Monday, August 29, 2011

ஆங்கிலம் பேச நான் ரெடி, நீங்க ரெடியா ?



மம்மி, மம்மி என்று பக்கத்து வீட்டுக் குழந்தை அதன் அம்மாவை அழைக்கும் குரல் கேட்டது. இது ஒன்றும் புதிதல்ல. பல வருட காலமாய் இந்தக் குழந்தை தன் அம்மாவை மம்மி என்று அழைப்பதும் அப்பாவை டாடி என்று அழைப்பதும் சகஜமாய் நடந்து வரும் ஒன்றுதான். நான் கூட என் நண்பர் ஒருவர் இதைக் குறையாகக் கூறியவுடன், மம்மி டாடி என்ற சொல்லைத் தமிழ்மொழி ஏற்றுக்கொண்டு விட்டது. இப்பொழுதெல்லாம் 'அம்மையப்பர் கடை' என்ற பெயரைக் கூட 'மம்மி டாடி ஸ்டோர்ஸ்' என்று தமிழில் எழுதும் முறை பெருமையாக ஏற்றுக்கொள்ளப்பட்டு விட்டது
என்று சற்று நகைச்சுவையாகச் சொல்லி தூயத் தமிழுணர்வை மழுங்கடித்ததும் உண்டு.

லட்சக்கணக்கில் செலவு செய்து ஆங்கில வழிக்கல்வி கற்றால் தான் மேற்படிப்பிற்கு ஏதுவாய் இருக்கும் என்ற நிலை உருவாகிவிட்டது. படித்தவர்கள் என்றால் ஆங்கிலம் பேசியே ஆக வேண்டும் என்ற ஓர் எதிர்பார்ப்பு இருப்பதால், ஸ்போக்கன் இங்க்லீஷ் என்ற ஒரு படிப்பும் பிரபல்யமாகி விட்டது.

ஒரு முறை தமிழ் வளர்த்த மதுரையில் ஒருவர் அரைகுறை ஆங்கிலத்தில் மீனாட்சி அம்மன் கோவிலுக்கு எப்படிப் போவது என்று கேட்டார். ஒரு வேளை என் தோற்றம் அவருக்கு தமிழ் தெரியாதவரைப் போல் தோன்றியிருக்க வேண்டும், எனவே தான் சிரமப்பட்டு ஆங்கிலத்தில் கேட்கிறார் என்று நினைத்துக்கொண்டு, தெளிவான தமிழிலேயே பதில் சொல்லிவிட்டேன். தாங்க் யூ, என்று என்னிடம் சொல்லிவிட்டு, டீசன்டா இருக்கிறவங்களுக்குக் கூட இங்கிலீஷ் பேச வரவில்லை. இதுவே சென்னையாக இருந்தால் இங்கிலீஷ்லே பதில் சொல்லியிருப்பாங்க என்று தன் சக நண்பரிடம் சொல்லிக்கொண்டு போனார்.

நான் ஒருக்கால் இவருக்கு ஆங்கிலத்தில் பதில் சொல்லியிருந்தால் எப்படி இருக்கும் என்று யோசித்துப்பார்த்தேன். எனக்கு ஒரு திரைப்படக் காட்சிதான் நினைவுக்கு வந்தது. பெரியவர் ஒருவரின் வீட்டிற்கு மருமகளின் தம்பி வருகிறான். பெரியவரின் மனைவி பெரியவரிடம் அவனிடம் இங்கிலீஷ் பேசச் சொல்கிறார். உடனே தனக்குத் தெரிந்த அளவில் ' வாட் இஸ் யுவர் நேம்?' என்று வினவ, பையன் ' ஐ அம் சக்கரவர்த்தி, மை ஃபிரண்ட்ஸ் கால் மீ சக்கு' என்று பதில் சொல்ல பெரியவர் பேந்த பேந்த விளிப்பதாக காட்சி அமைந்திருக்கும். அரைகுறை ஆங்கிலம் தெரிந்த பெரியவருக்கு " மை நேம் இஸ் சக்கரவர்த்தி' என்று சொன்னால் மட்டுமே புரிந்திருக்கும்.

இனி நம் அன்றாட வாழ்க்கையில் ஆங்கிலம் படுத்தும் பாடு என்ன என்று பார்ப்போம். குழந்தைகளின் ஸ்கூல் டைரி ஆங்கிலத்தில் தான் இருக்கிறது. அவர்களுடைய மிஸ் என்று அழைக்கபடும் டீச்சர்கள் நம்மிடத்தில் கூட ஆங்கிலத்தில் பேசி பந்தா காட்டுகிறார்கள்.

வங்கியில் மேலும் கீழும், குறுக்கும், நெடுக்கும் நிறையக் கையெழுத்துப் போட வேண்டிய பல பத்திரங்கள் ஆங்கிலத்தில் இருக்கின்றன. வங்கியின் டிராஃப்ட், செக் மற்றும் இன்டெர்நெட் பரிவர்த்தனைகள் எல்லாமே ஆங்கிலத்தில் தான். காப்பீடு நிறுவனங்களின் பொடிப் பொடி எழுத்துக்களில் கொடுக்கப்படும் ஆவணங்கள் அத்தனையும் நம் ஆங்கிலப் புலமைக்குச் சவாலாகவே இருந்து வருகின்றன.

தமிழகத்தில் ஹிந்தியைப் புறக்கணித்ததால், வேறு மாநிலத்தவருடன் பேச வேண்டியவைகளை ஆங்கிலத்தில் பேச வேண்டியிருக்கிறது.இன்றைய கால கட்டத்தில் ஜன் லோக் பால் பில் பற்றி புரிந்து கொள்ள தமிழனுக்கு ஆங்கிலம் ஒன்றுதான் ஒரே வழி. ஹிந்தித் திணிப்பிலிருந்து நாம் தப்பித்துவிட்டாலும் ஆங்கிலத் திணிப்பிலிலிருந்து தப்பிக்க வழியில்லை. சன்ரைஸ், ப்ரூ காப்பி கூட ஆங்கில மணம் கலந்து தான் கிடைக்கிறது.

ஒரு மொழியை நாம் எப்படி கற்றுக் கொள்கிறோம் என்று சிந்தித்துப் பார்க்க வேண்டும். தமிழை எப்படிக் கற்றுக் கொண்டோம். அம்மாவின் முகம் பார்த்துச் சிரித்தவுடன், அம்மா என்ன தொல்காப்பியமா கற்றுக் கொடுத்தார்? அம்மா,அப்பா, அண்ணா, அக்கா என்று சிறு சிறு வார்த்தைகள் சொல்லிக்கொடுத்து, நாம் பேசிய மழலையைக் குழலைக் காட்டிலும், யாழைக் காட்டிலுமல்லவா ரசித்தார்கள். கொஞ்சம் கொஞ்சமாக கொஞ்சு தமிழ் பேசிய நாம் இலக்கணப் பிழையில்லாமல் தானே பேசினோம்.

சித்திரமும் கைப் பழக்கம், செந்தமிழும் நாப்பழக்கம் என்று பேசும் தமிழைப்
பழகிவிட்டோமே. பரவை முனியம்மா, மற்றும் கொல்லங்குடி கருப்பாயிகூட முனைவர் சாலமன் பாப்பையாவுக்கே இணையாகத் தமிழ் பேசவில்லையா.

ஆங்கிலம் பேசத்தெரியாமல் எப்படி ஆங்கில வழிக் கல்வித் திட்டத்தில் படித்துப் பட்டம் பெற்று விடுகின்றோம்? ஒரு மொழியை எப்படிப் பேசுவது என்று நாம் சிந்தப்பதே இல்லை. முப்பது நாட்களில் ஆங்கிலம் பேச கற்றுக் கொள்வோமானால் ' வாட் இஸ் யுவர் நேம்?' என்ற வரையில் தான் ஆங்கிலம் பேச வரும்.

தாய்மொழி அல்லாது வேறெந்த மொழியிலும் திறமையை வளர்த்துக் கொள்ள நான்கு கட்ட நடவடிக்கைத் தேவைபடுகிறது.

முதலாவதாகக் கேட்டல், இரண்டாவதாகப் பேசுதல், அடுத்ததாகப் படித்தல் முடிவாக எழுதுதல். ஒவ்வொரு மொழியையும் பிறர் பேசக்கேட்டு அதன் அர்த்தம் புரிந்து கொள்ளப் பாருங்கள். பிறகு அவரிடமே பேசிப்பழகுங்கள். பிறகு எழுத்துக்களைத் தெரிந்து கொள்ளுங்கள். அதன் பிறகு தான் படிக்கவும் எழுதவும் கற்றுக் கொள்ளுங்கள்.

அதன் பின் எவ்வளவுக் கதைப் புத்தகங்களைப் படிக்க முடியுமோ அவ்வளவுக்கவ்வளவு படியுங்கள். அந்த மொழியில் பேசப்படும் பேச்சுக்களைக் கேட்டுப் புரிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள். நண்பருடனோ தெரிந்தவர்களுடனோ கொஞ்சம் கொஞ்சமாகப் பேசிப் பழகுங்கள். சங்கோஜப் பட வேண்டாம். அப்புறம் தான் இலக்கணத்தைக் கற்க முடியும். இலக்கணம் கற்பது என்பது ஒரு மொழியின் கட்டமைப்புகளைப் புரிந்துகொள்ளவேயன்றி மொழியைப் பேச அல்ல.

இப்படித்தான் நான் ஆங்கிலம் கற்றுக் கொண்டிருக்கிறேன். கற்றுக் கொண்ட மொழியில் தொடர்ந்து பேசவும், படிக்கவும் எழுதவும் வேண்டும். இல்லையென்றால் எதை மட்டும் செய்கிறோமோ, உதாரணத்திற்கு பேசுவதை மட்டும் செய்தால் அதை மட்டும் தான் தொடர்ந்து செய்ய முடிகிறது.

ஆங்கிலத்தில் திறமையை நிலைநிறுத்திக் கொள்ளவும், மேம்படுத்திக் கொள்ளவும் இன்றும் எனக்கு ஆங்கிலக் கதைகளைப் படிக்க வேண்டியிருக்கிறது. வலைப்பூவில் எழுத வேண்டியிருக்கிறது. சில வலைப் பூக்களில் சென்று பின்னூட்டம் இட வேண்டியிருக்கிறது. அவ்வப்பொழுது NDTV மற்றும் CNN பார்க்க வேண்டியுள்ளது. ஆங்கிலம் நன்றாகத் தெரிந்த நண்பர்களிடம் ஆங்கிலத்தில் உரையாடிக்கொண்டிருக்க வேண்டியுள்ளது.

என்ன, ஆங்கிலம் பேச நான் ரெடி. நீங்க ரெடியா?

8 comments:

J.P Josephine Baba said...

பயனுள்ள மட்டுமல்ல இதய மொழியில் பேசும் பதிவு. பதிவுகளின் நோக்கமே இது தான். வாழ்த்துக்கள் நண்பரே!

Unknown said...

அருமை,அருமை.நல்ல பதிவு.பலருக்கும் பயன்படும்.

Raji@Mdu said...

I agree with you Sir..!!

Narayanan Narasingam said...

அருமையான பதிவு வெங்கட்.

மொழி என்பது ஒருவரிடம் தொடர்பு கொள்ள உதவும் கருவியே, ஆனால் தமிழ்நாட்டில் மட்டும் பலர், ஆங்கிலத்தில் பேசினால் தான் மெத்தப் படித்தவன் என்று நினைகிறார்கள். naan கோவையில் ஒரு கடையில் மேனேஜர் ஒருவருடன், அங்குள்ள பொருட்களைப் பற்றி தமிழில் கேட்டுக்கொண்டிருந்தேன். அதற்கு அவர் ரொம்பவும் சிரமப்பட்டு, திக்கி திணறி ஆங்கிலத்தில் பதில் கூறினார். சரி ஏதோ வெளி மாநிலத்தவர் போல இருக்கிறது, தமிழ் புரிந்தும் பேச வரவில்லைப் போலிருக்கிறது என்று நினைத்தேன். அதே நேரத்தில், தூரத்தில் இருந்த மற்றொரு பகுதியில் இருந்து ஒரு அவரை பார்த்து ஒருவர், அருள், இங்க கொஞ்சம் வரீங்களா என்ற குரல் கேட்கவும், இதோ வரேன் சார் என்று ஓடினார் அருள்.

இது போன்ற தலைப்பில் முன்னர் நான் எழுதிய பதிவு தமிழா தமிளா இங்கே...

http://iniyaulavaaga.blogspot.com/2011/01/blog-post_28.html

S.Venkatachalapathy said...

ரத்தினவேல் ஐயா, ஜோஸ்பின் பாபா, R.Elan, Raji@Mdu,நாராயணன் தங்கள் அனைவரின் பின்னூட்டம் எனக்கு ஊக்கமளிப்பதாக இருக்கிறது.

ரத்தினவேல் ஐயா என்னுடைய ஆங்கில வலைப்பூவை பார்வையிட்டு வந்திருப்பது எனக்கு வியப்பான சந்தோஷம்.

நாராயணன் அவர்களின் விரிவான பின்னூட்டம் சிந்திக்க வேண்டிய இன்னும் ஒரு நிகழ்வினை இந்தப் பதிவில் சேர்த்து நம் மக்களின் ஆங்கில மோகத்தை விளக்கியுள்ளது.

அவரின் விரிவான பதிவு(follow link in his comment) ஒரு தமிழனின் ஆதங்கத்தை அருமையாக வெளிக்காட்டுகிறது.

Yaathoramani.blogspot.com said...

ஒரு நல்ல படைப்பாளியிடம் தங்கள் படைப்பில்
சிறந்தது எது எனக் கேட்டல் இனிமேல் தான் படைக்க இருப்பது
எனத்தான் சொல்வான்
படைத்தவற்றில் எனக் கேட்டால் கூடுமானவரையில்
தனது கடைசிப் படைப்பைத்தான் சொல்வான்
காரணம் இன்னும் சிறப்பாக இன்னும் தெளிவாக
இதுவரை படைத்ததைவிட அருமையாக என்கிற
தொடர்சியான முயற்சியில் இருக்கும் படைப்பாளியின் திறன்
அவரது சமீபத்திய பதிவில்தான் விஸ்வரூபமெடுத்திருக்கும்
தங்களுக்கு இது நிச்சயம் பொருந்தும்
இதுவரை தங்கள் படைப்புகளில் மிக இயல்பான நடையில்
நெருடாத வார்த்தைகளில் ஒரே சீரான சிந்தனை வேகத்தில்
படைக்கப் பட்ட படைப்பு இதுதான் என்பது எனது கருத்து
தரமான பதிவு
தொடர வாழ்த்துக்கள்
த.ம 4

S.Venkatachalapathy said...

ரமணி சார், வெகு நாட்களுக்குப் பிறகு உங்கள் வருகை, மொத்தப் பதிவுகள் பற்றிய அருமையான கண்ணோட்டம் எனக்கு மென்மேலும் ஊக்கமளிக்கிறது. என்னுடைய மனமார்ந்த நன்றிகள்.

இராஜராஜேஸ்வரி said...

முதலாவதாகக் கேட்டல், இரண்டாவதாகப் பேசுதல், அடுத்ததாகப் படித்தல் முடிவாக எழுதுதல்.

பயனுள்ள பகிர்வுகள்.. பாராட்டுக்கள்..

Post a Comment