Saturday, April 9, 2011

கருத்துப்பரிமாற்றம்


எந்த ஒரு விசைக்கும் சமமான எதிர்விசை இருக்கும் என்பது நியூட்டனின் மூன்றாம் இயக்கவிதி. இந்த விதிக்கு எதிராகச் செயல்பட ஒன்று இருக்கும் என்றால் அது மனிதர்களின் கருத்துப் பரிமாறிக் கொள்ளும் விதம் தான்.

எந்த ஒரு கருத்து பரிமாற்றத்திற்கும் ஒத்த கருத்தோ அல்லது எதிர்மறையான கருத்தோ அல்லது எதுவும் இல்லாமல் கூட எதிர்வினை இருக்கலாம் என்ற விதிமுறையை கருத்து பரிமாற்றத்திற்கான விதியாகக் கொள்ளலாம்.. இந்த காரணத்தால் கருத்துப்பரிமாறும் திறமை சுவாரஸ்யமான சவாலாகக்கூட இருக்கிறது. .

நீங்கள் புன்னகைத்தால் உங்களுக்கு ஒரு புன்னகை கிடைக்கலாம் அல்லது சில நேரம் நீங்கள் உன்னிப்பாக கவனிக்கப் படலாம் அல்லது
சில நேரம் கடுமையான சொற்கள் கூடக் கிடைக்கப் பெறலாம்.

ஒருவரைப் பார்த்தவுடன் அவரிடம் கை குலுக்க கையை நீட்டினால் சில நேரம் அவர் கை குலுக்கலாம் அல்லது கைகூப்பி நமஸ்காரம் செய்யலாம். யாரிடமாவது கோபப்பட்டு சத்தமாகப் பேசினால் அவரும் கத்திப் பேசலாம் அல்லது பணிந்து போகலாம்.

கருத்து பரிமாற்றம் பல காரணிகளைப் பொருத்து ஏற்படும் தூண்டுதல் உணர்வாகும். சிறந்த கருத்துப்பறிமாற்றத்திற்கு எவ்வளவோ வழிமுறைகள் சொல்லலாம். ஆனால் இவைகளைக் கடைபிடிக்க தன்னுடைய பழக்க முறைகளை மாற்றி சிறந்த வழிமுறைகள் உள்வாங்கி நடக்கின்ற மனப்பக்குவம் வேண்டும்.

ஒருவருடைய மனோநிலையைப் பொருத்தே அவருடைய சொல்லும் செயலும் விளங்கும். முதலாவதாக தன்னைப் பற்றிய விழிப்புனர்வோடு தன் உணர்வை வெளிப்படுத்துவது. அடுத்தது நோக்கத்தை மனதில்கொண்டு மற்றவரின் கவனத்தை தக்க வைத்திருப்பது..

மனித இயல்புகளைப் புரிந்து கொண்டால் தான் கருத்து பரிமாற்றம் நன்றாக இருக்கும். ஒரு கருத்தைச் சொல்ல தடங்களின்றி மொழியைப் பேசத் தெரிந்திருக்க வேண்டும். பேசும் சொற்களில் ஏற்ற இறக்கத்தையும் உடல் அசைவுகளையும் கருத்தில் கொள்ள வேண்டும். இவை எல்லாம் சிறப்பாக அமைய வேண்டுமானால் முதலில் நாம் கேட்கும் திறன் வளர்க்கும் பயிற்சியை மேற்கொள்ள வேண்டும். நம் உள்ளத்தின் பிரதிபலிப்பை உணர்ந்த வண்ணம் கவனிப்பதே ஒரு கலை. எந்த மொழியையும் சிறந்த முறையில் பயன் படுத்த வேண்டும் என்றால் அந்த மொழிப் பேச்சை தொடர்ந்து கேட்கவும், படிக்கவும் வேண்டும்.

ஒரு மாதத்தில் ஒரு மொழியில் தேர்ச்சி பெறலாம் என்பதெல்லாம் வெறும் கட்டுக்கதை. ஒரு மாதத்தில் பல சொற்களின் அர்த்தம் புரிந்து கொள்ளலாமேயன்றி தன் கருத்தைச் சரியாக வெளிப்படுத்த அந்த மொழியைப் பயன்படுத்த முடியாது. குழந்தைகளுக்கு மிகக் குறைந்த வார்த்தைகளே தெரிந்திருந்தாலும் அவைகளால் தம்மை மிக அறுமையாக வெளிப்படுதிக்கொள்ள முடிவது அவர்களின் தேவைகள் அளவாக இருப்பதால்தான்.

மேலும் குழந்தையாய் இருக்கும் போது எதையும் உன்னிப்பாகக் கேட்கிறோம், கவனிக்கிறோம். காலப் போக்கில் நாம் வளர வளர இந்த தன்மை குறைந்து விடுகிறது. நாம் தொலைத்து விட்ட இந்த திறனை புதுப்பித்துக் கொள்ள வேண்டியிருக்கிறது.

பொதுவாக தகவல் பரிமாற்றம் ஒருவருடனோ அல்லது சில நேரங்களில் பலருடனோ இருக்கும். பலருடன் பரிமாறிக் கொள்வதை மேடைப் பேச்சுப் போன்றதாகக் கொள்ளலாம். முதலில் ஒருவருடன் கருத்து பரிமாற்றம் செய்வதில் தேர்ச்சி பெறவேண்டும். பிறகு தேவைக்கு ஏற்ப மேடைப் பேச்சுக்குத் தயார் படுத்திக் கொள்ளலாம். பலருடன் கருத்து பரிமாற்றம் செய்வது முக்கியமாக ஆசிரியர்களுக்குத் தேவைப்படுகிறது. ஆனால் சோகம் என்னவென்றால் பல ஆசிரியர்கள் இதை அலட்சியப்படுத்துகிறார்கள். பெரும் பாலோருக்கு புதிதாக ஒரு மொழியில் பேசவும் எழுதவும் ஆசை. ஆனால் அந்த மொழியைத் தெரிந்து கொள்வதற்கான எந்த முயற்சியையும் மேற் கொள்வதில்லை. எனக்குத் தெரிந்து ஆங்கில வழிக் கல்வியில் பட்டம் பெற்ற பட்டதாரிகள் பலர் இருக்கிறார்கள். ஆனால் ஆங்கிலத்தில் பேசவும் எழுதவும் பின்தங்கியே இருக்கிறார்கள்.

திறன்கள் கற்றுக்கொள்வதில் கருத்துப் பரிமாற்றம் ஏன் கடைசி இடத்திற்குப் போகிறது என்று தெரியவில்லை. நல்ல கருத்துப் பரிமாற்றங்களினால் பல தொல்லைகளைத் தவிர்க்கலாம். தான் செய்வதே சரி என்று திருப்தியடைவதை விட்டு விட்டுப் பிறருடன் நன்முறையில் மேற் கொள்ளும் கருத்து பரிமாற்றங்களைத் தெரிந்து பழக்கிக் கொள்ள வேண்டும். நமக்குத் தெரியும் என்று நினைப்பவற்றை மிகச்சரியாக செய்ய நம்மை சீர்படுதிக்கொள்ள வேண்டும். தெரியாத சில நுட்பமான விஷயங்களை கற்றுக் கொள்ளும் மனைபாங்கு தான் இதற்கு வேண்டும்.

ஒவ்வொரு தனி மனித மனத்தில் உள்ளம், அதை சுற்றி அகங்காரமும் உள்ளத்திற்குள் உணர்வுகளும், உணர்வுகளுக்குள் ரஜோ, சத்வம் மற்றும் தாமசம் என்ற மூன்று நிலைபாட்டில் செயல்படும் விதமும் அமைந்திருக்கும். இந்த மூன்று நிலைபாடுகளும் ஒன்றோடொன்று சார்ந்து ஏழு விதமான தோற்றத்தைக் கொடுக்கும்.

1.ரஜோ என்றால் ஆதிக்க குணம்.
2.சத்வ என்றால் ஆராயும் குணம்..
3.தமோ என்றால் சோம்பேறித்தனம்.
4.ரஜோ + சத்வ
5.ரஜோ + தமோ
6.சத்வ + தமோ
7.ரஜோ + சத்வ + தமோ.

எனவே இரு தனிநபர்களுக்குள் ஏற்படும் தகவல் மற்றும் உணர்வுப் பரிமாற்றம் 49 பாதைகளில் நடக்கும் சாத்தியம் இருக்கிறது.


 

*******************************************

3 comments:

Yaathoramani.blogspot.com said...

கருத்துப் பரிமாற்றம் என்கிற தலைப்பில்
எவ்வித குழப்பமும் இல்லாமல்
மிகத் தெளிவாக கருத்துக்களை
பரிமாறியிருக்கிறீர்கள்
படங்கள் சேர்த்தது
அழகுக்கு அழகு சேர்த்ததுபோல
உங்கள் கருத்துக்கு மேலும்
மெருகூட்டுவதாக உள்ளது
பயனுள்ள பதிவு
தங்கள் பதிவைத் தொடர்வதில்
பெருமிதம் கொள்ளுகிறேன்
தொடர வாழ்த்துக்கள்

G.M Balasubramaniam said...

பதிவிடுவதற்காக சிலகருத்துக்களை குறித்து வைத்திருந்தேன். அதிலிருந்து சிலவற்றை உங்கள பதிவுக்கு பின்னூட்டமாக எழுதுகிறேன். வலையில் எழுதும்போது கருத்துப் பரிமாற்றமே பின்னூட்டம் மூலம்தான் நடக்க முடியும். எண்ணங்களைக் கடத்த எழுதுகிறோம். ஆத்ம திருப்திக்காக எழுதும்போது, அவரவருக்குப் பிடித்ததை எழுதுகிறோம் வலையில் பிறர் படிக்க எழுதும்போது,ஏனோதானோ என்றில்லாமல் ஏதாவது சொல்ல வேண்டும் என்ற எண்ணம் வரும். இவன் சொல்ல நாம் என்ன கேட்க, என்ற எண்ணம் வர வாய்ப்பிருப்பதால் சொல்ல வருவதை கோடி காட்டி மற்றதை படிப்பவர் புரிதலுக்கும் சிந்தனைக்கும் விட்டு விட்டு, எழுத்தின் தாக்கத்தை அறிய முற்படுதல் என் வழி. அங்கீகாரம் என்றால் சில சமயம் ஆஹா, ஓஹோ, எனறு பின்னூட்டங்கள் வருகிறது.புரிந்து உணர்ந்து எதிர்மறை கருத்துக்கள் வந்தால் நான் தாராளமாக ஏற்பேன்.படிக்கிறார்களா இல்லையா என்று கூடத் தெரிவதில்லை பல நேரங்களில். பின்னூட்டத்தை எழுத்தாளன் எப்படி ஏற்கிறான் என்று கூடத் தெரிவதில்லை. புகழின் போதையில் மட்டும் மகிழும் எழுத்தாளன் என்னதான் நலமாகச் சொல்லமுடியும். நான் எழுதும்போது, என் கருத்தையும் அணுகலையும் மாற்றுவது எனக்கு உடன்பாடில்லை. வார்த்தைகளில் ஜாலம் செய்து, சொல்ல வந்தது இதுவா, அதுவா, எதுவோ, என்று எழுதுவதும் எனக்கு உடன்பாடில்லை. எழுதியதை உணர்ந்து படித்து விருப்பு வெறுப்பில்லாமல் கருத்துப் பரிமாற்றம் நடந்தாலது ஆரோக்கியமான புரிதலுக்கு வழிவகுக்கும்.

Unknown said...

very fruitful one about communication

Post a Comment