Friday, July 29, 2011

மதிப்புக்கூடும் மருத்துவக் கல்வி

கயத்தாரில் எந்தக் கடையில் கேட்டாலும் குத்துக்கல் விற்கும் பாட்ஷா பாய் வீட்டிற்கு வழி சொல்லிவிடுகிறார்கள். கங்கைகொண்டானில் வாங்கியிருக்கும் ஒரு க்ரௌன்ட் நிலத்திற்கு வேலி போட 30 குத்துக் கல் தேவைப்பட்டது. காலை சுமார் 8மணியளவில் பாட்ஷாபாய் வீட்டை அடைந்தோம். பாயிடம் விபரத்தைச் சொன்னவுடன் உடனே ஏற்பாடு செய்து தருவதாக சொல்லிவிட்டார்.

பாட்ஷாபாய் மிகவும் சுவராசியமாக பேசக்கூடியவராக இருந்தார். எனக்கும் கவனமாக கேட்பது ஒரு கற்றுக்கொண்ட கலை. ஒருவரின் பேச்சை கவனமாக கேட்பது என்பது அவரை ஊக்குவிப்பதின் முதல்படி.

பாட்ஷா பாயும், தான் சாதாரண ஆளாக இருந்து இன்று ஒரு கட்டிட காண்ட்ராக்டராக ஆகி பல லட்சங்கள் சம்பாதித்திருப்பதை சொல்லிப் பெருமைப் பட்டுக் கொண்டார்.

பேரன் சுலைமான் மருத்துவம் படிக்கப் போவதாக சொன்னார். தனியார் மருத்துவக் கல்லூரியில் முப்பது லட்சம் ரூபாய் கேபிடேஷன் பீஸ் கட்டிவிட்டு வந்திருப்பதாகப் பெருமைப் பட்டுக் கொண்டார். ஒவ்வொரு வருடமும் ஆறு லட்சம் பீஸ் என்றும் போக்குவரத்துச் செலவு உட்பட கிட்டத்தட்ட அறு வருட படிப்பிற்கு ஆகும் செலவு மொத்தம் நாற்பது லட்சம் வரை ஆகிவிடும் என்றார்.

கிட்டத்தட்ட எழுபது லட்சம் ரூபாய் கணக்குச் சொல்கிறீர்கள். சுலைமான் நன்றாக படித்து டாக்டராக வாழ்த்துக்கள் என்று கூறி விடை பெற்றுக்கொண்டேன்.

என்னுடைய டாக்டர் நண்பர்கள் Anatomy என்ற சிம்ம சொப்பனத்தைப் பற்றி அடிக்கடிச் சொல்வார்கள். சுமாரான மார்க் வங்கியிருக்கும் சுலைமான் போன்றவர்கள் இதையெல்லாம் எப்படிப் படித்துப் பாஸாவார்கள்? கட்டிடக் காண்ட்ராக்ட் என்னும் அருமையான தொழில் கைவசம் இருந்தும் டாக்டர் படிப்பை எழுபது லட்சம் கொடுத்துப் படிக்க வேண்டிய அவசியம் என்ன?
இவ்வளவு அதிகப் பணத்தினைச் செலவு செய்து படிப்பவர்கள் எந்தளவு சேவையுள்ளம் கொண்டவராக இருப்பார்கள்? ஒரு வேளை நன்றாகப் படித்து முடித்துவிட்டால் இந்தியாவில் சேவை செய்வாரா? பேரன் அமெரிக்கா போன்ற வெளி நாட்டில் இருப்பதைத் தான் பாய் கௌரவம் என்று கருதினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. ஏனென்றால் இங்கே அப்படித்தான் நடக்கிறது.

டாக்டர்கள் மேல் இருக்கும் உயர்மதிப்பும், இந்தத் துறையில் பணம் சம்பாதிக்கக் கூடிய வாய்ப்பும் தான் இப்படியொரு முடிவை எடுக்க வைக்கிறது. கௌரவத்திற்காக செய்யும் எந்த வேலையும் சிறப்பாக அமையாது. திறமையாக செயல்பட அற்பணிப்புத் தேவை. ஆனால் பற்று ஓங்கிய நிலையில், என்ன செலவானாலும் ஆசைப்பட்டது நடக்க வேண்டும் என்று தான் மக்கள் இயல்பாகச் செயல்படுவர்.

இன்றைய நிலவரப்படி, மத்திய அரசு கல்வி நிலையமான Indian Institute of Management பட்டமேற்படிப்பாகிய MBA படிப்பிற்கு வசூல் செய்யும் தொகை இருபது லட்சம்!

தமிழ் நாட்டில் BE படிப்பிற்கு ஆகும் செலவு ஐந்து லட்சம் முதல் இருபது லட்சம் வரை. சொத்தை அடமானம் வைத்தால் வங்கிகள் கடன் உதவி என்ற பெயரில் தங்கள் தொழிலை அபிவிருத்திச் செய்துகொள்ளத் தயார்.

பெருநகரங்களில் LKG, UKG பீஸ் ஒரு லட்சம்.

இவற்றையெல்லாம் கேள்விப்பட்டு கல்வி வியாபாரத்தின் அசுர வளர்ச்சி கண்டு வியந்து நிற்கின்றேன். ஐந்து லட்சமோ, ஐம்பது லட்சமோ, செலவு செய்ய மக்களுக்கு மனமும் பணமும் அமைந்திருப்பது சந்தோஷமான விஷயம் தான். சிறந்த ஒன்றை என்ன விலையானாலும் வாங்கியே தீருவது என்ற மனப்போக்கும் வளர்ந்து வருவது புலப்படுகிறது.

மருத்துவம் தான் நோக்கம் என்றால் பாட்ஷா பாய் ஹோமியோபதி, சித்தா முதலிய துறைகளில் பேரனை அனுப்பியிருக்கலாம். வசதி படைத்தவர் என்பதால் அவருடைய உற்றார் இதற்குச் சம்மதிக்க மாட்டார்கள். இதற்கு அலோபதி டாக்டர்களுக்கு இருக்கும் அபரிமிதமான கௌரவமும், மதிப்பும் காரணம்.

அலோபதி மருத்துவம் தான் சிறந்தது, எல்லா வியாதிகளுக்கும் தீர்வைக் கொண்டிருப்பது என்ற தவறான நம்பிக்கை சமூதாயத்தில் நிலவி வருகிறது.
இதற்குக் காரணமாக இருப்பவைகள்
  • உடனடியாக நோய் தீர வேண்டும் என்ற எண்ணம்
  • பண புழக்கம்,
  • மருந்துக் கம்பெனிகளின் சுறுசுறுப்பு,
  • மேலைநாட்டு அங்கீகாரம்,
  • அவசர சிகிச்சை முறைகளிலும், நோய் கண்டறியும் முறைகளிலும் உள்ள முன்னேற்றம் முதலியன.
இந்தத் துறையில் பல்லயிரக்கணக்கான மக்கள் ஈடுபட்டு அலோபதி மருத்துவத்தை வாழ்வாதாரமாகக் கொண்டிருப்பது மற்றுமோர் காரணம். மருத்துவக்கல்லூரிகளின் எண்ணிக்கை மிகக்குறைவாக இருப்பது டாக்டர்களின் மதிப்பை மேலும் உயரச் செய்கிறது.

இந்தத் துறையில் நேர்மையில்லாத் தன்மையும், அதிக பணம் ஈட்டும் நோக்கமும் பெருகிவருவது ஒரு துரதிருஷ்டமான விஷயம். மருத்துவக்காப்பீட்டுத் திட்டங்களையும் தூக்கிச் சாப்பிடும் அளவிற்கு நேர்மையில்லாத்தன்மை நிலவி வருவது மாறவேண்டும் என்று நாம் ஆசைப்பட மட்டுமே முடியும். இது நடந்தேறுவது என்பது டாக்டர்கள் கையில் தான் இருக்கிறது.

7 comments:

Yaathoramani.blogspot.com said...

இன்றைய சூழலில் மிக அவசியமான பிரச்சனை குறித்து
மிகச் சரியான பதிவைக் கொடுத்திருக்கிறீர்கள்
இன்று உழைக்கத் தெரிந்து அதிகம் சம்பாதிக்கத் தெரிந்தவன்
சம்பாதித்து பணம் சேர்ந்தவுடன் ஒரு அங்கீகாரத்தை
எதிர்பார்க்கிறான்.முடிந்தால் அரசியல் பதவி அல்லது
அந்தஸ்துள்ள பதவி.அதற்காக எவ்வௗவு வேண்டுமானாலும்
செலவு செய்ய தயாராகிறான்.அதே போல பதவி அல்லது
அந்தஸ்தை அடைந்தவன் எதைச்செய்தாவது பணம் சேர்க்கத்
துவங்கிவிடுகிறான்.அதற்காக எதை வேண்டுமானாலும் இழக்கத்
தயாராகிவிடுகிறான்.இந்த இருவருக்கும் இடையில்
ந்ம் போன்றோர் நம்பிக்கொண்டிருக்கிற கட்டிக் காக்க நினைக்கிற
நியாயங்களும் தர்மங்களும் நீதியும் நேர்மையும் பாடாய் பட்டுக்கொண்டிருக்கிறது
இவ்வளவு பிரச்சனைகளையும் அவரவர்கள் நிலையில்
சிந்திக்கட்டும் என மிக விஸ்தாரமாக சொல்லாமல் போவதே
இந்தப் பதிவின் சிறப்பு
சிந்தனையை தூண்டிச் செல்லும் சிறந்த பதிவு
தொடர வாழ்த்துக்கள்

S.Venkatachalapathy said...

மேலோட்டமாகப் படித்துப் பார்க்கும் போது இந்தப் பதிவின் உள் நோக்கம் விளங்கும் படியாக இதை நான் வடிவமைக்கவில்லை தான். 'அவரவர் நிலையில் சிந்தித்து' பின்னூட்டம் எழுதினால் இந்த பதிவு வலுவாகிவிடும்.மருத்துவர்கள் சேவை எவ்வளவு ஆரோக்கியமானவர்களுக்கும் தேவைப்படும் அத்தியாவசியச் சேவை. இந்தத் துறையைப் பற்றி ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தினால் இதன் வளர்ச்சி சிறந்த முறையில் இருக்க வாய்ப்பு உள்ளது என்று நம்புகிறேன். இதில் தர்க்கம் செய்யும்படி கருத்துக்கள் சொல்லாமல் தேவை என்ன என்று கூறிவிட முயன்று இருக்கிறேன். உங்களின் உணர்வு பூர்வமான பின்னூட்டம் முதலாவதாக வந்தமைந்தது அதிர்ஷ்டவசமான ஒன்று. சிந்தனையைத் தூண்டும் அருமையான வரிகள். நன்றி

Yaathoramani.blogspot.com said...

இன்றைய வலைச்சரத்தில் தங்களை
அறிமுகம் செய்ய கிடைத்த வாய்ப்புக்காக
நான் மிகவும் மகிழ்வு கொள்கிறேன்

Unknown said...

வலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துக்கள்

மாய உலகம் said...

//இந்தத் துறையில் நேர்மையில்லாத் தன்மையும், அதிக பணம் ஈட்டும் நோக்கமும் பெருகிவருவது ஒரு துரதிருஷ்டமான விஷயம்.//

உண்மை தான் சகோதரரே...ஒரே நோக்கம் பணம் சம்பாதிப்பதும், கவுரவத்திற்காக மட்டுமே இந்த துறையை தேர்ந்தெடுக்கின்றனர்.. அதை அழகாக இந்த பதிவில் சுட்டிக்காண்பித்துள்ளீர்கள் நன்றி....

மாய உலகம் said...

வலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துக்கள்

S.Venkatachalapathy said...

மாய உலகம் ராஜேஷ், மற்றும் ரியாஸ் இருவருக்கும் என் நன்றி.

Post a Comment