Sunday, July 3, 2011

மதுரை என்றால் பயமா?


(இதில் விவரிக்கப்பட்டுள்ள விஷயங்கள் உண்மையானவையே)

வெகு நாட்களுக்குப் பிறகு என்னுடைய கோவை நண்பர் மோகனசுந்தரம் தொலைபேசியில் அழைத்தார்.

வெங்கட், என்னுடைய பெண்ணிற்கு பிரபல வங்கியில் வேலை கிடைத்துள்ளது. MBA முடித்தவுடன் முதல் வேலை. வேலை உங்கள் ஊரில்" என்றார்.

"வேலையும் நல்ல நிறுவனத்தில். முதலில் வேலை செய்ய வேண்டிய இடமும் தமிழ்நாட்டில் ஒரு தலை சிறந்த நகரத்தில். உங்களுக்கு இரட்டிப்பு மகிழ்சி தானே.” என்றேன்.

"மதுரைன்னா கொஞ்சம் பயமாக இருக்கே. வேற ஊராய் இருந்தாக்கூட பரவாயில்லை. என்ன நீங்க இருப்பது ஒரு தைரியம் தான்." என்றார்.

சமீப காலத்தில் வந்த சினிமாக்களைப் பார்த்துவிட்டு மதுரையைப் பற்றி தவறாக நினைத்துக்கொண்டு பேசுகிறீர்களா?” என்றேன்.

"பின்னே இல்லையா?” என்றார். கொஞ்சம் அசந்தே போய் விட்டேன். பிறகு மதுரையின் சிறப்புக்களை விளாவாரியாக எடுத்துக் கூறி அவருடைய மகளுக்குக் கிடைத்த வாய்ப்பு சிறந்த ஒன்று என்று எடுத்துக் கூறினேன்.

இது ஒருபக்கமிருக்க, இப்படி மதுரையைப் பற்றி தவறான அபிப்பிராயத்துடன் எத்தனை பேர் தமிழ்நாட்டில் இருக்கிறார்களோ என்று தோன்றியது. ஒரு பதிவு மூலம் சிலருக்காவது உண்மை நிலையை விளக்க எண்ணியதன் விளைவுதான் இந்த வலைப்பதிவு.

சமீபத்திய திரைப்படங்களில் காண்பிக்கப்படுவது போல் மதுரையில் முனு முனு என்று பேசிக்கொண்டு இருப்பது கிடையாது. மதுரைக்காரர்களான திரைப்பட நடிகர்கள் வடிவேலு, விவேக் போன்றும் பட்டிமன்றப் பேச்சாளர்களான சாலமன் பாப்பய்யா, லியோனி, ஞானசம்பந்தம் மற்றும் ராஜா போன்றும் தெளிவாக, வாய்விட்டு, கணீரென்று பேசும் பழக்கம் இங்கு இருந்து வருகிறது.

புதிதாகச் சந்திப்பவர்களையும் அண்ணே, அக்கா, அத்தை, அம்மா, தாத்தா, பாட்டி என்று உறவினர் போல் சட்டென்று நெருக்க உணர்வுடன் பேசுவது மதுரைக்கரார்களின் தனிச்சிறப்பு. லகர, ளகர, ழகர உச்சரிப்பு மிகத் தெளிவாக கையாளப்படும் லாவகமும் வேகமும் வேறெங்கும் மதுரையளவுக்குக் கிடையாது. வாக்கிய முடிவுகளில் சற்றே நீட்டி முடிக்கும் பாங்கு ஒரு பாச உணர்வை ஏற்படுத்தத் தவறுவதில்லை. என்னதான் சிறப்பாக ஆங்கிலம் தெரிந்தாலும் அதன் சாயலேயில்லாமல் மக்களிடம் அன்பாகத் தமிழில் பேசும் பாணி மதுரையின் கற்றறிந்த மாந்தரின் தனிச்சிறப்பு.

வழிப்போக்கர் எவருக்கேனும் வழி சொல்வதானாலும் மிகவும் விளக்கமாக இன்முகத்துடன் சொல்லுவார்கள். தப்பான மற்றும்தெரியாத திசையைக்காட்டியதாக எனக்குத் தெரிந்தவரையில் இல்லவே இல்லை.

மதுரை மக்களுக்குச் சற்று நகைச்சுவை உணர்வு அதிகம். அதன் பிரதிபலிப்பாய் சீரியசான விஷயத்தைக்கூட சில நேரம் யார் மனமும் புண்படா வண்ணம் நகைச்சுவை உணர்வுடன் வெளிப்படுத்தி விடுகிறார்கள்.

மதுரையில் சாப்பாடு பற்றி எந்த வேளையிலும் பிரச்சனையில்லை. சைவ சப்பாடு என்று தேடும் பொழுது சில இடங்களும், சில உணவு வகைகளும் கைவிட்டுப் போகும் தான். சைவமோ அசைவமோ சரியென்றால் நாளெல்லாம் இரவு 12 மணிவரை சப்பாட்டைப் பற்றிக் கவலைப் பட வேண்டியதேயில்லை.

மதுரையின் அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவில் பற்றிக் கூற ஒரு வலைப்பதிவு மட்டும் போதாது. பிரமாண்டத்திற்கும், பக்திக்கும்,வரலாற்றுச் சிறப்பிற்கும் இதை மிஞ்ச வேறோரு கோவில் உலகத்தில் எங்கும் கிடையாது. கோவிலைச் சுற்றியுள்ள கடைகளில் மக்களை வெகு சிறப்பாகவே வரவேற்று உபசரிப்பதையும், எதைச்செய்தாலும் ஒரு சகோதரப் பாசத்துடன் செயல்படுவதையும் காணலாம்.

மதுரையின் ஜிகர்டண்டா மற்றும் பஜ்ஜி,வடை என்ற சிற்றுண்டிகள் நம்முடைய பாரம்பரிய ஃபாஸ்ட் ஃபுட் (Fast Food). மதுரையின் புரோட்டா
சால்னா ஏங்க வைக்கும் சுவை கொண்டது.

எந்த பெரு நகரத்தில் உள்ளது போலும் இங்கும் எப்போதாவது அங்கொன்றும் இங்கொன்றுமாய் கோர சம்பவங்கள் நடக்கலாம். ஆனால் இவையே மதுரையில் தினமும் நடக்கும் சம்பவங்கள் போல் பொறுப்பில்லாமல் ஊடகங்கள் பறை சற்றினால் அதைநம்ப வேண்டியதில்லை.

மதுரையென்றால் பயம் வேண்டாம், பாசம் வைக்கலாம், வாய்ப்பிருந்தால் நேசமும் வைக்கலாம்.

பயப்படாதீங்கண்ணே, பயப்படாதீங்கக்கா, நாங்க இருக்கோம்ல்லே.......


4 comments:

வை.கோபாலகிருஷ்ணன் said...

மதுரைக்கு நானும் ஐந்து அல்லது ஆறு முறைகள் வந்திருக்கிறேன். ஓரிரு நாட்கள் ரூம் போட்டு [பஸ் ஸ்டாண்டு அருகே ஹோட்டல் ராஜேஸ்வரி என்று ஞாபகம்]தங்கியிருக்கிறேன்.

தாங்கள் சொல்வது போல மதுரை ஒரு நல்ல ஊர். நல்ல பண்புடைய மக்களை நானும் சந்திக்க முடிந்தது.

ஒரு உணவகம். இரவு நேரத்தில் அங்கு சுடச்சுட மிகவும் மிருதுவான ருசியான இட்லி மட்டுமே வியாபாரம். வேறு எந்த டிபனும் கிடையாது.

தொட்டுக்கொள்ள சட்னி சாம்பார் தவிர, உபரிப்பணம் கொடுத்தால், மிளகாய்ப்பொடியும், மிகச்சிறிய பாட்டிலில் நல்லெண்ணெயும் தருவார்கள்.

மிகவும் ருசியாக இருக்கும். நான் பலமுறை விரும்பி சாப்பிட்டுள்ளேன்.

நான் சொல்லுவதெல்லாம் 1995-1996 இல். ஒரு 15 வருடங்களுக்கு முன்பு. இப்போது மற்ற ஊர்கள் போல மதுரையும் ஒரு வேளை மாறியிருக்கலாம்.

பகிர்வுக்கு நன்றி. வாழ்த்துக்கள்.
அன்புடன் vgk

சாகம்பரி said...

முரட்டுத் தோற்றமெனிலும் உள்ளொன்று வைத்து புறமொன்று பேசாத வெள்ளை மனம். படித்தவர்களுக்கு மரியாதை. நான் வெளியூர்தான் ஆனால் முதல் ஓட்டு மதுரைக்கே. மதுரைக்கு நாணும் கியாரண்டி.

Ramani said...

மதுரைக்கு நல்ல நேரமோ இல்லை கெட்ட நேரமோ
மதுரையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட
வன்முறை சார்ந்த படங்கள் எல்லாம் சூப்பர் கிட்
ஆகித்தொலைந்தன.உடனே சினிமாக்காரர்கள்
எல்லாம் நல்ல வன்முறை நாட் உள்ள படங்கள் என்றால்
கேமராவைத் தூக்கிக் கொண்டு மதுரை வந்து விடுகிறார்கள்
உண்மையில் தமிழர் கலாச்சாரம் அதிகம் விரவிக் கிடக்கும் ஊர் என்றால்
தமிழ் நாட்டில் மதுரைதான் முதலிடம் பெறும் என்பதில்
எவ்வித சந்தேகமும் இல்லை
மதுரையின் உண்மையான நிலை குறித்து
மிக இயல்பாகச் சொல்லிப்போகும் உங்கள் பதிவு சூப்பர்
தொடர வாழ்த்துக்கள்

VENKAT said...

திரு. வை.கோபாலகிருஷ்ணன் சார் அவர்களின் பின்னூட்டம் மிகுந்த வலிமை சேர்க்கின்றதாகவும் ருசியாகவும் உள்ளது. இன்னும் இட்லி மிளகாய்பொடி எல்லாம் உண்டு சார். IT கம்பெனிகளின் ஆதிக்கம் அறவே இல்லாததால் 1995 க் கும் இன்றைக்கும் பெரிய வித்தியாசம் ஒன்றும் இல்லை பெரிய பெரிய ஜவுளிக் கடைகள், நகைக்கடைகளைத் தவிர. 

சாகம்பரி மேடம், வெளியூர்காரரான நீங்கள் மதுரையைப் பற்றி உண்மை நிலையை அழகாகச் சொல்லியிருக்கிறீர்கள்.

ரமணி சார் என்னுடைய உணர்வுகளை அப்படியே பகிர்ந்து கொள்ளும் முகமாக அருமையான ஒரு விளக்கத்தையும் பதிவு செய்திருக்கிறார். 

உங்கள் அனைவருக்கும் மதுரையின் சார்பாக என்னுடைய நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

Post a Comment