்ப்பது.
  • அவ்வப்பொழுது சேமிப்பை தங்கக் காசுகளாக சேமிப்பது. வங்கிகளில் வாங்கும் பொழுது கணிசமான தொகை மதிப்புக் கூட்டாக விலை அதிகம் கொடுக்க வேண்டியுள்ளது. 99.9% என்ற கணக்குப்புரிவதில் சிரமம் இருக்கலாம். இதுவே கடைகளில் 1 சதவிகிதம் தான்.
கல் வைத்த நகை எப்பத்தான் போடுவது என்று நீங்கள் நினைத்தால், தங்க நகைகளுடன் சேர்த்து கல் வைத்த கவரிங் நகைகளை அணிந்து கொள்ளலாம். கண்டு பிடிக்கவே முடியாது.

மக்களின் மாய எண்ணங்களுக்கும், வறட்டு கௌரவத்திற்கும் எல்லையே இல்லை. அதை வளர்க்கும் கூட்டமும் ஓயப் போவதில்லை. எனவே தங்கத்தின் விலை குறைய குறைந்த பட்ச வாய்ப்பும் இல்லை.புரிந்து கொண்டு நமக்குச் சாதகமக்கிக் கொள்வது மட்டுமே புத்திசாலித்தனம். தங்கமே சிறந்த முதலீட்டிற்கு வழிவகுப்பதால் வைரம், பிலாட்டினம் போன்றவற்றில் முதலீடு செய்வது குறித்து நன்றாக யோசித்துப் பிறகு அதிலும் ஈடுபடலாம்.