Sunday, May 29, 2011

சாமியாராகும் ஆசை

கல்லூரியில் படிக்கும் காலத்திலிருந்தே எனக்கு மனவளம், ஆன்மீகம், யோகக்கலை, வாழ்வியல் முதலிய அசாதாரண விஷயங்களில் ஈடுபாடு உண்டு. இந்தவகைப் புத்தகங்களை நான் படிப்பது என் நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் பிடித்ததில்லை.ஆனால் இந்த விஷயங்களைப்பற்றி யாரிடமும் நான் பேசுவதில்லை என்பதால் இந்தப்பழக்கத்தை அவர்கள் பெரிதுபடுத்தியதுமில்லை.

கல்லூரிப்படிப்பு முடிந்ததும் வடஇந்தியாவில் வேலை அமைந்தது. தோதாகத் தோழர் ஒருவரும் அமைந்ததால் அந்த ஊரிலொரு வீடு பார்த்து இருவரும் குடிபோய் வேலைக்குச் சென்று வந்து கொண்டிருந்தோம்.

தோழரும் என்னைப் போலவே விருப்பம் உடையவர். சரியான ஜாடிக்கு ஏற்ற மூடி. பெரிய ஊராக இருந்ததால் ஆன்மீகச் சொற்பொழிவுகளுக்குக் குறைவில்லை. முடிந்த வரை மாலை நேரங்களில் திறந்தவெளி அரங்குகளில் நடக்கும் புகழ்பெற்ற அன்மீகப் பேச்சாளர்களின் உரைகளைக் கேட்பதும் அதில் தெரிந்து கொண்ட விஷயங்களைப் பின் நாட்களில் மொட்டை மாடியில்நின்று கொண்டு தர்க்கம் செய்வதுமாக நாட்கள் நகர்ந்தன.

வாழ்வியல் அடிப்படையில் மக்களுக்கு உதவுவதற்கு சன்யாசியாக இருந்தால்தான் முடியும் என்ற கருத்து மனதிற்குள் உருவாக எத்தனித்துக்கொண்டிருந்தது. இருந்தாலும் வாழ்வியல் புரிய வேண்டும் என்றால் திருமண வாழ்வின் அனுபவமும், குழந்தைகளைப் பெற்று வளர்த்த அனுபவம் மிக முக்கியம் என்ற கருத்து என்னுள் உறுதியாக இருந்ததால் சன்யாசி ஆகும் ஆசையை 60 வயதுக்குப் பிறகு ஒத்திபோட்டேன்.

பல சாமியார்கள் இந்த அனுபவங்கள் இல்லாமலேயே இந்த விஷயங்களில் அறிவுரை வழங்குவதும், அவர்கள் பின்னால் மக்கள் கூட்டம் அலைமோதுவதும் வினோதமான யதார்த்த உண்மை. பத்துப் பதினைந்து கிரிக்கெட் மேட்ச் பார்த்த கிரிக்கெட்டின் தீவிர ரசிகன் ஒருவன் சதம் அடிப்பது எப்படி என்று பாடம் நடத்தினால் மக்கள் கேட்பார்களா? ஆனால் அதேநிலையில் இருக்கும் சாமியார்கள் மட்டும் மக்களை எப்படி தம்பின்னால் வரும்படி செய்துவிடுகிறார்கள்.

எது எப்படியோ,  ஊருக்குவந்து ஒரு கல்யாணமும் செய்து கொண்டாயிற்று. குழந்தை ஒன்றும் பிறந்து விட்டது. ஊர் ஊராகச் சுற்றும் வேலை ஒன்றும் கிடத்தது.

விற்பனை அதிகாரி என்ற தகுதியும் எல்லா இடங்களுக்கும் காரிலே பயணம் செய்யும் வசதியும் இருந்தது. ஒரு முறை வியாபார நிமிர்த்தமாக கேரளா சென்று கொண்டிருந்தேன்.என்னுடன் கம்பெனி மேலாளர் ஆங்கிலோ- இந்தியர் ஒருவர் காரில்பயணம் செய்து கொண்டிருந்தார். நாங்கள் இருவரும் பின் இருக்கையில் அமர்ந்திருந்தோம். வெளியில் மழைத்தூரல் போட்டுக்கொண்டிருந்தது.ஓரு நால்வழி சாலை சந்திப்பில் நாங்கள் போக வேண்டிய வழியை உறுதிசெய்யும் பொருட்டு ஓட்டுனர் காரை நிறுத்தினார். பின் சீட்டின் இடது பக்கம் நான் அமர்ந்திருந்தபடியால் கண்ணாடியை இறக்கிவிட்டு வெளியில் நடந்துபோய்க்கொண்டிருக்கும் ஒருவரை நிற்குமாரு செய்கைகாட்டினேன். அவர் உடனே தூரலுக்கு விரித்து வைத்திருந்த குடையை மடக்கித்தன் கக்கத்தில் வைத்துக் கொண்டு இருகரம் கூப்பி மிகபணிவுடன் என்னை வணங்கிவிட்டு அவர் போகின்ற போக்கில் தன் நடையைத் தொடர்ந்தார்.

அந்த ஒருகனம் ஒன்றும் புரியவில்லை எனக்கு. மேலாளரோ விழுந்து விழுந்து சிரித்துக்கொண்டிருந்தார். அப்போதுதான் கவனித்தேன், காவி நிறத்தில் பருத்தியிலான முழுக்கைச் சட்டை அணிந்திருந்தேன். என்னுடை செய்கையை, அவரை நான் அசீர்வதிப்பதாக அவர் புரிந்து கொண்டுவிட்டார் போலும். எனக்குள் இருக்கும் சாமியார் ஆசை லேசாக எட்டிப்பார்த்துவிட்டுப்போனது. அந்த உடையில் ஒரு சாமியார் போன்று தெரிகிறேனா என்று மேலாளரிடம் கேட்டேன். அமாம், அமாம் என்று சொல்லிவிட்டு சிரிப்பைத் தொடர்ந்தார். பிற்காலத்தில் சாமியாராகி ஆசிரமம் கட்டி பெரு வாழ்வு வாழவேண்டும் என்று கூறி அந்த உரையாடலை நகைச்சுவையாகவே முடித்துவிட்டேன்.

சாயங்காலம் ஹோட்டலில் ரூம் போட்டபின் சாமியாராவதற்கு என்ன என்ன தகுதிகள் வேண்டும் என்று யோசித்தேன்.

முதலாவதாக மனம், அமைதி, ஆத்மா போன்றவிஷயங்களைப் படித்துத் தெரிந்து கொண்டு தானே உணர்ந்ததாக சொல்லக் கற்றுக் கொள்ள வேண்டும்.

மதங்கள் சொல்லாத விஷயங்களை, சொல்வதாகச் சொல்ல வேண்டும். அவ்வப்பொழுது மதங்கள் உங்களுக்கு அமைதிகிடைக்க உதவாது. உண்மையான ஞானம் பெற குரு ஒருவரால்தான் வழிகாட்டமுடியும் என்று சொல்லிக்கொண்டிருக்க வேண்டும். எனக்கு ஒரு பனிமலையில் அமையதியான சூழலில் ஞானம் கிடைத்தது என்று கூறி மக்களை நம்ப வைக்க வேண்டும்.

யோகத்தின் எட்டு நிலைகளைப் பற்றியும் ஒரளவு தெரிந்து வைத்திருக்க வேண்டும். குறிப்பாக பத்மாசனத்தில் முகம் சுழிக்காமல் அரைமணி நேரமாவது அமர கற்றுக்கொள்ள வேண்டும். ப்ரணயாமம் செய்யக் கற்றுக் கொண்டு எந்தப் பயிற்சியில் என்ன அனுபவம் என்பதை உணர்ந்து கொண்டால், ஐந்து நிமிடத்தில் மனதை அமைதியாக்கும் சூட்சமம் தெரிந்துவிடும். நீட்டி ஓம்காரம் சொல்லக் கற்றுக் கொள்ள வேண்டும்.

மிதமான ப்ரணயாமப் பயிற்சி, ஓம்கார ஜெபம் சொல்லிகொடுக்கக் கற்றுக்கொள்ள வேண்டும் .

யதார்த்தமான விஷயங்களைத் தத்துவம் போல் கம்பீரமாகச் சொல்ல கற்றுக் கொள்ள வேண்டும்.

அடிக்கடி காரணமில்லாமல் கெக்கே - பிக்கே என்று சிரிக்கக் கற்றுக் கொள்ள வேண்டும். கூடவே தான் நித்ய ஆனந்த நிலையில் இருப்பதாகக் கூறிக்கொள்ள வேண்டும்.

' பழைய ஜன்னலை மூடு! புதிய ஜன்னலைத் திற !!' என்பதைப் போன்ற ஒரு தலைப்பைப்  பிரசங்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கான நிரந்தர தலைப்பாய் அறிவித்துக்கொள்ள வேண்டும்.

தியானம், மனக்கட்டுப்பாடு என்று பேசக்கற்றுக் கொள்ள வேண்டும்.

பஜனை செய்வது,  கூட்டுவழிபாடு போன்றவற்றையும் கற்றுக்கொள்ளவேண்டும்

இந்த அத்தனை விஷயங்களும் ஒன்றும் பெரிதாகத் தோன்றவில்லை. இவற்றையெல்லாம் கற்றுக்கொண்டு மக்களைக் கவர்ந்து அவர்களுக்கு நிம்மதியளிக்கிறேன் என்று சொல்லி அவர்களை ஆட்டு மந்தைகளைப் போல் என் பின்னால் தொடரவைக்க என் மனசாட்சி இடம் கொடுக்கவில்லை.

ஆன்மீகமானலும், லௌகீகமானாலும் அத்தனையும் மனத்திற்குட்பட்ட மாயை என்ற தெளிவு பிறந்தது. ஆவரவர் மாய உலகை அவரவர் புரிந்துகொள்ள முடிந்தமட்டும் உதவவேண்டும் என்ற முடிவு அப்பொழுதே பிறந்தது.

சாமியார் ஆகவேண்டும், ஆசிரமம் கட்டி செட்டில் ஆக வேண்டும் என்ற ஆசை மாயமாய் மறைந்தே போயிற்று.

1 comment:

இராஜராஜேஸ்வரி said...

ஆன்மீகமானலும், லௌகீகமானாலும் அத்தனையும் மனத்திற்குட்பட்ட மாயை என்ற தெளிவு பிறந்தது.

பாராட்டுக்கள்..

Post a Comment