Sunday, October 30, 2011

சாத்துக்குடி சாப்பிடுவது ஏன், எதற்கு, எப்படி?

சிறுவயதிலிருந்தே சாத்துக்குடிப் பழங்களைச் சாப்பிடுவது என்பது கொஞ்சம் சிரமமான செயலாகத் தோன்றும். உடம்பு சரியில்லாத நேரங்களில் வலுக்கட்டாயமாக அம்மா சாத்துக்குடிப் பழங்களை உரித்து உள்ளிருக்கும் வெள்ளைத் தோலைக்கூட நீக்கிக்கொடுத்தால் ஏதோ கொஞ்சம் சாப்பிடத்தோன்றும். நலமாக இருக்கும் நாட்களில் சாத்துக்குடி சாப்பிடுவது கிடையாது.

பம்பாயில் வேலை பார்த்த பொழுது என்னுடைய மேலதிகாரியுடன் தாதரைக் கடக்கும் பொழுதெல்லாம், மௌசம்பி ஜூஸ் சாப்பிட வாங்கித்தருவார். கொஞ்சம் உப்பு, மிளகு போட்டு சாப்பிட அமர்க்களமாய் இருக்கும். இருந்தாலும் ஜூஸ் தயாரிக்கும் பொழுது கணிசமாக பழத்தின் உட்பாகம் வீணாகிறது என்று மனம் சங்கடப்படும். வெளித் தோலை உரித்து..... ம்.., நினைத்துப் பார்த்தாலே ஜூஸ் தான் சிறந்தது என்று மனம் நியாப்படுத்திக்கொள்ளும்.

எப்பொழுதாவது வயிறு சரியில்லை என்றால் ஒரு சாத்துக்குடிப் பழம் சாப்பிட வேண்டும் என்ற எண்ணம் தோன்றும். கஷ்டப் பட்டாவது சாப்பிட்டுவிட்டால் ஜீரணப் பிரச்சனைத் தீர்ந்துவிடும்.

ஒரு முறை இது மாதிரியாகச் சாப்பிடும் பொழுது, உள்ளிருக்கும் வெள்ளைத் தோலையும் சேர்த்துச் சாப்பிட்டால் என்ன என்று தோன்றியது. அப்படியே சாப்பிட்டுவிட்டேன். என்ன ஆச்சரியம் ! முன்பு என்றும் இல்லாத புது மாதிரியான சுக அனுபவம்.

அன்று முதல் இந்த வெள்ளைத் தோலை வீணாக்குவதே இல்லை. இந்த அரிய கண்டுபிடிப்பை என் மனைவியிடமும் பகிர்ந்து கொண்டேன். அதன் பலனாகச் சாத்துக்குடி சாப்பிட ஒரு சுலப வழியையும் அவர் எனக்குச் சொல்லிக் கொடுத்தார். சாத்துக்குடியை எலுமிச்சம் பழம் வெட்டுவது போல் குறுக்காக ஒரு வெட்டு வெட்டி ஒவ்வொரு பகுதியையும் மெதுவாகச் சுவைத்துச் சாப்பிடுவதுதான் அது. இந்த முறையில் சாப்பிட ஆண்களுக்கு மீசை கொஞ்சம் இடஞ்சல் கொடுக்கும். கொஞ்சம் அஜாக்கிரதையாக இருந்தால், சட்டையில் சாத்துக்குடி ரசம் வழிந்துவிடும். மேல்சட்டையும் கால் சட்டையும் பொருத்தமாகப் போடுவதே ஒரு கஷ்டமான வேலை. இதில் கறை படிந்த சட்டையை மட்டும் மாற்றும் சிரமம் பற்றிய நினைப்பு மிகவும் வந்து மிரட்டும். எனவே சுவையான இந்தப் பழம், மருத்துவ குணம் வாய்ந்த இந்தப் பழம் இரவு உணவிற்கு மட்டும் என்று ஆகி விட்டது.

அவ்வப்பொழுது ஜூஸ் சாப்பிட்டு வைட்டமின் C யை உள்வாங்கிக் கொண்டு வாழ்க்கையின் தொடர் ஓட்டத்தைத் தொடர்ந்து கொண்டிருந்தேன். நேற்றைய தினம் என்னமோ ஒரு ஞானோதயம். பழத்தைத் திருப்பி வைத்துக் கொண்டு வெட்டினால் என்ன என்று தோன்றியது. படம் 2 ல் உள்ளபடிக்கு ஒரு மெல்லிய வெட்டு. பத்து சுளைகளும் பளிச்சென்று தெரிந்தன. இரண்டு சுளைகளுக்கு இடையில் வருவது போல் கத்தியால் வெளித்தோலை மட்டும் கீரிவிட்டு மலர்ந்த மலர் போல் உரித்து, படம் 3 ல் உள்ளபடி வெகு சுலபமாக வெளித்தோலை நீக்க முடிகிறது.

தோல் நீக்கிய பழத்தை அன்னாசிப் பழம் போல் ஸ்லைஸ்களாக வெட்டினால் எப்படி இருக்கும் என்று தோன்றவே, படம் 4 ல் உள்ளபடி தொடங்கி 5ல் உள்ளபடி மிகச் சுலபமாக வெட்டி முடித்தேன். கத்தி முனையால் கொட்டைகளை எளிதில் நீக்கவும் முடிகிறது. இப்பொழுது ஒவ்வொரு ஸ்லைஸ்களையும் சாப்பிடுவது சுலபமே. வெளித்தோலையும், கொட்டையையும் தவிர பழத்தின் எந்தப்பகுதியும் வீணாவதில்லை.

குளிர்காலம் ஆரம்பிக்கவிருப்பதால் சாத்துக்குடிப் பழங்கள் சாப்பிட்டு ஜலதோஷம் வராமல் நாம் நம்மைக் காத்துக்கொள்ளலாம். இப்பொழுதெல்லாம் பார்ட்டி என்று அடிக்கடி மட்டையாகும் அன்பர்களுக்கு மறுநாள் காலையில் உட்கொள்ள முடியும் ஒரே உணவும், மருந்தும் சாத்துக்குடியே. இதன் ஜூசைக்காட்டிலும் வெள்ளைத்தோலுடன் பழத்தைச் சாப்பிடுவது மட்டுமே உடனடி நிவாரணம் தரவல்லது. வயிற்றுப்புண், மலச்சிக்கல் மற்றும் சிறுநீர்கழிக்கும் பொழுது எரிச்சல் எல்லாவற்றிற்கும் சாத்துக்குடி மருந்தாகிறது.

100 கிராம் எடையுள்ள சாத்துக்குடி 30 காலரி சக்தியைத்தான் கொடுக்கும், ஆனால் ஓரளவிற்கு வயிற்றை நிரப்பிவிடும். எனவே உடல் எடைகுறைக்க காலை உணவில் சேர்த்துக்கொள்ளலாம். (50 கிராம் எடையுள்ள இட்லி 150 காலரி சக்தி கொடுக்கும்.)

இந்தப் பதிவைப் படிக்கும் அன்பர்கள், அவர்கள் அனுபவங்களையும் பின்னூட்டமாகச் சேர்க்கலாம்.

என்ன, சாத்துக்குடி வாங்க கிளம்பியாச்சா?

3 comments:

Ramani said...

படமும் செயல்விளக்கமும் மிக மிக அருமை
வெட்டிவைத்துள்ள தட்டை பார்த்தவுடன்
சாப்பிடவேண்டும் என்பதைவிட இப்படித்தான்
சாப்பிடவேண்டும் என எண்ணத் தோன்றுகிறது
அருமையான பத்வு தொடர வாழ்த்துக்கள்
த.ம1

Ramani said...

தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும்
இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்

இராஜராஜேஸ்வரி said...

சிற்ப்பான பகிர்வுகள்..

வெளிநாட்டில் இப்படித்தான் நிறைய ஆரஞ்சுப்பழங்கள் வாங்கிவந்து விட வெட்டி பரீட்சித்துப்பார்த்து சுலபமாக , சுவையாக சாப்பிடக் கற்றோம்..

http://jaghamani.blogspot.com/2011/02/blog-post_13.html

ஆஸ்திரேலிய ஆரஞ்சு

Post a Comment