Saturday, April 9, 2011

செயல்பாடு

சமீபத்தில் இ-மெயிலில் ஒரு கதை வலம் வந்தது. யாரோ ஒருவர் படிப்பவர்களின் மனதில் ஊக்கத்தை உருவாக்கக் கூடிய செய்தி ஒன்றைய் தர நினைத்திருக்கிறார். அந்தக் கதையில் இரண்டு கதாபாத்திரங்கள். ஒருவர் கடவுள் மற்றொருவர் மனிதன். மனிதன் கடவுளைச் சந்திக்கிறான். கடவுள் சிலருக்குத்தான், நினைத்தவற்றை அடையும் திறனை அருளியிருக்கிறார் என்றும் கடவுள் இந்த விஷயத்தில் பாரபட்சமாக இருக்கிறார் என்ற தன் மனக்குறையை கடவுளிடம் மனிதன் முறையிடுகிறான். அதற்கு கடவுள் மனிதனுக்கு ஆறுதல் கூறும் முகமாக எல்லோருமே எதையும் செய்ய முடியும் என்ற மனோசக்தியுடன் தான் படைக்கப் பட்டிருக்கிறார்கள். ஆனால் சமூகம் தான் எதையும் எளிதில் சாதிக்க முடியாது என்ற திடமான நம்பிக்கையை அவர்களுக்குள் செலுத்திவிடுகிறது என்று சொல்வதாகக் கதையிருக்கிறது.

எல்லோர் மனதிலும் ஏதாவது ஒன்றைச் செயல்படுத்த வேண்டும் என்ற மனோபாவம் இருக்கிறது. ஆனால் பிறர் அவர்களுடைய மனத்தில் தேவையற்ற சந்தேகங்களைக் கிளப்புகிறார்கள். பொதுவாக ஒருவன் தன்னுடைய திடமான மனவலிமையினால் புதிதாக ஏதாவது செய்ய முற்படும் போது, உடன் இருப்பவர்கள் வெற்றி என்பது எளிதாகக் கிடைக்காது என்று சொல்லி மனம் தளரச் செய்துவிடுகிறார்கள்.

சமூகதில் கடின உழைப்புப் பெரிதாகப் பேசப்படுகிறது. .வெற்றி பெற்ற மனிதர்கள் தங்கள் வெற்றிக்குக் காரணம் கடின உழைப்புதான் என்று கூறுமாறு சொல்லிக் கொடுக்கப்படுகிறார்கள்.. எனக்குத் தனிப்பட்ட முறையில் பல வெற்றிகள் கிடைத்திருக்கின்றன. என்னைக் கேட்டால் இந்த வெற்றிகளுக்கு நான் மேற் கொண்ட செயல்களில் கொண்ட ஈடுபாடு தான் காரணமேயன்றி கடின உழைப்பல்ல என்று தான் கூறுவேன். நான் படிக்கும் காலத்தில் தேர்வில் முழுமதிப்பெண்கள் பெற்றதை என்னும் போது நான் மதிப்பெண்ணைக் குறிவைத்துப் படிக்காமல் எல்லா கேள்விகளுக்கும் சரியான பதில் எழுத வேண்டும் என்ற நோக்கம் தான் எனக்குள் இருந்திருக்கிறது என்பதை நினைவு கொள்கிறேன்.

எந்த ஒரு செயலையும் திருத்தமாகச் செய்து முடிக்க வேண்டும் என்ற தீர்க்கமான நோக்கமும் படிப்படியாக அந்தச் செயலில் ஆனந்தமாகத் தன்னை ஈடுபடுத்திக் கொள்வதும் தான் வெற்றிகள் பெற வைக்கின்றன. ஈடுபாட்டுடன் செய்யும் எந்த ஒரு செயலிலும் கிடைக்கின்ற பலன் எதுவாகவும் இருக்கலாம். விரும்பிய பலன் கிடைத்தால் அது ஒரு இலக்கு போன்றதாகும். திரும்பத் திரும்ப ஒரு செயலைச் செய்வது கடின உழைப்பு அல்ல. அது ஒரு ஆனந்தம். ஒரு செயலில் முழுமையாக ஈடுபட்டிருக்கும் போது நாம் சில உடல் அசெளகரியத்தையும் உணர்வதில்லை. பசி, தூக்கம் உடல் அசதி போன்றவற்றை புறக்கணிக்கிறோம்..அது சமயம் நாம் மேற்கொண்டுள்ள செயலைப் பற்றி அறிந்து கொள்ள வேண்டும் அல்லது வெற்றி பெற வேண்டும் என்ற மனப்பாங்கு தான் மேலோங்கியிருக்கும்.

எதையும் பயிலும் போது முதன் முதலில் நம் செயல் கசமுசவென்றுதான் இருக்கும். திரும்ப திரும்ப ஒரு செயலைச் செய்வதால் தான் ஒரு திறனைக் கற்றுக் கொள்ள முடிகிறது. செயல்களில் தேர்ச்சி நிலை அதனை அனிச்சையாக செய்வதில் இருக்கிறது.. ஒரு செயலை திரும்பத் திரும்பச் செய்யும் போது நமக்கு அதில் புதிய முறைகளை முயன்று பார்க்கவும் சில நேரங்களில் முழுவதுமாக மாற்றி வடிவமைக்கவும் முடிகிறது.

சமூகம் எப்போதும் செயல்களின் பலனைத் தான் பார்க்கிறது. நீங்கள் அடையும் வெற்றியை மற்றவர்களுடன் ஒப்பிட்டுப் பார்க்கும். உங்கள் வெற்றி மற்றவரின் வெற்றிக்கு ஈடாக இல்லை என்றால் உங்களை அங்கீகரிப்பதே இல்லை. சமூகம் போட்டியை விரும்புகிறது. போட்டி மிகச் சிறந்த சாதனைகளைக் கொடுப்பதில்லை. ஷேக்ஸ்பியர் யாருடனும் போட்டியிட்டதாகத் தெரியவில்லை. பில்கேட்ஸ் ஆனாலும் சரி. மற்ற எந்த முன்னனி தொழிலதிபரானாலும் சரி அவர்களுக்கும் இது பொருந்தும்.

மக்களைப் போட்டியில் ஈடுபடுத்த பெருமளவில் பணம் செலவழிக்கப்படுகிறது. அகங்கார நெருப்பில் தாரளமாக எண்ணை ஊற்றப்படுகிறது. ஆனால் சமூகம் மக்கள் தோற்பதையே விரும்புகிறது. அப்போது தான் மற்றவர்கள் ஈடுபட்டு அறிவுரைகள் சொல்ல முடியும். சூதாட்டங்களில் தான் எளிதில் பணம் பார்க்க முடிகிறது. எனவே, போட்டி என்று வந்து விட்டால் நல்ல செயல்பட்டைக் காட்டிலும் ஜோடனைகளை மட்டுமே எதிர்பார்க்கமுடியும்.

டூத்பேஸ்ட் கம்பெனி ஒன்றினைப் பற்றிய கதை ஒன்றுக்கு உண்டு. டூத்பேஸ்ட் டியூயின் வாயைப் பெரியதாக்கி விற்பனையை அதிகமாக்கிய யுக்தி பெரிதாகப் பேசப்பட்டது. இது அதிகப்படியாகப் பாராட்டும் பெற்ற வெறும் ஜோடனை வெற்றி.

மிகச்சிறந்தப் பலன் அடைய வேண்டுமானால் ஒரு செயலைச் செய்யும் பொழுது அதன் முடிவு பற்றிய பதட்டமில்லாத ஈடுபாடு வேண்டும். செயல்பாட்டிலும் அதன் தேர்ச்சியிலும் உள்ள ஆனந்தம் பலனால் கிடைக்கும் ஆனந்தத்தைக் காட்டிலும் பன்மடங்கு உயர்ந்தது.

செயல்படும்பொழுது ஒருவருக்கு ஆர்வம், ஈடுபாடு மற்றும் ஒவ்வொறு நிலையையும் ஆனந்தமாய் அனுபவிக்கும் மனம் வேண்டும். பல நேரங்களில் நமக்கு விருப்பமில்லாத வேலைகளை செய்ய வேண்டிய கடமை இருக்கும். அந்த மாதிரி நேரங்களில் ஒருவனால் வேலையை மனதார ஏற்றுக் கொண்டு செயலை அனுபவிக்கக் கற்றுக்கொள்ள முடியுமானால் மனம், உள் மனப் பிரளயத்திலிருந்து தப்பித்து விடும். அந்த மாதிரியான செயல்களின் பலன்களும் உயர்ந்தவையாக இருக்கும்.

அந்தந்த கனத்தில் வாழ்வது, செயலில் முழுஈடுபாடு, செயல்பாட்டையே அனுபவிக்கும் மனப்பாங்கு, இநத மூன்றுமே தான் அதிகளவு நிம்மதியைக் கொடுக்கின்ற வரம்.

முயற்சி செய்யுங்கள். என்னுடைய இந்தக் கருத்து உங்களுடைய கருத்தாகி
நிற்கும். ஏற்கெனவே நீங்கள் அறிந்தவற்றை வைத்துக் கொண்டு விமர்சனம் செய்யாதீர்கள். வரத்தை அனுபவியுங்கள்.

உங்களுக்குள் உயர்ந்த படைப்பாளி ஒருவர் இருப்பதை உணர்வீர்கள். உங்களை நீங்களே நேசிக்க ஆரம்பித்து விடுவீர்கள்.

No comments:

Post a Comment