Monday, August 1, 2011

ஆடிப் பெருகும் தங்கம்

திண்ணையில் காற்றோட்டமாக பக்கத்து வீட்டு அண்ணன்களுடன் படுத்து உறங்குவது எனக்கு மிகவும் பிடிக்கும். அந்தக் காலத்தில் வீட்டிற்கு நாலாய் ஐந்தாய் பிள்ளைகள் இருந்ததால் ஆண்பிள்ளைகளுக்குப் பெற்றோரின் அனுமதியும் இதற்கு உண்டு. தூங்கப் போவதற்கு முன்பு என் விரலில் இருக்கும் அரை பவுன் மோதிரத்தைக் கழட்டி என் அம்மாவிடம் கொடுத்துவிடுவேன். அன்றும் அப்படித்தான் கொடுத்துவிட்டேன்.

அடுத்த நாள் NCC parade. அதிகாலையிலே எழுந்து செல்ல வேண்டும். NCC யில் மோதிரம், செயின் போன்ற ஆபரணங்கள் எதுவும் அணியக்கூடாது. எனவே காலையில் அம்மாவிடம் மோதிரத்தைப் பற்றி கேட்கவில்லை.

NCC முடிந்து வீட்டிற்கு வந்ததும் தூரத்து உறவினர் ராஜன் அண்ணா வீட்டிற்கு வந்திருந்தார். சிறிது நேரம் பேசிவிட்டு கிளம்பிச் சென்றுவிட்டார். ஏதோவிஷயமாக வந்ததாகவும், வேலையை முடித்துக் கொண்டு அன்று இரவே ஊர் திரும்பி விடுவதாகவும் கூறிவிட்டுச் சென்றார்.

அடுத்த நாள் குற்றாலத்திலிருந்து வந்த என் மாமா, ராஜன் அண்ணாவைக் குற்றாலத்தில் பார்த்ததாகச் சொன்னார். என்ன காரணத்தாலோ அப்பொழுதுதான் என் மோதிரம் ஞாபகம் எனக்கு வந்தது. அம்மாவிடம் கொடுத்த மோதிரம் தொலைந்திருந்ததை அப்பொழுதுதான் உணர்ந்தோம். தங்க மோதிரம் ராஜன் அண்ணாவின் குளு குளு குற்றாலப் பயணத்திற்கு உதவியிருக்க வேண்டும் என்பது உறுதியாக யூகிக்க முடிந்தது. அன்று முதல் இன்றுவரை தங்கம் அணிவது பிடிப்பதேயில்லை. ஆணாக இருப்பதால் இது பாதிக்கக் கூடியதாகவுமில்லை.

சிறிய அளவில், மதிப்பு அதிகம் உடைய பொருள் தங்கம் என்பதால் சுலபமாக களவாட முடிகிறது, சுலபமாகவும் பணமாக மாற்றவும் முடிகிறது.

எப்பொழுதாவது நகைகடைக்குச் சென்றால், 916 வருவதற்கு முன்னால் வரை, கூலி-சேதாரம் என்று கிட்டத்தட்ட இருபது சதவிகித மதிப்பு நகையாக வாங்கும் போது அதிகமாகக் கொடுக்க வேண்டியிருக்கும். பழைய நகையைத் திரும்ப கொடுக்கும் பொழுது சேதாரம்-மாற்று என்று கூறி மீண்டும் இருபது சதவிகிதம் மதிப்புக் குறையும். ஆக மொத்தம் வாங்கி விற்றாலே நாற்பது சதவிகிதம் காலி.

தங்கத்தின் விலையேற்றம் இரண்டு மூன்று வருடங்களில் நாற்பது சதவிகிதத்திற்கு மேல் இருக்கும் என்பதால் இந்த விஷயத்தை யாரும் கருத்தில் கொள்ளவில்லை.

916 வந்த பிறகு தங்கத்தை வாங்கி உடனே விற்றால் ஐந்து சதவிகிதத்திலிருந்து 20 சதவிகிதம் வரை இழக்க நேரிடும் என்பதும் கவனிக்கப் படாத ஒன்று. தங்கத்தின் மேல் இருக்கும் ஆசை கண்ணைக் கட்டிவிடும்.

கடந்த முப்பது ஆண்டுகளில் சுமார் பத்துமடங்கு தங்கம் விலை உயர்ந்திருக்கிறது. அரிசி முதல் எல்லாப் பொருட்களின் விலையும் இந்த அளவிற்கு ஏறி இருக்கிறது. அனால் முப்பது வருடங்கள் பத்திரப் படுத்தும் வசதி தங்கத்தில் மட்டும் இருக்கிறது. அடிக்கடி நகைகளைப் புதுப்பித்தவர்கள் தங்கத்தில் செய்த முதலீட்டால் நஷ்டமே அடைந்திருப்பார்கள். அவர்கள் இதை உணர வாய்ப்பில்லை. காதல் போன்ற சென்டிமென்ட்களும் அக்ஷயதிருதியை போன்ற நம்பிக்கைகளும் மக்கள் கண்ணைகட்டுவதற்கு வியாபாரிகளின் கண்டுபிடிப்பு.

தங்கத்திற்கு ஏன் இந்த மதிப்பு? தங்க நகைகளை அணிந்தால் தான் பிறர் தங்களை மதிக்கிறார்கள் என்று பெண்கள் நினைத்துக் கொள்கிறார்கள். மனைவிக்கு இத்தனை பவுன் இருக்கிறது, மகளுக்கு இத்தனைப் பவுன் போட்டு திருமணம் முடித்திருக்கிறோம் என்ற பெருமையும் தான் இதன் மதிப்பை உயர்த்திக்காட்டுகிறது. திருமணத்தில் தங்கம் ஓர் அணிகலனாக இல்லாது ஒரு கரன்சிபோல் செயல்படுகிறது.

அதிகமாக தங்க நகைகளை அணிபவர்கள் அங்கீகாரத்திற்கும் பிறரின் மதிப்பிற்கும் ஏங்குபவர்களாக இருக்கிறார்கள். இது தங்களைப்பற்றிய ஒரு தாழ்வுமனப்பான்மையின் வெளிப்பாடு. அனேகமாக உயர் பதிவியில் இருக்கும் பெண்கள் யாரும் அதிக நகைகளை அணிவதை நான் பார்த்ததில்லை.

ஆண்களும், அதிகமான நகை அணியும் பெண்களை ஒன்றும் பெரிதாக நினைப்பதில்லை. சிலநேரம் பரிதாபமாக அல்லது பரிகாசமாகக் கூடப் பார்க்கிறார்கள். இதை தங்கத்தின் மீது கடும் பற்று கொண்ட பெண்மணிகள் ஆண்களின் குறையாக எடுத்துக்கொண்டு அத்தகையவர் கணவனாக இருந்தாலும் பொருட்படுதுவதே இல்லை.

தங்கத்தின் மதிப்பு கூடுவதற்கு வியாபாரத் தந்திரமும் ஒரு காரணம். பத்துவருடத்திற்கு முன்னால் அக்ஷய திருதியை என்றால் என்னவென்றே தெரியாது. அது என்னவென்று உண்மையை இன்று யார் சொன்னாலும் சொல்பவர் கேலிக்கு உள்ளாவார். இந்த தினத்தில் சிறிதளவு தங்கமாவது வாங்கியே ஆகவேண்டும் என்ற நம்பிக்கையை விதைத்து வேருன்றி வளர்த்தும் விட்டார்கள். இப்பொழுது அடுத்த ப்ராஜெக்ட் ஆடிப்பெருக்கு அன்று தங்கம் வாங்க வைப்பது. ஊடகங்களின் துணைகொண்டு உறுதியாக வெற்றியும் பெற்றுவிடுவார்கள்.

இவையெல்லாம் புரியும் பட்சத்தில் இந்த தங்க மோகத்தை எப்படி நமக்கு சாதகமாக்கி கொள்வது. 30 ஆண்டுகளில் விலை 1 க்கு பத்தாய் ஆகியிருக்கும் தங்கத்தில் முதலீடு கட்டாயம் செய்ய வேண்டும். நகையாக அணிந்து கொள்வது அவரவர் மனத்தைப் பொருத்த விஷயம்.

  • 916 BIS மார்க் அல்லது HAL மார்க் நகைகளை மட்டும் வாங்குவது.
  • கல் பொருத்தப்பட்ட தங்க நகைகளை வாங்குவதைத் தவிர்ப்பது. கல் எடையில் எவ்வளவு நஷ்டம் ஆகும் என்று அறிய முடியாது கடைக்காரர் சொல்வதை நம்ப வேண்டும். நாம் திரும்ப விற்கும் பொழுது சேதாரம் என்றெல்லாம் எவ்வளவு கழிப்பார்கள் என்று யூகிக்கக் கூட முடியாது.
  • முடிந்த மட்டும் அக்ஷய திருதியை, ஆடித் தள்ளுபடி, ஆடிப்பெருக்கு போன்ற நாட்களில் நகை வாங்குவதைத் தவிர்ப்பது. கூட்ட நெரிசலில் தவறு நிகழ நிறைய வாய்ப்பு உள்ளது.
  • கூடுமான வரை குறைந்த மதிப்புக் கூட்டு உடைய நகைகளை வாங்குவது. குறிப்பாக சில கட்டி டிசைன்களுக்கு 6 முதல் 8 சதவிகிதம் தான் எடையின் மதிப்பில் கூட்டப்படும். கூலி சேதாரம் என்று சொல்லும் கணக்குகளை காதில் போட்டுக்கொள்ளவே கூடாது.
  • வாங்கிய நகைகளை லாபம் வரும்வரை விற்பதைத் தவிர்ப்பது.
  • அவ்வப்பொழுது சேமிப்பை தங்கக் காசுகளாக சேமிப்பது. வங்கிகளில் வாங்கும் பொழுது கணிசமான தொகை மதிப்புக் கூட்டாக விலை அதிகம் கொடுக்க வேண்டியுள்ளது. 99.9% என்ற கணக்குப்புரிவதில் சிரமம் இருக்கலாம். இதுவே கடைகளில் 1 சதவிகிதம் தான்.
கல் வைத்த நகை எப்பத்தான் போடுவது என்று நீங்கள் நினைத்தால், தங்க நகைகளுடன் சேர்த்து கல் வைத்த கவரிங் நகைகளை அணிந்து கொள்ளலாம். கண்டு பிடிக்கவே முடியாது.

மக்களின் மாய எண்ணங்களுக்கும், வறட்டு கௌரவத்திற்கும் எல்லையே இல்லை. அதை வளர்க்கும் கூட்டமும் ஓயப் போவதில்லை. எனவே தங்கத்தின் விலை குறைய குறைந்த பட்ச வாய்ப்பும் இல்லை.புரிந்து கொண்டு நமக்குச் சாதகமக்கிக் கொள்வது மட்டுமே புத்திசாலித்தனம். தங்கமே சிறந்த முதலீட்டிற்கு வழிவகுப்பதால் வைரம், பிலாட்டினம் போன்றவற்றில் முதலீடு செய்வது குறித்து நன்றாக யோசித்துப் பிறகு அதிலும் ஈடுபடலாம்.

7 comments:

மாய உலகம் said...

//மக்களின் மாய எண்ணங்களுக்கும், வரட்டு கௌரவத்திற்கும் எல்லையே இல்லை. அதை வளர்க்கும் கூட்டமும் ஓயப் போவதில்லை. //


இது தங்கத்திற்கு மட்டுமல்ல தரமற்ற பல விசயங்களுக்கும் மறைமுக கௌரவம் மக்கள் தேடிக்கொண்டு தான் இருக்கிறார்கள்... அதே போல தங்கம் வறட்டு கௌரவமானாலும் அதில் வியபார பலனும் உண்டு என்பதை நாசுக்காக பதிவில் அருமையாக தொகுத்துள்ளீர்கள் பாராட்டுக்கள்....

உங்களின் மோதிரம் ராஜன் அண்ணாவை குற்றாலத்தில் குளிப்பாட்ட வைத்திருக்கிறது...ஹ ஹா ஹா..

Rathnavel said...

நன்றி ரமணி சார்.
நல்ல பதிவரை/நல்ல நண்பரை அறிமுகப் படுத்தி இருக்கிறீர்கள்.
நல்ல பதிவு. தொடர்ந்து படிக்கிறேன்.
வாழ்த்துக்கள்.

VENKAT said...

மாய உலகம் ராஜேஷ் மற்றும் ரத்தினவேல் ஐயா இருவரின் வரவிற்கும் நன்றி.

ரஜேஷின் நகைச்சுவைப் பிடித்திருக்கிறது.

சிறு பிழையையும் சரி செய்து விட்டேன்.

வை.கோபாலகிருஷ்ணன் said...

//அனேகமாக உயர் பதிவியில் இருக்கும் பெண்கள் யாரும் அதிக நகைகளை அணிவதை நான் பார்த்ததில்லை.//

கரெக்ட் தான். அவர்கள் வகிக்கும் பதவி அழகுக்கு முன்னால் இதெல்லாம் அவர்களுக்கு ஒரு பெரிய விஷயமே இல்லை.

//ஆண்களும், அதிகமான நகை அணியும் பெண்களை ஒன்றும் பெரிதாக நினைப்பதில்லை. சிலநேரம் பரிதாபமாக அல்லது பரிகாசமாகக் கூடப் பார்க்கிறார்கள். //

மிகச்சரியாகச் சொல்லியுள்ளீர்கள்.

தங்கம் மிகவும் நல்ல முதலீடு தான். அவற்றை வாங்கியபின் பாதுகாப்பது தான் கஷ்டம். நகைகளாக இல்லாமல் நீங்கள் சொல்வதுபோல தங்கக் காசுகளாகவோ அல்லது Share Market Gold ஆகவோ முதலீடு செய்வது நல்லது. என்றும் நஷ்டம் ஆகாது.

நல்ல பகிர்வுக்கு நன்றிகள்.

மாலதி said...

கல் வைத்த நகை எப்பத்தான் போடுவது என்று நீங்கள் நினைத்தால், தங்க நகைகளுடன் சேர்த்து கல் வைத்த கவரிங் நகைகளை அணிந்து கொள்ளலாம். கண்டு பிடிக்கவே முடியாது. //நல்ல பகிர்வுக்கு நன்றிகள்.

VENKAT said...

திரு. வை.கோபாலகிருஷ்ணன் சார் அவர்களின் வருகை எனக்கு மகிழ்ச்சியாகவும், பெருமை சேர்ப்பதாகவும் இருக்கிறது. விடுபட்ட விபரமான Share market gold பற்றி சொல்லி பதிவை இன்னும் நிறைவானதாக ஆக்கியிருக்கிறார். மிக்க நன்றி சார்.

ரமணி சாரின் பரிந்துரையை ஏற்று மாலதி மேடம் வருகை சந்தோஷமாக இருக்கிறது. அவர்கள் மேற்கோள் காட்டிய இடமும், பெண்கள் வரவேற்பார்களா என்று நான் சந்தேகத்துடன் எழுதியது. நன்றி மேடம்.

இராஜராஜேஸ்வரி said...

தங்கத்தின் விலை குறைய குறைந்த பட்ச வாய்ப்பும் இல்லை.புரிந்து கொண்டு நமக்குச் சாதகமக்கிக் கொள்வது மட்டுமே புத்திசாலித்தனம்.//

நிறைவான ஆராய்ச்சிக்கு பாராட்டுக்கள்.

Post a Comment