Saturday, April 30, 2011

திருமணமும் காதலும்: காதலும் திருமணமும்

உரை நடை, இலக்கியம், நாடகம் மற்றும் சினிமா, புதுக் கவிதைகள் எல்லா படைப்புகளும் 1950க்கு அப்பால் பிரபலமாகி கிட்டத்தட்ட கடந்த ஐந்து தலைமுறைகளுக்கும் காதலே மிகவும் புனிதமானது என்ற முடிவை ஆழமாக புகுத்தியிருக்கின்றனர்.  காதல் தெய்வீகமானது என்றும், புனிதமானது என்றும் புகழ்பாடி பல லட்சங்களையும் கோடிகளையும் குவித்து இள நெஞ்சங்களை பிடித்துப் போட்டு வைத்திருக்கிறது இன்றைய கலையுலகம். காதல் இல்லையேல் பலருக்கு வருமானம் இல்லை. எனவே காதல், லக்ஷ்மி கடாக்க்ஷமாக, தெய்வீகமானது. காதலிப்பவர்களுக்கா என்று மட்டும் கேட்கக் கூடாது.

காதல், திருமணத்தில் முடியும் போது பல நேரங்களில் தோல்வியாகிவிடுகிறது. தெய்வீகமும், புனிதமும் அப்பொழுது கூட தோல்வியுற்ற காதல் உண்மைக்காதல் அல்ல என்று உயிருக்கு உயிராய் காதலித்தவர்களையும் கட்டி விட்டு விடுகின்றன.
காதலை விட முக்கியமான விஷயம், திருமணத்தை முடிவு  செய்ய தேவையா ? அப்படியென்றால் அவை என்னவாக இருக்கும்?

காதல் என்பது இருமங்கள் மட்டுமே சம்மந்தப் பட்டது. திருமணம் என்பது இரண்டு குடும்பங்கள் மற்றும் அவர்களைச் சார்ந்த சமூகம், அடுத்து பிறக்கும் தலைமுறைகள் என்று அநேக விஷயங்கள் சம்மந்தப்பட்டது.
கண்டதும் காதல், மனதில் லட்சம் சிறகுகள் முளைப்பது, ஒரு கோடி நிலாவின் வெளிச்சம் காண்பது எல்லாமே காதலின் உணர்வுகளின் வெறித்தனமான ஒரு வெளிப்பாடு. காதல் என்ற காம நெருப்பு   தாம்பத்தியத்தால் மட்டுமே தணிக்கப்படும். அதுவரை கொளுந்துவிட்டு எரிந்து காதலர்களைப் பைத்தியங்களாக்கி முடக்கிப் போடும் சக்தி வாய்ந்தது. திருமணத்தில் இந்த அபாயம் வெற்றி கொள்ளப் படுகிறது.

காதலோ, திருமணமோ வெற்றிகரமான வாழ்க்கைக்கு வழி வகுக்க வேண்டுமென்றால் கவனிக்க வேண்டிய விஷயங்கள் உங்கள் சிந்தனைக்கு:

1முதலாவதாக மணமகன், மணமகள் இருவருக்கும் ஒருவருக்கு ஒருவரை மிகவும் பிடித்திருக்க வேண்டும்.

2.வாழ்க்கைத் துணையாக நாம் தேர்ந்தெடுக்கும் நபர், குடும்பம் என்ற அமைப்பைப் பற்றிய தெளிவான அறிவு, செல்வத்தைப் பற்றிய விழிப்புணர்வு, மகிழ்வாய் இருக்கும் தன்மை, சுற்றத்தாரை மதிக்கும் குணம் இவை நான்கும் அமையப் பெற்றவராக இருக்க வேண்டும்.

குடும்ப அமைப்பைப் புரிந்து கொண்டு உற்றாரை மதிக்கத் தெரியாதவராக இருப்பவர்களால் குழப்பங்கள் ஏற்படும். செல்வத்தைப் பற்றிய விழிப்புணர்வு இல்லையென்றால் ஆடம்பரங்களில், பகட்டுகளில் மதி மயக்கும் விஷயங்களில் செல்வத்தை விரயம் ஆக்குபவராக இருப்பர். எந்தசிடுமூஞ்சியும் வாழ்க்கைக்குக் சுகம் தரமாட்டார்கள். உறவினர்களையும், நண்பர்களையும் அன்போடு அணுகும் முறையில்லையென்றால் உள்ள சொந்தங்களும், நட்புகளும் விலகிப் போகும் அபாயம் உண்டு.

 3 .வரனின் குலமும், குடும்ப சூழலும் இனிய திருமண வாழ்விற்கு ஒரு முக்கியமான பங்கு வகிக்கும். குழந்தைப் பருவத்தில் முதல் ஐந்து வயது வரை ஏற்பட்ட அனுபவங்கள், கற்றுக் கொண்ட பணிவு, மரியாதை எல்லாமே குலத்தையும், நற்குடிப்  பிறப்பையும் சார்ந்திருக்கும் என்பது உளவியல் ரீதியாக நிரூபிக்கப்பட்ட உண்மை.  எனவே இதையும் கருத்தில் கொள்ள வேண்டும்

 4.வரன் நன்றாக கல்வி கற்றவராக இருக்கலாம். ஆனால் குடும்பத்தில் தலைமைப் பொறுப்பேற்க அநேக விஷயங்களைக் கற்றுக் கொள்ளத் தயாராக இருக்க வேண்டும்.

 5. ஒவ்வொரு வரனின் குணாதிசயங்களிளலும் நல்ல விஷயங்களும் சில நல்லவை அல்லாத விஷயங்களும் இருக்கலாம். நல்லவை அல்லாதவை குடும்ப வாழ்க்கையை பாதிக்காதவையாக இருத்தல் வேண்டும்.

6.இவற்றையெல்லாம் மனதில் கொண்டு தேர்ந்தெடுக்கும் நபர் பழகிப் பார்க்கும் பொழுது நமக்கு ஏற்றவர் அல்லாதவராக இருந்தால் காதலையோ, திருமண ஏற்பாட்டையோ சட்டென்று முடிவுக்கு கொண்டு வந்து விட வேண்டியதுதான். மணமகன், மணமகள் இருவரும் ஒருவருக்கொருவர் அறிமுகமாகி சிறிது காலம் கழித்து இந்த விஷயங்களை உன்னிப்பாக ஆராய்ந்த பிறகே திருமணம் செய்து கொள்ள வேண்டும். அதுவரை பழகும் பழக்கம் வரம்புகள் மீறாதபடிக்கு குறிப்பாக மகளிர் தங்களைக் காத்துக் கொள்ள வேண்டும்.

7.நற்குணங்கள் எதுவும் இல்லாமல், வறுமையிலே  வாடுபவர்கள் திருமணத்திற்கு ஏற்றவர் அல்லர். வறுமையை வென்ற பிறகு தான் திருமணத்திற்குத் ஒருவர் தயாராகிறார். கதைகளில் வருவது போன்று கல்யாணத்திற்குப் பிறகு சரியாகிவிடும் என்பது எதிர்நீச்சல் போடுவதைப் போன்றது.

8.மிகுந்த செல்வம் இல்லாவிட்டாலும், நல்ல குடிப்பிறப்பு, சிறந்த நண்பர்கள், நற்குணங்கள், கல்வியறிவு, பணிவு, மனிதநேயம் இவையெல்லாம் உள்ளவராக இருப்பவர் திருமணம் செய்துகொள்ளத் தகுதியானவரே. செல்வத்தை மட்டும் முன்னிறுத்தி இத்தகைய நல்ல வரனை ஒதுக்க வேண்டியதில்லை.

 9. செல்வந்தராக இருப்பினும், மனித நேயம் தெரியாதவர்களை, பிறரை மதிக்காதவர்களை, கர்வமாகத் திரிபவர்களை ஏற்க வேண்டியது இல்லை. அவர்களுக்கு ஏமாளிகள் தான் கிடைப்பார்கள்.

 10. இதையெல்லாம் கவனத்தில் கொள்ளாமல், கண்டதும் காதல் என்ற அடிப்படையில் வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுத்தால், உறுதியாக திருமண வாழ்வு தோல்வியில்  தான் முடியும்.

11. அவசரத் திருமணங்கள், பொருந்தாத திருமணங்கள் தங்களுக்கு மட்டுமல்லாமல் தங்கள் சொந்தங்களையும் சந்ததியினரையும் வெகுவாக பாதிக்கும்.

இத்தனை விஷயங்களையும் வைத்து திருமணங்கள் நிச்சயிக்கப்பட்டபின் மணமகனும், மணமகளும் நூறு வருடங்கள் இணைந்தே வாழ உறுதி கூறி நிறைவேறுவது திருமணம்.

“மாங்கல்யம் தந்துநானேன மம ஜீவன ஹேதுனா


கண்டே பத்னாமி சுபகே த்வம் ஜீவ ஷரதாம் சதம்

(“இந்த மாங்கல்யமே என்னுடைய வாழ்க்கை. இதை உன் கழுத்தில் நான் அணிவிக்கிறேன்.என்னுடன் நூறு வருடம் இணைந்து வாழ்வாயக.”)

என்று மணமகன் கூறி (புரோகிதர் இந்த வரிகளைச் சொல்வது எனக்கு ஏற்புடையதாக இல்லை) உறுதி கூறுவது ஹிந்து வழக்கம். இதையொட்டியே மற்ற மதத்தினரும் உறுதி கூறி திருமண பந்தத்தில் இணைகிறார்கள்.

ஒரு சில விஷயங்கள் மறைக்கப்பட்டு திருமணம் நடந்தேறியிருந்தாலும், அதையே சுட்டிக் காட்டி ஒருவரை ஒருவர் குற்றம் பாராட்டுவது கூடாது. நல்ல விஷயங்களை ஊக்குவித்து மென்மேலும் வாழ்க்கையில் உயரும் வழியில் மனதைத் திருப்பிக்கொள்ள வேண்டும்.

இவ்வாறாகத் தேர்ந்து இணைத்துக் கொண்ட வாழ்க்கைத் துணையை சந்தேகிப்பது தீராத துயரத்தைத் தரும். குடும்ப பொறுப்புகளில் தங்களுடைய விருப்பம், திறமை இரண்டையும் கருத்தில் கொண்டு,  குடும்ப பொறுப்புக்களை பிரித்துக்கொண்டு, சுதந்திரமாக பொறுப்புக்களை கையாண்டால் மணவாழ்வு சுவையாகும்.
                         ********************************




2 comments:

வை.கோபாலகிருஷ்ணன் said...

//கண்டதும் காதல், மனதில் லட்சம் சிறகுகள் முளைப்பது, ஒரு கோடி நிலாவின் வெளிச்சம் காண்பது எல்லாமே காதலின் உணர்வுகளின் வெறித்தனமான ஒரு வெளிப்பாடு.

காதல் என்ற காம நெருப்பு தாம்பத்தியத்தால் மட்டுமே தணிக்கப்படும். அதுவரை கொளுந்துவிட்டு எரிந்து காதலர்களைப் பைத்தியங்களாக்கி முடக்கிப் போடும் சக்தி வாய்ந்தது. திருமணத்தில் இந்த அபாயம் வெற்றி கொள்ளப் படுகிறது.//

அருமையான வாழ்வியல் சம்பந்தமான விஷயங்களை எளிமையாக எடுத்துக் கூறியுள்ளீர்கள். பாராட்டுக்கள்.

Yaathoramani.blogspot.com said...

மீடியாக்களின் போக்கில் தடம் மாறும் திசை மாறும்
இன்றைய நிலையை சரிசெய்ய சீர்செய்ய
இதுபோன்ற தெளிவான சமூகப் பொறுப்புள்ள பதிவுகள்
அதிகம் வேண்டும்
சொல்லவேண்டியதை சொல்லி இருப்பதற்கும்
சொல்லவேண்டிய முறையில்
மிகச் சரியாகசொல்லி இருப்பதற்கும்
எனது மனங்கனிந்த பாராட்டுக்கள்
நல்ல தரமான பதிவு
தொடர்ந்து வருகிறேன்
தொடர வாழ்த்துக்கள்

Post a Comment