Thursday, August 13, 2015

இயற்கை நல வாழ்வு முகாம்.—பகுதி 3

ஒரே ஒரு டம்ளர் சுமார் 200 ml அளவேதான் இருக்கும் அதில் கீர் எனப்படும் நீராகாரம்தான் காலை உணவு என்றார்கள். முன்தினம் மதியத்திலிருந்து சரியாகச் சாப்பிடக் கிடைக்கவில்லை என்ற ஷாக். இயற்கை நல வாழ்வு என்றால் ஒன்றும் சப்பிடக்கூடாதோ என்று குமார் அவர்களிடம் அங்கலாய்த்துக் கொண்டேன். கொஞ்சங்கூட அலட்டிக் கொள்ளாமல் புன்முறுவலுடன் அந்த டம்ளர் கீரை சம்மனமிட்டு உட்கார்ந்து சிறிது சிறிதாக ருசித்து, ரசித்துக் குடித்துக் கொண்டிருந்தார்.

சாப்பிடுவது எதுவானாலும் தரையில் உட்கார்ந்து ருசித்து மெதுவாக சாப்பிட வேண்டும். இடையில் தண்ணீர் அருந்தக்கூடாது என்பது நல வாழ்விற்கு முக்கியமான பழக்கம் என்று திரு. பாலு அவர்கள் ஏற்கனவே கூறியது நினைவுக்கு வர அப்படியே நானும் ஒரு டம்ளரில் கீர் வாங்கிக்கொண்டு ஓரிடத்தில் அமர்ந்து கொண்டேன்.அகோரப்பசியெல்லாம் இல்லை. கீரை கொஞ்சம் கொஞ்சமாக சுவைத்து அருந்தலானேன்.

என்ன ஒரு சுவை !!. விட்டால் 3 முதல் 4 டம்ளர் குடித்துவிடலாம். வந்தவர்கள் எல்லாம் ரொம்ப….நல்லவங்க. இரண்டாவது டம்ளர் கேட்டுப் போகவேயில்லை. உருவத்தில் மிக பிரமாண்டமாக இருந்த நகைக்கடை அதிபராவது அதிகம் கேட்பாரோ என்றால் அவர் மிகவும் நிதானமாக டம்ளரைக் கழுவச் சென்று கொண்டிருந்தார். கீர் செய்முறையை திரு. பாலு அவர்கள் விளக்கத் தெரிந்து கொண்டேன்.   

ஒரு நபருக்குத் தேவையான அளவில் செய்ய, ¼ முடித் தேங்காய், கையளவு கருவேப்பிலை 3 ஏலக்காய், சுவைக்கு மண்டைவெல்லம். தேங்காய்ப் பால் எடுத்து கருவேப்பிலையை அரைத்து அதனுடன் சேர்க்க வேண்டும். ஏலக்காயைப் பொடிசெய்து இத்துடன் சேர்த்து வெல்லத்தைப் அதில் போட்டு சுவை கூட்ட கீர் ரெடி. இந்தக் கீரை ஒருமுறை உங்களுடைய குழந்தைகளுக்குக் கொடுத்துப்பாருங்கள். அவர்கள் மீண்டும் மீண்டும் இதை விரும்பிக்கேட்க, வெட்டியாக நீங்கள் ஆரோக்கியபானம் என்று சில டப்பாக்களுக்கு செலவு செய்யும் பணம் மிச்சம்.கொஞ்சமே கொஞ்சம் கலோரி கணக்குப்போட உங்களுக்குத் தெரிந்தால், 200 mlன் கலோரிக் கணக்கு 200 Kcal யை மிஞ்சி நிற்கும்.கருவேப்பிலையில் அடங்கியிருக்கும் வைட்டமின்கள், நார்சத்துக்கள் எல்லாம் அபரிமிதம். ஏலக்காயின் மருத்துவச் சிறப்புபற்றி எழுத ஒருதனிப்பதிவே வேண்டும். இறைவனுக்குப் பூஜைப் பொருளாகும் தேங்காயின் சிறப்புப் பற்றி சொல்லித்தான் தெரியவேண்டுமா ?

காலை உணவுக்குப் பின் 1 மணி நேரம், உணவிலிருந்து சக்தி என்ற தலைப்பில் வகுப்பு. அரிய பல கருத்துக்களை திரு. பாலு அவர்கள் எளிதாய் விளக்கினார். அதன் பின் மண் குளியல் எடுக்க எல்லோரையும் போகச் சொன்னார்கள்.

புற்று மண்ணை தண்ணீரில் கலக்கி உடல் முழுவதும், தலை உட்பட எல்லா இடங்களிலும் முலாம் பூசியது போல் பூசிக் கொண்டு வெயிலில் மண் உலரும் வரை நிற்க வேண்டும். நண்பர்கள் எல்லோரையும் பார்க்கும் பொழுது  மண் சிலைகளைப் பார்ப்பது போன்று இருந்தது. மண் உலர்ந்த பிறகு குளிர்ந்த நீரில் ஒரு சுகமான குளியல். சுகத்தைப் புரியவைப்பதற்கு வார்த்தைகளே இல்லை. குளித்துமுடித்து சருமத்தைப் பார்த்தால், அப்படியொரு மினுமினுப்பு

“ யானையின் தந்தம் கடைந்தெடுத்தார்போல்
அங்கமெல்லாம் ஓர் மினுமினுப்பு……..”


என்ற பாட்டை முணுமுணுத்துக் கொண்டேன். எண்ணெய் தேய்துக் குளித்த உற்சாகம் ஆனால் உடம்பில் அந்தப் பிசுபிசுப்பு இல்லை.பிறகு உடை மாற்றி உணவு உண்ணச் செல்ல வேண்டும். குளித்த உற்சாகத்துடன் நல்ல பசியும் சேர்ந்து கொண்டது. அடுத்து என்ன சோதனையோ என்று மனம் பக் பக் என்று அடித்துக் கொண்டது.                               
தொடரும்……

3 comments:

Unknown said...

மிக அருமை

கருவேபில்லை கீர் பற்றி நீங்கள் கூறியதை படிக்கும் போதே குடிக்க ஆசை வருது....

சுவையோ சுவை !

நங்கள் மண்குளியல் எடுத்த போதும்.. ஒரே தமாசு.. அனைவரும் காட்டுவாசி போல் இருந்தோம்.

Unknown said...

அருமையான மொழி நடை பின் தொடர்கிறேன்(௦2 பகுதிகளையும் சேர்த்துத்தான்)

S.Venkatachalapathy said...

ராஜூ தினகரன் அவர்களின் வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி.பதிவுகளைப் படித்துவிட்டுப் பதிவைப்பற்றிய செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Post a Comment