Saturday, August 6, 2011

பட்டுப் புடவைப் பற்றிய சந்தேகம்.

இத்தனை வருடம் ஆகியும் பட்டுப்புடவை பற்றி சந்தேகம் தீர்ந்த பாடில்லை. ஏம் மாமி இவ்வளவு பணம் போட்டு பட்டுப்புடவை எடுத்துக்கறேள் என்று பக்கத்தாத்து மாமியைக் கேட்டால், போடா நோக்கு சொன்னா புரியாதுன்னு அவா பாணியிலே அழுத்தம் திருத்தமா சொல்லிடரா. காயத்ரி அக்காட்ட கேட்டா, கண்டதப் பத்தியும் அராய்ச்சி பண்ணி நேரத்த வீணடிக்காதேடா... அப்படின்னு ஒரு பதில். மாமாட்டே கேட்டா ஒரு முறைப்பு.

எங்கம்மாகிட்ட கேட்க சந்தர்ப்பம் வாய்க்கவில்லை. ஒன்றொ ரெண்டோ பட்டுப்புடவை வைத்திருப்பார்கள். ஏதாவது கல்யாணத்திற்கு போக வேண்டும் என்றால் கட்டிக் கொள்வார்கள். அம்மாவுக்குப் பட்டுப்புடவை வாங்கினால் எங்க எல்லாருக்கும் கிடைக்க வேண்டிய ஃபுல் பேண்ட் அரைக்கால் டவுசர் ஆகிவிடும். அவ்வளவுதான் வசதி.

ஏதேதோ காரணங்களால் பொறியியல் கல்லூரியில் Textile Technology படிக்க ஆரம்பித்தேன். நான்காமாண்டு படிக்கும் போது, பட்டைப் பற்றி விளாவாரியாக படிக்க வேண்டியிருந்தது. பல லட்சம் புழுக்களைக் கொன்றுதான் பட்டுநூலை சேகரிக்க வேண்டும் என்ற விபரம் தெரிந்தவுடன் அந்த பாடங்களை படிக்கும் அளவு கல் மனது இல்லைதான். அப்படியே படித்தாலும் இந்தத்துறையில் வேலைக்குப் போகக்கூடாது என்று முடிவும் செய்துவிட்டேன். ஒரு வேளை பருத்தியைக் காட்டிலும் சிறந்த நூல் பட்டா என்று பார்த்தால், பளபளப்பைத் தவிர சொல்லிக்கொள்ளும் படியாக ஒன்றும் இல்லை. சாயம் போட்டால் பளிச்சென்று இருக்கும். முழுக்க முழுக்க புரதத்தால் உருவாவது என்பதால் பாதுகாப்பது கூட கஷ்டம்தான். அணிந்து கொள்ள மிகவும் அசௌகரியமான உடையாக இருக்கும். தண்ணீரில் போட்டால் விரைவில் சாயம் போகும்.

மீண்டும் அதே கேள்வி, ஏன் இவ்வளவு பணம் போட்டுப் பட்டுப்புடைவை வாங்குகிறார்கள் ? நல்ல வேளை, இந்தக் கேள்வியை செமஸ்டர் தேர்வில் கேட்கவில்லை.

அப்புறம் உங்களுக்குத் தெரியாதது ஒன்றுமில்லை, அப்பப்ப வீட்டில் திருமணம் என்று ஆரம்பித்தால் பட்டுப் புடவை எடுக்கக் கிளம்பிவிடுகிறார்கள். நானும்தான் சேர்ந்து போகிறேன். கலர், டிசைன் எல்லாம் செலக்ட் செய்ய உதவுகின்றேன். அகல வாக்கில் ஒரு நூல், நீல வாக்கில் ஒரு நூலின் ஒரு சிறு துண்டு, இரண்டையும் எடுத்துத் தீக்குச்சியின் நெறுப்பில் வைத்து எரித்து தலைமுடி கருகும் போது வருகின்ற துர்நாற்றம் வருகிறதா என்று பார்த்து, கையில் இருக்கும் பாதி எரிந்த நூலில் கங்கு கட்டாமல் இருந்தால், OK பட்டுதான் என்று சர்டிபிகேட் கொடுத்தும் விடுகிறேன். என்ன, ஒவ்வொரு புடவைக்காகவும் கொதிக்கும் தண்ணீரில் மூழ்கடிக்கப்பட்டு சாகடிக்கப்பட்ட நூற்றுக்கணக்கான பட்டுப் புழுக்களின் ஞாபகம் மட்டும் அவ்வப்பொழுது வந்து மனதில் நெளிகிறது.


திரு வை.கோபாலகிருஷ்ணன் ஐயா அவர்கள், ஜூன்17,2011 அன்று வெளியிட்ட 'மடிசார் புடவை பகுதி 2 ல்


" வர வர இந்தப் பட்டுப் புடவைகளைக் கண்டாலே பத்திக்கொண்டு வருகிறது........” என்று ஆரம்பித்து கதையின் முடிவில் தன்னுடைய ஆதரவை சில்க் காட்டன் புடவைகளுக்குத் தெரியப்படுத்தியிருப்பது சற்று ஆறுதலாக இருக்கிறது. எத்தனை அம்மணிகள் அதைக் கவனித்திருப்பார்கள் என்று தெரியவில்லை.

சுத்த சைவைம் என்று கூறிக்கொள்பவர்களாவது இந்த பட்டுப் புடவைகளை அணியாமல் இருக்கலாம். கொடுமை என்னவென்றால் இப்படித் தாயாரிக்கப் படும் பட்டாடைக்குத் தீட்டு இல்லையாம். வேதம் படித்த பண்டிதர்களும், திருவாசகம் படித்த பண்டிதர்களும் இப்படிச் சொல்லி பட்டு மோகத்தை அதிக்கப் படுத்தியிருப்பது நெருடலான விஷயம் தான்.

இதற்கான காரணத்தை 85 வயது பெரியவர் மணி மாமாவிடமும், 78 வயதுப் பெரியவர் சிவசுப்ரமணியன் பிள்ளை அவர்களிடமும் கேட்டேன். மணி மாமா, தொன்றுதொட்டு வரும் நம்பிக்கையைக் கேள்வி கேட்கப்படாது என்றார். பிள்ளை அவர்கள் வெறுமையாக ஒரு பார்வைமட்டும் பார்த்தார்.

பட்டு அரசர்கள் காலத்தில் அரச பரம்பரைக்கு உரிய உடையாக ஏற்றுக்கொள்ளப் பட்டு வந்ததாலும், அரசவைப் பரிசுகள் பட்டினால் ஆன துணியில் கொடுக்கப் பட்டு வந்ததாலும் இதைப் பற்றி பகுத்தறிவு விளக்கம் கொடுத்துத் தன் தலையை இழக்க எந்த அறிஞனும் துணிந்திருக்க மாட்டான். அதானால் தான் தொடர்ந்து இந்தப் பட்டுப் பாரம்பரியம் வளர்திருக்க வேண்டும்.

எது எப்படியோ, அதிக ஜரிகையுடனும், வேலைப்பாடுடனும் கூடிய பட்டுப் புடைவைகள் ஒரு லட்ச ரூபாய்க்கும் அதிகமாக விற்கப்படுகின்றன. ஆனால் திரும்ப விற்றுப் பணமாக்க முடியாது என்பது இருந்தாலும், பட்டுப்புடைவகளின் வேலைபாடும் பள பளப்பும் அதன் ராயல் லூக்கும், வாங்குபவர் கண்களை கவர்த்துவிடுகிறது. அதற்கு மேல் நமது இந்தியக் கல்லச்சாரம் புகுந்து கொண்டு என்ன விலை கொடுக்கவும் மனங்களைத் தயார் படுத்திவிடுகிறது.

ஆடம்பரச் செலவுகள் எல்லாம் ஒரு புறம் தேவையற்றதாகத் தோன்றினாலும், பணப்புழக்கத்தை அதிகரிக்கக் கூடியவை. பலபேருக்கு வேலை வாய்ப்பும் கிடக்கும். எனவே ஆடம்பரச் செலவுகளை தானத்தைவிடச் சிறந்த ஒன்றாகக் கருதலாம். எந்தப் பொருளையும், சேவையையும் பெற்றுக்கொள்ளாது கொடுப்பது தானம் என்றால், தானம், கொடுப்பவர்களுக்கு மட்டுமே சிறப்பு சேர்க்கும். வங்குபவர்களுக்குத் தன்மானம் குறைவதாக அமையும். அனால் வியாபாரம் என்று வந்துவிட்டால் இருப்பக்கமும் தன்மானக் குறைவில்லை.
பட்டு உடைகள் வாங்கிய மறு நிமிடமே, திரும்ப விற்கும் மதிப்பை இழந்து விடுகின்றன. எனவே புடவையின் விலை முழுவதும் தானம் கொடுத்தது போல் ஆகிவிடுகிறது.

தனக்கு மிஞ்சிதான் தானம் என்பதை மட்டும் நினைவில் கொள்ள முடிந்தால், அளவோடு செலவு செய்யாலாம். ஆனால் ஊடகங்களின் கைங்கர்யத்தால் இந்த நினைப்பை வரவிடாமல் வியாபாரிகள் பார்த்துக் கொள்வார்கள். அக்ஷய திருதியை போன்ற ஒரு நாளைக் கண்டுபிடிக்க தீவிரமாக யோசனை செய்து கொண்டிருப்பார்கள். நாமத்தைப் போட்டுக்கொண்டோ அல்லது பட்டையைப் போட்டுக்கொண்டோ சாஸ்திரி ஒருவரைப் பேசவைத்து விரைவில் வெற்றியும் கொள்வார்கள்.

பட்டு என்பது ஆண்களுக்கு சவாலாகவும், அடிச்சதுக்கொன்னு புடிச்சதுக்கொன்னு என்று பெண்களின் புடவை எண்ணிக்கையை உயர்த்துவதாகவும் இருந்துவரும் என்ற தெளிவு பிறந்து என் நெடு நாளைய சந்தேகமும் தீர்ந்தது.


6 comments:

Rathnavel said...

அம்மாவுக்குப் பட்டுப்புடவை வாங்கினால் எங்க எல்லாருக்கும் கிடைக்க வேண்டிய ஃபுல் பேண்ட் அரைக்கால் டவுசர் ஆகிவிடும். அவ்வளவுதான் வசதி.

அருமையான பதிவு. மக்கள் யோசிக்க வேண்டும். இதை நாம் நமது வீட்டில் உரக்க சொன்னால் தனிமைப் படுத்தப் படுவோம்.
தொடர்ந்து எழுதுங்கள். மனப்பூர்வ வாழ்த்துக்கள்.

வை.கோபாலகிருஷ்ணன் said...

காஞ்சி மஹாஸ்வாமிகளே, விவாஹங்களில் கூட இந்த பட்டாடைகள் உடுத்துவதை,ஆதரிக்கவில்லை.
தீராத பக்ஷத்தில், ஆசைப்படுபவர்கள், பட்டுப் பூச்சிகளைக் கொல்லாமல் தயாரிக்கப்படும், அஹிம்ஸாபட்டு, வேண்டுமானால் வாங்கி உடுத்திக்கொள்ளுங்கள் என்று சொல்லியுள்ளார்.

அவர்களுடைய தீவிர பக்தர்களில் சிலர், பெரும் பணக்காரர்களாக இருப்பினும், பட்டாடைகள் உடுத்தாமல் இன்றும் அதை அப்படியே கடைபிடித்து வரும் சிலரை (சில குடும்பங்களை) எனக்கு நன்றாகத் தெரியும்.

நல்லதொரு பதிவு தந்துள்ளீர்கள். நன்றி.
பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.

VENKAT said...

ரத்னவேல் ஐயா அவர்களின் பின்னூட்டம் " இதை நமது வீட்டில் உரக்கச் சொன்னால் தனிமைப் படுத்தப் படுவீர்கள்".

வலை உலகத்திலும் கூட அப்படி ஆகி விடுவோமோ? இருபது பேருக்கு மேல் வந்திருக்கிறார்கள். Only 2 comments.

வை.கோபாலகிருஷ்ணன் சார் அவர்கள் சொல்லியிருக்கிற தகவல், இந்த கட்டுரைக்கான தகவல்களைச் சேகரிக்கும் போது திரு.சிவசுப்ரமணியன் பிள்ளை அவர்களின் துணைவியார் எனக்குச் சொன்னார்கள். ஆனால் இது பின்னூட்டமாக வர வேண்டும் என்று விரும்பினேன். என் விருப்பம் உங்களால் நிறைவேறியது எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி.

இருவரின் துணிச்சலான பின்னூட்டங்களுக்கும் என் நன்றிகள்

Ramani said...

ஆடித் தள்ளுபடி பட்டுப்புடவை என்று
மிகச் சரியாக இந்த சீஸனுக்கு உரிய
விஷயங்களாகச் ஜமாய்க்கிறீர்கள் சந்தோஷம்
பொருட்கள் பயன்பாட்டில் எப்போதும் அறிவை விட
மனமே ஜெயிக்கும்
பீடி சிகரெட் கெடுதி என என்னதான் விளம்பரம் செய்தாலும்
ஒயின் ஷாப் களில் குடிப்பது நாட்டுக்கும் வீட்டுக்கும் கேடு என
பெரிதாக எழுதிப் போட்டு ஒயின் ஷாப் என மிகச் சிறிதாகப்
எழுதிப் போட்டாலும்ஒயின் ஷாப் களில் கூட்டம்
குறைவாகவா போகிறது
ஆடி பீடை மாதம் எந்தப் பொருளும் வாங்கக் கூடாது என
இருந்ததை ஆடித்தள்ளுபடி எனக் கொண்டுவந்து
வியாபாரிகள் ஜெயித்து இப்போது மக்கள்
தோற்றுக் கொண்டிருக்கிற காலம் இது
சிந்தனையத் தூண்டிச் செல்லும் பதிவு
தொடர வாழ்த்துக்கள்
இந்தப் பதிவின் வெற்றியே எப்போதும்
இரண்டு வார்த்தைக்கு மேல் பின்னூட்டமிடாத
ரத்தனவேல் சார் கூடுதலாக சொல்லியிருப்பதுதான்

இராஜராஜேஸ்வரி said...

வேதம் படித்த பண்டிதர்களும், திருவாசகம் படித்த பண்டிதர்களும் இப்படிச் சொல்லி பட்டு மோகத்தை அதிக்கப் படுத்தியிருப்பது நெருடலான விஷயம் தான்./

விழிப்புணர்வு தரும் பகிர்வுக்குப் பாராட்டுக்கள்.

Venkat said...

"பொருட்கள் பயன்பாட்டில் எப்போதும் அறிவை விட
மனமே ஜெயிக்கும்". திரு. ரமணி அவர்களின் பின்னூட்டம் கட்டுரையின் உட்பொருளை சட்டென உணர்த்தி நிற்கிறது.
பெண்மணிகளுக்குப் பிடிக்காதபடி எழுதிவிட்டோமோ? என்று யோசித்துக்கொண்டிருந்தேன். நல்ல வேளை
இராஜராஜேஸ்வரி மேடம் வருகை தந்து கருத்துக்களை ஆமோதித்திருப்பது கொஞ்சம் ஆறுதலாக இருக்கிறது.

இருவருக்கும் என் நன்றிகள்.

Post a Comment