Wednesday, May 18, 2011

அடிமையாக்கும் ஆன்மீகப் பயணங்கள்




ஒவ்வொரு வருடம் டிசம்பர் மாதம் தொடங்கியவுடன் சாதி மத பேதமின்றி எல்லா மக்களும் ஏதாவது ஆன்மீக செயல்களில் ஈடுபட்டுவிடுகிறார்கள். இதற்குக் காரணம் கிறிஸ்துவர்கள் டிசம்பர் ஆரம்பித்தவுடனே கிறிஸ்துமஸ் பண்டிகையை ஆரம்பித்து விடுவதால் கூட இருககலாம். அவர்கள் கிறிஸ்துமஸ் வரையில் அவர்கள் சார்ந்திருக்கும் சர்ச்சின் உறுப்பினர் ஒவ்வொருவரின் வீட்டிற்கும் சாண்டாகிளாஸ் மற்றும் ஒரு குழுவினருடன் சென்று மதப் பாடல்களைப் பாடி மகிழ்வர்.

டிசம்பர் வரும் போது இஸ்லாமியர்கள் தங்களுடைய ரம்ஜான் நோன்பை முடித்து அவர்களுடைய ஆன்மீகத்தை வெகுவாக வெளிபடுத்தியிருப்பார்கள். அடுத்து இப்போது இந்துக்களின் முறை. எல்லா புனிதமான தூய்மையான செயல்களுக்கும் 45 நாட்கள் விரதம் அனுஷ்டிக்கப் பட வேண்டியிருக்கிறது. இதற்கு இன்னொரு காரணமும் உண்டு. அதாவது நம் உடலில் உள்ள அனைத்து செல்களும் 45 நாட்களில் புதுப்பிக்கப் படுகின்றன என்பதால்.

சைவ சமயத்தினர் அவர்களுக்கு உரிய விரதத்தைக் கடைபிடித்து முருகன் கோவில்களுக்கு புண்ணிய யாத்திரை செல்கின்றனர். நம் இதிகாசங்களில் சொல்லப்படும் கதைகளி்ன் அடிப்படையில் சைவர்களுக்கும், வைணவர்களுக்கும் பொதுவாக ஐயப்பன் கோவிலை யாரோ சிலர் நிர்மானித்திருக்கிறார்கள். ஐயப்பன் யாத்திரைக்குத் தயாராக கடுமையான பயிற்சிகளை மேற் கொள்ள வேண்டியிருக்கிறது. அதிகாலையில் எழுவது, தினமும் இரண்டு முறை குளிப்பது, சைவ உணவு உண்பது, மற்றும் பிரம்மச்சரியம் போன்ற பயிற்சிகள்

நம்முடைய மனோபாவம் மற்றும் செயல்கள், நாம் உண்ணும் உணவைப் பொறுத்தே அமைகின்றன. இது மிகப் பழமையான காலத்திலேயே நம் முன்னோர்களால் அனுபவிக்கப்பட்டு இருக்கிறது. பகவத் கீதையிலும் இது சொல்லப்பட்டிருக்கிறது.

இது உடல்ரீதியாக தயார் ஆவது. விரதம் இருக்கும் கடவுளுக்காக பூஜை, பஜனை செய்வது மனரீதியாக தயார் படுத்திக் கொள்வதாகும்.. விரதத்தை அனுஷ்டிக்கும் மக்கள் அவர்களுக்கு என்று பிரத்யேகமான உடைகளை உடுத்திக் கொள்கிறார்கள். இவ்வாறு அணிவதால் பக்தர்கள் தங்கள் விரதத்திற்கு மாறாக யாராவது எதையாவது தமக்குக் கொடுப்பதிலிருந்து காத்துக் கொள்கிறார்கள்.

வெளிப்படையாகச் சொன்னால் ஒவ்வொரு தனி நபருக்கும் அவரவர் விருப்பத்திற்கேற்ப வாழவும் அவரவர் நம்பிக்கையை வளர்த்துக் கொள்ளவும் சுதந்திரம் இரு்க்கிறது. அது போல் 45 நாட்கள் மேற் கொள்ளும் விரதத்தினால் உடல் சுத்தமாகும் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் பலர் செய்வதென்னவோ சகிக்க முடியாத ஜோடனை தான். கோயில்களுக்குச் செல்லும் உல்லாசப் பயணம் பிரதானமாகி மற்ற செயல்கள் எல்லாம் இரண்டாம் பட்சமாகிறது. இதில் ஐயப்பன் கோவிலுக்கு ஆண்கள் மட்டும் செல்கிறார்கள். பெண்கள்தவிர்க்கப் படுகிறார்கள்.

முருகன் கோயிலுக்கோ நடந்தே செல்கிறார்கள். மூன்று அல்லது நான்கு நாட்களில் 120முதல் 160 கி.மீ வரை நடக்கிறார்கள்.

இதன் உச்சகட்டம் தான் மெய்சிலிர்க்க வைக்கிறது. ஐயப்பன் கோவிலிலும் சரி முருகன் கோவிலிலும் சரி பல லட்சக்கணக்கான மக்கள் கூடுகிறார்கள். அவர்களின் இறுதியான லட்சியம் கோவிலில் இருக்கும் சுவாமியின் சிலையை தரிசனம் செய்வது தான்.

இந்தப் பயிற்சியில் முக்கிய அம்சமான விரதம் இரண்டாம் பட்சமாகிறது. எவ்வளவு கூட்ட நெருக்கடியிலும் சுவாமி தரிசனம் தவிர்க்கப்படுவதில்லை. இதையே பிரதானமாக்கி மதத் தலைவர்கள் கோவில்களுக்கு கூட்டம் சேர்க்கும் நோக்கத்துடன் விதிகளை நிர்ணயம் செய்கிறார்கள். இவ்வாறு செய்யும் முறையால் பக்தர்கள் அவர்களுடைய கட்டுப்பாட்டிற்குள் இருக்கிறார்கள். ஒருவர் தன் வசதிக்கேற்ப கோவிலுக்குச் செல்ல தவறிவிட்டால் அவரைச் சுற்றியிருக்கும் ஒட்டு மொத்த ஆன்மீகக் கூட்டம், கடவுள் அவரைத் தண்டிக்கக்கூடும் என்றும், ஏதாவது தவறாக நடக்கும் என்றும் பயமுறுத்துகின்றனர். அதனால் அந்த தனி நபர்(பக்தர்) தொடர்ச்சியாக மூன்று முறை கோவில் பயணம் மேற்கொள்ளும் நிலைக்குத் த்ள்ளப்படுகிறார்.

பூஜைகள் மனதை மந்தப் படுத்துகின்றன. இது மன அமைதி என தவறாக கருதப்படுகிறது. மனம் மந்தமடைந்து தெளிவற்றதாகி விடுகிறது.. இவ்விதமான பயிற்சிகள் ஒருவனை கோழையாக்கிக் கடவுளிடத்தும் எதிர்காலம் பற்றிய பயத்தையும் ஏற்படுத்துகிறது. அற்புதத் செயல்களின் மீதான நம்பிக்கைக் கூடுகிறது. தன்னம்பிக்கை காணமல் போகிறது. தங்கள் வேண்டுதல் நிறைவேறும் பட்சத்தில் கடவுளுக்குக் காணிக்கையாக பணத்தைக் கொடுக்கவோ அல்லது அடுத்தடுத்து கோயில்களுக்குச் செல்லவோ முனைகிறார்கள்.

சற்று பகுத்தறிந்து பார்த்தால் கடவுளுக்குக் கொடுக்கும் காணிக்கை, கோயில்களின் முக்கியத்துவத்தையும் வருமானத்தையும் அதிகரிக்கவே பயன்படுகிறது என்பது விளங்கும். கடவுளைப் பற்றி பல கதைகள் சொல்லி அற்புதங்கள் நிகழும் என்ற நம்பிக்கையை மக்கள் மனதில் பலப்படுத்துகிறார்கள். இது ஒரு network marketing
போல் போய்க் கொண்டே இருக்கிறது. Network marketingல் செயல்படும் தலைவர்கள் இந்த முறைகளை, இவர்களிடமிருந்து தான் காப்பியடிக்க வேண்டும் போல் தெரிகிறது.

ஒருவர் மிகுந்த வருதத்திலோ அல்லது நம்பிக்கை இழந்த நிலையிலிருக்கும் போது கோவில்களில் நடக்கும் அதிசயங்களைப் பற்றிய கதைகளால் ஈர்க்கப்பட்டு, இந்த பக்த கோடிகளுடன் இணைந்து விடுவார். இந்த இணைப்பைச் சில நேரம் ஜோதிடர்களும் குறி சொல்பவர்களும் ஏற்படுத்துகிறார்கள். இந்த மாதிரியான ஆன்மீகப் பயணம் மேற்கொள்ளும் பழக்கத்திற்கு அடிமையானவர்கள் ஜோதிடம், கைரேகை போன்ற விஷயங்களில் நம்பிக்கை ஏற்படுத்திக் கொண்டு வாழ்நாள் முழுவதும் கஷ்டப்பட்டு மிகக்குறைவான சாதனை புரிந்தவர்களாக வாழ்கிறார்கள்.

இதில் மிகவும் ஆபத்தான விஷயம் என்னவென்றால் அவருடைய தலைமுறையினருக்கு அவரின் நம்பிக்கையை ஏற்றுகொள்வது அல்லது இந்த விரதங்களில் ஈடுபடும் பொழுது அவரை விட்டு விலகி நிற்பது என்ற இரு நிலைகளிள் ஏதேனும் ஒன்றைத் தேர்ந்தெடுக்க வேண்டியிருக்கும்.

கடவுள் நம்பிக்கை மனித உறவுகளைக் கெடுக்கக்கூடாது. உண்மையான கடவுள் நம்பிக்கை அன்பைப் புரிந்து கொள்ள வழி செய்வதாய் இருக்க வேண்டும். ஞானமடைந்த ஒருவர் தன்னையும் கடவுளையும் உணர்ந்தவராக இருக்கவேண்டும். அவரால் தான் தனக்குள்ளே இருக்கும் கடவுளை கண்டுகொள்ள முடியும்..


அஹம் ப்ரஹ்மாஸ்மி

 ***********************************************************

2 comments:

வை.கோபாலகிருஷ்ணன் said...

நல்ல பல கருத்துக்கள் கூறியுள்ளீர்கள். பகிர்வுக்கு நன்றி.

இராஜராஜேஸ்வரி said...

அஹம் ப்ரஹ்மாஸ்மி

அஹம் ப்ரஹ்மாஸ்மி

Post a Comment