Saturday, August 29, 2015

இயற்கை நல வாழ்வு முகாம்.—பகுதி 5

நம் முன்னோர்கள் 2500 வருடங்களுக்கு முன்னரே நெறிப்படுத்திய உடற்பயிற்சியைத் தான் அன்றைய மாலை வகுப்பில் யோகா குரு கணேஷ் அவர்கள் சொல்லிக் கொடுத்தார்கள். இந்தப் பயிற்சிகள் நான் இந்த முகாமிற்கு வருவதற்கு முன்னாலிருந்தே தினமும் செய்து வருபவை. அன்றைய முகாமில் முதல் முதலாக செய்ய முயற்சிப்பவர்கள் படும் பாட்டைக் காண முடிந்தது. ஒரு முறை முயற்சித்துவிட்டு அப்பா ! அம்மா ! என்று பெருமூச்சுவிடுபவர்கள். இன்னும் சிலரோ நம்மால் முடியாது என்று வேடிக்கைப் பார்ப்பவர்கள்.

எனக்கு இந்த உடற்பயிற்சிகளின் பல்வேறு நிலைகளைப் பற்றி சிந்திக்க ஒரு அரிய சந்தர்ப்பம் என்னவோ அப்பொழுதுதான் வாய்த்தது போல் ஒரு நினைப்பு. இந்தப் பயிற்சிகளை நெறிப்படுத்திவர்கள் ஒருவராக இருக்க வாய்ப்பே இல்லை. நம் அன்றாட செயல்களைத் திறம்படசெய்து வாழ்கையை அனுபவிக்க நமது  உடல் எப்படியெல்லாம் வளைய வேண்டிவருமோ அந்த நிலைகளை ஆராய்ந்து, ஒவ்வொரு நிலையும் அமைக்கப் பட்டிருக்கிறது. இந்த அரிய உடற்பயிற்சி நீங்களெல்லாம் கேள்விப்பட்டிருக்கும் சூரிய நமஸ்காரம் என்பதே ஆகும். இதன் பன்னிரண்டு நிலைகளையும் நீங்கள் எளிதாகக் கற்றுக் கொள்ளலாம். கொஞ்சம் கொஞ்சம் வித்தியாசம் தென்பட்டாலும் அனேகமான நிலைகள் ஒரே மாதிரியாகத்தான் வெவ்வேறு பயிற்சி சாலைகளிலும் கற்றுக்கொடுக்கப்படுகின்றன..

நம்மில் பலருக்கு இருகைக் கூப்பி வணக்கம் செய்யக் கூட சரியாக வருவதில்லை. நான் சொல்வதை நீங்கள் நம்பவில்லை என்றால் கோவிலுக்குச் சென்று ஒவ்வொருவரும் எப்படி சாமி கும்பிடுகிறார்கள் என்று பாருங்கள். நின்ற நிலையில் உள்ளங்கைகளைச் சேர்த்து வலது கையின் ஒவ்வொரு விரலும் மிகச் சரியாக இடதுகையின் அதன் ஜோடி விரலுடன் ஒட்டி, விரல்கள் அனைத்தும் வானத்தை நோக்கி இருக்கும்படி எத்தனைப் பேரால் சாமி கும்பிட முடிகிறது. கட்டைவிரல்கள் மார்பைத்தொடுகின்றனவா? இந்த நிலையில் சரியாக நின்று கண்களை மூடி அமைதியாக நிற்கும் போது நெஞ்சுக் கூடு விரிந்தநிலையில் இருப்பதால் நல்ல சுவாசமும் அமைதியும் கிடைக்கும்.இதனால் மனதில் ஒரு தெளிவுபிறக்கும். இதை செய்ய முடிந்தால் சூரிய நமஸ்காரத்தில் ஆரம்ப நிலையை நீங்கள் கற்றுக் கொண்டுவிட்டீர்கள். உங்களுக்கு நீங்களே நூற்றுக்கு எட்டு மதிப்பெண்கள் போட்டுக் கொள்ளுங்கள்.
 
அடுத்தடுத்த நிலைகள், உங்கள் முதுகுத்தண்டு முன்னும் பின்னும் முழுவதுமாக வளைய பயிற்சி அளிக்கிறது. பலர் தங்கள் காலடியில் கீழே கிடக்கும் பொருட்களை கூட குனிந்து எடுப்பதற்கே சிரமப்படுவதைப் பார்த்திருக்கிறேன். இந்த மனப்பான்மை சட்டென மாற இரண்டாம் மூன்றாம் நிலைகள் உதவும். அடுத்த 4வது நிலை நீங்கள் படி மற்றும் உயரமான இடைத்தில் ஏற உங்களுக்கு நம்பிக்கையையும் வலிமையையும் கொடுக்கும்.


அதற்குப் பின் செய்யப்படும் 5,6,7 மற்றும் 8வது நிலைகள் தாம்பத்தியத்திற்குப் பெரிதும் உதுவும் நிலைகள். இன்றைய வாழ்க்கை முறையில் பலபேருடைய வேலை உட்கார்ந்திருந்து செய்யக் கூடியதாக இருக்கிறது. இதனால் இடுப்புப்பகுதி வளையும் தன்மையை வெகுவாக இழந்தும் விடுகிறது. அப்புறம் தாம்பத்தியம் எங்கே சுகப் படப் போகிறது!!


9வது நிலை அமர்ந்த நிலையிலிருந்து விருட்டென எழுந்துகொள்ள உதவும். தம்பி மாமாவுக்கு அப்படியே ஒரு கைகொடுத்துத் தூக்கிவிடு என்று யாரையும் கெஞ்ச வேண்டியதில்லை. 10 வது நிலை 4 வது நிலை போல ஆனால் 4 வது நிலையில் இடதுகால் முன்னால் என்றால் 10 வது நிலையில் வலதுகால் முன்னாலிருக்க வேண்டும். 11,12 வது நிலைகள் முறையே 3 மற்றும் 2 வது நிலைகளே.  

இந்த 12 நிலைகள் அடங்கியது ஒரு சுற்று. இப்படி பன்னிரண்டு சுற்று செய்ய முடிந்தால் உங்களுடைய தோற்றம் நிச்சயமாகப் பொலிவாக இருப்பதுடன், நீங்கள் உங்களை அதிக சக்திவாய்ந்தவராக உணர்வீர்கள். மேலோட்டமாக என்ன நடக்கிறது என்று சொல்லிவிட்டேன். உடலின் உள்ளேயும் வியத்தகு மாற்றங்கள் ஏற்பட்டு ஒவ்வொறு புலன்களின் அனுபவமும் சிறப்பாக இருக்க வாழ்வை முழுமையாகச் சுவைப்பீர்கள்.

திருமணமானவர்களுக்கு வாழ்வில் சௌபாக்கியம் என்பதற்கான அர்த்தம் அப்பொழுதுதான் விளங்கும். சூரிய நமஸ்காரம் செய்வதற்கு எந்த ஒரு உபகர்ணமும் தேவையில்லை, எந்த விளையாட்டுத்திடலும் தேவையில்லை. தேவை ஒரே ஒரு விரிப்பு மட்டுமே. நடைபயிற்சி, ஜிம்மில் பயிற்சி எல்லாம் ஜுஜுபி. உங்களுக்கு நம்பிக்கை இல்லையென்றால் ஐம்பது வயதைக் கடந்த ஒரே வயதுடைய யோகாகுருக்களையும் ஜிம் மாஸ்டர்களையும் ஒப்பிட்டுப் பார்த்துக் கொள்ளுங்கள்..

இந்தப் பயிற்சி முடிந்த பிறகு கைகால் முகம் கழுவிவிட்டு இரவு உணவு சாப்பிடச் சென்றோம். சுமார் 75 கிராம் எடை அளவில் நீரில் ஊரவைத்த நிலக்கடலையில் இங்கொன்றும் அங்கொன்றுமாக கொஞ்சம் பாசிப்பயறு, இரண்டு நன்றாகப் பழுத்த நாட்டு வாழைப் பழங்கள் இவை மட்டுமே இரவு உணவு.

பிறகு அடுத்த நாள் மேற்கொள்ளவிருக்கும் இயற்கை மருத்துவத்தின் மிக முக்கியமான உடலை உட்புறம் சுத்தகரித்துக் கொள்ளும் முறைகளப் பற்றியும் மற்றும் நாங்கள் மேற்கொள்ளவிருக்கும் முறையைப் பற்றி 
திரு. பாலு அவர்கள் விரிவான விளக்கஉரை நிகழ்த்தினார். நாளைப் பொழுது மிகக்கடுமையாகக் கழியுமோ என்ற ஐயப்பாடு மனதை வதைத்தது.

தொடரும்..

Sunday, August 23, 2015

இயற்கை நல வாழ்வு முகாம்.—பகுதி 4

நல்லவேளை !! ஏதோ திடஉணவு தட்டுகளில் பரிமாறப்பட்டுக் கொண்டிருந்தது. மதியம் நீராகாரம் இல்லை போலும் என்றெண்ணி சற்று மகிழ்ச்சியாக வரிசையில் நின்று கொண்டேன்.

இனிப்பு அவல் 50 கிராம் அளவு,
ஊறவைத்த நிலக்கடலை 75 கிராம்,
மூன்றில் ஒரு பங்கு பப்பாளிப் பழம்150கிராம், முட்டைகோஸ்,கேரட்,கொத்தமல்லிக் கீரை அரிந்து வைத்தது ஒரு கரண்டி 50 கிராம் அளவில்,
பேரிச்சம் பழம் 3 என்ணிக்கை,
சிறிய சப்போட்டாப் பழம் 2 எண்ணிக்கை.

மதிய உணவு போதுமானதாக இருந்தது. உணவருந்தி முடித்துவிட்டு 3 மணிவரை ஓய்வெடுத்துக் கொண்டோம். பிறகு உணவைப்பற்றிய இரண்டு மணி நேர வகுப்பு. பல அரிய தகவல்களை நாங்கள் அறிந்துகொண்டோம். அவற்றில் ஒரு சில:
1.   புரோட்டா, பாட்டிலில் அடைக்கப்பட்டு விற்பனை ஆகிக் கொண்டிருக்கும் குளிர்பானங்கள் முதலியன தவிர்க்கப் பட வேண்டிய நச்சு உணவுகள்.
2.    பன்னாட்டு உணவுக் கடைகளில் கிடைக்கும், பொரித்த கோழி மற்றும் மைதா ரொட்டிகள் குப்பை உணவுகள் என்று அவர்கள் நாட்டிலேயே பெயரிடப்பட்டவைகள். நாம் நாகரீகம் கருதி இவைகளைச் சாப்பிட்டு வினையை ஏன் விலைகொடுத்து, அதிலும் அதிக விலை கொடுத்து வாங்க வேண்டும் ?
3.   சீனி சாப்பிடுவதற்கு சுவையாக இருந்தாலும் உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் பொருள். அல்வா, ஜாங்கிரி, மைசூர்பா, பால் கோவா…. என்று அள்ளி அள்ளி நாம் தின்று கொண்டு விழாக்களைக் கொண்டாடுகிறோம் !!
4.   முதல் மதிப்பெண் வாங்க, உயரமாக வளர, சரியாக சாப்பிட நேரமில்லை என்றாலும் உங்களுக்கு சக்தி கொடுக்க என்று பன்னாட்டு நிறுவனங்களும், இந்திய கார்பரேட் நிறுவனங்களும் போட்டி போட்டு நடுத்தர மற்றும் மேல்தட்டு மக்களுக்கு விற்கும் பல ஆரோக்கிய பானங்கள் வெகுவாக நமது ஆரோக்கியத்தைக் கெடுக்கக் கூடியவை. முறையான உணவு பழக்கத்திற்கு மாற்று எதுவும் இருக்க முடியாது.
5.   சில பற்பசைகளில் நிக்கோட்டின் கலக்கப் பட்டிருக்கிறது. இது வாடிக்கையாளர்களை அடிமைப் படுத்தச் செய்யப்படும் சூது.

இப்படி பல கருத்துகள் வகுப்பில் சொல்லப்பட்டன.

ஊடகங்களில் சிந்தையைக் கொள்ளை கொள்ளும் விளம்பரங்கள் மற்றும் முற்பட்ட சமுதாயத்தினர்களின் பெருமை பேசி பீற்றிக்கொள்ளும் மனப்பான்மை இவைகளின் வாயிலாக இன்றைய உணவுப் பழக்கங்கள் உடலுக்கும் மனதிற்கும் ஊறு விளைவிப்பவைகளாக மாற்றம் கண்டு கொண்டு இருக்கிறது. இதையெல்லாம் கேட்ட எனக்கு கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் அவர்களின் பாடல் வரிகள் நினைவுக்கு வந்தன.

குறுக்கு வழியில் வாழ்வு தேடிடும்

குருட்டு உலகமடா _ இது

கொள்ளையடிப்பதில் வல்லமை காட்டும்

திருட்டு உலகமடா _ தம்பி

தெரிந்து நடந்து கொள்ளடா _ இதயம்

திருந்த மருந்து சொல்லடா


விளையும் பயிரை வளரும் கொடியை

வேருடன் அறுத்துவிளையாடும் _ மனம்

வெந்திடும் தோட்டக்காரனிடம்

மிரட்டல் வார்த்தைகளாடும் _ பல

வரட்டுக் கீதமும் பாடும் _ விதவிதமான

பொய்களை வைத்துப் புரட்டும் உலகமடா _ தம்பி

தெரிந்து நடந்து கொள்ளடா _ இதயம்

திருந்த மருந்து சொல்லடா

இந்த வகுப்பு முடிந்ததும் மாலை 5.30 மணிக்கு உடற்பயிற்சி வகுப்பு. அன்றைய வகுப்பில் நாங்கள் கற்றது உடற்பயிற்சிகளில், உலகத்திலேயே மிக மிக சிறந்த, அருமையான பயிற்சி. இது ஒன்றுமட்டுமே நம் ஆரோக்கிய வாழ்வுதனை காக்கும் சிறப்பு பெற்றது.
அது என்னவென்று தெறிந்துகொள்ள ஆவலாக இருக்கிறீர்களா??
தொடரும்…


Thursday, August 13, 2015

இயற்கை நல வாழ்வு முகாம்.—பகுதி 3

ஒரே ஒரு டம்ளர் சுமார் 200 ml அளவேதான் இருக்கும் அதில் கீர் எனப்படும் நீராகாரம்தான் காலை உணவு என்றார்கள். முன்தினம் மதியத்திலிருந்து சரியாகச் சாப்பிடக் கிடைக்கவில்லை என்ற ஷாக். இயற்கை நல வாழ்வு என்றால் ஒன்றும் சப்பிடக்கூடாதோ என்று குமார் அவர்களிடம் அங்கலாய்த்துக் கொண்டேன். கொஞ்சங்கூட அலட்டிக் கொள்ளாமல் புன்முறுவலுடன் அந்த டம்ளர் கீரை சம்மனமிட்டு உட்கார்ந்து சிறிது சிறிதாக ருசித்து, ரசித்துக் குடித்துக் கொண்டிருந்தார்.

சாப்பிடுவது எதுவானாலும் தரையில் உட்கார்ந்து ருசித்து மெதுவாக சாப்பிட வேண்டும். இடையில் தண்ணீர் அருந்தக்கூடாது என்பது நல வாழ்விற்கு முக்கியமான பழக்கம் என்று திரு. பாலு அவர்கள் ஏற்கனவே கூறியது நினைவுக்கு வர அப்படியே நானும் ஒரு டம்ளரில் கீர் வாங்கிக்கொண்டு ஓரிடத்தில் அமர்ந்து கொண்டேன்.அகோரப்பசியெல்லாம் இல்லை. கீரை கொஞ்சம் கொஞ்சமாக சுவைத்து அருந்தலானேன்.

என்ன ஒரு சுவை !!. விட்டால் 3 முதல் 4 டம்ளர் குடித்துவிடலாம். வந்தவர்கள் எல்லாம் ரொம்ப….நல்லவங்க. இரண்டாவது டம்ளர் கேட்டுப் போகவேயில்லை. உருவத்தில் மிக பிரமாண்டமாக இருந்த நகைக்கடை அதிபராவது அதிகம் கேட்பாரோ என்றால் அவர் மிகவும் நிதானமாக டம்ளரைக் கழுவச் சென்று கொண்டிருந்தார். கீர் செய்முறையை திரு. பாலு அவர்கள் விளக்கத் தெரிந்து கொண்டேன்.   

ஒரு நபருக்குத் தேவையான அளவில் செய்ய, ¼ முடித் தேங்காய், கையளவு கருவேப்பிலை 3 ஏலக்காய், சுவைக்கு மண்டைவெல்லம். தேங்காய்ப் பால் எடுத்து கருவேப்பிலையை அரைத்து அதனுடன் சேர்க்க வேண்டும். ஏலக்காயைப் பொடிசெய்து இத்துடன் சேர்த்து வெல்லத்தைப் அதில் போட்டு சுவை கூட்ட கீர் ரெடி. இந்தக் கீரை ஒருமுறை உங்களுடைய குழந்தைகளுக்குக் கொடுத்துப்பாருங்கள். அவர்கள் மீண்டும் மீண்டும் இதை விரும்பிக்கேட்க, வெட்டியாக நீங்கள் ஆரோக்கியபானம் என்று சில டப்பாக்களுக்கு செலவு செய்யும் பணம் மிச்சம்.கொஞ்சமே கொஞ்சம் கலோரி கணக்குப்போட உங்களுக்குத் தெரிந்தால், 200 mlன் கலோரிக் கணக்கு 200 Kcal யை மிஞ்சி நிற்கும்.கருவேப்பிலையில் அடங்கியிருக்கும் வைட்டமின்கள், நார்சத்துக்கள் எல்லாம் அபரிமிதம். ஏலக்காயின் மருத்துவச் சிறப்புபற்றி எழுத ஒருதனிப்பதிவே வேண்டும். இறைவனுக்குப் பூஜைப் பொருளாகும் தேங்காயின் சிறப்புப் பற்றி சொல்லித்தான் தெரியவேண்டுமா ?

காலை உணவுக்குப் பின் 1 மணி நேரம், உணவிலிருந்து சக்தி என்ற தலைப்பில் வகுப்பு. அரிய பல கருத்துக்களை திரு. பாலு அவர்கள் எளிதாய் விளக்கினார். அதன் பின் மண் குளியல் எடுக்க எல்லோரையும் போகச் சொன்னார்கள்.

புற்று மண்ணை தண்ணீரில் கலக்கி உடல் முழுவதும், தலை உட்பட எல்லா இடங்களிலும் முலாம் பூசியது போல் பூசிக் கொண்டு வெயிலில் மண் உலரும் வரை நிற்க வேண்டும். நண்பர்கள் எல்லோரையும் பார்க்கும் பொழுது  மண் சிலைகளைப் பார்ப்பது போன்று இருந்தது. மண் உலர்ந்த பிறகு குளிர்ந்த நீரில் ஒரு சுகமான குளியல். சுகத்தைப் புரியவைப்பதற்கு வார்த்தைகளே இல்லை. குளித்துமுடித்து சருமத்தைப் பார்த்தால், அப்படியொரு மினுமினுப்பு

“ யானையின் தந்தம் கடைந்தெடுத்தார்போல்
அங்கமெல்லாம் ஓர் மினுமினுப்பு……..”


என்ற பாட்டை முணுமுணுத்துக் கொண்டேன். எண்ணெய் தேய்துக் குளித்த உற்சாகம் ஆனால் உடம்பில் அந்தப் பிசுபிசுப்பு இல்லை.பிறகு உடை மாற்றி உணவு உண்ணச் செல்ல வேண்டும். குளித்த உற்சாகத்துடன் நல்ல பசியும் சேர்ந்து கொண்டது. அடுத்து என்ன சோதனையோ என்று மனம் பக் பக் என்று அடித்துக் கொண்டது.                               
தொடரும்……

Sunday, August 9, 2015

இயற்கை நல வாழ்வு முகாம்.—பகுதி 2

மேலே வந்தவுடன் ராஜபாளையம்வாசிகளான திரு. குமார், திரு. கணேசன் என்பவர்களின் அறிமுகம் கிடைத்திட சிறிது நேரம் பேசிக்கொண்டு இருந்தோம். பிறகு முகாமில் பதிவு செய்தபொழுது வாங்கிய கண் குவளை, மூக்குக் குவளை மற்றும் எனிமா குவளை மூன்றையும் எடுத்து சரிபார்த்துக் கொண்டேன். நாளைமுதல் ஒவ்வொரு நாளும் முகாம் முடியும் வரை இவற்றைப் பயன் படுத்த வேண்டும். எல்லாம் சரியாக இருக்க 10 மணிக்கு உறங்கி விட்டேன்.

காலை 5 மணிக்கு மணியோசை கேட்டுத் தூக்கம் கலைய திரு. பாலு அவர்கள் சொல்லிய வண்ணம் முதலாவதாக தண்ணீர் ஒரு லிட்டர் அருந்திவிட்டுக் காலைக்கடன்கள் முடிக்கச் சென்றேன். இனிமா குவளை உபயோகிக்கச் சொல்லியிருந்தார். ஏற்கனவே அனுபவம் இருந்ததால் இதிலெல்லாம் எந்தச் சிரமமும் இல்லை. பிறகு மூலிகைப் பல் பொடி கொண்டு பல் துலக்கிவிட்டுச் சரியாக 6.00 மணிக்குப் பயிற்சி அரங்கிற்கு சென்றேன்.

முதல் இருபது நிமிடம் தியானப்பயிற்சி. நாம் மூச்சு விடுவதை கவனித்துக் கொண்டு இருக்க வேண்டும். அவ்வளவுதான்.அதன் பிறகு கண் குவளை மற்றும் மூக்குக் குவளை உபயோகித்துச் சுத்தகரித்துக் கொள்ளும் பயிற்சி. பிறகு நல்லெண்ணெயை வாயில் ஊற்றி அதிக நேரம் கொப்பளித்துத் துப்பி வாயைச் சுத்தம் செய்துகொள்ளும் பயிற்சி. இவை எல்லாம் முடிய 7.30 மணியாகிவிட்டது.

7.30 மணிமுதல் 8.30 மணிவரை நின்ற நிலை யோகா வேகப் பயிற்சிகள். கால்முதல் கழுத்து வரையிலான எல்லா ஜாயிண்டுகளுக்கும் பயிற்சி சொல்லிக் கொடுத்தார்கள். முடிவில் சாந்தி ஆசனமும் சொல்லிக் கொடுக்கப்பட்டது. 

இரவு உணவு சுருக்கப் பட்டதாலும், காலையில் உடல் துவாரங்கள் அனைத்தும் ஓவர்ஹாலிங் என்று ஆங்கிலத்தில் குறிப்பிடுவது போல சிறப்பாகச் சுத்தம் செய்துகொண்டதாலும், உடற்பயிற்சியோ உடலில் ஆங்காங்கே தேங்கியிருந்த அழுக்குகளை வெளியேற்றி உயிர் சக்தியை உடலெங்கும் சமனாகப் பரப்பிவிட்டதாலும், மனம் தியானம் செய்தும் மற்றெந்த சிந்தனையையும் வர வழியில்லாததாலும், நான் மொத்தமாகக் காற்றில் மிதந்து செல்வதைப்போல் காலால் நடந்து சென்றேன். முகம், கைகால் கழுவி விட்டு காலை உணவருந்தச் செல்ல வேண்டும். வித்தியாசமான குளியல் முறை சொல்லித்தரப் போவதாய் திரு. பாலு அவர்கள் கூறி இருந்ததால் குளியலறை சென்று குளிக்கவில்லை.

இந்த ஒரு நாள் கற்றுக் கொண்ட சில செய்முறைகளே பல உபாதைகளிலிருந்து நம்மைக் காத்துக் கொள்ள உதவும். எனிமா எடுத்துக் கொள்ளுதல் மலச் சிக்கலுக்கு ஒரு எளிய தீர்வு.எந்த ஒரு மருந்தும் தேவையில்லை. ஆனாலும் தினமும் எடுத்துக் கொள்வது முறையல்ல. அப்படி செய்தால் நம் உடம்பு மலம் கழிக்கும் விதத்தை வேறுமாதிரி மாற்றிக் கொள்ளும்.

நம்முடைய வாழ்கை முறையில் உடல் உழைப்பு வெகுவாகக் குறைந்துவிட்டதால் தினமும் உடற்பயிற்சி அவசியமாகிப் போய்விட்டது. ஒருவரின் பணி ஒரே இடத்தில் உட்காராமல் உடல் உழைப்பு சார்ந்ததாகவே இருந்தாலும் சில உறுப்புகள் அதிகமாகவும், சில உறுப்புகள் குறைவாகவும் செயல் படும் வண்ணம் தான் பணிகள் அமையும். எனவே உடற்பயிற்சி தவிர்க்க முடியாத ஒன்று.

தியான முறைகளில் பல நிலைகள் உணர முடியும். மனத்தை உணரும் வரை பயிற்சி இருந்தால் போதும் என்பது என் கருத்து. மனத்திற்குள் உள் நோக்கி பயணித்தால் மனம் பல மாய இடங்களுக்குச் சென்று பல மாய அனுபவங்களைப் பெற்றுக்களிக்கும். இவற்றைத் தவிர்க்க எதாவது ஒரு பொருளையோ பெயரையோ தியானிக்க முயன்றால், நிஜ வாழ்வில் சந்திக்கக் கூடிய பிரச்சனைகளிலிருந்து தப்பிப்பதை விரும்ப ஆரம்பிக்கும். பிரச்சனைகளின் உண்மைப் பின்னணியை புரிந்துகொள்வதுதான் வாழ்வதற்கான வழி என்ற கருத்து எனக்கு உண்டு. வாழ்வை துறக்க முடிவு செய்பவர்கள் மனதில் உள் நோக்கிப் பயணிக்கலாம். உடலைகடந்த பேரின்பத்தை மனம் கொடுக்கும். ஆனலும் அதுவும் ஒரு மாயையே.!!

இத்தகைய எண்ணங்களுடன் காலை உணவருந்தச் சென்றேன். அங்கே 

மீண்டும் ஒரு ஷாக் காத்திருந்தது!!!!தொடரும்....

Sunday, August 2, 2015

இயற்கை நல வாழ்வு முகாம்.—பகுதி 1


இந்தப் பதிவை நான் வலைதளத்தில் பிரசுரிக்கும் இன்று, இந்த முகாமில் நான் கலந்து கொண்டு ஓராண்டு முடித்துவிட்டது. நல்ல விஷயங்களை உடனே பகிர்ந்து கொள்ள ஆசைப்படுவேன். அந்தவகையில் இந்த முகாம் பற்றியப் பதிவை என்னுடைய ஆங்கில வலைதளத்தில் இட்டேன். அதை அனேகம் பேர் படித்தார்களா என்பது தெரியவில்லை. அதிகமான பின்னூட்டங்கள் வரவில்லை என்பதால் தமிழ்ப் பதிவை உருவாக்குவதில் அத்தனை ஆர்வம் காட்டவில்லை. ஒருவருடம் கழித்து சென்றமாதம் இந்த முகாமில் பின்னர் கலந்து கொண்ட அன்பர் விஜய் கார்திக் என்பவர் ஆங்கிலப் பதிவைப் படித்துவிட்டு, இந்தப் பதிவு தமிழில் வெளிவர ஊக்கமளித்தார்.

அரவிந்த் இயற்க்கை நலவாழ்வு மையம், ராஜபாளையம் நடத்திவரும் மூன்று நாள் முகாம் ஆகஸ்ட் 6, 2014 முதல் துவங்க இருந்தது. தொலைபேசிமூலம் முன் தினம் முற்பதிவை உறுதி செய்து கொண்டிருந்தேன். மதியம் 1.00 மணியளவில் பஸ் பிடித்து கிளம்புவதாக உத்தேசம். மூன்று நாட்களுக்கு ஆபீசைத் தொடர்பு கொள்ள முடியாது என்பதால் அதற்கான எல்லா ஏற்பாடுகளையும் செய்து முடித்து ஆபீசைவிட்டு கிளம்பும் போது மதியம் மணி 2.00. வீட்டிற்குச் சென்று அவசர அவசரமாக அவரைக்காய் கூட்டு மற்றும் புளிக்குழம்பு சாதம் அரைகுறையாக சாப்பிட்டுவிட்டு அரக்கப் பரக்க ஓடி ராஜபாளையம் அரவிந்த் ஆஷ்ரமத்திற்குப் போய் சேரும் பொழுது மணி மாலை 5.05.

முகாமிற்கு பதிவு நடை பெற்ற இடத்தில் ஒரு விண்ணப்பப் படிவம் பூர்த்திசெய்து கொடுத்தேன். உயரம் 170 செ.மீ, எடை 83 கிலோ என்பது இந்தப் பதிவிற்கு அவசியமான என்னைப் பற்றிய விபரங்கள்.

செல்போன், ரொக்கப்பணம், பிரஸ், பேஸ்ட், சோப்,ரேசர் முதலிய பொருட்களைக் கொண்ட ட்ராவல்கிட் அத்தனையும் என்னிடமிருந்து வாங்கிக்கொள்ளப்பட்டது. ரொக்கம் கணக்குப் பார்த்து ஒரு காகிதத்தில் எழுதி என் கையொப்பத்துடன் வாங்கிக் கொள்ளப்பட்டது. செல்போன் ஸ்விட்ச் ஆஃப் செய்து கொடுக்கச் சொன்னார்கள். எல்லாவற்றையும் ஒரு பையில் போட்டு பத்திரமாக எடுத்து வைத்துக்கொண்டார்கள். போகும் பொழுது சரிபார்த்து வாங்கிக் கொள்ளும் படி சொன்னார்கள்.

அந்தக் கணம் எனக்குத்தெரிந்த அத்தனை உறவினர்கள், நண்பர்கள் மற்றும்  என்னைக் கொஞ்சமே கொஞ்சம் அறிந்தவர்களுடன் இருந்த அத்தனை தொடர்புகளும் துண்டிக்கப்பட்டுவிட்டன. கையில் வேறு சல்லிக் காசு கூட இல்லை. பசியோ கிரங்கடித்துக் கொண்டிருந்தது.

முகாமில் கலந்து கொள்ளும்  ஆண்களுக்கு மாடியில் ஒரு பெரிய ஹாலில் தங்குமிடம் ஒதுக்கப்பட்டிருந்தது. சன்னலை ஒட்டிய  பாய் ஒன்றில் என்னுடைய பையை வைத்துக் கொண்டேன். தண்ணீரைத் தவிர வேறெந்த உணவுப் பொருளும் இல்லை. தங்குமிடம் சுத்தமாக இருந்தது. ஒரு பக்கத்தில் வரிசையாக சுத்தமான குளியல் அறை வசதிகள் இருந்தன.

கைகால் முகம் கழுவிவிட்டு அந்த இடத்தைச் சுற்றிப் பார்த்தேன். அந்த இடம் ஐய்யனார் அருவி சமீபத்தில் ஒரு மலைத்தொடரின் அருகிலே அமைந்திருக்கின்றது. சிறந்த இயற்கைச் சூழல். வெப்பம் அதிகமாக இல்லை. பறவைகள் ஒலி தவிர எந்தச் சத்தமும் இல்லை. உடன் கலந்து கொள்கின்றவர்களின் பேச்சுச் சத்தம் மட்டும் கேட்டுக் கொண்டிருந்தது. நண்பர்களுடன் வந்தவர்கள் பேசிக் கொண்டிருந்தார்கள். எனக்கு இனிதான் நண்பர்கள் கிடைப்பார்கள்.

அனேகமாக எல்லோருக்கும் பாய்களில் படுக்க தங்கள் இடங்களை தேர்ந்தெடுதுக்கொண்டார்கள். முடியாதவர்களுக்குச் சில கட்டில்களும் இருந்தன. இரவு 7.45 மணிவரை ஆட்கள் வந்த வண்ணம் இருந்தார்கள்.
இரவு 8.00 மணிக்கு ஒரு மணி ஓசை கேட்டது. கீழேவரச்சொல்லி அழைப்பு. இரவு உணவிற்காக இரண்டே இரண்டு வாழைப்பழங்கள். மனதில் பக்கென்றிருந்தது. யானைப் பசிக்கு சோளப்பொரியா ???
ஒவ்வொருவரின் முகத்தைப் பார்க்கத் தமாஷாய் இருந்தது. என் முகம் எப்படி இருந்தது என்று பார்க்க கண்ணாடி இல்லை.

அடுத்த நாள் குறித்த விளக்க உரைக்காக எல்லோரையும் கீழேயுள்ள ஹாலில் சென்றமரும்படி சொன்னார்கள். ஆண்கள் 34 பேர், பெண்களும் அதே எண்ணிக்கையில் அந்த முகாமிற்கு வந்திருந்தார்கள்.
திரு. பாலசுப்பிரமணியன் என்பவர் இந்த முகாமைப் பற்றியும் அதன் அவசியத்தைப் பற்றியும் ஒரு சிற்றுரை நிகழ்த்தினார். எல்லோரையும் 10.00 மணிக்குப் படுத்துத் தூங்கி காலை 5.00 மணிக்கு எழுந்து விட வேண்டும் என்று கூறினார்.

இரண்டு வாழைப்பழம் இரவு உணவு, 10.00 மணிக்குத் தூங்கிவிட வேண்டுமாம், காலை 5.00 மணிக்கு எழுந்து விட வேண்டுமாம். என்னடா மதுரைக்காரனுக்கு வந்த சோதனை! என்று எண்ணிக்கொண்டு மேலே சென்றுவிட்டேன்.   

தொடரும்…