Wednesday, August 24, 2011

கோகுலாஷ்டமி

கோவிலுக்குச் செல்வது, திருவிழாவிற்குப் போவது போன்ற செயல்களில் எனக்கு அவ்வளவாக ஈடுபாடு இல்லை. கொஞ்சம் அமைதியை விரும்பும் ரகமாக இருப்பதால் ஆரவாரம் உள்ள இடமாகத் திருவிழாக்களை எடுத்துக்கொள்வேன். இறைவனை உருவமில்லா எங்கும் நிறைந்திருப்பவராய் மனதில் நினைத்துக் கொள்ள ஏனோ எனக்குப் பிடிக்கும். எனவே புராணங்களை அவ்வளவாகப் படித்ததில்லை.

ஆன்மீகவாதிகள் பலரும் இறைவனை எங்கும் நிறைந்தவராகவும், நமக்குள்ளே இருப்பவராகவும் உணரச் சொல்வதை எனக்குச் சாதகமாகச் சொல்வதாக எடுத்துக் கொள்வேன். மதத்தின் பெயரால் ஏற்பட்டக் கலவரங்கள், உயிர்பலிகள் அனைத்திற்கும் இறைவனைப்பற்றிய பல்வேறு நம்பிக்கைகளே காரணம் என்று முடிவு கட்டியும் விட்டேன்.

இருந்தாலும் உருவ வழிபாட்டில் சில சௌகரியங்கள் இருப்பதைப் புரிந்து கொள்ள முடிந்தது. மக்களின் உணர்வுகளை மதிக்கும் தன்மை இருப்பதால் கோவில்களுக்கு சென்று உருவ வழிபாட்டு முறையையும் அதில் மக்களுக்கு ஏற்படும் ஆத்ம திருப்தியையும் கூர்ந்து கவனிப்பதும் உண்டு. சில சந்தர்ப்பங்களில் சர்ச், மசூதி, புத்த மடங்கள் மற்றும் குருத்துவார்களுக்கும் போய் வந்த அனுபவங்களும் உண்டு.

சிறு வயதிலே முதல் முதலாக பைபிளைப் படிக்கும் வாய்ப்புதான் கிடைத்தது. இராமாயணம் மற்றும் மஹாபாரதக் கதைகள் பள்ளிப்பாடங்களிலேயே வந்து விட்டபடியாலும், திரைப்படங்களில் வந்த படியாலும் ஒரளவு தெரிந்து கொள்ள முடிந்தது. ஆனாலும் பகவத் கீதை என்ன என்பது தெரிந்துகொள்ள சந்தர்ப்பம் வாய்க்க வில்லை. அர்ஜுனனுக்கு, இறைவன் ஸ்ரீகிருஷ்ணராகப் பிறவி எடுத்துச் செய்யும் போதனை என்று மட்டும் அரசல் புரசலாகத் தெரிந்திருந்தது.

இஸ்கான் என்ற கிருஷ்ணபக்தி இயக்கம் ஒன்று இருப்பது செய்திகள் வாயிலாகத் தெரிய வந்தது. ஒரு முறை பெங்களூர் சென்ற பொழுது இஸ்கான் இயக்கத்தால் கட்டப்பட்ட ஒரு பெரிய கிருஷ்ணர்கோவில் இருப்பதும் அறியலாகிற்று. எனினும் போய் வர சந்தர்ப்பம் கிடைக்கவில்லை.

ஒரு விடுமுறை நாள் காலைப் பத்து மணியளவில், வித்தியாசமான உடையுடனும், நெற்றியில் சந்தன நாமத்துடனும் ஒரு இளைஞன் இஸ்கானிலிருந்து வருவதாகக் கூறி, பகவத் கீதைப் புத்தகம் ஒன்றை விலைக்கு வாங்கிக் கொள்ளும்படி வற்புறுத்தினான். ஹிந்துவாகப் பிறந்த என்னிடம் ஹிந்துக்களின் வேதமாகிய பகவத் கீதை இல்லையென்பது ஞாபகம் வந்தது. உடனே வாங்கி வைத்தேன். முதல் அத்தியாயத்தை படித்துப் பார்த்தேன். குருச்சேத்திரப் போர்களம் பற்றிய விளக்கம் இருந்தது. இதுதான் எனக்குத் தெரியுமே என்று மூடி வைத்துவிட்டேன். பின் அத்தியாயங்களில் ஒரு சில பக்கங்களைப் படிக்க முயற்சி செய்தேன். ஸ்ரீகிருஷ்ணரே எல்லாம் வல்லவர். அவரைச் சரணடைய வேண்டும் என்ற ரீதியில் நீண்ட விளக்கங்கள். இஸ்கானில் இணையச் செய்ய, மேற்கொள்ளப் பட்ட முயற்சிபோல் தென் பட்டது. ஒரு பதம் மூன்று வரிகள் இருந்தால் விளக்கம் பக்கம் பக்கமாக எழுதப்பட்டிருந்தது. என் மனதிற்கு அந்த விளக்கங்கள் சரியாகப் படவில்லை. எனவே புத்தகத்தை அலமாரியில் வைத்து விட்டேன். இது ஒரு மத நூல் என்றும் முடிவுகட்டிவிட்டேன். இறைவனை ஸ்ரீகிருஷ்ணர் வடிவில் வழிபட நம்பிக்கை ஏற்படுத்துவதற்காக எழுதப் பட்ட நூல் என்று நினத்துக் கொண்டேன். அப்புறம் அதைப் பற்றி மறந்தே போய்விட்டேன்.

மென்திறன் பயிற்சி வகுப்புக்கள் நடத்துவது எனக்கு விருப்பமான ஒன்று. ஒரு முறை பயிற்சி வகுப்புக்களுக்கு என்னை ஆயத்தப்படுத்திகொண்டிருந்த வேளை. மனித குணங்களைப் பற்றி குறிப்பெடுத்துக் கொண்டிருந்தேன். தூங்கப் போகலாம் என்று புத்தகங்களை மூடிவைத்தேன். தற்செயலாக கீழே பார்த்தேன். பொட்டலம் மடித்த செய்தித்தாள் துண்டு என் கால்களுக்கு அடியில் கிடந்தது. அதில்' GEETHA SPEAKS ON PERSONALITY' ( மனித குணத்தைபற்றி கீதையில் விளக்கம்) என்ற எழுத்துக்கள் என் கவனத்தை ஈர்த்தன. அதில் கீதையின் பதினான்காவது அத்தியாயம் பற்றி சிறு குறிப்பு இருந்தது. இது உண்மையா என்று பார்க்க ஓடிச் சென்று பகவத் கீதைப் புத்தகத்தை எடுத்துப் பார்த்தேன். பதங்களின் மொழி பெயர்ப்பாகக் கொடுக்கப்பட்டிருந்த உரை மனித குணத்தைப் பற்றிய விளக்கமாக இருப்பதைக் கண்டு மெய்சிலிர்த்துப் போனேன். ஹிந்தி மொழியை முறைப்படிக் கற்றிருந்த படியால் சமஸ்கிருத பதங்களை வாசிக்க என்னால் முடியும். ஹிந்தியின் மூல மொழி சமஸ்கிருதம் என்பதால் மொழிபெயர்ப்பை மிகச் சரியாக புரிந்து கொள்ள முடிந்தது.

அதன் பிறகு ஒவ்வொரு அத்தியாயமாக படிக்கலானேன். உரை ஆசிரியர் எழுதியதைப் படிப்பதில்லை. மொழிபெயர்ப்பைப் படிப்பது, இதைப்பற்றி சிந்திப்பது என்ற முறையில் ஓரளவு புரிந்து கொண்டேன்.

இது இப்படியிருக்க, என் மூதாதையர்கள் கட்டி வைத்திருக்கும் ஸ்ரீகிருஷ்ண பஜனை மடத்திற்கு நிர்வாக உருப்பினராக வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது. இந்த பஜனை மடத்தில் கோகுலாஷ்டமி ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தி விழா மிகக் கோலகலமாக தொன்று தொட்டு நடத்தப்பட்டு வருகின்றது. ஒரு விழாவில் கீதைப் பற்றிய ஓர் அறிமுகம் என்ற தலைப்பில் நானே பேச முடிவெடுத்து விழாக் குழுவினரிடம் ஏற்பாடு செய்யச் சொன்னேன்.

பகவத் கீதையின் 18 அத்தியாயங்களில் புதைந்து கிடக்கும் ஞானத்தைப் பற்றி ஒரு மணிநேரம் விளக்கமளித்து மகிழ்ந்தேன். உரை முடிந்ததும் என்னிடம் கேள்விகள் கேட்கச் சொன்னேன். நான் மிகவும் ரசித்த கேள்வியும் அதற்கான என் பதிலும் இதோ உங்களுடனும் பகிர்ந்து கொள்கிறேன்.

கேள்வி : இத்தனை தகவல்களையும் ஸ்ரீகிருஷ்ணர் அர்ஜுனனுக்குப் போர்முனையில் சொல்ல வேண்டிய அவசியம் என்ன? எத்தனையோ நாட்கள் இவ்விருவரும் நல்ல நண்பர்களாக சேர்ந்து இருந்தவர்கள் தானே?

பதில்: மற்ற எல்லா நேரங்களிலும் அர்ஜுனன் மனம் கலங்காத வீரனாகவும், தருமருக்குக் கட்டுப்பட்டு மன நிறைவோடும் கலக்கமில்லாமலும் இருக்கிறார். ஆனால் போர்களத்தில் தான் மனம் கலங்கி நிற்கிறார். ஏற்கனவே அறிந்த, உள்வாங்கிக் கொண்ட பல கருத்துக்களும், மதிப்புக்களையும் மாற்றிக் கொள்ள வேண்டிய நேரத்தில் மாயையை விடுத்து உண்மையைப் புரிந்துக் கொள்ள அர்ஜுனனின் மனம் அந்த சமயம் தான் பண்படுகிறது. இதற்கு அர்ஜுனனின் கூரிய அறிவு தான் காரணம். உண்மையை உணர்ந்தே தீர வேண்டிய நிர்பந்தமும் போர்களத்தில் தான் ஏற்படுகிறது. அர்ஜுனனைத் தவிர வேறு யாருக்கும் கீதையைப் புரிந்துகொள்ளும் மனப்பக்குவம் இல்லை.

பகவத் கீதை தான் ஸ்ரீகிருஷ்ணர் என்று எனக்கு எப்பொழுதும் படும். அதன் பதங்களைப் படிக்கும் பொழுதெல்லாம் ஸ்ரீகிருஷ்ணர் மேல் உள்ள மதிப்பு மிகவும் உயர்ந்து நிற்கும்

அறத்திற்கு எங்கெல்லாம் எவ்வப்பொழுதெல்லாம் கேடுவிளைந்து அதர்மம் ஆதிக்கம் செலுத்துகின்றதோ, பரதகுலத்தோனே, அப்பொழுதெல்லாம் நான் சுயமாகத்தோன்றுகின்றேன்"

பகவத் கீதை- அத்தியாயம் 4,பதம் 7

அதர்மம் ஓங்கும் போது கீதையுருவில் இருக்கும் விதையானது, அதர்மத்தை அழிக்கும் சர்வ வல்லமைப் படைத்த விருட்சமாக உருமாறும் என்பது தான் இந்த பதத்தின் பொருள் என்று எனக்குப் படுகிறது.

தொன்று தொட்டு நிகழ்ந்து வரும் கிருஷ்ண ஜெயந்தி விழா மிகவும் ஆடம்பரமான ஒன்றாக இருந்து வருகிறது. ஸ்ரீகிருஷ்ணர் பாலகிருஷ்ணனாக இருந்த பொழுது நடத்திய லீலைகள் என்றும் நினைவு கூர்வதற்கு சுவையானதாக இருக்கிறது. குறும்பு செய்யும் பிள்ளைகளை எல்லோருக்கும் பிடிக்கும். எனவே தானோ தத்தம் குழந்தைகளை பாலகிருஷ்ணனாக பார்க்க நிறைய பேர் விரும்புகின்றனர் போலும்.

ஸ்ரீகிருஷ்ணர் கோவில்களில் அலங்காரமும் உள்ளத்தைக் கொள்ளை கொள்வதாக இருக்கும். அவர் வாழ்வில் பல பாடல்கள் எழுத நிறைய நிகழ்வுகள் இருப்பதால் இசைக்கும் குறைவில்லை. காதல் பாடல்கள் கூட இதில் அடங்கும். அவர் ஒரு சிறந்த போர் வீரனாக, சிறந்த காதலனாக, சிறந்த அரசனாக,சிறந்த நண்பனாக, சிறந்த அலோசகராக வாழ்ந்தவர். எனவே எல்லா வயதினரையும் கவரும் நிகழ்சிகள் எளிதாக அமைந்துவிடும். இறைவனை ஸ்ரீகிருஷ்ணர் உருவில் வணங்குவது மிகவும் பிடித்துப் போய்விடுகிறது.

இருந்தாலும் அவருடைய கீதையை மூடிவைத்துப் பூஜை செய்வது ஏற்றுக்கொள்ள முடியவில்லை. மதங்களுக்கு அப்பாற்பட்ட அதன் உண்மைகள் எல்லோருக்கும் போய் சேரவேண்டும். இல்லாவிட்டால்
"எது நடந்ததோ நன்றாக நடந்தது" என்று தொடங்கும் அபத்தங்கள் கீதை என்ற பெயரால் வலம் வந்து கீதையின் பேரொளியை மறைக்கும் கருமேகமாகி நிற்கும்.

எதிர்பார்ப்பில் கவனத்தைச் செலுத்தாமல் ஒருவன் தன் கடமைகளில் ஈடுபட்டு செயலாற்றும் பொழுது மிக உயர்ந்த நிலையை அடைகிறான்" என்று பொருள் படுவது தான் கீதையின் மூன்றாம் அத்தியாயம் கர்ம யோகத்தின் 19 வது பதம்.

இந்த ஒன்றை செயல் படுத்திப் பாருங்கள். உங்கள் உன்னதம், உங்களின் மன அமைதி உங்கள் செயல்களின் பலன்கள் உங்களையே ஆச்சரியப்படவைக்கும் அளவிற்கு சிறப்புடையதாக இருக்கும்.


10 comments:

மதுரை சரவணன் said...

arumai..vaalththukkal

வை.கோபாலகிருஷ்ணன் said...

இந்தப்பதிவு மிக நன்றாக எழுதப்பட்டுள்ளது.
மிகவும் ரஸித்துப்படித்தேன். ஏனெனில் நானும் எங்கும், எதிலும், என் வீட்டிலேயே, ஏன் என்னிடத்திலேயே, என் மனத்திலேயே இறைவன் இருப்பதாக நினைப்பவன்.

பாராட்டுக்கள். வாழ்த்துக்கள். நன்றிகள்.

//“எதிர்பார்ப்பில் கவனத்தைச் செலுத்தாமல் ஒருவன் தன் கடமைகளில் ஈடுபட்டு செயலாற்றும் பொழுது மிக உயர்ந்த நிலையை அடைகிறான்"

இந்த ஒன்றை செயல் படுத்திப் பாருங்கள். உங்கள் உன்னதம், உங்களின் மன அமைதி உங்கள் செயல்களின் பலன்கள் உங்களையே ஆச்சரியப்படவைக்கும் அளவிற்கு சிறப்புடையதாக இருக்கும்.//


எதிர்பார்ப்பு என்பதைப்பற்றி கவலையில்லை என்றால் எந்தப்பிரச்சனையும் வராதே!

[இந்த என் பின்னூட்டம் கூட நீங்கள் எதிபார்த்ததே இல்லை; நானாகவே எழுதியுள்ளது தான். நானே எழுதுவோம் என்று எதிர்பார்க்கவில்லை.

இதை இங்கு ஒரு நகைச்சுவைக்காக மட்டுமே குறிப்பிட்டுள்ளேன்]

அன்புடன் vgk

மாய உலகம் said...

வாழ்த்துக்கள் தொடருங்கள்

VENKAT said...

எங்களூர் சரவணன் மற்றும் மாய உலகம் ராஜேஷ் இருவருக்கும் என்னுடைய நன்றிகள். தயவுசெய்து vgk ஐயா அவர்களுக்காக நான் எழுதியிருக்கும் அடுத்த பின்னூட்டத்தையும் படிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

VENKAT said...

வை.கோபாலகிருஷ்ணன் ஐயா அவர்களுக்கு என் பணிவான நன்றிகளும் வணக்கங்களும்.

//இந்த என் பின்னூட்டம் கூட நீங்கள் எதிர்பார்த்ததே இல்லை; நானாகவே எழுதியுள்ளது தான். நானே எழுதுவோம் என்று எதிர்பார்க்கவில்லை//

இது நகைச்சுவை இல்லை ஐயா, இந்த நிலையை அடையச் சொல்வது தான் கர்மயோகம்.

தங்களின் வரவும் சிறப்பான பின்னூட்டமும் இன்று நடந்தது. அது எனக்கு உண்மையிலே மகிழ்ச்சி தரக்கூடியது, இன்று மட்டுமல்ல இந்தப் பதிவைப் பார்க்கும் போதெல்லாம் என்றென்றும்.

ஆனால் இப்படியொரு பின்னூட்டம் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் நான் அன்று எழுத துவங்கியிருந்தால் தரம் பாதித்திருக்கும்.

இன்று காலையில் நான் படித்த ஒரு பதிவில் கண்டது
"I was born not to question myself but to appreciate my self"
(நான் பிறந்தது என்னை நானே கேள்வி கேட்டுக் கொள்ள அல்ல, ஆனால் என்னை நானே பாராட்டிக் கொள்ள.) இப்படியொரு நிலையில் எதிர்பார்ப்பு எங்கே இருக்க முடியும். இந்த வாசகமும் கர்மயோகத்துடன் தொடர்புடையதாகப் படுகிறது.

Rathnavel said...

அருமையான பதிவு.
தொடர்ந்து எழுதுங்கள்.
உங்கள் பதிவை முகநூளில் பகிர்ந்திருக்கிறேன்.
மனப்பூர்வ வாழ்த்துக்கள்.
http://rathnavel-natarajan.blogspot.com/2011/08/blog-post_23.html

சுயம்பு சித்தன் said...

அருமையான பதிவு ...

VENKAT said...

திரு.ரத்தினவேல் ஐயா மற்றும் திரு.சுயம்பு சித்தன் அவர்கள் வருகைக்கும் பாராட்டுதலுக்கும் மிக்க நன்றி.

இராஜராஜேஸ்வரி said...

. உண்மையை உணர்ந்தே தீர வேண்டிய நிர்பந்தமும் போர்களத்தில் தான் ஏற்படுகிறது.

பகவத் கீதை வகுப்பில் சேர்ந்து கீதை பாராயணமும் செய்து உண்ர்ந்த கருத்துகளை தங்கள் பதிவில் கண்டு மகிழ்ந்தேன்.. பகிர்வுக்குப் பாராட்டுக்கள்..

என் கணவ்ர் ஒரே ஒரு வகுப்புக்கு மட்டும் வந்து விட்டு மிகவும் போர் அடிப்பதாக சலித்துக்கொண்டார்..

இராஜராஜேஸ்வரி said...

எதிர்பார்ப்பில் கவனத்தைச் செலுத்தாமல் ஒருவன் தன் கடமைகளில் ஈடுபட்டு செயலாற்றும் பொழுது மிகச்சிற்ப்பாக நிறைவேர்றமுடியுமே !

எதிர்பார்ப்பில் கவனம் இருந்தால்
கடமை சிறப்பாக இருக்காதுதான்..

Post a Comment