Wednesday, April 27, 2011

காயத்ரி மந்திரம் வெறும் நம்பிக்கையல்ல , மிகப் பெரிய உண்மை !!!

மென்திறன் சிந்தனைகள் என்ற வலைபதிவுகளில் ஆன்மிக விஷயங்கள் இடம் பெறுவது எவ்வாறு என்ற கேள்வி உங்களுக்குள் எழலாம். மென்திறனும் ஆன்மீகத்தின் ஒர் அங்கம் என்பதால், இந்த விஷயங்களைப் பற்றியும் தெரிந்து கொள்வோம்.
தன்னை மீறிய சக்திகளைப் பற்றிய நம்பிக்கைகளில் மூன்று நிலைபாடுகள் இருப்பதாக உணர்கிறேன்.
  1. ஆத்திகம்:- மிக அதிக மக்கள். மதம் சார்ந்து ஒரு சில முறைகளில் கடவுளை வழிபடுவது. இதில் சடங்குகள், வழிபடும் முறைகள் என்று பலவிதிகள் மற்றும் கட்டுப்பாடுகள் இருக்கும்.
  2. நாத்திகம்:- கடவுள் நம்பிக்கை இல்லாத நிலை குறிப்பாக ஆத்திகத்தை எதிர்க்கும் நிலையாகக் கொள்ளலாம்.
  3. ஆன்மீகம்:- நாத்திகம், ஆத்திகம் இரண்டிற்கும் அப்பாற்பட்டு, இறைநிலையை அகத்திலும், புறத்திலும் உணர்ந்து, உடல், மனம், புத்தி,ஆத்மா எல்லாவற்றையும் உணர்ந்த நிலை. இந்த நிலையை எட்டுவது கடினம் என்று ஆத்திகர்கள் சொல்லி வருகிறார்கள். நாத்திகர்கள் இதை அவ்வளவாகக் கண்டு கொள்வதில்லை.
உண்மையான ஆன்மீக வாதிகள், ஆத்திகர்களையோ, நாத்திகர்களையோ பொருட்படுத்துவதில்லை.
ஆத்திகர்கள் ஆன்மீக விஷயங்களை தமதுடைமையாக்கி தங்களுக்கு ஒரு முக்கியத்துவம் கிடைக்கும் வண்ணம் ஆன்மிக விஷயங்களை ஒரு கருவியாக உபயோகித்துக் கொண்டிருக்கிறார்கள்.
இதை உணர்ந்து கொள்வது மிக மிகக் கடினம். உளவியல் ரீதியாக நமக்குள் ஐந்து வயதுக்குள் புகுத்தப்பட்டுள்ள நம்பிக்கைகளை நாமே கேள்வி கேட்டுக் கொள்ள அசாதாரண மன பலம் வேண்டும். ஐந்தில் வளைந்தது ஐம்பது வரை வளைந்தே இருக்கும்.
ஆத்திகத்தில் சிறைப்படுத்தப்பட்டுள்ள விஷயங்களில் காயத்ரி மந்திரமும் ஒன்று. காயத்ரி மந்திரம் காயத்ரிதேவியின் வழிபாடு என்று நினைத்திருந்தேன். தற்செயலாக சின்மயா மிஷன் வெளியீடு ஒன்று என் கைகளில் கிடைத்தது. மந்திரத்தின் பொருளில் காயத்ரி தேவியோ மற்றெந்த உருவகக் கடவுளோ இல்லையென்பது எனக்கு மிகுந்த சுவாரசியத்தை ஏற்படுத்தியது.
ஆனால் ஒவ்வொரு சொல்லுக்கும் பொருள் தரப்படவில்லை. திரண்ட கருத்தாக அர்த்தம் சொல்லப்பட்டிருந்தது. கடவுள் நம்பிக்கை என்ற தளத்திற்கு அப்பால் விளக்கம் செல்லவில்லை.
இந்த மந்திரத்தைச் சொல்வதால் புத்தி கூர்மை உண்டாகும் என்ற நம்பிக்கையை வலியுருத்தியே விளக்கம் நின்றது. எப்படி இது சாத்தியம் என்ற கேள்வியே தேவையில்லை என்ற ரீதியில் முடிக்கப்பட்ட விளக்கம்.
இது குறித்த பல புத்தகங்களிலும், இது இந்து மத மந்திரமாகவும், இந்துக் கடவுள்களின் அருள் கிடைக்கச் சொல்லப்படும் சடங்குகளாகவும் மத ரீதியில் விளக்கங்கள் இருந்தன.
கோவிலில் உள்ள குருக்களுக்கும், அர்ச்சகர்களுக்கும் இதன் அர்த்தம் என்ன என்பதே தெரியவில்லை. எனவே இது ஒரு நம்பிக்கை சார்ந்த விஷயம் என்றே ஒரு கால கட்டத்தில் முடிவு செய்துவிட்டேன். ஆனால் கடவுளை சூரிய ஒளி வடிவில் மனத்திற்குள் வாங்கி ஜபம் செய்து பலன் பெருவது என்ற சிறிய தெளிவு எனக்குள் இருந்தது.
இருப்பினும் காயத்ரி ஜபத்தைப் பற்றி எனக்கு ஐயம் தீர்ந்த பாடில்லை. புத்தி கூர்மை எப்படிக் கிடைக்கப் பெறுகிறது என்ற ஐயம் தொடர்ந்து கொண்டிருந்தது.
ஒரு நாள், ஒளிக்கும் புத்திக்கும் ஏதாவது தொடர்பிருக்கிறதா என்று இணையதளத்தில் தேடுதல் மேற்கொண்டேன். இதன் மூலம் நான் தெரிந்துகொண்ட உண்மை என் ஐயப்பாட்டை நீக்கும் வண்ணம் இருந்தது.
ஓரளவு பிரகாசமான ஒளியைப் பார்க்கும் பொழுது, நமக்குள் மெலோடோனின் என்ற தூக்கத்தைக் கொடுக்கக்கூடிய ஹார்மோனின் அளவு குறைக்கப்பட்டு செரோடோனின் என்ற உற்சாகத்தைக் கொடுக்கக்கூடிய ஹார்மோனின் உற்பத்தி அதிகமாகிறது.
இந்த முறையில் தான் SAD (Seasonal Affective Disorder) என்று சொல்லப்படும் பனிக்கால மன அழுத்த நோய்குச் சிகிச்சை மேற் கொள்ளப்படுகிறது. செரோடோனின் ஹார்மோன் மன அழுத்தத்தைக் குறைப்பதாக இருந்தால், புத்தி கூர்மை அதிகரிக்கத்தானே செய்யும்.
இந்த உண்மையை உணர்ந்து, சூரிய சக்தியின் மூலம், நம் புத்திக்கூர்மையை மேம்படுத்த மேற்கொள்ளப்படும் செயல் விளக்கமான ஒரு மிகப் பெரிய உண்மை தான் காயத்ரி மந்திரம்.
காயத்ரி மந்திரம்
தத் சவிதூர் வரேண்யம்
பர்கோ தேவஸ்ய தீமஹி
தியோ யோ ந: பிரச்சோதயாத்


சரியான உச்சரிப்புக்கு வகைசெய்ய ஆங்கிலத்தில்
Thath Savithur Varennyam
Bhargo Thevasya Theemahee
Thiyo Yo Nah Prachothayaath
பொருள்
நம்முடைய புத்தியை ஊக்குவிக்கும், அருள்மிகு சவிதூரிலிருந்து கிடைக்கப் பெரும் ஒளியை தியானிக்கின்றோம்.
சவிதூர் என்பது சூரியனைக் கடவுளாகக் குறிக்கும் சொல்.
இந்த மந்திரம் நிகழ்காலச் செயலாக இயற்றப்பட்டிருப்பதைக் கவனிக்கவும். சூரியனுடைய ஒளியை தியானிக்கின்றோம் என்பதால் கண்களை மூடிய நிலையில் சூரிய ஒளியில் நின்று இதைச் சொல்ல வேண்டும் என்பது யதார்த்தமான விஷயம். இமைகளின் வழியே ஊடுருவிச் செல்லும் ஒளி அளவே ஹார்மோன்களைச் சமன் படுத்தப் போதுமானது.
இந்த மந்திர ஜபப் பயிற்சி யாரெல்லாம், எப்படி எத்தனை முறை செய்ய வேண்டும் என்பதை அடுத்த பதிவில் விளக்குகிறேன்,
இந்த விஷயத்தை என்னுடைய ஆங்கில வலைப் பதிவில் ஏற்கெனவே விளக்கி இருக்கிறேன்.

*********************************



7 comments:

Yaathoramani.blogspot.com said...

அருமையான பதிவு
ஆத்திக வாதிகள் எதையும் ஆராய்வது
குற்றம் எனக்கருதி
கண்மூடித்தனமாக பின்பற்றுகிறார்கள்
நாத்திக வாதிகள் எதையும் சரியாக அறிய முயலாது
வெறித்தனமாக புறம்தள்ளிவிடுகிறார்கள்
காய்தல் உவத்தில் இன்றி
எதையும் ஆராயும் தன்மையற்றுப் போனதால்தான்
இது போன்ற பல உண்மைகள்
வெளிச்சத்திற்கு வராது மறைந்து கிடக்கின்றன
அந்த வகையில் தங்கள் புதிவு
புதிய சாரளங்களை திறக்கும் முயற்சியக உள்ளது
தங்கள் பதிவைத் தொடர்வதில் பெருமிதம் கொள்கிறேன்
தொடர வாழ்த்துக்கள்

வை.கோபாலகிருஷ்ணன் said...

காயத்ரி மந்திரம் பற்றிய அருமையான விளக்கவுரைக்கு என் மனமார்ந்த நன்றிகள். தங்களின் வலைப்பூவுக்கு பின்தொடர்பவராக ஆகியுள்ளேன். என் வலைப்பூவுக்கு இன்று வருகை தந்து சுடிதார் வாங்கப்போறேன் சிறுகதைக்கு கருத்துக்கூறியுள்ளதற்கு என் நன்றிகள். அன்புடன் vgk gopu1949.blogspot.com

S.Venkatachalapathy said...

மனம் கவர்ந்த எழுத்தாளர்கள் இருவர் இந்த வலைப்பூவுக்கு பின்தொடர்பவராக ஆகியுள்ளது குறித்து மிக்க மகிழ்ச்சியாகவும்,ஊக்கமளிப்பதாகவும் உள்ளது. பதிவுகள் எல்லமே செய்திகளாகவும்,தீர்வுகளாகவும் இருக்க திட்டமிட்டிருப்பதால் தாங்கள் கேள்விகளையும் பின்னூட்டமாக பதிவு செய்யும்படிகேட்டுக்கொள்கிறேன்.
தாங்கள் இருவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

Unknown said...

நல்ல கருத்துக்கள். காயத்ரி மந்திரந்தின் முதல் வரியைப் பற்றி எதுவும் சொல்லவில்லையே?.

கிருத்திகா.

Kandumany Veluppillai Rudra said...

காயத்திரி மந்திரம் தெரியும்,அதன் விளக்கம் இன்றுதான் தெரியும்.

இராஜராஜேஸ்வரி said...

பயனுள்ள பகிர்வுக்குப் பாராட்டுக்கள்.

S.Venkatachalapathy said...

உருத்திரா சார், மற்றும் இராஜராஜேஸ்வரி மேடம் இருவரின் வருகைக்கும் நன்றிகள். மே மாதப் பதிவுகளில், இரண்டாம் பாகத்தில் இன்னும் சில விபரங்களை கொடுத்திருக்கிறேன்.

Post a Comment