Saturday, May 21, 2011

கனவு மெய்ப்பட வேண்டுமா?கனவு : இந்த வார்த்தை தான் சமீப காலமாக அதிகளவில் பேசப்படுகிறது. மக்கள் இதைப் புரிந்து கொள்கிறார்களோ இல்லையோ, கார்ப்பரேட் உலகில் இந்த வார்த்தை தனக்கென்று ஒரு பிரத்யேகமான இடத்தைப் பிடித்துக் கொண்டிருக்கிறது. இந்த வார்த்தையை அடிக்கடி சொல்லிக் கொள்வது நாகரீகமாகக் கருதப்படுகிறது. இந்தப் பதம் சமீப காலமாக இவ்வளவு பிரபல்யமானதற்கு ஒரு காரணம், நமது முன்னாள் ஜனாதிபதி Dr.A.P.J. அப்துல்கலாம் அவர்கள் நம் நாட்டு இளஞர்களை ஊக்குவிக்க இதைப் பயன்படுத்தியதால் கூட இருக்கலாம்.

உங்களூக்குள்ளே திடமான கனவு ஒன்று இருந்தால், உங்களைச் சுற்றியுள்ள அனைத்தும் வரிசையில் விழுந்து, உங்கள் கனவு நனவாகும் என்பது மிகவும் உண்மை. இதற்கு சான்றாக என் வாழ்நாட்களிள் பல நிகழ்வுகளை எடுத்துக் கூற முடியும். என்ன ஒரு சின்ன சிக்கல் என்றால் திடமான கனவை எவ்வாறு ஏற்படுத்திக் கொள்வது என்பது தான். ஒருவருடைய அடிப்படை மனநிலையைப் பொறுத்தே அவருடைய கனவுகள் உருவாகும். தற்போது இருக்கும் நிலை மிகவும் சுகம் அளிப்பதாக மனநிலை இருக்கும் பட்சத்தில் "THE MAGIC OF THINKING BIG” போன்ற புத்தகம் படிப்பது எந்த வகையிலும் உங்கள் கனவை உருவாக்கிக் கொள்ள வழி வகுக்காது. ஒரு புத்தகத்தைப் படிப்பதற்கே அதற்கான மனோபக்குவம் தேவைப்படுகிறது.

நாம் அனைவரும் அவரவர் விருப்பத்திற்கேற்ற சூழ்நிலைகளில் பிறந்தவர்கள் அல்ல. அவரவருக்கு என்று குறிப்பிட்ட வசதிகளும், பொறுப்புகளும் உள்ளன. ஏதோ சில வழிகளில் தான் உங்கள் கனவானது உங்களுக்குள்ளே வந்தடையும். சாலையில் போகும் ஒரு காரைப் பார்க்கும் போது அதைத் தனக்குச் சொந்தமாக்கி அதில் பயணிப்பது போல் கனவு உருவாகலாம். ஆக்க பூர்வமான மனிதர்கள் கனவு காண்பது என்பதை இயற்கையில் அமையப் பெற்றவர்களாக இருக்கிறார்கள். கனவு காண்பவர்களே சிறந்த தலைவர்களக உருவாக முடியும்.

அரசாங்கத்திலும், கார்ப்பரெட் நிறுவனங்களிலும் பல தலைவர்கள் இருக்கிறார்கள். அவர்கள் எல்லாம் அவர்களுடைய மேலதிகாரிகளின் லட்தியத்திற்குத் தான் வேலை செய்கிறார்கள். இதற்கு மிகுந்த கீழ்படிதலும் வேலையில் முனைப்பாக இருந்தலும் மட்டுமே போதுமானது. அவர்கள் அடையும் வெற்றி அவர்களின் கனவால் கிடைக்கப் பெறவில்லை.மாறாக வேறு ஒருவரின் திடமான கனவால் கிடைத்த வெற்றியாகும். இவ்வாறு பெறும் வெற்றியினால் பல நேரங்களில் மன அழுத்தம் ஏற்பட வாய்பிருக்கிறது. இதன் விளைவு உடல் ஆரோக்கியக்குறையாக எதிரொலிக்கிறது. ஆனால் மற்றவரது இலட்சியத்தை தனக்கே உரிய கனவாக மாற்றிக் கொண்டால் அந்தக் கனவை நோக்கிச் செய்யும் வேலையில் சலிப்பு ஏற்படாது. அவ்வாறு செய்யும் வேலை நாம் மிகவும் ரசித்து அனுபவிக்கும் செயலாக இருக்கும். நாம் இலக்கு, இலட்சியம், கனவு ஆகியவற்றின் மிகச் சரியான அர்த்தததைப் புரிந்து கொள்ள வேண்டும்.

இலக்கு என்பது குறி பார்த்து அடிப்பது. துப்பாக்கியால் சுடும் ஒருவனுக்கு அவன் எதிரே குறிபார்த்து சுடுவதற்கு வைத்திருக்கும் பொருள் தான் அவன் இலக்கு ஆகிறது. இலட்சியம் என்பது குறி பார்த்து அடிக்கின்ற திறனை வளர்த்துக் கொள்வது. கனவு என்பது நாம் குறிப்பார்த்து அடிக்கும் திறன் கிடைக்கப்பெற்று அடுத்தடுத்து வெற்றி பெரறுவதாக உணர்வதாகும்.

பயிற்சி தொடங்குவதற்கு முன்பே நம்முள்ளே கனவு உருவாகியிருக்க வேண்டும். அப்போது தான் இலட்சியம் நிறைவேறி இலக்கை எட்ட முடியும். பெரும்பாலும் பொருள் மற்றும் திறன் சம்பந்தப்பட்ட கனவுகள் நிறைவேறிவிடும். இன்னொருவரைச் சம்பந்தப்படுத்திக் காணும் கனவானது சில நேரம் பாதிநிறைவேறும் அல்லது எதுவுமே நிறைவேறாமல் கூட போகலாம். இதனால் தான் தற்போது பல திருமணங்கள் முறிந்து போகின்றன. ஒரு ஆணின் கனவும் ஒரு பெண்ணின் கனவும் பல முறை ஒரே மாதிரியாக இருப்பதில்லை. ஆண் கிராமப்புற வாழ்வுக்கு ஆசைப்படலாம், ஆனால் பெண்ணோ மெட்ரோ பொலிட்டன் நகர வாழ்வை ஆசைப்படலாம். கணவன், மனைவி இருவருக்கும் ஒரே மாதிரியான அல்லது இணையான கனவு இருக்க வேண்டும். இது முடியாத பட்சத்தில் ஒருவரின் கனவை இன்னொருவர் ஆமோதி்க்க வேண்டும்.

பெற்றோர் மற்றும் ஆசிரியர்களின் கனவுகள் குழந்தைகள் மீது திணிக்கப் படுவதால் அவர்கள் மிகவும் இக்கட்டான சூழ்நிலைக்குத் தள்ளப் படுகிறார்கள். சில வெறித்தனமான பெற்றோரும் ஆசிரியர்களும் தங்களுடய நிராசைகளை, இலக்குகளை குழந்தைகள் மீது திணிக்கிறார்கள். குழந்தைகளின் மனம் எல்லாவற்றையும் ஏற்க முடியாத நிலையில் மனதளவில் பெரிதும் பாதிக்கப்பட்டு தோல்வியையே சந்திக்கும் நிலை ஏற்பட்டு விடுகிறது.

சமீபத்தில் நான் கம்ப்யூட்டரில் பார்த்த வீடியோ காட்சி ஞாபகத்திற்கு வருகிறது. கல்வி கிடைக்கப்பெறாத ஒரு சின்னப் பையன் ஒரு டீ கடையில் வேலை செய்கிறான். ஒரு நாள் பக்கத்தில் இருக்கும் அப்பார்ட்மென்டில் கொடுப்பதற்க்காக சில டம்ளர்களில் டீயை எடுத்துச் செல்கிறான். அபார்ட்மென்ட் கதவு மூடியிருக்கிறது. கதவை தள்ளினால் உட்புறமாக திறக்கும் என்று எண்ணிய அவன் கதவை தன் பலம் கொண்ட மட்டும் தள்ளுகிறான். கதவு திறக்கவில்லை. திடீரென்று பள்ளியிலிருந்து வீடு திரும்பிவரும் இன்னொரு சிறுவன் சற்றும் சிரமம் இல்லாமல் அந்தக் கதவை வெளிப்புறமாக இழுத்து திறக்கிறான். கதவைத் திறந்த அச்சிறுவன் படிக்காத மற்றச் சிறுவனுக்குக் கதவில் கட்டப்பட்டிருக்கும் "இழு" என்ற போர்டைச் சுட்டிக் காட்டுகிறான். டீக்கடை சிறுவனால் படிக்க முடியவில்லை. கல்வி கதவைத் திறக்கும் என்ற தலைப்போடு வீடீயோ காட்சி முடிகிறது.

கல்வி நம் கண்ணோட்டத்தை மேம் படுத்தும் என்ற தலைப்போடு வீடியோ முடிந்திருந்தால் நன்றாக இருக்கும் என்று நினைக்கிறேன். கல்வி கற்ற சிறுவன் அந்தக் கல்வியால் மேம்பட்ட கண்ணோட்டத்தினால் கதவை இலகுவாகத் திறக்க முடிந்தது. கல்வி எதையும் செய்யும் என்று மக்கள் நம்பவைக்கப்படுகிறார்கள். கல்வி என்பது ஒரு கருவியே. அடிப்படை மனப்போக்கு தான் ஒருவனின் கனவை உருவாக்கும். கல்வி கற்ற ஒருவருக்குக் கூட தான் ஆசைப்பட்ட பல விஷயங்கள் கிடைக்காமல் போகலாம். ஆனால் வலுவான கனவு படைத்த ஒருவருக்கு, தான் ஆசைப்பட்டவை எல்லாம் கிடைக்கிறது. ஏனென்றால் அவர் ஆசைப்பட்டதைப் பெறுவதற்குத் தேவையான மிதமான தகுந்த கல்வியறிவை அவரால் பெற்றுக்கொள்ள முடியும். சில நேரங்களில் அளவுக்கு அதிகமான கல்வி, வலுவான கனவு அல்லது இலட்சியம் இல்லாமல் இருக்கும் பட்சதத்தில் ஒருவருக்கான கனவை உருவாக்கிக் கொள்ளவும் தடை செய்யக்கூடும்.
இதற்கு எடுத்துக்காட்டாக ஒரு பழங்கால கதையை சொல்லலாம். ஒரு தந்தைக்கு இரண்டு மகன்கள். தந்தைக்கு ஒரு இனிமையான மாம்பழம் கிடைக்கிறது. அப்பழத்தை சாப்பிடுபவர்கள் சிறந்த ஞானம் பெறுவர்
என்பது அதன் தனிச்சிறப்பு. தந்தைக்கு அதை தன் இரு மகன்களுக்கும் கொடுக்க ஆசை. ஆனால் ஒரு நிபந்தனை என்ன வென்றால் பழத்தை பங்கிடக் கூடாது என்பது தான்.தன் மனைவியை சாட்சியாகக் கொண்டு தன் இரு மகன்களில் யார் முதலில் இந்த உலகைச் சுற்றி வருதிறார்களோ அவருக்குத் தான் அந்த ஞானப்பழம் என்ற போட்டியை அறிவிக்கிறார். துடிதுடிப்பான இளைய மகனிடம் ஒரு மயில் இருக்கிறது. அந்த மயில் மேல் அமர்ந்தால் எவ்வளவு தூரம் வேண்டுமானாலும் பறந்து செல்லலாம் என்ற நம்பிக்கையில் அதன் மேல் ஏறி உலகைச் சுற்றி வந்து பழத்தைப் பெறுதற்காகப் புறப்படுகிறான். மூத்த மகன் புத்திசாலி. தந்தை அறிவித்த போட்டியயை பகுத்தறிந்து தன்னுடைய பெற்றோர் தான் உலகம் என்பதை உணர்கிறான்.
தன் தம்பியோ உலகம் என்பதை இந்த பூமி தான் என தவறாகப் புரிந்து கொண்டு உலகைச் சுற்றி வரப் போயிருக்கிறான் என்பதை புரிந்து கொள்கிறான். தன்னுடைய பெற்றோரை நிமிடத்தில் சுற்றி வந்து ஞானப்பழத்தைப் பெறுகிறான் மூத்த மகன் என்பது தான் கதை. இங்கே மயிலை கல்விக்கு ஈடாகக் கூறலாம். உலகம் என்ற வார்த்தையின் சரியான அர்த்தத்தைப் புரிந்து கொள்ள கல்வியைக் காட்டிலும் புத்திக்கூர்மை தான் தேவைப்படுகிறது. திடமான கனவு தான் இந்த புத்திக் கூர்மையை நம்முள் தூண்டி விட முடியும். கனவு தான் விழிப்புடனும், புத்தியுடனும் எல்லாச் சூழ்நிலைகளிலும் மிகச் சரியாக செயல்படவும் வழிவகுக்கும்.

எனவே நாம் ஏதாவது ஒன்றை அடைய ஆசைப் பட்டால், நாம் அதைப் பற்றிய கனவை உருவாக்கி கொண்டு அடைய நினைத்ததை அடைந்து விட்டதாக எண்ணி அந்த மாதிரிச் சூழ்நிலையில் வாழ்கின்ற படி கனவு காண வேண்டும். இந்த வித்தை எனக்குப் பலித்திருக்கிறது. இந்த வித்தை என்னைப் போல் கனவு காண்பவரையும் இனிமையான பயணத்தில் இட்டுச் செல்லும்.
நீங்கள் உங்கள் கனவை நிர்ணயிக்கவில்லையென்றால், மற்றவர்களால் அவர்கள் வேலைகளுக்காகப் பயன்படுத்தப்படுவீர்கள். எனவே உங்கள் கனவை நிர்ணயிங்கள். மற்றவர்களை தவறாகப் பயன் படுத்தாதீர்கள். உங்கள் கனவுகளுக்காக அவர்களுடைய சேவைகளை பெற்றுக் கொண்டீர்களானால், அவர்கள் கேட்டதைப் பிரதிபலனாக கொடுத்துவிடுங்கள்.
    வழி காட்டுவதாக கனவு காணுங்கள்.
    கொடுப்பதாக கனவு காணுங்கள்.
    உதவுவதாக கனவு காணுங்கள்.
    உங்கள் பின்னால் மக்கள் வருவார்கள்.

பிறருக்கு கொடுக்கப்போதுமான வளம் கிடைக்கப்பெறுவீர்கள்.
பிறருக்கு உதவுவதற்கு நிறைந்த சக்தி அருளப்பெற்றவராய் திகழ்வீர்கள்.****************************

2 comments:

வை.கோபாலகிருஷ்ணன் said...

//வழி காட்டுவதாக கனவு காணுங்கள்.
கொடுப்பதாக கனவு காணுங்கள்.
உதவுவதாக கனவு காணுங்கள்.
உங்கள் பின்னால் மக்கள் வருவார்கள்.//

சிறந்த கட்டுரை. நல்ல அறிவுரைகள். பாராட்டுக்கள்.

Ramani said...

வெகு காலமாக கனவு என்கிற சொல்
காதலுடன் சம்பந்தப்பட்ட சொல்லாகவே
இருந்து வந்திருக்கிறது
அதனை வெட்டி எடுத்து ஒரு நேர்மறையான சொல்லாக்கி
இளைஞர்களிடம் சேர்த்த பெருமை மரியாதைக்குரிய
முன்னாள் ஜனாதிபதி அவர்களைச் சாரும்
கனவு காணுங்கள் என்கிற அவரது
தாரக மந்திரத்தை மிகச் சரியாக புரிந்துகொண்டு
மிக அழகாக விளக்கிப்போகும் உங்கள் பதிவு
மிக மிக அருமை
பாயாசத்தில் முந்திரி போல கட்டுரைக்குள் மிகச் சரியாக
கவனத்தில் கொள்ளவேண்டிய பல சொற்றொடர்கள் உள்ளன
அவைகளை மட்டும் மீண்டும் கவனத்தில் கொள்ளும்படியாக
கனத்த எழுத்திலோ அல்லது அடிக்கோடிடவோ செய்யலாம்
நல்ல பதிவு தொடர வாழ்த்துக்கள்

Post a Comment